ஜாக்கெட் தைப்பதில் யோசனை வேண்டும்!
எங்கள் உறவினர் பெண் ஒருவருக்கு, சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. புதுமணப் பெண்ணாக புகுந்த வீட்டுக்குப் போகப் போகிறவள் என்பதால், பெண்ணின் பெற்றோர், மகளுக்காக இருபது ஜாக்கெட்டுகளை தைத்துக் கொடுத்து அனுப்பினர். புகுந்த வீட்டுக்கு வந்த பின், அடுத்தடுத்து சில விசேஷங்கள், உறவினர்கள் வீட்டு அழைப்பு போன்ற சந்தர்ப்பங்களில் பத்துக்கும் மேல் ஜாக்கெட்டுகளை தைத்துக் கொடுத்தனர். திருமணமான சில மாதங்களில், அந்தப் பெண்ணின் உடல் ஓரளவு குண்டாகி விட்டது. இதனால், அந்த பெண்ணுக்கு தைத்த ஜாக்கெட்கள் எதையும் அணிய முடியாமல் அளவு சிறியதாகி விட்டது.
அந்த பெண்ணின் அளவுக்கு தைத்த ஜாக்கெட்டை அணிந்து கொள்ளும் வயதுடையவர்கள் யாரும் அவர்கள் வீட்டில் இல்லை. அதே போல், ஓரிரு முறை ஒரு பெண் அணிந்த ஜாக்கெட்டை, மற்றவர்களுக்கு கொடுப்பதில் சங்கடம். இதனால், இரண்டு டஜனுக்கு மேல் எண்ணிக்கையிலான ஜாக்கெட்டுகள் வீணாக பீரோவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
பெண்கள் திருமணத்திற்குப் பின் சந்தோஷம், பூரிப்பு, தாய்மை அடைவது போன்ற காரணங்களால், திருமணத்தின் போது இருந்ததை விட குண்டாவது தவிர்க்க முடியாத இயற்கை மாற்றம். இதை கவனத்தில் கொள்ளாமல், திருமணத்தின் போது இப்படி எக்கச்சக்கமான ஜாக்கெட்டுகளை தைக்காமல், தேவைக்கு மட்டுமே தைத்து, சில கால இடைவெளியில் அந்தந்த சமயத்தில் இருக்கும் உடல்வாகுக்கேற்ப ஜாக்கெட்டுகளை தைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். இந்த ஜாக்கெட் சம்பந்தப்பட்ட விஷயம், பிராவுக்கும் பொருந்தும்.
— ஆர்.ரேவதி, கபிஸ்தலம்.
* எது எதற்கோ மேலை நாட்டைக் காப்பி அடிப்பவர்கள் இந்த விஷயத்தில் அவர்களை காப்பி அடிக்கலாமே! எவ்வளவு வயதானாலும், உடம்பை எவ்வளவு கச்சிதமாக பராமரிக்கின்றனர்.
— பொ.ஆ.,
* * *
மனிதரில் இத்தனை நிறங்களா?
நாங்கள் சமீபத்தில் பெங் களூருலிருந்து சென்னை வந் தோம். ஏராளமான உறவுகள் சென்னையில் இருந்தாலும், வாடகைக்கு வீடு தேடிய போது, ஒருவர் கூட உதவவில்லை.
தூரத்திலிருந்த போது வரச் சொன்னவர்கள், பக்கத்தில் வந்த போது பதை பதைத்தனர். உதவி கேட்கவில்லை என்ற போதும், கேட்டு விடுவோமோ என்று அவர்கள் பயம் கொண்டது மிக வருத்தமாக இருந்தது. தெருத் தெருவாக அலைந்தோம். சிரமப் பட்டு ஒரு வீடு பிடித்தவுடன், என்ன வசதியோடு, எப்படி இருக்கிறோம் என வேவு பார்க்க உறவுகள் வந்தது.
"பெங்களூரு மாதிரி நல்ல ஊரை விட்டு நீங்கள் வந்திருக்கக் கூடாது!' என, சிலர் அன்பை வெளிப்படுத்தினர். இதற்கெல்லாம் மேலாக எதிர்வீட்டு பெண் மணியிடம், காஸ் சிலிண்டர் குறித்து விசாரிக்கையில், "நீங்கள் விசாரிக்கும் கம்பெனி சிலிண்டர் எங்களிடம் இல்லை...' என்று கூறினார். மறுநாள் அதே கம்பெனி சிலிண்டர், அப்பெண்மணி வீட்டுக்கு வந்த போது தான் தெரிந்து கொண்டோம்... எங்கே பால் காய்ச்சுவதற்கு நாங்கள் இரவல் கேட்டு விடுவோமோ என பயந்து இருக்கிறார் என்று. அதே பெண்மணியிடம் வேலைக்கார அம்மா குறித்து விசாரித்த போது, "200 ரூபாய் கொடுப் பதாகவும், அவள் நல்லாவே வேலை செய் வதில்லை...' என்றும் சொன்னார். பிறகு தான் தெரிந்தது... அதுவும் நாங்கள் அவ்வேலைக்கார பெண் மணியை அழைத்துக் கொண்டு விடுவோம் என் பதால் தானென்று... மனி தரில் இத்தனை நிறங்களா என்று புரிந்தது!
— ராம ஆனந்த்,அசோக் நகர்.
* * *
"கட்டி அணைச்சு' படுக்கும் பழக்கத்தால் வந்த வினை!
பிளஸ் 2 முடித்த நான், நெருங்கிய உறவினர் திருமணத்திற்கு, சமீபத்தில் சென்றிருந்தேன். சம வயதுடைய என் அத்தை பெண்ணும் வந்திருந்தாள்.
மூன்று நாள் திருமணம். திருமண மண்டபத்திலேயே தங்கினோம். திருமணத்திற்கு முதல் நாள் இரவு, உறவினர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பெரிய ஹாலில் எங்களை படுக்கச் சொல்லிவிட்டனர். தயக்கம் அதிகமாக இருந் தாலும், பெரிசுகள், எங்களிடம் தடிமனான போர்வையைக் கொடுத்துப் படுக்கச் சொல்லிவிட்டனர். எங்களுக்குச் சற்று தள்ளி, வயதான சில புரோகிதர்கள் படுத்திருந்தனர்.
அனைவருக்கும் நல்ல தூக்கம். அதிகாலையில் எங்களை எழுப்ப வந்த அத்தை, என்னை எழுப்பி விட்டு, தன் பெண்ணைத் தேடினார். சற்று தொலைவில், அவள் படுத் திருந்த கோலத்தைப் பார்த்ததும், அதிர்ந்து விட்டோம்! தூக்கத்தில் எங்கிருக்கிறோம் என்பது கூட தெரியாமல், தள்ளி படுத்திருந்த புரோகிதர் ஒருவரைக் கட்டி அணைத்தபடி, அவள் படுத்திருந்தாள். அவளை திட்டியபடி எழுப்பிய போது, அந்த புரோகிதரும் அதிர்ச்சியுடன் எழுந்து, "ஏன் திட்டறேள்... குழந்தை தானே அவள்...' என்றார். அத்தை முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது!
அம்மாக்களே... எதையாவது கட்டி அணைத்தபடி தான் தூங்க வேண்டும் என்ற பழக்கம் கொண்ட வரா உங்கள் மகள்? உடனே மாத்துங்க!
— பி. செண்பகவல்லி, மடிப்பாக்கம்.
* * *