கேள்வி பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2012
00:00

கேள்வி: என்னுடைய ப்ளாஷ் ட்ரைவினை, என் பைல்களை பேக் அப் எடுப்பதற்காக, எப்போதும் கம்ப்யூட்டரில் செருகி வைத்துப் பயன்படுத்துகிறேன். இதனால் எதுவும் கெடுதல் உண்டா?
சி.கே. உத்தம் ராஜ், கம்பம்.
பதில்
: நல்ல கேள்வி. மெக்கானிகல் ஹார்ட் ட்ரைவ் போலவே, பிளாஷ் ட்ரைவினையும் எண்ணிப் பார்ப்பதால், இந்த சந்தேகம் உங்களுக்கு வந்துள்ளது. பிளாஷ் ட்ரைவின் தேய்மானம், அதில் எழுதப்படும், படிக்கப்படும் சுமையைப் பொறுத்துத்தான். அதில் நகரும் வகையில் எந்தவிதமான பகுதியும் இல்லை என்பதால், அந்த வகையில் தேய்மானம் ஏற்படாது. இருப்பினும், பயன்படுத்தாத போது அதனை இணைக்காமல் எடுத்து வைப்பதே நல்லது. ஏனென்றால், திடீரென அதற்கான மின் சக்தி அதிகம் செலுத்தப்படும் வகையில் சர்ஜ் ஏற்பட்டால், மொத்தமாக அது கெட்டுப் போகும் வாய்ப்பு ஏற்படும். எனவே, முறையாக அதனை நீக்கி வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்துவதே நல்லது.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் எழுத்தின் அளவை, குறைக்கவும், பெரிதாக்கவும், அதன் கட்டத்திற்கு கர்சரைக் கொண்டு செல்லாமல் செயல்பட முடியுமா? ஒரு எழுத்தின் அளவை 0.5 கணக்கில் கூட்டவும் குறைக்கவும் முடியுமா?
தே. தீனதயாளன், விழுப்புரம்.
பதில்:
முதலில் எந்த டெக்ஸ்ட்டின் அளவைக் குறைக்க முடியுமோ அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின்னர் கண்ட்ரோல் +ஸ்குயர் பிராக்கட் அடையாளத்திற்கான கீகளை (Ctrl+] / Ctrl+[) அழுத்தவும். முதலில் தரப்பட்டுள்ளது, எழுத்தின் அளவை அதிகரிக்கும்; அடுத்தது குறைக்கும். ஒவ்வொருமுறை அழுத்தும் போதும் ஒரு பாய்ண்ட் அளவு மாறுபடும். இதற்கென பாண்ட் கட்டம், மற்றும் அதன் சைஸ் கட்டம் செல்ல வேண்டியதில்லை. ஆனால், நீங்கள் விரும்பியபடி 0.5 என்ற அளவில் மாற்றம் தேவை எனில், பாண்ட் கட்டத்தில் கர்சரைக் கொண்டு சென்றும் ஏற்படுத்த முடியாது. 12.5 என அளவிற்கான கட்டத்தில் கொடுத்தால், Not a valid number என்று செய்தி கிடைக்கும். இதனை மேற்கொள்ள, பார்மட் மெனுவில் பாண்ட் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திட வேண்டும். கிடைக்கும் பாண்ட் டயலாக் பாக்ஸில், பாண்ட் அளவிற்கான கட்டத்தில் 12.5 எனக் கொடுத்தால், அதற்கேற்ற அளவில் எழுத்துக்கள் அமைக்கப்படும். இதில் வேடிக்கை என்னவென்றால், முதலில் இந்த அளவு கட்டத்தில், 12.5 என்று கொடுத்த போது ஏற்றுக் கொள்ளாத வேர்ட் புரோகிராம், மேலே காட்டியபடி பாண்ட் அளவினை மாற்றிய பின்னர், அளவு கட்டத்தில் 12.5 எனக் காட்டும். நாமாகக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளாது.

கேள்வி: புதிய கம்ப்யூட்டர் ஒன்றைப் பிரபலமான நிறுவனத்திடம் வாங்கினேன். இதில் மால்வேர் புரோகிராமினை அந்த நிறுவனம் பதிந்து அனுப்பியிருக்கலாம் என்று என் நண்பர் கூறுகிறார். இது உண்மையாக இருக்குமா?
எஸ். இசை ராணி, சென்னை.
பதில்:
கம்ப்யூட்டர் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமின்றி, வேறு சில தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் என அழைக்கப்படும் புரோகிராம்களையும் இலவசமாகப் பதிந்தே தருகின்றன. இவற்றை “bloatware” என அழைக்கின்றனர். இவற்றில் நிச்சயம் ஏதேனும் ஓர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இருக்கும். கேம்ஸ் மற்றும் சின்ன சின்ன பயன்பாட்டு புரோகிராம்கள் இருக்கலாம். தங்கள் நண்பர் கூறுவது போல, சில கம்ப்யூட்டர்களில் மால்வேர் புரோகிராம்களும் இவற்றுடன் வந்துவிடுகின்றன. அவற்றை நிறுவனங்களே இணைத்து அனுப்பலாம்; அல்லது மேலே குறிப்பிட்ட தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தொகுப்புகளுடன் கலந்து வரலாம். சீனாவில், இது போல ஒரு நிறுவனம் தந்த புதிய கம்ப்யூட்டர் ஒன்றில் botnet மால்வேர் இருந்ததைக் கண்டறிந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வழக்கு தொடுத்தது. எனவே, உங்களுக்கு இந்த அச்சம் இருந்தால், கம்ப்யூட்டர் வாங்கியவுடன், இது போல நிறுவனம் அளித்த கூடுதல் புரோகிராம்கள் அனைத்தையும் முதலில் நீக்கிவிடுங்கள். பின்னரே பயன்படுத்தத் தொடங்குங்கள். இவற்றை நீக்குவதும் கடினம். ஏனென்றால், இதனை அனுப்பிய நிறுவனங்கள், பயாஸ் சோதனை அளவிலேயே இவை இயங்கும் வகையில் இவற்றை அமைத்திருக்கும். எனவே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நீங்கள் விலை கொடுத்து வாங்கியிருப்பதால், மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்து, சிஸ்டத்தினை மீண்டும் அமைப்பதே நல்லது.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் புரோகிராமில் சில ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரிகளை அமைத்துள்ளேன். இவற்றைப் பயன்படுத்தும் போது, அந்த சொல்லுக்குப் பின்னால் சிறு இடைவெளியும் அமைகிறது. இதனால் pass என்ற சொல்லைப் பன்மையாகப் பயன்படுத்த es சேர்க்கையில் இரண்டுக்கும் இடையே ஸ்பேஸ் அமைகிறது. அதனை மீண்டும் அழிக்க வேண்டியதுள்ளது. இவ்வாறு பல சொற்களில் ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது? தீர்க்க வழி என்ன?
கே. ஜென்சி, திருப்பூர்.
பதில்:
பிரச்னை ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரியில் உள்ளது. அங்கு pass என்ற சொல்லை அமைக்கையில் சொல்லைத் தொடர்ந்து இரண்டு ஸ்பேஸ் விட்டு அமைத்திருப்பீர்கள்; அதுவே இதனைப் பயன்படுத்துகையில் சிறிது இடைவெளியையும் சேர்த்து தருகிறது. ஆட்டோ டெக்ஸ்ட் டயலாக் பாக்ஸ் சென்று, எந்த சொற்களுக்கான ஆட்டோ என்ட்ரியில் இந்த பிரச்னை ஏற்படுகிறதோ, அவற்றை மீண்டும் சொல்லை மட்டும் சரியாக இடைவெளி பின் வராமல் காப்பி செய்திடவும். சொல்லின் முதல் எழுத்தில் முதலில் கர்சரை வைத்துப் பின் ஷிப்ட் கீ அழுத்தியவாறு இறுதி எழுத்து வரை மட்டும் கொண்டு சென்று, காப்பி செய்து, மீண்டும் பேஸ்ட் செய்திடவும். இதன் பின்னர் இந்த பிரச்னை எழாது.

கேள்வி: பிரவுசரில் டேப் வழி பிரவுசிங் தேவை இல்லை எனில், நிறுத்தி பழைய வழிக்குக் கொண்டு வர முடியுமா?
சி. மறைமலை, உத்தமபாளையம்.
பதில்:
எல்லாரும் டேப் வழி பிரவுசிங் எளிதானது என, அனைத்து பிரவுசர்களும் இதனைத் தந்து கொண்டிருக்கையில், நீங்கள் மட்டும் ஏன் பழைய வழிக்குச் செல்ல விரும்புகிறீர்கள். அதற்கான சரியான காரணத்தைத் தந்திருக்கலாமே!
உங்கள் கேள்விக்கு வருவோம். தாராளமாக, பழைய முறை பிரவுசிங் செல்லலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், Internet Options தேர்ந்தெடுத்து, அதில் வலது பக்கம் மேலாக உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். இங்கு General டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Settings என்பதனைக் கிளிக் செய்திடவும். Enable Tabbed Browsing என்று இருக்கும் இடத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். மீண்டும் டேப்டு பிரவுசிங் வேண்டும் எனில், இதே போல் சென்று, டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

கேள்வி: என் இமெயில் அக்கவுண்ட்டில் இருந்து, என் பெயரில் பலருக்கு மெசேஜ் வந்திருப்பதாக, என் நண்பர்கள் எனக்கு தெரிவித்துள்ளனர். இதில் லிங்க் ஒன்று இருக்கிறதாம். அதில் கிளிக் செய்தால், வெகுநேரம் ஹவர் கிளாஸ் காட்டப்படுகிறதாம். இது எப்படி சாத்தியமாகும்?
கே. சாம்ராஜ், அருப்புக்கோட்டை.
பதில்:
சாம்ராஜ், உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் நுழைந்துள்ளது. சில வைரஸ்கள், கம்ப்யூட்டரில் இமெயிலுக்குப் பயன்படுத்தும் முகவரி புக்கிலிருந்து இது போன்ற அஞ்சல்களை லிங்க்குடன் அனுப்புகின்றன. இதனால், உங்கள் நண்பர்கள், அது உங்களிடமிருந்து வந்த உண்மையான மெயில் என்று எண்ணி திறந்து லிங்க்கில் கிளிக் செய்கின்றனர். வெகுநேரம் ஹவர் கிளாஸ் காட்டப்படும் அந்த நேரத்தில் வைரஸ் தன்னை அந்த கம்ப்யூட்டர்களில் பதித்துக் கொள்ளலாம். உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமை முழுமையாகப் பயன்படுத்தி, வைரஸை நீக்குங்கள். இதற்கு http://download.cloudantivirus.com/ என்னும் தளத்தில் கிடைக்கும் Panda Cloud ஆண்ட்டி வைரஸ் உதவியாக இருக்கும். இது இலவசமே. இத்துடன் Trend Micro House call என்னும் ஆண்ட்டி வைரஸ் புரோகிரா மினையும் இயக்கவும். இந்த புரோகிராம் http://housecall.trendmicro.com/ என்ற முகவரியில் கிடைக்கிறது. இது போன்ற சூழ்நிலைகளில், ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை இயக்கி சோதனை செய்வது நல்லது. அல்லது சிட்ரைவினை ரீ பார்மட் செய்திடவும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X