பூனை கால்களில் அபூர்வ அறுவை சிகிச்சை!
அறுவடை இயந்திரத்தில் சிக்கி கால்களை இழந்த பூனைக்கு, நவீன அறுவை சிகிச்சை மூலம் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. உலகில் முதல் முறையாக இந்த அபூர்வ அறுவை சிகிச்சை லண்டன் நகரில் நடந்துள்ளது.
இந்த குட்டி பூனையின் பெயர் ஆஸ்கார். கேத் என்பவரும் அவர் கணவர் மைக் நோலன் என்பவரும் இந்த பூனையை செல்லமாக வளர்த்தனர். இரண்டரை வயதே ஆன இந்த பூனை, சமீபத்தில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த போது, அறுவடை இயந்திரத்தில் சிக்கியது. அதன் இரண்டு பின்னங்கால்களும் சிதைந்தது.
உடனே, அந்த பூனையை உள்ளூர் கால்நடை மருத்துவரிடம் எடுத்துச் சென்றார் கேத். உயர் தொழில்நுட்ப நிபுணரான பிட்ஸ்பாட்ரிக் என்பவரிடம் கொண்டு செல்லுமாறு அவர்களுக்கு டாக்டர்கள் அறிவுரை கூறினர். பிட்ஸ்பாட்ரிக் அந்த பூனையைப் பார்த்தார். "சிதைந்த கால்களை அகற்றி விட்டு, அங்கு செயற்கை கால்களைப் பொருத்தலாம்...' என, முடிவு செய்தார். அறுவை சிகிச்சை நிபுணர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர். மூன்று மணி நேரம் பூனைக்கு அறுவை சிகிச்சை நடந்தது. பூனையின் பின்னங்கால்களில் உலோகத்தால் ஆன செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன. இன்னும் நான்கு மாதங்களில் இந்த பூனை தன் வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பூனைக்கு இது போல் செயற்கை கால்கள் பொருத்தப்படுவது இதுவே முதல் முறை.
* * *
உலகின் முதல் பறக்கும் கார் தயாரிக்க அனுமதி!
சட்டச் சிக்கல்களில் சிக்கி இருந்த பறக்கும் கார் திட்டத்திற்கு, ஒரு வழியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பாஸ்டன் நகரைச் சேர்ந்த, "டெராபிஜியா டிரான்சிஷன்' என்ற நிறுவனம், இந்த பறக்கும் கார் திட்டத்தை 2006ல் துவக்கியது. காராகவும், விமானமாகவும் செயல்படும் இந்த வாகனத்திற்கு அனுமதி அளிக்க அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் இழுத்தடித்தது.
இந்த வாகனம் 53 கிலோ எடைதான் இருக்க வேண்டும் என, அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் கூறியது. ஆனால், இந்த வாகனத்தில் மற்ற பாதுகாப்பு சாதனங்களை இணைக்கும் போது, அதன் எடை மேலும் கூடியது; எனவே, இந்த வாகன தயாரிப்பு தள்ளிக் கொண்டே போனது. இப்போது, எடை விஷயத்தில் விமான போக்குவரத்து நிர்வாகம் சில சலுகைகளை அறிவித்து உள்ளது. எனவே, இந்த பறக்கும் காருக்கும் அனுமதி கிடைத்து விட்டது. "டிரான்சிஷன்' என பெயரிடப்பட்டுள்ள இரண்டு இருக்கைகளைக் கொண்ட இந்த பறக்கும் கார், அடுத்த ஆண்டு பறக்கத் துவங்கும்.
"இப்போதே எங்களுக்கு 70 கார்களுக்கான ஆர்டர்கள் உள்ளன...' என்கிறது இந்த நிறுவனம்.
இதன் விலை 90 லட்சம் ரூபாய். இந்த கார் மணிக்கு 115 கி.மீ., வேகத்தில், 725 கி.மீ., தூரம் வரை தொடர்ந்து வானில் பறக்கும். ரோட்டில் செல்லும் போது, இதன் இறக்கைகளை மடித்து வைத்துக் கொள்ளலாம்.
* * *