மாவீரன் அலெக்ஸாண்டர் (7) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
மாவீரன் அலெக்ஸாண்டர் (7)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2012
00:00

இதுவரை: மாசிடோனியர்களுக்கும், பெர்ஸியர்களுக்கும் இடையில், ட்ராய் நகரத்தின் அருகே க்ரானிக்கஸ் ஆற்றங்கரையில் போர் நடந்து கொண்டிருந்தது. இனி-

கிளைட்டஸ் வீசிய வாள் ஸ்பித்ரிடேட்ஸ் தலையை துண்டாக்கியது. போர் விரைவில் முடிவுக்கு வந்து, பெர்ஸிய படைகள் சிதறி ஓடின. டேரியஸ் குதிரையில் தப்பித்து சென்றான். தன் கையில் டேரியஸ் சிக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தார் அலெக்ஸாண்டர்.
டேரியசோ, அலெக்ஸாண்டரை விட மிகுந்த கோபத்தில் இருந்தான். முன்னைவிட பெரிதாக ஒரு படையை உருவாக்கி, அலெக்ஸாண்டரை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினான்.
அலெக்ஸாண்டரின் படைகள் மேலும் முன்னேறி சென்று, ஒட்டுமொத்த ஆசியா மைனர் பகுதிகளை தன் வசமாக்கியது. இந்த சமயத்தில் ஆசியா மைனர் நகரத்து அருவி ஒன்றில் குளித்த அலெக்ஸாண்டருக்கு குளிர் காய்ச்சல் வந்து, உடல்நிலை கவலைக்கிடமானது. கிளைட்டசும், அலெக்ஸாண்டர் படையின் மற்றொரு தளபதியான பார்மீனியோவும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி நின்றனர்.
இச்செய்தி எதிரிகளுக்கு பரவியது.
எதிரிகள் சதி செய்து மன்னரின் உயிருக்கே உலை வைத்து விடக்கூடும் என்று அஞ்சினார் பார்மீனியோ. யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்று உறுதியாகத் தெரியவில்லை. யார் வேண்டுமானாலும் கருவியாகி விடலாம்.
பூலிப்ஸ் என்கிற மருத்துவர், அலெக்ஸாண்டரின் காய்ச்சலைப் போக்க மருந்து தயார் செய்தார். மாசிடோனியாவில் இருந்தே, படையுடன் வந்து கொண்டிருக்கும் ராணுவ மருத்துவர் அவர்.
பிலிப்ஸ் கொடுத்த மருந்து, அலெக்ஸாண்டரின் கையில் இருந்தது. மருந்தை அவர் உட்கொள்வதற்கு முன், ஒரு ரகசிய கடிதம் அலெக்ஸாண்டரிடம் நீட்டப்பட்டது. அது பார்மீனியோ எழுதிய கடிதம். அலெக்ஸாண்டர் கடிதத்தைப் படித்து விட்டுச் சிரித்தார்...மருத்துவர் பிலிப்ஸிடம் தந்து, "படித்துப் பாரும்' என்றார்.
படித்துவிட்டுத் திகைத்தார் பிலிப்ஸ்...
கடிதத்தில் அப்படி என்ன தான் எழுதியிருந்தது?
"பிலிப்ஸ் பாரசீக மன்னன் டேரியஸின் கைக்கூலி. மன்னரின் உயிருக்கு அவனால் ஆபத்து இருக்கிறது' என இருந்தது.
பிலிப்ஸின் கண்களில் நீர் வழிந்தோடியது.
"அரசே, என்மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. தாங்கள் என்னை நம்புவீர்களா, இந்தக் கடிதத்தை நம்புவீர்களா?' துக்கம் தொண்டையடைக்க, கேட்டார் பிலிப்ஸ்.
மருந்து என்கிற பெயரில் மன்னனுக்கு நஞ்சூட்டப்படலாம் என்று பார்மீனியோ சந்தேகப்பட்டார். அதன் விளைவுதான் அப்படியொரு கடிதம்.
அலெக்ஸாண்டர் மருந்தைக் குடித்தார்.
"நான் உன்னை நம்புகிறேன்' என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.
"பிலிப்ஸ் தந்த மருந்து மயக்கத்தை தரும் குணமுடையது. நான் மயக்கம் தெளிந்து எழும்போது, நோயில் இருந்து குணமாகி விட்டிருப்பேன்' என்று அலெக்ஸாண்டர் தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் கூறினார்.
சில நாட்களிலேயே அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. படுக்கையில் இருந்து எழுந்தவர் பிலிப்ஸை அழைத்து வரச் சொன்னார்.
"மருத்துவரே நன்றி!' என்றார்.
அடுத்து அலெக்ஸாண்டருடைய உத்தரவு என்னவாக இருக்கும் என்பது படைத்தளபதியும் அறிந்ததுதான்.
"இஸ்ஸஸ் யுத்தம்' இம்முறை டேரியஸின் படைகள் இஸ்ஸஸ் என்ற நகரில் பினாரஸ் ஆற்றங்கரையில் அலெக்ஸாண்டரின் படைகளை எதிர்கொண்டன.
எதிரி ஏற்கெனவே தோற்றோடியவன் தான். ஆனால், அலட்சியப்படுத்துவதற் கில்லை. வெற்றியாளர்கள் எப்போதுமே தங்களுடைய வலிமையைப் போல், மாற்றானின் வலிமையையும் கணக்கிட்டுக் கொள்வர். எதிரியை மேலோட்டமாக எடைபோட்டு அலட்சியப்படுத்துவதில்லை. அதனால் தான் அவர்கள் வெற்றி பெற முடிகிறது.
அலெக்ஸாண்டரின் வியூகம் வலப்புறத்தில் குதிரைப் படையையும், இடப்புறத்தில் காலாட்படைகளையும் கொண்டதாக இருந்தது. அத்துடன் இருபதாயிரம் வீரர்களை இருப்பில் வைத்திருந்தார்.
டேரியஸ் தன்னுடைய படையை அலெக்ஸாண்டர் படைக்கு இடப்புறமாகச் செலுத்தித் தாக்கினார்.
அலெக்ஸாண்டர் தனது இருப்புப் படை களுடன், டேரியஸ் படையின் இடப்புறத்தில் தாக்கினார். அவருடைய ஆவேசத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், பெர்ஸியப் படையின் இடப்புற பிரிவு பின்வாங்கியது.
அலெக்ஸாண்டருடைய படையின் வலப்புற பிரிவு பார்மீனியோவின் தலைமையில் உறுதியாகப் போரிட்டது. ஒரு கட்டத்தில் பெர்ஸியப் படையை அலெக்ஸாண்டரின் படை இருபுறமும் வளைத்துக் கொண்டு விடும் போல் இருந்தது.
அலெக்ஸாண்டர் படையின் குத்தீட்டிகள் சரமாரியாகப் பாய்ந்தன. டேரியஸின் குதிரைப்படை நிலை குலைந்தது. அவருடைய படை இரண்டாக பிரிந்தது. பெர்ஸிய வீரர்கள் பெரும் எண்ணிக்கையில் செத்து விழுந்தனர்.
டேரியஸ் கண்முன் ஒரே வழி தான் இருந்தது. அது தப்பி செல்வது. களத்தில் உயிரை விட்டால் கதை முடியும். உயிரோடு இருந்தால் இன்னொரு முறை முயன்று பார்க்க முடியுமே... அதுவரை தேரில் இருந்து போரிட்டவர், குதிரையில் ஏறிக் காற்றாய் பறந்து விட்டார்.
டேரியஸ் தப்பிய செய்தியறிந்தார் அலெக்ஸாண்டர். மாசிடோனியப் படைகள் வெற்றிக் களிப்பில் மிதந்தன. ஆனால், அலெக்ஸாண்டருக்கு என்னவோ அது பெரிய வெற்றியாகத் தெரியவில்லை. அதில் பெருமகிழ்ச்சி அடையவுமில்லை.
'டேரியஸ் எங்கே ஓடியொளிந்தான்?'
அவருடைய அரண்மனைக்குள் புகுந்த அலெக்ஸாண்டர் இப்படிக் கேட்டுக் கொண்டார்.
டேரியஸின் தாய் "சிஸிகாம்பிஸ்' என்பவளும், டேரியஸின் மனைவியும், மகள் தாதிராவும் அங்கிருந்தனர். சொக்க வைக்கும் அழகி தாதிரா, எல்லாரும் அலெக்ஸாண்டரால் சிறைப்பிடிக்கப் பட்டனர்.
டேரியஸ் குடும்பத்தினரை மரியாதை யுடன் நடத்தும்படி தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார் அலெக்ஸாண்டர்.
அவருடைய கட்டளைப்படி டேரியஸ் குடும்பத்தாருக்கு வேண்டிய சகல வசதி களும் செய்து தரப்பட்டன. அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொண்ட பின், அலெக்ஸாண்டர் அங்கிருந்து புறப்பட்டார்.
இவ்வாறாக இஸ்ஸஸ் நகரப் போரிலும், அலெக்ஸாண்டர் வெற்றி பெற்றார்.
பிறகு, இன்னும் பல கடலோர நகரங்களைப் பிடிக்கும் எண்ணத்தில் மறுபடியும் தெற்கு நோக்கிப் படையை செலுத்தினார் அலெக்ஸாண்டர்.
அடைரஸ், பைப்லஸ், சைடன் முதலிய நகரங்கள் எளிதில் அலெக்ஸாண்டரின் கைக்குவந்தன. அவர் கடலோர நகரங்களைக் கைப்பற்ற திட்டமிட்டதே, பெர்ஸியக் கடற்படை நிலை கொண்டிருந்த துறைமுகங்களைத் தன்வசப்படுத்தித் தோற்கடிப்பதற்கு தான்.
ஆனால், தையர் என்கிற நகரம் மட்டும் கடுமையான எதிர்ப்பு காட்டியது. அது கடலுக்கு பக்கமாக உள்ள ஒரு தீவில் உருவாக்கப்பட்ட நகரம். தையர் சரணடைய மறுத்ததும், அலெக்ஸாண்டர் அந்த நீர்ப்பகுதியில் ஒரு தரைப்பாலம் கட்ட உத்தரவிட்டார். அதன் மூலம் தீவுக்குச் சென்று அதைத் தாக்க திட்டம் தீட்டினார். தையர் மக்கள் அதைத் தகர்த்தனர். ஆனாலும், அவர் மற்றொரு பாலம் கட்டினார்.
இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்ன வென்றால், தையர் படைகளிடம் பல போர்க் கப்பல்கள் இருந்தன. அலெக்ஸாண்டரிடம் கடற்படை இல்லை. ஆனாலும், தையருக்கு ஏதிராக பொனீசிய கலகக்காரர்களின் போர்க்கப்பல்களை, அலெக்ஸாண்டர் பயன்படுத்திக் கொண்டார்.
தையரை, ஏழு மாத முற்றுகைக்குப் பிறகே அலெக்ஸாண்டர் கைப்பற்றினார். அந்த நகரத்து மக்கள் மீது அவருக்கு ஏற்பட்ட கோபம் கொஞ்சம் நஞ்சமல்ல. வேறு எந்தப் போரிலும் அத்தனை எதிர்ப்பு களை, இடையூறுகளை அவர் சந்தித்திருக்க வில்லை. எனவே, தன்னிடம் சரணடைய மறுப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்யும் விதமாக ஆயிரக் கணக்கானவர்களை கொன்று போடவும் செய்தார். பல்லாயிரக் கணக்கானவர்கள் அடிமைகளாக விற்கப் பட்டனர். கொலையுண்டவர்களின் எண்ணிக்கை 800, அடிமைகளாக்கப் பட்டவர்கள் 30 ஆயிரம் பேர்.
வீரத்தில் அலெக்ஸாண்டர் ஒரு சிங்கம் என்றால், விவேகத்தில் நரி. வெற்றிகளைப் போலவே களங்கத்தையும் அவர் சுமக்க வேண்டியதாகிவிட்டது.
தையரை அடுத்து அவரது பார்வை மேலும் தெற்கு நோக்கியே சென்றது. காஸா நகரத்தை நோக்கி அவரது படைகள் நகர்ந்தன. காஸாவும் எளிதில் வீழ்வதாக இல்லை. நீண்ட முற்றுகைக்குப் பிறகே வெற்றி சாத்தியமாயிற்று.
மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் என்று அலெக்ஸாண்டர் செய்த ஒரு காரியம் என்ன தெரியுமா?
- தொடரும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X