அந்த, "எக்ஸ்க் யூஸ்மி'யில் இனிமை இல்லை; இளமை இல்லை; கரகரப்பு. வேண்டுதலுக்குப் பதில் சின்னதாய் ஒரு விரட்டல்; அத்துடன் அலட்டலும்.
திரும்பிப் பார்த்தால் தடியாய், தாட்டியாய், முரடாய், முகத்தில் எண்ணெய் வழிந்து... ஒருவன்!
அவன்,"எக்ஸ்க்யூஸ்மி' என்று சிரிக்க, விகற்பம். சிரித்திருக்கவே வேண்டாம். காவிப்பற்கள்! கழுத்திலும், காதிலும் சின்னதாய் உருளைகள் வழுக்கின. மொட்டைப் போட்ட மண்டை, குறுந்தாடி.
அவனை பார்க்கப் பார்க்கக் கொஞ்சம் கலக்கம் தான்.
"ம்...?'
"டு யூ ஹாவ் டாலர்?' என்று அவன் புன்னகைக்க வெலவெலத்துப் போயிற்று.
இவர்களை பற்றி, நண்பர்கள் நிறையவே மிரட்டியிருக்கின்றனர். சிலர் மிருகங்கள் போல எதுவும் செய்வர்.
நண்பர் சம்பத், நியூயார்க்கின் டைம்ஸ்கொயர் அருகே நடந்து கொண்டிருந்தபோது, திடீரென, எதிரே ஒருவன் எதிர்ப்பட்டு, என்னவோ கேட்டிருக்கிறான். அவருக்கு எதுவும் விளங்கவில்லை.
அவனிடம் வம்பு ஏன் என்று, அருகில் தங்கியிருந்த ஓட்டலுக்கு வேகவேகமாய் நடந்திருக்கிறார். அவனும் விடுவதாயில்லை, முறைத்துக்கொண்டு பின் தொடர்ந்திருக்கிறான் வேக வேகமாய்!
இவருக்கு படபடப்பு. ஓட்டலை அடையும் முன், நிச்சயம் இவனிடம் மாட்டி விடுவோம், என்ன செய்யலாம் என்று யோசித்தவர், சட்டென அருகிலிருந்த கடைக்குள் புகுந்தார்.
அவனும் விடுவதாயில்லை. கடைக்காரர் என்னவென்று விசாரிக்க, இவர் விவரம் சொல்ல, அந்தக் கடைக்காரர், "கவலைப்படாதீர்கள். அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்று உள்ளேயிருந்து துப்பாக்கி எடுத்து குறி வைக்க, ஓடியே போய் விட்டானாம்.
சம்பத்திற்கு, போன உயிர் திரும்ப வந்தது. கடைக்காரர், "நியூயார்க் குற்ற நகரம். இங்கு பல நாட்டு கயவர்களும், அயோக்கியர்களும் ஐக்கியம். அதனால், தனியாக எங்கும் வெளியே செல்லாதீர்கள்...' என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
"அவன் போயிட்டான். நீங்கள் தைரியமாய் ரூமுக்கு போகலாம்...'
"வெளியே நிற்பானோ என்னவோ?'
"இல்லை. எளியவர்களிடம் பறிக்க பார்ப்பர். எதிர்த்தால் ஓடி விடுவர்! இங்கு எடுபடாது என்று தெரிந்ததும், அடுத்த நபரை பார்க்கப் போயிருவான்...'
லேனா தமிழ்வாணன் கூட, சொல்லியிருந்தார்...
"வெளியே செல்லும் போது அவசியம், குறைந்தபட்சம் ஐந்து டாலராவது கையில் வைத்திருங்கள். அதிகம் வேண்டாம். ஒன்றிரண்டு போதும்.
"எங்காவது, யாராவது மிரட்டினால், பயப்பட வேண்டாம். உட@ன யோசிக்காமல் கையிலிருக்கிற, ஐந்து அல்லது சில்லரை டாலர் நோட்டுகளை எடுத்து நீட்டுங்கள். வாங்கிக் கொண்டு போய் விடுவான். பிச்சை!
"ஒருவகை அதிகாரப் பிச்சை! பணம் கொடுக்கவில்லையென்றால் கத்தியால் குத்தி விடுவர் அல்லது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவன் பாட்டிற்குப் போய் விடுவான்' என்று எச்சரித்திருந்தார் லேனா.
@ராட்டில் சரி, வசதி படைத்தவர்கள் புழங்கும் கிளப்களிலுமா! இதை இவர்கள் கேட்க மாட்டார்களா? சந்தோஷம் அனுபவிக்க வரும் இடத்தில் வழிப்பறிக்காரர்களை எப்படி அனுமதிக்கின்றனர்?
"ஹாவ் டாலர்...'
திரும்பக் கேட்கிறான். நம்மை விட மாட்டான் போலிருக்கிறதே! என்ன செய்யலாம்? அஞ்சு எடுத்து அழுதிருவோமா?
அதற்குள் நண்பர் இடைப்பட்டு, "யு வான்ட்... சேஞ்ச்?'
"கோ டு கவுன்ட்டர்! யு வில் கெட்!'
"ஓக்கேய்... தாங்க்யூ!'
அவன் கடந்து போனதும்,"எதுக்கு சேஞ்ச் கேட்டான்?' என்றேன் மிடறு விழுங்கியபடி.
"வேறு எதற்கு? ஒவ்வொரு டாலராக இதுங்களுக்குத் தானம் பண்ணத்தான்...'
ஒரு டாலரின் மகோற்சவம் அப்போதுதான் எனக்குப் புரிந்தது. தானம்தானே! பாவம்! கஷ்டப்பட்டு ஆடுதுங்க! நாமும் சில்லரை மாற்றி வைத்துக் கொள்ளலாமோ என்று தோன்றிற்று.
நண்பர், "இரு. நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வர்றேன்!' என்று கிளம்பினார். தெரியாத முகங்கள் பல இருந்தாலும், பழகினவர்களை வைத்து அங்கே அமர்ந்திருப்பதில் கொஞ்சம் சங்கோஜம்தான். நண்பர் நகர்ந்ததும் கொஞ்சம் ஆசுவாசம். சுதந்திர உணர்வு!
அதற்குள் மேடையில் வேறு கோஷ்டி நெளிய ஆரம்பித்திருந்தது. இவர்கள் மேக் - அப், ஜிகினா, முடி, துக்னியூண்டு என்றாலும், உடைக்கு எத்தனை செலவு செய்வர்?
அவர்களுக்காகச் சற்று விசனப்பட்ட போது, திரும்ப, "எக்ஸ்க்யூஸ்மி!'
ஐயோ... மறுபடியுமா?
திரும்பினால்... பஞ்சு சரீரத்துடனும், தகதகப்புடனும் ஒரு பெண்! அடர்ந்த, பரப்பின கூந்தல். புருவம், உதடுகளில் ஜிகினா! கொஞ்சமே கொஞ்சமாய் உடை! பம்பரத்துக்கும், ஆம்லேட்டுக்கும் அஞ்சாத பளபள வயிறு.
அவள் மிக அன்யோன்யமாய் அருகில் நெருங்கி அமர்ந்து, "ஹாய்!' எனப் பேச ஆரம்பித்தாள். சத்தியமாய் எதுவும் விளங்கவில்லை. மயக்கம், கலக்கம். இங்கே என்ன நடக்கிறது? இவளுக்கு என்ன வேண்டும்? டவுட் தனபாலாகி விழித்தேன்.
அவள் @பசியது என்னவோ, ஆங்கிலம் தான்; ஆனால், புரியவில்லை. நண்பர் டாய்லட்டில் இன்னும் என்ன செய்கிறார்? வாய்யா சீக்கிரம்!
"டு யு லைக் டு பன் வித் மி?'
என்ன கேட்கிறாள்? மலங்க, மலங்க விழிக்க, அதற்குள் நண்பர் வந்து, அனுபவத்தின் அடிப்படையில் புரிந்துகொண்டு குசும்பல்! சிரித்தாள்!
அவள் எழுந்து கையைப் பற்ற,
"ம்கூம்' என்று உதறினேன். அதற்குள் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். இது நம்பு குறிச்சி... குக்கிராமம்!
தேறாது என்று பக்கத்து மொழு மொழு நபரிடம், "எக்ஸ்க்யூஸ்மி' யை ஏவினாள். அவன் எகிப்தியன். ஏற்கனவே நடனப் பாவைகளுக்கு, கண்டமேனிக்கு டாலர்களை திணித்துக் கொண்டிருந்தவன்.
"அவ என்ன கேட்டா?'
"கேட்கலை... கூப்பிட்டா?'
"எதுக்கு?'
"பிரைவேட் ÷ஷா. இங்கே மொத்த பேருக்கு ஆடறதை உள்ளே தனியா...'
"அட கொடுமையே...'
"என்ன கொடுமை? கொல்லம்பட்டறைக்கு போனா இரும்பு அடிக்கணும்! பாருக்குப் போனா தண்ணி...'
அதற்குள் அப்பெண், அந்த எகிப்தியனின் தோளைக் கவ்வியபடி உள்ளே போவது தெரிந்தது. அப்புறம் விசாரித்தபோது, பிரைவேட் ÷ஷா - ஐந்து நிமிடத்திற்கு, 25 டாலர்! அரை மணி நேரம் என்றால், 125. காரண காரியங்களைப் பொறுத்து, 200 வரை கட்டணம்!
நவம்பரின் கடைசி வியாழன் அமெரிக்கா முழுக்க, "தேங்க்ஸ் கிவ்விங்' நாளாகக் கொண்டாடப்படுகிறது. சீசன் மாறி, குளிர் தாக்கும் நேரமது.
நம்மூர் பொங்கல் போல அறுவடை சீசனில் கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக இந்தப் பண்டிகை அமைக்கப்பட்டிருக் கிறது. இதில், சிறியவர்கள் முதியோருக்கும், முதியவர்கள் பிள்ளைகளுக்கும் நன்றி சொல்வதும் சிறப்பு.
அந்த நாளில் குடும்பத்தினர் சேர்ந்து உணவு உண்ணுவதுடன், இல்லாதவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பது மரபு. எல்லாம் நம் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ஈத் போலத்தான்!
பொதுவாக, எந்த மதத்துப் பண்டிகை என்றாலும், விசேஷத்திற்காகத் தயாரிக்கப்படும் உணவு வகைகளை, ஏழைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்கிற ஈகைப் பழக்கத்தை வலியுறுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளன.
இவர்களின், "தேங்க்ஸ் கிவ்விங்' சாப்பாட்டில் பன்றிக்கறி முதல் பலதும் அடக்கம்.
இந்த வாரத்தில் நம்மூர் ஆடித் தள்ளுபடி போல அங்கும் தள்ளுபடி! குறிப்பாக, எலக்ட்ரானிக் பொருட்கள்! அதுவும் வருகிற எல்லாருக்கும் கிடையாது. ஸ்டாக் உள்ள மட்டுமே! அந்த ஸ்டாக் கொஞ்சமாகத்தான் வைப்பர்.
இதனால், கடையில் தள்ளுமுள்ளு! எத்தனை சம்பாதித்தாலும், எத்தனை படித்திருத்தாலும், இலவசம் அல்லது தள்ளுபடி என்றால், எந்த ஊரில் என்றாலும் இதே நிலைமைதான் போலிருக்கிறது.
அந்தக் குறிப்பிட்ட ஸ்டாக்கை அள்ளி வந்து விட வேண்டி, மக்கள் நடுசாமத்திலேயே போய் இடம் பிடித்து விடுகின்றனர். அப்போது பயங்கரக் குளிர். அதிலிருந்து தப்பிக்க, கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் கியூவில் அமர்ந்து தூங்க, கொட்டகை அமைத்துத் தருகின்றனர். அதற்கும் போட்டா போட்டி!
அமெரிக்கா பணக்கார, மெய்ஞான நாடாயிற்றே. அங்கும் ஜோதிடம் ஜாதகமெல்லாம் உண்டா?
— தொடரும்.
என்.சி. மோகன்தாஸ்