கேள்வி: அண்மையில் அரசு சில இணைய தளங்களைத் தடை செய்ததாகப் படித்தேன். இது எப்படி மேற்கொள்ளப்படுகிறது? இது சாத்தியமா?
எல். இளையராணி, புதுச்சேரி.
பதில்: அரசு நினைத்தால் சாத்தியமாகாதது எதுவும் இல்லை. சரி, இங்கே இது எப்படி சாத்தியமாகிறது என்று பார்க்கலாம். எந்த ஓர் இணைய தளத்திலிருந்தும், தகவல் தொகுப்பு அல்லது தளம் உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும்போது, அது ஒரு இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் (ISP) நிறுவனம் வழியாகவே வர வேண்டும். இதனால், ஐ.எஸ்.பி. நிறுவனம், தன் வழியாகச் செல்லும் தகவல்களைக் கண்டறிய வாய்ப்புகள் நிறைய உண்டு.
இப்படிப் பார்ப்போம். நீங்கள் ஒரு தீவில் இருக்கிறீர்கள். இன்டர்நெட் என்பது நிலப் பகுதி. தீவிற்கும் இந்த நிலப் பகுதிக்கும் இடையே, ஐ.எஸ்.பி. பாலம் கட்டி, போக்கு வரத்தினைப் பராமரிக்கிறது. இன்டர்நெட்டிலிருந்து வரும் தகவல்களை (data) கார்கள் என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு காருக்கும் ஒரு லைசன்ஸ் பிளேட் போல, டேட்டா தரும் இணைய தளத்திற்கும் ஒரு முகவரி, லைசன்ஸ் உண்டு. அரசு, ஐ.எஸ்.பி. நிறுவனத்திடம் இந்த முகவரியிலிருந்து வரும் தகவல்களை அனுமதிக்காதே என்றால், அந்த முகவரி பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டு, ஐ.எஸ்.பி. இயக்கும் சர்வரில் அதற்கான குறியீடுகள் அமைக்கப்படும். குறிப்பிட்ட எண் உள்ள கார்களை அனுமதிக்காதே என்று சொல்லி, கார்களை பாலத்தில் அனுமதிக்காமல் இருக்கலாம் அல்லவா, அது போலத்தான் இதுவும். முழுமையான ஒரு தளத்தினையும் (எ.கா. Facebook.com) தடுக்கலாம். கார் எண்களில் டி.என் (TN) என்று இருந்தாலே அனுமதிக்காதே என்று உத்தரவு போடுவது போல இது. இப்படித்தான் தளங்கள், அவற்றிலிருந்து வரும் தகவல்கள், இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர்களால் தடுக்கப்படுகின்றன.
கேள்வி: வேர்ட் புரோகிராமில், நாம் தயாரிக்கும் பைல்களுக்கு தானாக பேக் அப் காப்பி உருவாக்குவது எப்படி? இதனை எவ்வாறு செட் செய்வது?
சி.என். கண்ணதாசன், மதுரை.
பதில்: வேர்ட் புரோகிராமில் உருவாக்கப்படும் டாகுமெண்ட் பைல்களுக்குத் தானாக பேக் அப் காப்பி எடுக்கும் வழி உள்ளது. முதலில் Tools | Options எனச் செல்லவும். இங்கு வேர்ட் விண்டோவினைக் காட்டும். இதில் Save என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். இங்கு Always create a backup copy என்று ஒரு வரி கிடைக்கும். இதன் முன்புறம் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தி, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் டாகுமெண்ட் சேவ் செய்யப்படுகையில், அதன் முந்தைய நிலையில் டாகுமெண்ட் ஒரு பேக் அப் காப்பியாக WBK என்ற பைல் எக்ஸ்டன்ஷன் பெயருடன் சேவ் செய்யப்படும். மீண்டும் அதே டாகுமெண்ட்டில் திருத்தங்கள் மேற்கொண்டு சேவ் செய்திடுகையில், ஏற்கனவே இருந்த பேக் அப் காப்பி நீக்கப்பட்டு, அதன் இடத்தில் திருத்துவதற்கு முன் சேவ் செய்த காப்பி பேக் அப் காப்பியாகக் கிடைக்கும். இவை அனைத்தும் அதே டைரக்டரியில் சேவ் செய்யப்படும்.
கேள்வி: ராம் மெமரி பற்றிக் கூறுகையில் டி.டி.ஆர். என எந்த அளவை அல்லது பொருளைக் குறிப்பிடுகிறோம். இதில் டி.டி.ஆர் 2 மற்றும் 3 என்பதன் வேறு பாடு என்ன?
கா. சிதம்பரம், காரைக்குடி.
பதில்: Double Data Rate என்பதன் சுருக்கமே (DDR) டி.டி.ஆர். இது கம்ப்யூட்டரில் உள்ள ராம் மெமரி குறித்து மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் ப்ராசசர் மெமரியை அதன் ஒரு சுற்றில் எத்தனை முறை அணுகுகிறது என்பதனை இது குறிக்கிறது. வழக்கமான டி.டி.ஆர் இரண்டு மடங்கு ஆக இருக்கும். இப்போது வந்துள்ள DDR3 SDRAM கூடுதலான அதிக வேகத்தில் அணுக இடம் தருகிறது. இதில் டேட்டா மெமரி கிளாக் வேகத்தின் 64 மடங்கு அதிக வேகத்தில் பரிமாறப்படுகிறது. இவை மெமரி சிப்களின் அளவை 8 ஜிபி வரை அனுமதிக்கின்றன.
கேள்வி: கம்ப்யூட்டரைத் திறந்தவுடன் “Buffer Zone trying to load”, “Client Defs.xml” மற்றும் “Amclient.xml corrupted” என பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து, பின்னர் அதனை நீக்கிய பின்னர் இந்த செய்திகள் கிடைக்கின்றன. இது எதனால்? இவற்றை நிறுத்த என்ன செய்திட வேண்டும்?
கா.செந்தமிழ்ச் செல்வி, சென்னை.
பதில்: உங்கள் கேள்வியில் எந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்து நீக்கிய பின்னர் இந்த செய்திகள் வருகின்றன என்று குறிப்பிடவில்லை. இருப்பினும் பொதுவான சில தகவல்களைத் தர பதில் அளிக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட புரோகிராமினை கம்ப்யூட்டரிலிருந்து நீக்க விண்டோஸ் இன்ஸ்டாலர் பயன்படுத்தி இருப்பீர்கள். எப்போதும் புரோகிராம் ஒன்று தேவையில்லை என்று கருதி அதனை நீக்க முயற்சிக்கையில், அந்த புரோகிராமுடன் "அன் இன்ஸ்டாலர்' தரப்பட்டிருந்தால், அதனையே பயன்படுத்த வேண்டும்.
ஏனென்றால், அதில் தான் அதனை முழுமையாக நீக்க சரியான வசதிகள் தரப்பட்டிருக்கும். எனவே மீண்டும் அந்த புரோகிராமினை, பழைய ட்ரைவிலேயே இன்ஸ்டால் செய்து, அதனுடன் வந்துள்ள "அன் இன்ஸ்டால்' புரோகிராமினைப் பயன்படுத்தி நீக்கவும். அல்லது இணையத்தினைப் பயன்படுத்தி, அந்த புரோகிராமிற்கான "அன் இன்ஸ்டால்' புரோகிராமினைத் தேடி, இருந்தால் டவுண்லோட் செய்து, அதன் வழியாக நீக்கவும். மெக் அபி மற்றும் நார்டன் போன்றவற்றிற்க்கு இவை கிடைக்கின்றன. ஏனென்றால், இந்த புரோகிராம்கள், நம் கம்ப்யூட்டரின் அனைத்து ட்ரைவ்களிலும் சின்ன சின்ன புரோகிராம்களைப் பதிந்து வைக்கின்றன.
மூன்றாவதாக நான் சொல்லப்போவது அதிர்ச்சியைத் தரலாம். நீங்கள் குறிப்பிடும் "அந்த' புரோகிராம் இலவசமாகத் தரப்படுகிறது என்ற போர்வையில், ஏதேனும் மால்வேர் அல்லது வைரஸை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்திருக்கலாம். அவை நீங்காமல், அழையா விருந்தாளியாக உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு இதே போல சில்மிஷ வேலைகளைச் செய்து கொண்டு இருக்கலாம். எனவே, சிறப்பாக இயங்க்கும், அப்டேட் செய்யப்பட்ட நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இயக்கி அவற்றை நீக்க முயற்சிக்கவும்.
அப்படி இல்லாமல், நன்கு அறிந்த நிறுவனத்திலிருந்து அந்த புரோகிராம் கிடைத்தது என்றால், உங்கள் ஸ்டார்ட் அப் பட்டியலில் இந்த புரோகிராம் உள்ளதா என அறிந்து, அதனை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கவும்.
கேள்வி: ஆகஸ்ட் மாதம் என் விண்டோஸ் சிஸ்டம் வழக்கமான இரண்டாவது செவ்வாய்க் கிழமை கிடைக்கும் அப்டேட் பைல் மூலம் மேம்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இதனை எப்படி மேற்கொள்ளலாம்? அல்லது விண்டோஸ் இந்த மாதம் விட்டு
விட்டதா?
கே. சம்சுதீன், காரைக்கால்.
பதில்: விண்டோஸ் வெளியிடவில்லையா? என்ன கேள்வி கேட்டுவிட்டீர்கள்? மைக்ரோசாப்ட் வழக்கமாக அப்டேட் செய்வதற்கான பேட்ச் பைலை வெளியிட்டது. ஆகஸ்ட் 14 அன்று வெளியானது. இது குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 15 அன்று அதன் வலைமனையில் தெரிவிக்கப்பட்டது. இதில் பிரச்னைக்குரிய 26 சிக்கல்கள் சரி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில மிகவும் மோசமானவை என்றும் கூறப்பட்டுள்ளது. விண்டோஸ் சிஸ்டம், ஆபீஸ், எஸ்.க்யூ.எல். சர்வர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என அனைத்திற்குமான பைல்கள் தரப்பட்டன.
இனி, ஏன் உங்கள் கம்ப்யூட்டரில் அப்டேட் ஆகவில்லை என்ற சந்தேகம் உங்களுக்கு வந்தது? இதுவரை தானாக அப்டேட் ஆனதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே இதுவும் அப்டேட் ஆகியிருக்கும். இருப்பினும் மைக்ரோசாப்ட் தளம் சென்று இதற்கான அப்டேட் பைலை தரவிறக்கம் செய்து இயக்கிக் கொள்ளலாம்.
கேள்வி: டி.எல்.எல். பைல் எந்த வகையைச் சேர்ந்தவை? அதில் எப்படி கட்டளைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொள்வது எப்படி?
எம். பத்மநாபன், திண்டுக்கல்.
பதில்: எதனையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தங்களின் ஆர்வத்திற்கு ஒரு சல்யூட். டி.எல்.எல். பைல்கள் சிஸ்டம் இயக்கத்திற்கு முக்கியமானவை. இவற்றின் தன்மை குறித்து ஏற்கனவே கட்டுரைகள் இங்கு வெளியாகியுள்ளன. இதனை வழக்கமான டெக்ஸ்ட் ரீடரில் படிக்க இயலாது. Quick view plus என்ற சாப்ட்வேர் தொகுப்பினைத் தேடிப் பார்த்து எடுத்துப் பயன்படுத்திப் படித்துப் பார்க்கவும். அதற்கும் முன் அந்த டி.எல்.எல். பைலின் காப்பி ஒன்றை உருவாக்கி, அதனைப் படிக்க முயற்சி செய்திடவும்.