"பெருந்தலைவர்' என, அன்பாக அழைக்கப் படும் காமராஜரை பற்றி நினைக்கும் போது, நான் புகைப்படக் கலைஞர் என்ற ரீதியில், அவருடன் பழகியிருந்தாலும், ஏதோ அவர், எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற பாச உணர்வு தான் மேலோங்கி நின்றது. எங்கள் பகுதியில், பெட்டிக்கடை வைத்திருக் கும் நண்பர் ஒருவர், எந்த அரசியல் கட்சியிலும் இல்லாதவர்; ஆனால், காமராஜரின் அபிமானி. என்னிடம், "தலைவரோடு சேர்ந்து, ஒரு போட்டோ எடுக்க வேண்டும்...' என்று தன் ஆசையை அடிக்கடி சொல்வார்.
காமராஜர் மதுரை வந்திருந்த நேரம், நான் அந்த நண்பரை அழைத்து, தலைவர் வழக்கமாக தங்கும் ரயில் நிலைய மாடிக்கு சென்றேன். அறைக்குள் நான் நுழைந்ததும், தோளில் தொங்கும் கேமரா பேக்குடன் என்னை பார்த்த காமராஜர், "வா... வா... என்ன பொட்டியை (@கமராவை) தூக்கிட்டு வந்திருக்கே... இன்னிக்கு ஒண்ணும் நிகழ்ச்சி இல்லியே...' என்றார்.
"இல்லீங்க... உங்கள் அபிமானி ஒருவர், உங்களோடு போட்டோ எடுக்கணும்ன்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்காரு. அவரை அழைத்து வந்துள்ளேன். கூப் பிடட்டுமா?' என்று கேட்டேன்.
"உனக்கு வேற வேலை இல்லே... அதெல்லாம், அந்த சினிமாக்காரங்க கிட்டே தான் வச்சுக்கணும். என்னை ஏன் தொந்தரவு பண்றே...' என்று கேட்டார். எனக்கு சங்கடமாக போய் விட்டது. சிறிது நேர அமைதிக்குப் பின், அவரே மீண்டும், "சரி சரி... நீ கூட்டிட்டு வந்த ஆள் எங்கே?' என்றார். நான் உடனே கதவை திறந்து, வெளியே நின்றிருந்த அந்த நண்பரை உள்ளே அழைத்தேன். அவரும் வந்தவுடன், காமராஜருக்கு வணக்கம் சொல்லியவாறு, ஒரு ஓரத்தில் நின்று கொண்டார்.
காமராஜர் குழந்தைத்தனமாக, "அது சரி... நான் எங்கே நிக்கணும்ன்னு சொல்லு...' என்றார். நான் சொன்ன இடத்தில் நின்று, போட்டோவுக்கு ஒத்துழைத்தார். துவக்கத்தில் மறுத்தாலும், கடைசியில் வந்தவர்களை சந்தோஷப்படுத்தி அனுப்பி வைப்பது, காமராஜரின் தனி பண்பு. சிறிது நேரத்தில் வெளியே சலசலப்பு. என்னவென்று விசாரித்ததில், நரிக்குறவர்கள் சிலர், காமராஜரை சந்திக்க வேண்டும் என வெளியே இருந்த கட்சிக்காரர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இதைக் கேள்விப்பட்ட காமராஜர், அறைக்கு வெளியே வந்து அவர்களிடம் என்னவென்று விசாரித்தார்.
காமராஜரை பார்த்ததும் குஷியான குறவர்கள், "சாமியோவ்... நீங்க நல்லா இருக்கணும், உங்க கையை காமிங்க. எதிர்காலம் பற்றிய குறி சொல்றோம்...' என, "காச்மூச்' என்று, அவர்கள் பாணியில் பேசினர். காமராஜரும் சிரித்தவாறு. "குறியெல்லாம் ஒண்ணும் வேணாம். அதை தெரிஞ்சு என்ன ஆகப் போகுது...' என்று மறுத்து விட்டார். பிறகு அருகிலிருந்த என்னை பார்த்த குறவர்கள், "சாமி... எங்களை தலைவரோடு சேர்த்து போட்டோ எடுங்க...' என்றனர். நான் தயங்கியபடி சும்மா நிற்பதை பார்த்த காமராஜர், "ஏம்பா... இவங்களையும், ஒரு போட்டோ எடு. அவங்களுக்கும் ஆசை இருக்காதா?' என்றவாறு, அவர்களுக்கு நடுவில் நின்று போட்டோ எடுத்து, அவர்களை வழி அனுப்பினார். இப்படி ஒவ்வொரு நேரத்திலும், அனைவரிடமும் பாசத்துடன் பழகுவதை காண முடிந்தது.
இப்படி அனைவரையும் மகிழ்ச்சியுடன் அனுப்பிய காமராஜர், அரசியலில் கடைசி காலத்தில் மனம் வருந்தும் அளவுக்கு, டில்லி அரசியல் மூலம் பல சம்பவங்கள் அரங்கேறின. அரசியலில் இந்திராவும், காமராஜரும் கிட்டத்தட்ட எதிரிகள் போல் ஆகி விட்டனர். கன்னியாகுமரி ரயில் நிலைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு, பிரதமர் இந்திரா வந்திருந்தார். தொகுதி எம்.பி., என்ற முறையில், காமராஜரும் கலந்து கொண்டார். இந்திராவும், காமராஜரும் நீண்ட இடைவெளிக்குப் பின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால், அனைவரும் ஆவலுடன் காணப்பட்டனர். பத்திரிகைக்காக படம் எடுக்க, நானும் கன்னியாகுமரி சென்றிருந்தேன்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த, அத்தனை போட்டோகிராபர்களும் காமராஜர், இந்திராவை சேர்த்து படம் எடுக்க ஆர்வமுடன் இருந்தனர். ஆனால், மேடையில் இடது ஓரம் கடைசி நாற்காலி, காமராஜருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆகையால், நடுவில் அமர்ந்திருந்த இந்திராவுடன் பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.
விழா இறுதியில், நாட்டுப்பண் முடிந்தவுடன், பிரதமர் இந்திரா மேடையிலிருந்து கூட்டத்தை நோக்கி கை அசைத்தவாறு, இடது பக்க ஓரம் வந்தார். ஒரே பரபரப்பு... ஏனெனில், எப்படியும் இடது பக்க ஓரம் வரும் போது, காமராஜரை சந்தித்தே ஆக வேண்டும். அப்போது, இருவரையும் சேர்த்து படம் எடுக்க தயார் நிலையில் நாங்கள் இருந்தோம். அப்போது தான் எதிர்பாராத திருப்பம் நடந்தது.
காமராஜர் இருக்கும் பக்கம் போய்க் கொண்டிருந்த பிரதமர் இந்திராவிடம், விரைந்து சென்ற கருணாநிதி, தன் அருகில் உள்ள மதுரை முத்துவை காண்பித்து, "மேடம் இவர் தான் மதுரை முத்து. சேர்மன்மதுரை...' என்று ஆங்கிலத்தில் கூறி, சம்பந்தமில்லாமல் அறிமுகப்படுத்தினார். அவரும் வணக்கம் செலுத்தினார். அவ்வளவு தான்! உடனே கருணாநிதி கையை வலது பக்கம் நீட்டி, கீழே இறங்கும் வழியை காண்பித்தார். இந்திராவும், வலதுபக்க படி வழியே கீழே இறங்கி புறப்பட்டார். காமராஜர் மேடையில் இருந்து அசையாமல் பார்த்துக் கொண்டிருக்க, அனைத்து புகைப்படக் கலைஞர்களும் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதாயிற்று!
"தந்திரமாக செயல்பட்டு, இந்திரா, காமராஜர் சந்திப்பை கருணாநிதி தடுத்து விட்டாரே...' என, அங்கே இருந்த மூத்த பத்திரிகையாளர்கள் பேசியதை கேட்க முடிந்தது.
***
- மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்