வெற்றியின் ரகசியம்! (2) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
வெற்றியின் ரகசியம்! (2)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 செப்
2012
00:00

வெற்றியின் ரகசியத்தை அறிந்து கொள்வதற்கு முன், உங்களின் உள் மனதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். உங்களைப் பொறுத்தவரையில், "வாழ்க்கையில் வெற்றி என்பதற்கு என்ன அர்த்தம்? யார் வெற்றி பெற்றதாக நீங்கள் கருதுகிறீர்கள்?' என்ற கேள்விகளுக்கு, தெளிவான பதில் இருக்க வேண்டும். நீங்கள் வெற்றி பெறுவதற்கு தேவை, கல்வியா, பணமா, பதவியா, புகழா, அந்தஸ்தா, மகிழ்ச்சியான உறவா அல்லது எல்லாம் கலந்த கலவையா? எல்லாம் தேவையென்றால் எது எந்த அளவுக்கு முக்கியம்? இதில் குழப்பம் என்றால் உங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். "உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்...' என்ற திரைப்படப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். வெற்றிப் பாதையில் நாம் கடக்க வேண்டிய முதற்படி, நம்மை நாமே புரிந்து கொள்வது. ஏனென்றால், நம்மைப் பற்றி, நம் மனதில் வரைந்து வைத்துள்ள சுயசித்திரம்தான், ஒரு நாள் நிஜமாக போகிறது.
மனித மனம், ஒரு நிலையில் இல்லாத குரங்கு போன்றது. அதை ஒரு நிலைப்படுத்தி, "நாம் எப்படிப்பட்ட மனிதர்? நம் வாழ்க்கையில் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும்?' என்ற கேள்விகளுக்கு நம்மிடத்தில் தெளிவான பதில் இருக்க வேண்டும்.
நம்மைப் பற்றி புரிந்து கொள்வதற்கு அடிப்படைத் தேவை, நாம், நம்மை முழுமையாக நேசிக்க வேண்டும்; முதலில் நமக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும். அடிப்படை குணங்கள், விருப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்புகள், தேவைகள் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். நம் வாழ்க்கை லட்சியம் என்ன, அதை அடைய எதை இழக்கத் தயாராக இருக்கிறோம் என்ற கேள்விகளுக்கு, நம்மிடத்தில் பதில் தயாராக இருக்க வேண்டும்.
மனதை ஒரு நிலைப்படுத்த, ஒரு அமைதியான இடத்தில் நம்மைத் தனிமைப்படுத்தி, கண்களை மூடி மெதுவாகவும், சீராகவும் நீண்ட மூச்சை எடுத்து, உடலையும், மனதையும் தளர்த்திக் கொள்ள வேண்டும். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இறைவனை வழிபடலாம் அல்லது தியானம் செய்யலாம். பின், கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நம் அடிமனதிலிருந்து வரும் உண்மையான பதிலை, மனதில் பதிவு செய்ய வேண்டும்.
* நான் அடிப்படையில் எப்படிப்பட்ட மனிதர்?
* எது நிரந்தர மகிழ்ச்சியையும், துக்கத்தையும் கொடுக்கும்?
* மிகவும் பிடித்தது மற்றும் பிடிக்காதது என்ன?
* வாழ்க்கையில் வெற்றியடைய என்னவெல்லாம் சாதிக்க வேண்டும்?
* என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன அபிப்ராயம் வைத்திருக்க வேண்டும்?
* என்னுடைய பலம் எது, பலவீனம் எது?
* என்னுடைய முன்மாதிரி மனிதர்கள் யார்; எதனால்?
* வருங்காலத்தில் யாரைப் போல் ஆக வேண்டுமென்று விரும்புகிறேன்?
மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்களை ஆராய்ந்து பார்த்து, முரண்பாடான விஷயங்களையும், நடைமுறைக்கு ஒத்து வராத யோசனைகளையும், தவிர்த்து விடவேண்டும்.
அதையே எழுதி வைத்தால், நம்மைப் பற்றியும், நாம் சாதிக்க நினைப்பதைப் பற்றியும், அதற்காக செய்ய வேண்டிய தியாகத்தைப் பற்றியும், தெளிவும், மன வலிமையும் கிடைக்கும். இப்படி எழுதி வைத்ததைப் பத்திரப்படுத்தி வைத்தால், வாழ்க்கையில் குழப்பம், சலிப்பு மற்றும் சோர்வு ஏற்படும் போது அதை எடுத்துப் படித்தால், நிச்சயமாக புத்துணர்வு கிடைக்கும்; மன உறுதியும், தெளிவும் பிறக்கும்.
வாழ்க்கையில் என்ன வேண்டுமென்பதில் தெளிவு இருந்தால் மட்டும் போதாது, என்ன தேவையில்லை என்பதிலும் தெளிவு வேண்டும். சிலருக்கு, வருடா வருடம் வாழ்க்கையின் லட்சியங்கள் மாறிக் கொண்டேயிருக்கும். இதற்கு முக்கியக் காரணம், இவர்களுக்கு எந்த லட்சியத்திலும் தீவிரமான பற்று இருப்பதில்லை. மேலும், வெற்றியடைந்த யாரைப் பார்த்தாலும், அவர்களைப் போல வர வேண்டும் என்று, திடீர் ஆர்வம் காட்டுவர்.
குறிக்கோளை நிர்ணயம் செய்யுமுன், நம்மை நம்பியுள்ள குடும்பத்தினரைக் கலந்து ஆலோசிப்பது அவசியம். அவர்களுடைய ஆதரவு இல்லாதபோது, நம்முடைய லட்சியப் பாதையில் சறுக்கல் வரலாம். தேவைப்பட்டால் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களிடத்தில் கருத்து கேட்கலாம்.
ஒவ்வொரு நிகழ்வும், இந்த உலகத்தில் இருமுறை நிகழ்வதாகக் கூறுகின்றனர். ஒன்று மனத்திரையில்; இன்னொன்று நிஜத்தில். அதனால், ஒவ்வொரு நாளும் நம் அன்றாட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன், நாம் என்னவாக வேண்டும் என்பதை மனத்திரையில், பதிவு செய்ய வேண்டும்.
நாம் எந்த நிலையை அடைய வேண்டுமென்று, மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறோமோ, அந்த நிலையை விரைவில் அடைவது உறுதி.
தொடரும்.

சி. அருண்பரத் - கூடுதல் ஆணையர், வருமான வரித்துறை, மும்பை

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X