- சந்தோஷ சாரலில் வாசகர்கள்!
இந்த வருடம் குற்றால சீசன் டூருக்கு தேர்வு செய்யப்பட்ட வாசகர்கள், கொஞ்சம் கூடுதல் அதிர்ஷ்டம் உடையவர்கள் என்றே சொல் லலாம்.
காரணம்... எந்த வருடமும் இல்லாத அளவிற்கு, இந்த வருடம் உச்சக்கட்ட சீசன் நிலவிய போது, போய் இறங்கியதுதான்.
சாரலும், தூறலுமாய் டூர் நடைபெற்ற மூன்று நாளும், மழை பெய்து கொண்டே இருந்தது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. ஆனந்தத்திற்கு கேட்கவா வேண்டும்.
மதுரை, ஓட்டல் பிரேம் நிவாசில் இருந்து கிளம்பும் போதே சாரல் வரவேற்றது. நடுவில் ராஜபாளையம் ஆனந்தா கார்டன் திருமண மண்டபத்தில் சிறிது இளைப்பாறிய போது, சாரல் தூறலாகியிருந்தது. குற்றாலத்தில் வாசகர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அலங்கார் ரிசார்ட்சில், அலங்கார் சின்னவர் ஈஸ்வர் ராஜ் அனைவரையும் வரவேற்றபோது, மழை கொட்ட ஆரம்பித்தது. "ஆகா... ஆனந்தம்... ஆனந்தம்... ஆனந்தமே...' என்று பாடியபடி, 72 வயது வாசகர் ஏகாம்பரமும், 64 வயது ராஜூவும் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு காளையை அடக்க பாயும் வீரர்கள் போல, துண்டை தலையில் கட்டிக் கொண்டு, அருவியில்குளிக்கத் தயாராயினர்.
முதலில் ஐந்தருவியில் குளியல்... அங்கே சரியான கூட்டம். அருவியோ பேரிரைச் சலோடு விழுந்து கொண்டு இருந்தது. "இந்தக் கூட்டத்தில் எப்படி குளிக்க போகிறோம்...' என்று, வாசகர்கள் திகைத்துப் போய் நின்றபோது, முன்கூட்டியே விடுத்த வேண்டுகோளின்படி, நெல்லை மாவட்ட எஸ்.பி.ஆஸ்ரா கார்க் உத்தரவின்படி, குற்றாலம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவன் ஆகியோர் சில நிமிடங்களில், அருவியில் வாசகர்கள் நிம்மதியாக, சந்தோஷமாக குளிக்க ஏற்பாடு செய்தனர். இந்த நிம்மதியான, பாதுகாப்பான குளியல், பழைய குற்றால அருவி, புலியருவி, மெயினருவிகளிலும் தொடர்ந்தது.
அதிலும், பழைய குற்றால அருவியில் பூத்தூவல் போல விழுந்த தண்ணீரில் குளித்த வாசகர்களை பார்க்கவே நிறைய கூட்டம் கூடிவிட்டது. "ஏலே... எல்லாம் தினமலர் வாசகர்களாம்ல... என்னா... சொகமா குளிக்காக..." என்று, திகைத்து நின்ற கூட்டம், ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் குளித்துவிட்டு வந்த வாசகர்களிடம், "எம்புட்டு துட்டு கொடுத்தீங்க... இப்படி ஓரு ராஜ மரியாதை!' என்று கேட்க, "ரொம்ப சிம்பிள்... நாங்க தினமலர்-வாரமலர் வாசகர்கள்; ஒரே ஒரு தபால் போட்டோம்; இந்த அளவிற்கு அனுபவிக் கிறோம்...' என்று வாசகிகள் சியாமளா, செல்வி, சந்திரா பிரபா, தமயந்தி தேவி, மகேஸ்வரி ஆகியோர் சொல்ல, "ஏலேய்... வர்ற வருஷம் நம்மூர்ல வர்ற வாரமலர் பொத்தகம் பூராத்தையும் நாமலே வாங்கிராம்னுல...' என்று சொல்லிச் சென்றனர்.
வெறும் குளியல் மட்டும் இல்லீங்க... நேர... நேரத்திற்கு மட்டுமில்லாமல், நேரம் கெட்ட நடுராத்திரியில் கேட்டால் கூட, சுடச்சுட சுவையான சாப்பாட்டை திண்டுக்கல் கீதா மெஸ் சந்திரசேகர் தலைமையிலான அணியினர் வழங்கினர். நல்ல எண்ணெயில் மட்டு மில்லாமல், நல்ல எண்ணத்துடன் செய்து தந்த பலகாரம் என்பதால், வயிற்றுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல், மூன்று நாட்களும் வீட்டு சாப்பாடு சாப்பிட்ட சந்தோஷம். அத்துடன் மொபைல் கேன்டீன் போல வாசகர்கள் குளிக்குமிடத்திற்கே வண்டியில் வந்து சுடச்சுட ஸ்வீட், காரம், காபி கொடுத்து அசத்தினர்.
உடம்பிற்கு புத்துணர்ச்சி தர நல்ல குளியல் போட்டாச்சு... வயிற்றுக்கு புத்துணர்ச்சி தர சூப்பரா சாப்பிட்டாச்சு... இனி, மனதிற்கு புத்துணர்ச்சி தர வேண்டாமா? மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்துறை பேராசிரியர், நாடறிந்த நகைச்சுவை திலகமும், தரமான நகைச்சுவை தருவதில் தன்னிகரற்றவருமான ஞானசம்பந்தனின் நகைச்சுவை பேச்சைக் கேட்டு, வாசகர்கள் சிரித்த சிரிப்பில், குற்றாலமே அதிர்ந்தது. அவர், தான் மட்டும் பேச எண்ணாமல், வாசகர்களையும் உற்சாகப்படுத்தி பேச வைத்தார். அந்த வகையில், அவர் வைத்த திடீர் பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு, வாசகிகள் அங்குலதா, பத்மாவதி, மமதா, மகேஸ்வரி, கோகிலா பிரியதர்ஷினி, வாசகர்கள் மோகன்தாஸ், வேல்முருகன், ராஜ்குமார், சுந்தரம் ஆகியோர் பின்னி எடுத்தனர். போதாததற்கு, நடுவர் ஞானசம்பந்தனின்
மனைவி அமுதாவும் கலந்து கொள்ள, பட்டிமன்றம் களைகட்டியது. சிரித்து, சிரித்து வயிறு புண்ணானது.
மதுரை சமூகவியல் கல்லூரி பேராசிரியர் கண்ணனுக்கு, இன்னொரு பெயர் வைக்கலாம் என்றால், "கலகலப்பு கண்ணன்' என்று வைக்கலாம். அந்த அளவிற்கு தான் இருக்குமிடத்தை கலகலப்பிற்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்வார். ஒவ்வொரு வருடமும், ஒரு புதுமையை இவர் புகுத்துவார். அந்த வகையில், இந்த வருடம் அவர் அன்பை வலியுறுத்தும் வகையில் நடத்திய விளக்கு பூஜையால், அனைவருமே மெய்சிலிர்த்தனர்.
"உங்க வாசகர்களுக்கு நான் ஏதாவது செய்யணுமே...' என்று, செங்கோட்டை மகாராஜா ரியல் எஸ்டேட் அதிபர் குமரகுருபரன், அனைவரையும் தென்காசி கோவிலுக்கு வரவழைத்து, சிறப்பு பூஜை நடத்தி, அனைவருக்கும் மலர் மாலை அணிவித்து, கோவிலை சுற்றிக் காண்பித்து, சிறப்பு செய்தார். "அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும்தான் மாலை மரியாதை என்று எண்ணியிருந்தோம்; இப்போது, எங்களுக்கும் அந்த மரியாதை கிடைத்ததை நினைத்து, நெஞ்சு பூரித்து நிற்கிறோம்...' என, வாசகிகள் மங்கையர்கரசி, லாவண்யா, சசிபானு, அர்ச்சனா, அங்குலதா, சந்திரா ஆகியோர் நெஞ்சம் நெகிழ்ந்தனர்.
"எல்லாருக்குமே பிடிக்கிற மாதிரி பார்த்து, பார்த்து நிறைய விஷயம் பண்ணியிருக்கீங்க... இதோ... இந்த போட் கிளப்பில், மழையில், படகில் போன ஆனந்தமும், இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிய ஆனந்தமும், வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத ஆனந்தம்...' என்று ரேகா, பிரபா, கனகவல்லி, ஹரிஹரன், மகேஸ்வரி, உஷாராணி, திவ்யாஸ்ரீ ஆகியோர் உற்சாகமாக கூறினர்.
"மின்மினிப் பூச்சிகளாக இருந்த எங்களை, இப்படி வானில் மின்னும் நட்சத்திரங்களாக்கி அழகு பார்க்கிறீர்கள்; உங்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்...' என்று வாசகரும், கவிஞருமான ராஜ்குமார் உணர்ச்சி மேலிட அவ்வப்போது கவிதை படித்து, நெஞ்சத்தை நெகிழ வைத்தார்.
கள்ளம், கபடமில்லாமல் மனதில் இருப்பதை பேசி, மொத்த டூரையும் எந்நேரமும் கலகலப்பாக வைத்திருந்து, "குற்றாலம் டூர் ராணி' என மகுடம் சூட்டப்பட்ட வாசகி பிரபா, "எனக்கு கல்யாணம் முடிவானதும், திருமண பத்திரிகையில், "உங்கள் வருகையை பெரிதும் எதிர்பார்க்கும் சுற்றமும், நட்பும் என்று போட மாட்டேன்; பதிலாக, வாரமலர் குற்றால டூர் 2010 வாசகர்கள்!' என்று தான் போடுவேன். நீங்கள் தான் என்னோட சகோதரர், சகோதரி, சித்தப்பா, சித்தி, தாய்மாமன் என்ற எல்லா உறவும்... வந்திருவீங்கல்ல...' என்றவர், சற்று நிறுத்தி, கண்கலங்கியபடி, "வந்திருவீங்க இல்ல... வர்றீங்க...' என்று முடித்தார்.
***
இவர்தான்... அவரா?
டூர் பற்றி விளக்கிச் சொல்ல கடலூர் வாசகி ரேகா வீட்டிற்கு போனபோது, அவரது அம்மா செல்வி, தன் வீட்டை வெள்ளை அடிக்காத குறையாக கழுவி, சுத்தம் செய்து, வாசலில் கோலமிட்டு, "அந்துமணியே வருக... வருக!' என்றெல்லாம் எழுதி வைத்திருந்தார். அவரிடம், "ஐயோ... அம்மா... நான் சும்மா... நீங்க மனசில நினைச்சுட்டிருக்கிற அந்துமணி டூருக்கு வருவாரு...' என்ற பிறகே, சமாதானமாகி பேச ஆரம்பித்தார்.
இது போலவே பெரும்பாலான வாசக, வாசகிகள், "டூருக்கு அந்துமணி வருவாரா... மாட்டாரா? அதை மட்டும் முதல்ல சொல்லுங்க...' என்று கேட்டு, "அவர் வருவார்!' என்ற பிறகே, தங்கள் வருகையை உறுதிப்படுத்தினர்.
அதே போல குற்றாலம் வந்த பிறகு குளியல், சாப்பாடு, விளையாட்டு என்று மூன்று நாளும் படு பிசியாக இருந்த போதும், அவ்வப்போது, "அந்துமணி வருவார்ன்னு சொன்னீங்களே... எங்கே அந்துமணி?' என்று விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தனர்.
ஒரு கட்டத்தில், என்னிடம் கேட்டால் வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்து, தாங்களே களத்தில் இறங்கினர். தங்களிடம் மிகவும் அன்பாக பேசி, கலகலப்பாக பழகி, தங்களுக்காக படகு குழாமில் துடுப்பு படகெல்லாம் ஓட்டி, பின், "சீசா' பலகையில் எப்படி விளையாடுவது, ஊஞ்சலில் எவ்விதம் ஆடுவது என்றெல்லாம் சொல்லிக்காட்டியவரை பிடித்துக் கொண்டனர்.
"சார்... நீங்களாவது அந்துமணியைக் காட்டுங்க சார்... அவரிடம் சொல்லி, உங்க சம்பள உயர்விற்கு சிபாரிசு செய்றோம் சார்...' என்று, அவரிடம் கெஞ்சிப் பார்த்தனர்; அவரும், "சரிம்மா... சரிங்க சார்!' என்று சொல்லி சமாளித்து வந்தார்.
கடைசியில் வாசகிகள் மகேஸ்வரி ஹரிஹரன், மமதா சந்திரா, பத்மாவதி, வாசகர்கள் ராஜ்குமார், மோகன்தாஸ், சுந்தரம் ஆகியோர், "டூர் ஆரம்பித்ததில் இருந்து முடியும்வரை, கூடவே இருந்து கைகொடுத்து அனுப்பி வைக்கறீங்க... ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா நல்லா இருக்கும்ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள், அந்த ஊர் பால்கோவாவை ஆளாளுக்கு கால் கிலோ வாங்கித் தர்றீங்க... உங்களோடு ஒரு படம் எடுத்துக்கிறோம். முடிஞ்சா அந்துமணிகிட்ட சொல்லுங்க...' என்று சொல்லி, படம் எடுத்துக் கொண்டனர்; ஆனால், அவரோ, அந்துமணியிடம் அந்தப் படம் விஷயமாக எதுவும் சொல்லவில்லை. காரணம்... அவர்தானே அந்துமணி.
***