அன்று குப்பண்ணா வீட்டிற்கு சென்று இருந்தேன்... பெங்களூருவில் இருந்து வந்திருந்த தன் மகள் வயிற்று பேரனுக்கு உலக விஷயங்கள் சொல்லிக் கொண்டிருந்தார். ஐந்தே வயதான அந்தச் சிறுவன், வயதுக்கு மீறிய கேள்விகளை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். சிறுவனின் ஆர்வத்தை மெச்சி, அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
நேருவைப் பற்றி கூற ஆரம்பித்தார் குப்பண்ணா... பையன் கேட்டான்:
"நேரு' என்ற சொல்லுக்கு ஏதாவது பொருள் உண்டா?
ஏன் இல்லாமல்? நேரு என்ற சொல், "நஹர்' என்பதற்கு இந்தியில் கால்வாய் என்று பொருள்.
கால்வாய்க்கும், நேருஜிக்கும் என்ன சம்பந்தம்?
பண்டித ராஜ்கவுல் என்பவர், 300 ஆண்டுகளுக்கு முன், முகலாய மன்னரது அழைப்பின் பேரில், காஷ்மீரிலிருந்து குடிபெயர்ந்து டில்லியை அடைந்தபோது, அக்காலத்தில் நகரின் குறுக்கே ஓடிய கால்வாயை அடுத்து அவருக்கு ஒரு வீடு வழங்கப்பட்டதாம். ராஜ் கவுலினின்று தளிர்த்த பரம்பரையினர், நேருக்கள் என்று அழைக்கப்பட்டனர்.
நேருக்களுக்கு, "பண்டிதர்' பட்டம் எப்படி வந்தது?
காஷ்மீரில் பிராமணர்கள் எல்லாரும், "பண்டிதர்'களே!
நேரு பிறந்த ஊர் எது?
எந்தப் பிரயாகையில் இறுதியாக அவரது அஸ்தி கரைக்கப்பட்டதோ, அதுவே தான் அவரது பிறப்பிடமும்! அலகாபாத் என்பது, பிரயாகையின் மற்றொரு பெயர்.
நேருவின் தாய் பெயர் என்ன?
அவர் பெயர் ஸ்வரூப் ராணி. நேருவின் அப்பா, மோதிலால் நேருவுக்குப் பிள்ளைப் பருவத்திலேயே ஒரு கால்கட்டு போட்டிருந்தனர். தலைப் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் இறந்து விட்டனர். மோதிலால் நேருவின் இரண்டாம் மனைவி ஸ்வரூப் ராணி.
நேரு தான் ஸ்வரூப் ராணியின் முதல் குழந்தையா?
நேருவுக்கு முந்தி ஒரு குழந்தை பிறந்து, தங்காமல் போய் விட்டது. அதே போல், 16 வருடம் கழித்து, நேரு பிறந்த அதே நவம்பர் 14ம் தேதியில் மற்றோர் ஆண்மகவு பிறந்து மறைந்தது.
ராஜ்கவுலின் சந்ததியினர் எவ்வாறு வாழ்க்கை நடத்தினர்?
முகலாய மன்னர்களின் பெருமை போல், ராஜ்கவுலுக்கு வழங்கப்பட்ட நிலவுரிமைகளும் தேய்ந்து, தேய்ந்து கடைசியில் அவரது பேரர் காலத்தோடு ஓரேயடியாகக் கைகழுவிப் போயின. நேருவின் தாத்தாவான கங்காதரர் என்பவர், டில்லியில் ஒரு போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
தந்தை மோதிலால் எதுவரை படித்தார்?
பன்னிரெண்டாம் வயது வரை அராபியும், பாரசீக மொழியுமே அவருக்குக் கைவந்தவையாக இருந்தன. அதன் பின்னரே, அவர் பள்ளியில் சேர்ந்து ஆங்கிலம் பயின்றார்.
கல்லூரியில் பட்டம் பெற்றாரா?
கல்லூரியில் படித்தார்; ஆனால், பட்டம் பெறவில்லை.
காரணம்?
முதல் நாள் தேர்வு எழுதினார்; சரியாக எழுதவில்லை என்று தோன்றிற்று. மற்ற பரீட்சைகளுக்கு உட்காராமலே இருந்து விட்டார். பின்னர் பார்த்தால், முதல் பரீட்சையில் அவருக்கு நல்ல மார்க் கிடைத்திருந்தது. பட்டம் பெறாமலே, அக்காலத்திலிருந்த முறைப்படி, அவர் வழக்கறிஞராக பரிட்சைக்கு அமர்ந்து முதலாவதாகத் தேறி, நீதிமன்றத்தில் கால் வைத்தார்.
வெற்றி கிடைத்ததா?
வண்டி, வண்டியாக! முதல் வழக்கில் அவருக்குத் தரப்பட்ட பீஸ் வெறும் ஐந்து ரூபாய்தான். ஆனால், சில வருடங்களுக்குள், மாதம் இரண்டாயிரம் சம்பாதிக்கும் படா வக்கீலாக அவர் உயர்ந்து விட்டார். அந்தக் காலத்து இரண்டாயிரம், இந்தக் காலத்து, பல லட்சத்துக்கு சமானமல்லவா? 45 வயது நெருங்கிக் கொண்டிருந்தபோது, மோதிலால் நேருவின் மாத வரு மானம் பத்தாயிரத்தை தாண்டி விட்டது.
மோதிலால், தாம் சம்பாதித்த பணத்தை எப்படி செலவு செய்தார்?
அவர் பெருத்த செலவாளி... அவரது ஆனந்த பவனத்தில் தான் அலகாபாத்திலேயே முதன் முதலாக ஒரு நீச்சல் குளம் கட்டப்பட்டது. மின்சாரம், தண்ணீர் குழாய் இவற்றை முதன் முதலாக வீட்டுக்குக் கொணர்ந்தவரும் அவரே. தம் மாளிகைக்கு மேஜை, நாற்காலி, சோபா வாங்கும் பொருட்டு, அவர் நான்கு முறை ஐரோப்பா சென்றார். குதிரைகளும், வண்டிகளும், பின்னர், கார்களும் அவரிடம் ஏராளம்... ஊடே புகுந்து நான் கேட்டேன்...
ஜாதி, ஆசாரங்களுக்கு அவர் மதிப்பு கொடுத்தாரா?
அவர் மேல்நாடு சென்று திரும்பியதும், பிராயச்சித்தம் (கடல் கடந்து சென்று திரும்பினால் தீட்டாம்) செய்து கொண்டே ஆக வேண்டும் என்று அவரைக் கட்டாயப்படுத்தப் பார்த்தனர்.
வெடித்ததே எரிமலை! "எது வந்தாலும் வரட்டும். பிராயச்சித்தம் என்ற முட்டாள்தனத்தில் நான் ஈடுபட மாட்டேன்; முடியாது. உங்கள் ஆசாரம் எப்படிப்பட்டது என்பது எனக்கு தெரியும். அவசியமானால், நான் உங்கள் ஜாதி ஆசாரத்தை இரக்கமில்லாமல் நார், நாராகக் கிழித்தெறிவேன்...' என்று முழங்கினார்.
நேருவின் தாய் எப்படிப்பட்டவர்? - இது சிறுவன்...
அவர் பழமையில் ஊறியவர். பூஜை செய்வதிலும், விரதம் காப்பதிலும், தீர்த்த யாத்திரை செல்வதிலும் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர். சின்னஞ்சிறு கைகளும், பாதங்களுமாக, பார்ப்பதற்கு பொம்மை போல் இருப்பாராம். ஆனால், நோயாளி. நடமாடின நாட்களைக் காட்டிலும், அவர் படுக்கையில் கிடந்த நாட்களே அதிகமாக இருந்ததாம்.
சிறுவனாயிருந்த போது, நேருவின் குணம் எப்படி இருந்தது?
கூச்ச சுபாவமுள்ளவராகவும், அதிகம் பேசாதவராகவும் இருந்தார்.
அலகாபாத்தில் நேரு பள்ளிக்கூடம் போனாரா?
நேருவின் பெரியப்பா, இங்கிலாந்துக்கு பயணமான போது, பெரியப்பாவின் பிள்ளை, ஆனந்த பவனுக்கு வந்தான். அவனும், ஜவஹரும் சம வயதுள்ளவர்கள். இருவரும் கான்வென்ட் பள்ளியில் சேர்க்கப் பட்டனர். ஆறு மாதம் சென்றதும், அந்த பையன் தன் வீட்டுக்குப் போய் விடவே, நேருவின் கான்வென்ட் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது; அப் போது அவருக்கு வயது ஏழு.
ஏழு வயதாகும் வரை அவர் படிக்கவே இல்லையா?
வீட்டிலேயே, ஆங்கிலேயே ஆசிரியைகளிடம் கல்வி கற்றார்.
அவரது பிஞ்சு உள்ளத்தில், நாட்டுப் பற்றை முதன் முதலாக விதைத்தவர் யார்? — இது நான்...
அந்தப் பெருமை, ஆனந்தபவனில் பணியாற்றி வந்த முன்ஷி முபாரக் அலி என்ற முஸ்லிமையே சாரும். சிப்பாய் கலகத்தை பற்றிய பல கதைகளை சுவைபடச் சொல்வார் முபாரக் அலி. அத்துடன், இந்து சமய புராணக் கதைகளையும் அவரிடம் தான் கேட்டறிந்தார் நேரு.
நேரு எப்போது இங்கிலாந்து போனார்? — இதுவும் நான்...
இங்கிலாந்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நேருவை சேர்க்கும் பொருட்டு, மோதிலால், 1905ல், கப்பலேறினார். கூட, நேருவின் தாயும், நான்கு வயதுத் தங்கை சரூப்பும் (விஜயலட்சுமி) வந்தனர்.
பள்ளியில் இடம் கிடைத்ததா? — சிறுவன்.
சில ஆங்கிலேய நண்பர்களின் உதவியால், மோதிலால் தம் பிள்ளையை, ஹாரோ பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்தபின், சில மாதம் இங்கிலாந்தில் தங்கியிருந்து, பின், இந்தியா திரும்பினார்.
அப்போது நேருவுக்கு வயது 16.தம் ஒரே பிள்ளையை விட்டு அவர் எப்படிப் பிரிந்திருக்க முடிந்தது?
இந்தியாவை நோக்கி அவர் சென்றாலும், அவர் உள்ளம் ஹாரோ பள்ளியில் தங்கி விட்டது என்பதற்கு, கப்பலில் அவர், நேருவுக்கு எழுதிய கடிதமே சான்று...
"இந்த உலகத்தில் - ஏன், இனி வரக்கூடிய எந்த உலகத்திலும் - நீயே எங்களுக்கு அரிய பொக்கிஷம் ஆவாய். அதை நினைவில் வைத்துக் கொள். உன்னை ஆளாக்கி விட வேண்டும் என்பதால் தான், இந்தப் பிரிவுத் துயரைத் தாங்கிக் கொண்டிருக்கிறோம். உன்னை எங்களோடு வைத்துக் கொண்டிருந்து, கடைசியில் கொள்ளைத் தங்கமும், எள்ளத்தனை கல்வியும் விட்டுச் செல்வது சுயநலமாகும். பாவமாகும்...
"உன்னைப் பிரிந்தபோது தான், உன்னிடத்தில் எனக்குள்ள பாசம் எவ்வளவு என்று தெரிய வந்தது. உடலையும், மனதையும் செம்மையாக வைத்துக் கொள்.
"இன்னும் பக்கம் பக்கமாக எழுதுவேன்... மணி ஒன்றாகி விட்டது. ஆகவே, விடைபெற்றுக் கொள்கிறேன். என் கண்ணான செல்லமே, உன்னை நீயே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம், உன் பெற்றோரை பாதுகாத்துக் கொண்டவன் ஆவாய்...'
மாணவனாக இருந்தபோது நேருவுக்கு அரசியலில் ஈடுபாடு இருந்ததா? — இது நான்...
இருந்தது. நேருவுக்கு அடிக்கடி மாம்பழம் அனுப்புமாறு ஒரு மும்பை பழ வியாபாரியை ஏற்பாடு செய்திருந்தார் மோதிலால். கிடைத்ததற்கரிய அந்தப் பழங்களைக் காட்டிலும், இந்தியாவிலிருந்து பழக் கூடையில் மாம்பழம், பேக் செய்து வந்த செய்தி தாள்களையே பெரிதும் விரும்பினார் நேரு.
படிப்பை முடித்து, எப்போது இந்தியாவிற்கு திரும்பி வந்தார் நேரு?
பாரிஸ்டர் பட்டத்தோடு, 23வது வயதில் திரும்பினார்.
கேள்வி, பதில் தொடர்ந்து கொண்டிருந்தது;
ஆபீசுக்கு நேரமாகி விட்டதால் நான், "ஜூட்' விட்டேன்.
***