சென்ற ஜூலை இறுதியில், எம்.எஸ். ஆபீஸ் 2013 சோதனைத் தொகுப்பு அறிமுகமானது குறித்த கட்டுரை வெளியானது முதல், பல வாசகர்கள் தாங்கள் அதனை இயக்கிப் பார்த்த அனுபவத்தினை எழுதி உள்ளனர். பலர் வேறு சில சந்தேகங்களை எழுதி, இவற்றிற்கான பதில் அல்லது தீர்வு தெரிந்தால் தான், தாங்களும் சோதனை பதிப்பை இயக்கிப் பார்க்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. ஆபீஸ் 365 மற்றும் ஆபீஸ் 2013 ற்கான வேறுபாடு என்ன?
ஆபீஸ் 2013 தொகுப்பு வழக்கமாக மைக்ரோசாப்ட் வழங்கி வரும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் நவீன வசதிகளுடன் கூடிய பதிப்பாகும். இதில் டெஸ்க்டாப் புரோகிராம் உண்டு. ஆபீஸ் 365 புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்று வருபவர்களுக்கு ஆபீஸ் 2013 வழங்கப்படுகிறது. ஆன்லைன் ஸ்டோரேஜ், பைல்கள் பகிர்ந்து கொள்ளல், மைக்ரோசாப்ட் க்ளவ்ட் சேவை வழியாக பைல்களை அப்டேட் செய்து கொள்ளல் வசதிகள் கிடைக்கும். ஆபீஸ் 365 வர்த்தகம், நுகர்வோருக்கானது, கல்வியாளர்களுக்கானது, அரசுக்கானது எனப் பல பிரிவுகளில் கிடைக்கிறது.
2. ஆபீஸ் 2013 இயக்குவதற்கு ஆபீஸ் 365 தேவையா?
இல்லவே இல்லை. ஆபீஸ் 2013 புரோகிராமினைத் தனியாகக் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இதனை மைக்ரோசாப்ட் ஆன்லைன் அக்கவுண்ட் ஒன்றுடன் தொடர்பு படுத்தி (விண்டோஸ் லைவ்) இணைய வெளியில் பைல்களை சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.
3. ஆபீஸ் 2013 இயங்க தேவையான ஹார்ட்வேர் மற்றும் சிஸ்டம் தேவைகள் என்ன?
ஆபீஸ் 2013 விண்டோஸ் 7 மற்றும் இப்போது சோதனைப் பதிப்பாக இருக்கும் விண்டோஸ் 8 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும், இவை இயக்கப்படக் கூடிய கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் சாதனங்களிலும் இயங்கும். குறைந்த பட்சம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் 3.5 ஜிபி காலி இடம் இருக்க வேண்டும்.
4. ஆபீஸ் 2013 நுகர்வோருக்கான முன் சோதனைப் பதிப்பினை எப்படி, எங்கு இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்?
ஆபீஸ் 365 திட்டத்தில் கட்டணம் செலுத்தியவர்கள், நேரடியாக இதனைப் பெறலாம். அணுக வேண்டிய தள முகவரி http://office. com/preview. தனியாக இதனை தரவிறக்கம் செய்திட விரும்புபவர்கள் http://www.microsoft.com/office/preview/en/trymoreproducts என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
5. எப்படி ஆபீஸ் 2013 புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடலாம்?
மைக்ரோசாப்ட் ஆன்லைன் போர்டல் தளத்தில் நுழைந்தால், கிளிக் செய்து, தானாக இன்ஸ்டால் ஆகும் ஆப்ஷன் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படுவதனை இந்த தளம் கண்காணித்துக் கொள்ளும். எனவே, இந்த புரோகிராம் இத்தளத்திலிருந்து இன்ஸ்டால் செய்யப்படுகையில், இன்டர்நெட் இணைப்பில் உங்கள் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும்.
6. ஏற்கனவே பதிந்துள்ள ஆபீஸ் தொகுப்புகளுடன், ஆபீஸ் 2013 புரோகிரா ம் இணைந்து இயங்குமா?
ஆம். மைக்ரோசாப்ட் அப்படித்தான் சொல்கிறது. ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 புரோகிராம்களுடன் இது இணைந்து செயல்படுகிறது.
7. ஆபீஸ் 2013 நிரந்தரமாகத் தேவைப்பட்டால், அதற்கான கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும்? தனி நபர் ஒருவரின் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான கட்டணம் எவ்வளவு?
இன்னும் இது குறித்து மைக்ரோசாப்ட் எதுவும் அறிவிக்கவில்லை.
8. ஆபீஸ் 2013 வர்த்தக ரீதியாக வெளியாகும் நாள் எது? இந்தியாவில் வழக்கம்போல் டீலர்களிடம் கிடைக்குமா? அல்லது இணையம் வழியாக வாங்க வேண்டுமா?
இன்னும் இதற்கான நாள் குறித்து மைக்ரோசாப்ட் அறிவிக்கவில்லை. விண்டோஸ் 8 வெளியான பின்னர், இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9. ஆபீஸ் 2013 தொகுப்பை எப்படியாவது எக்ஸ்பி அல்லது விஸ்டா இயங்கும் கம்ப்யூட்டரில் இயக்க முடியுமா?
முடியாது. இந்த விஷயத்தில் மைக்ரோசாப்ட் மிகத் தெளிவாக, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மட்டுமே ஆபீஸ் 2013 இயங்கும் என அறிவித்துள்ளது. எக்ஸ்பி மற்றும் விஸ்டா சிஸ்டங்களில் இயங்குபவர்கள், ஆபீஸ் 2010 வரை மட்டுமே இயக்க முடியும். (விண்டோஸ் 7 வந்த பின்னர், ஏழு மாதங்கள் கழித்து ஆபீஸ் 2010 வெளியானது உங்களுக்கு நினைவிருக்கும்.) எனவே, இப்போது விண்டோஸ் பயன்படுத்துபவர்களில் ஏறத்தாழ 50%க்கு மேற்பட்டவர்கள், ஆபீஸ் 2013 பயன்படுத்த இயலாது. இதன் மூலம் ஆபீஸ் 2013 பயன்படுத்த விரும்புபவர்கள், விண்டோஸ் 8க்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஆபீஸ் 2013 இயங்கினாலும், சிஸ்டம் மாற்றிக் கொள்ள திட்டமிடுபவர்கள், புதிதாய் வந்துள்ள சிஸ்டத்தைத்தானே நாடுவார்கள். விண்டோஸ் எக்ஸ்பியை புதிய ஆபீஸ் தொகுப்பிலிருந்து விலக்கி வைத்ததன் மூலம், தன் விண்டோஸ் 8 பரவலுக்கு மைக்ரோசாப்ட் வழி வகுக்கிறது. மேலும், விண்டோஸ் எக்ஸ்பியின் பயன்பாட்டினை நிறுத்தவும் மைக்ரோசாப்ட் முயற்சிக்கிறது எனலாம்.
முன்பு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 வெளியான போது, அதனை எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு மைக்ரோசாப்ட் தடை செய்தது. இது குறித்து பலரும் எச்சரிக்கை கொடுத்தனர். பிரவுசர் பயன்பாட்டில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பின் தங்கிவிடும் என அபாய அறிவிப்பு கொடுத்தனர். ஆனால், மைக்ரோசாப்ட் எதற்கும் மசியாமல், தான் எடுத்த முடிவில் இன்று வரை உள்ளது.