*என்.விஜயபாலன், போரூர்: "சம்பளம்' என்ற சொல் எப்படி வந்தது?
வேலைக்கு கூலியாக, நெல்லும், உப்புமே பழங்காலத்தில் வழங்கப்பட்டது இச்சொல். நெல்லில் சிறந்தது, சம்பா; "அளம்' என்றால் உப்பு! இவை இரண்டும் சேர்ந்து, "சம்பளம்' ஆகி விட்டது என்கிறார், திண்ணை பகுதி எழுதி வரும் நடுத்தெரு நாராயணன்.
***
** சு.கதிரேசன். அம்பை: அரசியல்வாதிகளின் ஊழல்களை எவ்வளவு தான் பத்திரிகைகள் சுட்டிக் காட்டினாலும், அவர்கள் அதையெல்லாம் கண்டு கொள்வதாக தெரியவில்லையே...
கண்டு கொள்ளாமல் இருந்ததன் பலனாகத்தான், அவ்வப்போது சிலர் கைது, ரெய்டு போன்ற தொல்லைகளுக்கு ஆளாகி அனுபவித்து வருகின்றனர்.
***
*மா.கல்யாண சுந்தரம், செம்மண்டலம்: அதிர்ச்சி தகவல் ஏதும் உண்டா?
உண்டே! ஒரு கோர்ட்டில் ஒரு நீதிபதி, நீதி பரிபாலனம் செய்கிறார் என்றால், அந்த கோர்ட்டில், அந்த நீதிபதியின் உறவினர் யாரும் வழக்கறிஞராக பணியாற்றக் கூடாது என்பது, "பார் கவுன்சில் ஆப் இந்தியா'வின் விதி. ஆனால், இந்திய ஹைகோர்ட்டுகளில் பணியாற்றும் ஒவ்வொரு, 100 நீதிபதிக்கும், 27 பேர் என்ற விகிதத்தில் உறவின வழக்கறிஞர் கள் பணியாற்றுகின்றனராம். விதியாவது, சட்டமாவது.
***
** வி.நந்தா, முத்தியால் பேட்டை: பிரபல ரவுடிகளை கைது செய்யாமல், சுட்டுக் கொன்று விடுகின்றனரே போலீசார்... என்ன காரணம்?
பலமுறை கைது செய்கின்றனர்; சிறை தண்டனையும் வாங்கித் தருகின்றனர். வெளியே வந்த பின்... அவ்வளவு ஏன்... உள்ளே இருந்து கொண்டே ரவுடித்தனத்தை தொடர்கின்றனர். இவர்களிடமிருந்து பொதுமக்களை காக்கவும், சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்தவும், போலீசார் கையாளும் கடைசி ஆயுதம்தான், "போட்டுத் தள்ளல்!'
***
*நா.கற்பகம், அரிகேசவநல்லூர்:திருமணம் செய்த பின், மனைவியை கறுப்பு என, சதா ஏசும் ஆண்களை என்ன செய்யலாம்? எப்படி திருத்தலாம்?
முதுகில் நாலு சாத்து சாத்தலாம். திருமணத்துக்கு முன் இவருக்கு கண் குருடாக இருந்ததோ? கொழுப்பு கூடுதலாகி போன இவர்களுக்கு, கறுப்பே அழகு... கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பதை காலம் தான் உணர்த்தும்!
***
**ஏ.கோகுல், தேனி: இந்தியாவில் பெரும்பாலான தம்பதியர் போலி வாழ்க்கை நடத்துகின்றனரே...
மேற்கு நாடுகள் போல, பிடிக்கவில்லை என்றால், வெட்டி கொண்டு போக முடியாதே இங்கே... முதல் காரணம், ஊர் வாய்! இரண்டாவது பெண்களின் சுயசார்பின்மை! இதனால், போலி வாழ்க்கை வாழ்ந்தே ஆக வேண்டும் இங்கே!
***
*அ.பாபு, திருப்பத்தூர்: கலகலப்பாக பேசும் ஆண்களை நம்பி விடும் பெண்கள், "ரிசர்வ்ட்' ஆக உள்ள ஆசாமிகளை விரும்பாதது ஏன்?
பெண்களின் அடி மனதில், நகைச்சுவை உணர்வு என்றுமே புதைந்து கிடக்கிறது... கலகலப்பு ஆசாமிகள் அதை உணர்ந்தவர்கள்... சிரித்துப் பேசி, இளகிய மனமுடைய பெண் இனத்தை சரியாக ஈர்த்து விடுகின்றனர். "ரிசர்வ்ட்' ஆசாமிகளை முரடர்களாக சித்தரித்து விடுகிறது பெண்களின் இளகிய மனம். முரட்டுத்தனத்தை எவர் தான் விரும்புவர்.
***