இங்கிலாந்து அரசி, எலிசபெத்தின் உண்மையான பிறந்த நாள், ஏப்., 21ம் தேதி. ஆனால், அப்போது இங்கிலாந்தில் வானிலை மந்தமாக, கொண்டாடுவதற்கு ஏற்றதாக இல்லாமலிருக்கும். ஆகையால், ஒவ்வோரு ஆண்டும், அரசியின் பிறந்த நாளை, வெயிலும், இனிய சூழ்நிலையும்சேரும், ஜூன் 5ம் தேதி கொண்டாடுகின்றனர்.
எலிசபெத்தின் மகன் சார்லஸ், (டயானாவின் முன்னாள் கணவர்) கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த போது, ஒரு பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில், "தினமும் காலை ஏழு மணிக்கு, என் அறைக்கு வெளியே இருக்கும் குப்பைத் தொட்டியிலிருந்து, குப்பை எடுப்பதற்காக ஒருவர் வருவார். அவர் பாடிக் கொண்டே இருப்பார். அந்தப் பாட்டு தான் என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பும். அவர் குரல் மிக நன்றாக இருக்கும்...' என்று குறிப்பிட்டிருந்தார்; அவ்வளவுதான்!
அந்தக் குப்பை வண்டிக்காரருக்கு அடித்தது யோகம். அவரை, ஒரு பிரபல இசைத்தட்டுக் கம்பெனி, உடனே ஒப்பந்தம் செய்து விட்டது.
***
கடவுள் என்னைக் கூப்பிட்டு, "திருத்தம் செய்ய வேண்டியது இயற்கையில் என்ன இருக் கிறது?' என்று கேட்டால், "எது, எது, எப்படி எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி அப்படியே கச்சிதமாக இருக்கிறது. ஒன்றிலும் கை வைக்காதீர்கள் என்று பதிலுரைப்பேன்...' என்றார், உலகப் புகழ் பெற்ற சிற்பி ரோடின்.
பால்ஸாக் என்ற, பிரபல எழுத்தாளரின் உருவத்தை, சிலையாகச் செய்தார் ரோடின். பிறகு, தன் மாணவன் ஒருவனை கூப்பிட்டுக் காட்டினார். "ஆகா... சிற்பத்தின் கை ஒன்றே போதுமே... எத்தனை அற்புதமான கை...' என்று அவன் பாராட்டினான். வேறு சிலரையும் அழைத்து வந்து காட்டினார் ரோடின்.
ஒருவர் பாக்கியில்லாமல், "அடடா... என்ன அழகான கை... பிரமாதம்...' என்று புகழ்ந்தனர். ரோடின், வேகமாகப் போய், ஒரு சுத்தியலை எடுத்து வந்து, அந்த சிற்பத்தின் கையை ஒரே போடாகப் போட்டு, உடைத்து விட்டார். அத்தனை பேரும் திகைத்துப் போயினர்.
அவர்களிடம், "சிற்பமென்றால் மொத்த அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும். எந்த ஒரு பகுதியும் மற்றதைவிட, அளவுக்கு மீறி சிறப்பாக விளங்கக் கூடாது...' என்று விளக்கினார் ரோடின்.
***
மக்களுக்கு சிரிப்பூட்டுவது இந்தக் காலத்திலே, மிகக் கஷ்டமான காரியம் என்பதை நான் நன்றாக, அனுபவப்பூர்வமாக அறிந்து கொண்டேன். முதலிலே நான் திரைப்படவுலகில் பிரவேசித்தபோது, இந்தக் காரியம் ரொம்பவும் எளிதாக நடைபெற்று வந்தது.
"தட்சயக்ஞம்' என்ற படத்தில், "நான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். நீ, பேசாம நின்னுக்கிட்டேயிருந்தால் என்ன அர்த்தம்?' என்று சொன்னேன். இதற்கு ஒரு சிரிப்பு.
ஆர்யமாலாவில், "ஐயோடா...' என்றும், "சேட்டன் கிளியாயில்லே...' என்றும் சொன்னேன். இதற்கு ஒரு கைத்தட்டல்.
அசோக்குமார் படத்தில், "இவரு சொன்னா சொன்னது தான். எவரு... இவரு தான்...' இவ்வளவுதான்; ஒரே ஆமோதிப்பு.
சகுந்தலாவில், "காலையிலே எழுந்திருச்சு, கஞ்சித் தண்ணியில்லாமக் கஷ்டப்படறேன்... கடவுளே... கொஞ்சம் கண்ணைத் திறந்து பாரு, கடவுளே...' என்ற பாட்டைக் கேட்டதும், ஒரே குதூகலம்!
பவளக்கொடியில், "பரமசிவனாக்கி, பார்வதி கங்கா தோ பத்தினிவேஹ... எனக்கு ஒண்ணும் நஹிஹே...' இதற்கு ஒரே குதூகலம், கைத்தட்டல், சிரிப்பு எல்லாம்.
இதெல்லாம் கடந்த கால ஹாஸ்யத் துணுக்குகள். இப்போ, இவ்வளவு ஹாஸ்யங்களையும் வேறொருவர் ஒன்றாக இணைத்துக் கட்டி, உங்கள் முன்னே வைத்தால் கூட, சிரிக்க மாட்டீர்கள். காரணம், உங்கள் அறிவின் முதிர்ச்சியும், சிந்தனையின் பெருக்கமும் தான். இப்போது, மக்களைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்து, மகிழ வேண்டுமானால், அந்தப் பணியைச் செய்யும் கலைஞருக்குப் பல துறைகளிலும், தேர்ச்சியும், தெளிந்த அறிவும் வேண்டும்.
— கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வானொலி உரை (1949).
***
நடுத்தெரு நாராயணன்