பார் உள்ளே வைக்கலாமே...
சமீபத்தில், சாலை விபத்தில் படுகாயமடைந்த என் நண்பனை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அப்போது, அவன் மது போதையில் இருந்ததால், அவனுக்கு அவசர சிகிச்சை அளிப்பதிலும், மருந்து, ஊசி செலுத்துவதிலும் சிக்கலாகி போனது. இதனால், எங்களை விட, டாக்டர்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடியாகி விட்டது. சில வாரங்கள் தீவிர சிகிச்சையும், ஏராளமான பணமும் செலவழித்து, நண்பனை மீட்டெடுத்தோம்.
அவனது வீட்டாரோடு பேசிக்கொண்டிருந்த போது, நண்பனின் தாயார் சொன்னது, "மதுக்கடை பார்களில், குடித்து விட்டு வண்டிகளை ஓட்டாதீர்... குடித்தவருக்கு ரத்தம் செலுத்தவோ, ரத்ததானம் செய்யவோ தகுதியில்லை, உங்களை நம்பிதான் உங்கள் வீட்டார் இருக்கின்றனர். இந்த மாதிரி நிறைய வாசகங்களை எழுதி போடணும்ப்பா, அதனால, யாராவது ரெண்டு பேர் திருந்திட மாட்டாங்களா?' என்று ஆதங்கத்தோடு கூறினார்.
அவர் கூறியது நியாயமாகவே பட்டது. மது பாட்டில்களில், "குடி குடியைக் கெடுக்கும்' என அச்சிடுவோர், அதை பயன்படுத்தும் பார்களிலும், நுகர்வோர் நலன் கருதி, சிறந்த வாசகங்களை வைக்கலாமே! பார் நிர்வாகங்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கவனிப்பரா!
— மூ.ராஜன், மதுரை.
இ-மெயில் லாட்டரி - உஷார்!
மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரில் மின் அஞ்சல் உபயோகிப்போர் பலருக்கு, சமீபகாலமாக, ஒரு புதுமையான மெசேஜ் வருவது தெரிந்திருக்கும். அதாவது, "உங்களுடைய மொபைல் எண் அல்லது இ - மெயில் முகவரிக்கு, ஐந்து லட்சம் டாலர் அல்லது பவுண்ட் பரிசு கிடைத்துள்ளது. அது சம்பந்தமாக தொடர்பு கொள்ள...' என்று மெசேஜ் வரும். அந்த "இ-மெயில்'க்கு பதிலளித்தால், ஒரு வங்கிக் கணக்கு எண்ணைத் தெரிவித்து, அந்தக் கணக்கிற்கு, ஒரு பெரும் தொகையை கட்டுமாறு பதில், "இ-மெயில்' வரும்.
அதைத் தொடர்ந்து, பணத்தைக் கட்டினால், மீண்டும் மீண்டும் பணம் கட்டுமாறு செய்தி வரும். முடிவில், மின்னஞ்சல் உபயோகிப்போர், தாங்கள் ஏமாற்றப் பட்டதை அறிவர். இது போல், எனக்கு, ஒரு, "இ-மெயில்' வந்தது. உடனே நான்,"இ-மெயில்' அனுப்பியவரிட@ம, சுங்க வரி மற்றும் மற்ற செலவுகளை அவ@ர செலுத்தி, மீதி பணத்தை மட்டும் எனக்கு அனுப்புமாறு, "இ-மெயில்' அனுப்பினேன். அவ்வளவு தான்; மறுமுறையில் கப்சிப். இது போன்ற ஏமாற்று, "இ-மெயில்' வருவதும் நின்று விட்டது. மற்றவர்களும் இது போன்று செய்யலாமே?
— கே.சீனிவாசன், சென்னை.
ஒண்ணா பயணம் செய்ய கத்துக்கணும்!
சென்னையில், நண்பர் வசிக்கும் அபார்ட்மென்டுக்கு சென்றேன். அங்கே விளம்பரப் பலகையில், பிளாட் எண், மாலை, 6 மணி மயிலாப்பூர் 2, மாலை 7 மணி பனகல்பார்க் 1, இப்படி வரிசையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒன்றும் புரியாமல், நண்பரிடம் இது குறித்து விசாரித்தேன். அவர் சொன்னார், "அந்தக் குறிப்பிட்ட பிளாட்டில் இருப்பவர், மாலை 6 மணிக்கு மயிலாப்பூர் போகிறார். அவர் காரில், 2 பேருக்கு இடம் இருக்கிறது என்று பொருள். தேவையானவர்கள், அந்த பிளாட் காரரை போனிலோ, நேரிலோ அணுகி, தான் வருவதை உறுதி செய்து, பின் பலகையில் அந்த வரியை அழித்து விடுவர். பெட்ரோலுக்கான தன் பங்குத் தொகையைக் கொடுத்து விடுவர்.
"போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கவும், நாங்கள் மேற்கொண்டுள்ள சிறுமுயற்சி இது.
"அமெரிக்கா போன்ற நாடுகளில், நம் நாட்டை விட, பெட்ரோல் விலை குறைவு. கார்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள், தனித்தனியே அவரவர் காரை உபயோகிக்காமல், 4, 5 பேர் சேர்ந்து, ஒரே காரில் பயணம் செய்யும் முறையை பின்பற்றினால், விசேஷ சம்பளச் சலுகைகள் தருகின்றனர். சாலைகளில் கூட, இதை பின்பற்றுவர்களுக்கு, விரைந்து செல்லக்கூடிய தனிப்பாதைகள் உண்டு.
"பள்ளிகளுக்கு, அலுவலகத்திற்கு, கோவிலுக்கு இப்படி எங்கு சென்றாலும், நாங்கள் இந்த முறையை பின்பற்றுகிறோம். இவ்வளவு ஏன், ஸ்கூட்டரில் கூட யாராவது விருப்பப்பட்டால், அவரை லிப்ட் கொடுத்து அழைத்துச் செல்கிறோம்...' என ஒரு பேருரையே நிகழ்த்தி விட்டார். அவருக்கு ஒரு பெரிய, "ஓ' போட்டுவிட்டு, ஓஹோ, நாம் எல்லாரும் அவசியம் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயம் இது. நம் நாட்டு நலனுக்கும் தேவையானது என்ற முடிவோடு வீடு வந்து சேர்ந்தேன்.
என்னங்க! நீங்களும் தானே பின்பற்றப் போகிறீர்கள்?
— மீனலோசினி பட்டாபிராமன், சென்னை.