விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல் தந்த சில நாட்களில் , மைக்ரோசாப்ட் தான் ஹார்ட்வேர் பிரிவிலும் தடம் பதிக்கப் போவதாக அறிவித்தது. சர்பேஸ் டேப்ளட் பிசியினை வெளியிட இருப்பதாகக் கூறி, அதனை அறிமுகம் செய்தது. அதன் அம்சங்கள் குறித்தும், டேப்ளட் பிசிக்கான விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனமே இதனை வழங்க இருப்பதால், இதன் செயல்பாடு இதுவரை பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்தியவர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். நம் வாசகர்களும் பல கேள்விகளை அது குறித்து கேட்டு வருகின்றனர். அவற்றிற்கான விளக்கங்களை இங்கு காணலாம்.
சர்பேஸ் டேப்ளட் என்பது, டேப்ளட் பிசி விற்பனைச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டியாக மைக்ரோசாப்ட் கொண்டு வரும் சாதனம். இதில் சிறப்பு என்னவெனில், இதற்கான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் என இரண்டு பிரிவின் பொறுப்பையும் மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ளது. எனவே இதன் வடிவமைப்பு, கட்டமைப்பு, இயக்க தொழில் நுட்பம் என அனைத்தும் மைக்ரோசாப்ட் வல்லுநர்களாலேயே தரப்பட்டுள்ளது. இதுவரை டேப்ளட் பிசி தயாரிக்கும் நிறுவனங்களுடன், சாப்ட்வேர் தொகுப்பு சார்ந்து ஒப்பந்தங்களை மேற்கொண்டு மைக்ரோசாப்ட் இயங்கி வந்தது. ஆனால் தன்னுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியவர்கள், ஐபேட் ஆளுமையைத் தகர்க்கும் வகையில் ஒன்றும் செய்திடவில்லை என்ற ஆதங்கத்தில், மைக்ரோசாப்ட் தற்போது சர்பேஸ் டேப்ளட் பிசியை வெளியிட உள்ளது.
சர்பேஸ் பிசி இரண்டு மாடல்களில் வர உள்ளது. விண்டோஸ் ஆர்.டி. ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஏ.ஆர். எம். ப்ராசசருடன் இயங்கும் ஒன்று. அடுத்தது விண்டோஸ் 8 ப்ரோ சிஸ்டத்துடன் இன்டெல் கோர் ப்ராசசருடன் இயங்கும் ஒன்று. விண்டோஸ் ஆர்.டி. யுடன் இயங்கும் சர்பேஸ் டேப்ளட், விண்டோஸ் 8 வெளியாகும் போதே கிடைக்கும். விண்டோஸ் 8 ப்ரோ மாடல், மூன்று மாதங்கள் கழித்து 2013 தொடக்கத்தில் கிடைக்கும்.
விண்டோஸ் ஆர்.டி., 676 கிராம் எடையில் 9.3 மிமீ தடிமனில் கிடைக்கும். யு.எஸ்.பி. மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டினைப் பயன்படுத்தலாம். 32 மற்றும் 64 ஜிபி என இரண்டு மாடல்களில் கிடைக்கும். விண்டோஸ் 8 பயன்படுத்தும் சர்பேஸ் டேப்ளட், 903 கிராம் எடையில் 13.5 மிமீ தடிமனில் கிடைக்கும். இதில் 64 மற்றும் 128 ஜிபி மாடல்கள் உண்டு. ஆபீஸ் அப்ளிகேஷன் பதிவு செய்யப்பட்டு தரப்படும். அனைத்து மாடல்களிலும் 10.6 அங்குல திரை, 16:9 வைட்ஸ்கிரீன் எச்.டி. டிஸ்பிளேயுடன் இயங்கும். முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டு கேமராக்கள் உள்ளன.
இந்த சர்பேஸ் டேப்ளட் பிசிக்களுக்கு, 3 மிமீ தடிமனில் கிடைக்கும் மேக்னடிக் கவரை, விரித்து அழுத்தத்தில் இயங்கும் கீ போர்டாகக் கொள்ளலாம். 5 மிமீ தடிமனில் கிடைக்கும்
கவரினை வழக்கமான கீ போர்டாக அமைத்துக் கொள்ளலாம். வேறுபாடான இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தி, அலுவலகம் மற்றும் தனி நபர் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தி, டேப்ளட் பிசி சந்தையைத் தன் பக்கம் முழுமையாக மேற்கொள்ள மைக்ரோசாப்ட் திட்டமிடுகிறது.விண்டோஸ் ஆர்.டி. சர்பேஸ் டேப்ளட், விண்டோஸ் 8 அப்ளிகேஷன்களை மட்டுமே இயக்கும். பழைய சாப்ட்வேர் தொகுப்புகளை இயக்காது. எனவே இந்த சிஸ்டத்திற்கென அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை மற்ற நிறுவனங்கள் உருவாக்கினால் மட்டுமே இதன் வெற்றி உறுதியாகும். ஏற்கனவே பல நிறுவனங்கள் இதில் இறங்கிவிட்டன.
இன்னும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் டேப்ளட் பிசிக்களின் விலை குறித்து எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை.
32 ஜிபி ஸ்டோரேஜ் உடன், விண்டோஸ் ஆர்.டி. சர்பேஸ் டேப்ளட் 200 டாலர் விலையில் கிடைக்கலாம் என ஆதாரமற்ற தகவல்களே இதுவரை கிடைத்துள்ளன. இந்த விலை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு லாபம் எதனையும் தராது என ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டால், இந்த டேப்ளட் பிசி மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எனவும், அதனால் டேப்ளட் பிசி சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்களே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படலாம். இருப்பினும் தற்போதைய நிலையில் ஆப்பிள் ஐபேட் மற்றும் அது போன்ற சாதனங்களின் விலைகளுக்கிடையே நிறைய வித்தியாசம் இருப்பதால், தான் தேடும் வெற்றிக் கேற்ற வகையில் விலை நிர்ணயம் செய்திட, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சந்தர்ப்பம் உள்ளது.