குழந்தைக்கு வேண்டியது! (சிறுகதை)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2010
00:00

- ஆர்.சந்திரஹாசன்
இன்னும் கொஞ்ச நாளில் பிரசவமாகி விடும் என்று சொல்லி விட்டார் லேடி டாக்டர். பிரசவம் கஷ்டமாக இருக்காதாம்; சுகப்பிரசவம் தானாம். தலை திரும்பத் தொடங்கி விட்டதாம்.
சுகப்பிரசவமாகும் என்று லேடி டாக்டர் சொன்னது, சந்தோஷத்தை கொடுத்தது சரோஜாவுக்கு. நல்ல வேளை.. பிரசவம் சிக்கலாகி, சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுக்கும் படி, லேடி டாக்டர் கூறவில்லை. சிறந்த அனுபவசாலி அவர், நூற்றுக்கணக்கான பிரசவம் பார்த்தவர்.
ஒவ்வொரு மகப்பேறு டாக்டர் போல இல்லை அவர். பிரசவமாகிற நாள் வரை, "சுகப்பிரசவம் தானாகும்...' என்று சொல்லிக் கொண்டிருந்து விட்டு, காசு சம்பாதிக்கும் நோக்கத்தில், "பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு விட்டது; தலை எக்கச்சக்கமாக திரும்பி, வெளியே வரமுடியாதபடி மாட்டிக் கொண்டு விட்டது. சிசேரியன் தான் செய்ய வேண்டும். அப்போ தான் தாய் வேறு, குழந்தை வேறு என்று பிரிக்க முடியும். இல்லாவிட்டால், ஒரு உயிரைத்தான் காப்பாற்ற முடியும்...' என்று சொல்கிறவரில்லை லேடி டாக்டர்.
அந்த சமயம் தாயும், குழந்தையும் ஷேமமாக பிரிந்தால் போதுமென்று நீட்டிய காகிதத்தில் கையெழுத்துப் போடுவார், குழந்தைக்கு அப்பாவாகப் போகிறவர். டிஸ்சார்ஜ் ஆகிற போது, ஆஸ்பிடல் பில்லை கட்ட அவர் விழி பிதுங்கிவிடும்.
"அப்படியெல்லாம் இருக்காது...' என்று லேடி டாக்டர் அடித்துச் சொன்னது, சரோஜாவை சந்தோஷமடையச் செய்தது என்னவோ உண்மைதான். ஆனால், அவள் மனமோ சந்தோஷமற்று வேறொன்றுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. எக்கச்சக்கமாக வரப்போகும் ஆஸ்பிடல் பில்லை, தன் கணவர் கணேஷ் எப்படி சரிகட்டப் போகிறார் என்ற கவலை அல்ல அது.
கணேஷின் அப்பா, அம்மாவும் திருநெல்வேலியில் இருந்தனர். அவன் அப்பா மகாலிங்கத்துக்கு, ஈ.பி.,யில் வேலை; அம்மாவுக்கு உள்ளூர் முனிசிபாலிட்டியில் வேலை. இன்னும் அவர்களுக்கு சர்வீஸ் இருக்கிறது. சிக்க நரசய்யன் கிராமத்திலுள்ள தங்கள் சொந்த வீட்டில், இருவரும் இருந்தனர். அங்கே இருந்து, மகாலிங்கம் வண்ணாரப் பேட்டையிலுள்ள தன் ஆபிசுக்கு சென்று வந்து கொண்டிருந்தார்; அவர் மனைவி- கணேஷின் அம்மா அகிலா, டவுனிலுள்ள முனிசிபாலிட்டி ஆபிசுக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
இருவருக்கும் பிள்ளை கணேஷிடம் கொள்ளைப் பிரியம். அவன் சென்னையிலிருந்தான். திருவல்லிக்கேணி மேன்ஷன் ஒன்றில் தங்கி, மெஸ்சில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
ஒரு பேங்கில் வேலை செய்துக் கொண்டிருந்தான் கணேஷ். அது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்ல; தனியாருக்கு சொந்தமானது. நல்ல லாபம் ஈட்டிக் கொண்டிருந்தது; அதனால், வேலை போய் விடுமோ என்ற கவலையில்லை.
அவனை திருநெல்வேலிக்கே மாற்றல் வாங்கிக் கொள்ளச் செய்யலாம் என்று நினைத்தனர் மகாலிங்கமும், அகிலாவும்; ஆனால், அந்த வங்கிக்கு திருநெல்வேலியில் கிளை இல்லை.
உள்ளூரிலேயே கிளை இருந்தாலும், வேலை மாற்றல் வாங்கி, பிள்ளை கணேஷுக்கு ஒரு கல்யாணம் செய்து விடலாமென்று விரும்பிய அவன் பெற்றோரது ஆசை, எண்ணம் ஈடேறவில்லை.
பக்கத்தில் இல்லை என்பதற்காக, வாலிபனாக வளர்ந்து நிற்கும் பிள்ளைக்கு கல்யாணம் செய்து வைக்காமலிருக்க முடியுமா? அவன் மாலையும் கழுத்துமாய், மனைவி, குழந்தைகளோடு குடும்பம் நடத்துவதை பார்க்க வேண்டும்; பார்த்து பரவசபட வேண்டுமென்கிற ஆசை இருக்காதா? பேரக் குழந்தைகளை கொஞ்சி வளர்த்துக் கொண்டிருந்தாலே, பொழுது போவதோடு, களைப்பும், சோர்வும் கூட பக்கமே அண்டாதே!
பெண் பார்க்கத் தொடங்கி இருந்தனர். அப்பா, அம்மா ஆசையை புரிந்து கொண்ட கணேஷும், "நீங்கள் பார்த்து செய்யுங்கள்; எனக்கு பரிபூர்ண சம்மதம்...' என்று சொல்லி விட்டான்.
பல பெண்களை பார்த்து, கடைசியில் சரோஜாவை தேர்ந்தெடுத்தனர் மகாலிங்கமும், அகிலாவும். சரோஜாவுக்கு அப்பா இல்லை; அம்மா மட்டும் தான் இருந்தாள்.
அம்பாசமுத்திரத்தில் வடக்குத் தெருவில் அவள் கணவர் விட்டுச் சென்ற வீடு இருந்தது. குடும்ப ஓய்வூதியம், கொஞ்சம் வந்து கொண்டிருந்தது.
இருவர் ஜீவிக்க, அந்த ஓய்வூதியம் போதவில்லை. சொந்த வீடென்பதால் வாடகை இல்லையென்றாலும், மற்றச் செலவுகள் இருந்தனவே... அதை ஈடுகட்டித்தானே செலவை சமாளிக்க முடியும்?
சரோஜாவின் அம்மா சுசீலாவுக்கு வாய்ப்பாட்டு தெரியும். சின்ன வயதில் வீட்டிற்கு கல்லிடைக் குறிச்சியிலிருந்து ஒரு பாகவதர், வாரத்துக்கு மூன்று நாள் வந்து, சுசீலாவுக்கு பாட்டுச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
சுசீலாவின் வீட்டில் ஒரு கிராமபோன் கருவியும், நடுவே சிவப்பு லேபிள் ஒட்டிய கறுப்பு இசைத்தட்டுகளும் இருந்தன. அது எச்.எம்.வி., என்ற கம்பெனியின் இசைத் தட்டுகள். சிவப்பு லேபிளில் ஒரு நாய் உட்கார்ந்து கொண்டிருக்கும் படம் இருக்கும்.
கீ கொடுக்க வேண்டும் கிராம போன் பெட்டிக்கு; ரொம்ப கொடுக்கக் கூடாது. உள்ளே உள்ள ஸ்பிரிங் உடைந்து விடும். அப்புறம் கிராம போன் வேலை செய்யாது; பாடாது.
இசைத்தட்டுகள் ஓடும் போது, அவை மேலும் கீழுமாக அசைந்து சுற்றி ஆடுவது அழகா இருக்கும். கிராம போன் பெட்டியின் அறையில், நுண் கூர்மையுள்ள சின்ன ஊசிகள் இருக்கும். அதை கிராமபோன் ஒலி பெருக்கியில் பொருத்தப்பட்டுள்ள ஒரு கையில் செருகி, "டைட்' செய்து, பின் ஓடும் இசைத்தட்டின் விளிம்பு ஓரத்தில் அதை படும்படி வைத்துவிட்டால் போதும்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், என்.சி.வசந்த கோகிலம், ஜி.என்.பி., மதுரை மணி, கிட்டப்பா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, ராஜரத்னம் பிள்ளை, பாலக்காடு மணி, நீடாமங்கலம் தவில் எல்லாம் கணீரென்று கேட்கும்.
சம்மணம் போட்டு உட்கார்ந்து, இடது கையை துடையில் வைத்து, அதில் முகத்தை தாங்கி, இசையின் கானத்தில் தன்னை மறந்து லயித்து விடுவாள் சுசீலா.
கர்நாடக சங்கீதத்தில் அவளுக்கு ஏற்பட்ட இயற்கையான ஈடுபாட்டுடன், பாட்டு வாத்தியார் சொல்லிக் கொடுததும் சேரவே, மேடையில் கச்சேரி செய்யுமளவுக்கு இசையில் தேர்ச்சிப் பெற்றுவிட்டாள் சுசீலா.
அரங்கேற்றம் செய்ய வேண்டிய வேளையில், சுசீலாவின் கணவன் காலமாகிவிட்டான். அந்த எதிர்பாராத அதிர்ச்சி, சுசீலாவை பெரிதும் தாக்கிவிட்டதால், அவளால் மேடை ஏற, உற்சாகம் இல்லாமல் போகச் செய்துவிட்டது.
அந்த இசைஞானம், இப்போது கை கொடுத்து உதவியது சுசீலாவுக்கு.
ராணி ஸ்கூலில் படித்துக் கொண்டிருக்கும் தன் பெண் சரோஜாவை எஸ்.எஸ்.எல்.சி., படிக்க வைத்து, பாஸ் ஆக்குவதற்குள் சுசீலாவின் பாடு தீர்ந்துவிட்டது. அதற்கு பெரிதும் உதவியாக இருந்தது, அவள் கற்றிருந்த கர்நாடக சங்கீதம்.
பல குழந்தைகளுக்கு வீடு வீடாக போய், சங்கீதம் சொல்லிக் கொடுத்தாள். சிலசமயம் விசேஷ நாள், பண்டிகை என்றால் வீடுகளுக்கு போய் சமையலும் செய்து கொடுப்பாள் சுசீலா.
அம்மா படுகிற பாட்டையெல்லாம் பார்த்து, தனக்கு ஒரு வேலை கிடைத்தாலோ அல்லது தனக்கு கல்யாணமாகி, தான் புருஷன் வீட்டிற்குச் சென்றாலோ, அம்மாவை நன்கு வைத்துப் கொள்ள வேண்டுமென்று நினைத்துக் கொள்வாள் சரோஜா.
அவளுக்கு ஒரு வேலை கிடைக்கவில்லை; கல்யாணம் தான் ஆயிற்று பாவம்.
சென்னைக்கு குடித்தனம் வந்ததும், அம்மாவை அழைத்து வந்து தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டுமென்றும், அதை கணவனிடம் எடுத்துச் சொல்ல வலுவான ஒரு காரணம் கிடைக்குமா என்று சரோஜா பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவள் கருத்தரித்தாள்.
பிரசவம் என்று சொல்லி அம்மாவை முதலில் அழைத்து வந்து, பிறகு குழந்தையை பார்த்துக் கொள்ள ஒரு ஆள் வேண்டுமென்று சொல்லி, அம்மாவை தன்னுடனேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்றெண்ணினாள் சரோஜா.
ஆனால், கணேஷின் எண்ணமோ வேறு மாதிரியாக இருந்தது.
""என் அம்மா, அப்பாவுக்கு தன் பேரனை எடுத்து கொஞ்ச வேண்டும், வளர்க்க வேண்டுமென்று ரொம்ப ரொம்ப ஆசை. அதிலும், அம்மாவோட ஆசைக்கு அளவேயில்லை. அவ்வப்போது ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டு வந்து, நம்முடன் இருந்து, என் அம்மா குழந்தையை பார்த்துக் கொள்வாள்...!'' என்று அடிக்கடி சரோஜாவிடம் சொல்ல ஆரம்பித்தான் கணேஷ்.
அவனை எதிர்த்து பேசினால், தனக்கு மாமியாரை பிடிக்கவில்லை என்று அவன் நினைத்து விடுவானோ என்று பயந்தாள் சரோஜா.
அவ்வப்போது சரோஜாவுக்கு வலி எடுக்க தொடங்கியது.
""அம்மாவை உடனே புறப்பட்டு வரும்படி போனில் பேசி விடுகிறேன்...'' என்றான் கணேஷ் அவளிடம்.
""அம்மாவுக்கு திடீர்னு லீவு கிடைக்குமா?'' என்று தயங்கியபடி கேட்டாள் சரோஜா.
""அம்மா வேலை பார்த்தால் தானே லீவு கிடைக்குமா, கிடைக்காதா என்றெல்லாம் பார்க்க வேண்டும்?'' என்றான் கணேஷ்.
""உங்கள் அம்மா நெல்லை முனிசிபாலிட்டியில் வேலை பார்க்கிறாங்களே?''
""ஐயோ... நான் என் அம்மாவை சொல்லவில்லை... உன் அம்மாவை சொன்னேன். உன் அம்மா இங்கே வந்து உனக்கு பிரசவம் பார்த்து விட்டு, பிறகு நம்முடனேயே இருக்கட்டும். இத்தனை நாள் உன் அம்மா பாடுபட்டு கஷ்டப்பட்டது போதும்...'' என்ற கணவனை சந்தோஷம் பொங்க பார்த்தாள் சரோஜா.
""ஆமாம் சரோ... ஒரு பேரக் குழந்தையை, பிள்ளையின் அப்பா அம்மாவை விட, பெண்ணின் அப்பா, அம்மா தான் மிகுந்த பாசத்துடனும் பிரியத்துடனும், அன்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொள்வர். அவர்களுக்கும் உறவும், ஒட்டுதலும் அதிகம்.
""அல்லாமலும் வீட்டிலேயே உன் அம்மா இருந்தால், குழந்தைக்கு பாசமும், பிரியமும், அன்பும், அரவணைப்பும் என்றும் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும். வளரும் குழந்தைக்கு சாப்பாடு மட்டும் போதாது; கூடவே இருக்கும், குழந்தையை விட்டு பிரியாதிருக்கும் பாட்டியின் அன்பும், அரவணைப்பும் வேண்டும்.
""என் அம்மா அவ்வப்போது லீவு போட்டுவிட்டு வந்து போனால், அதில் பாசம் பரிவு எல்லாம் விட்டு விட்டுத்தான் கிடைக்கும்; அது ஒரு குழந்தைக்கு போதாது. உன் அம்மாவின் பாசம் நிரந்தரமாகவும், என் அம்மாவின் பாசம் அவ்வப்போதும் கிடைக்கும். அதனால் தான், உன் அம்மாவை நம்மோடையே இருக்கச் சொல்லிடலாமென தீர்மானித்திருந்தேன் சரோ...'' என்ற கணவனை கட்டியணைத்துக் கொண்டாள் சரோஜா.
***


Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anonymous - chennai,இந்தியா
31-ஆக-201014:10:58 IST Report Abuse
anonymous nalla arumaiyana kadhai
Rate this:
Cancel
தேவ் - Chennai,இந்தியா
06-ஆக-201017:54:41 IST Report Abuse
தேவ் இப்போது உள்ள பையன்கள் இதேபோல் தான் நினைகிறார்கள். அனால் பெண்கள் எப்பொழுதும் மாமியாரை ஒரு எதிரி போலதான் பார்கிறார்கள். தவறாக புரிந்துகொள்வதில் தான் இந்த சிக்கலே வருகிறது.
Rate this:
Cancel
ராஜேஷ் - Tirunelveli,இந்தியா
06-ஆக-201016:03:41 IST Report Abuse
ராஜேஷ் நல்ல கதை.... இது மாறி நிறைய கதை வரணும்... அப்போ தான் நம்ம சமுதாயத்துல சொந்தங்கள் அருமை புரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X