கேள்வி: டாகுமெண்ட்டில் லைன் பிரேக் அமைப்பது போல, எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் அமைக்க இயலுமா? நான் முயற்சி செய்த போது தவறுதலாகவே, வேறு விளைவுகள் ஏற்படுகின்றன.
டி.ஸ்வேதா, கோவை.
பதில்: வேர்டில் லைன் பிரேக் ஏற்படுத்த ஷிப்ட்+ என்டர் அழுத்தி இருப்பீர்கள். இது எக்ஸெல் தொகுப்பில் என்டர் கீயின் பயன்பாட்டிற்கு எதிரான செயல்பாட்டை மேற் கொள்ளும். அதாவது என்டர் அழுத்தினால் செல்லுக்குக் கீழே வரும் கர்சர் ஷிப்ட் + என்டர் அழுத்தினால் மேலே செல்லும். செல்லில் லைன் பிரேக் அமைத்திட Alt+Enter அழுத்தவும்.
கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். இதில் சிஸ்டம் ரிப்பேர் செய்திடும் டிஸ்க் ஒன்றை, இந்த சிஸ்டம் வழியாகவே தயாரிக்கலாம் என்று படித்தேன். அதனை எப்படி தயாரிப்பது?
சி. பிரான்சிஸ் சகாயராஜ், புதுச்சேரி.
பதில்: ஆம், தயாரிக்கலாம். எப்போதாவது, விண்டோஸ் இயக்கத்தினைத் தொடங்கிய பின்னர், அதனுள் நுழைந்து செயல்படுவது, சிரமமாக உள்ளதா? அந்த நேரத்தில் இந்த ரிப்பேர் டிஸ்க் உங்களுக்கு கைமருந்தாக உதவும். இதில் பலவகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பழுதுகளுக்கு தீர்வு தரும் புரோகிராம்கள் பதியப்படும். இவை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கின்றன. அல்லது ரெஸ்டோர் புரோகிராம் போல, முந்தைய நாள் ஒன்றில் இருந்த நிலைக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டு செல்கின்றன.
இந்த டிஸ்க்கைத் தயாரிக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும்.
1. ஸ்டார்ட் (Start) கிளிக் செய்திடவும். பின் சர்ச் பாக்ஸில் (Search Box), Create a System Repair Disk என டைப் செய்திடவும். மேலிருக்கும் பட்டியலில் ஒரு ஐகான் காட்டப்படும். அதில் கிளிக் செய்திடவும்.
2. இப்போது உங்களுக்கு ஒரு விஸார்ட் கிடைக்கும். இனி, காலியாக உள்ள சிடி அல்லது டிவிடியை இணைக்கவும். அடுத்து மானிட்டர் திரையில் காட்டப்படும் செய்திகளுக்கேற்ப நடந்து கொள்ளவும். முழு வேலையும் முடிந்த பின்னர், இந்த சிடியைப் பாதுகாப்பாக வைக்கவும். எப்போதாவது ஆப்பரேட்டிங் சிஸ்டம் தகராறு செய்து, சிஸ்டம் முடங்கிப் போனால், இந்த சிடியை, சிடி ட்ரேயில் நுழைத்து, இயக்கவும். இவ்வாறு இயக்க உங்கள் பயாஸ் (BIOS) செட் அப்பில், சிடி வழியாக பூட் செய்வதனையும் சேர்க்க வேண்டும்.
கேள்வி: கம்ப்யூட்டர் சொல் அகராதியில் “nibble” என்ற சொல் எதனைக் குறிக்கிறது?
மு.ஆ. பழனியப்பன், தாம்பரம்.
பதில்: “nibble” என்ற சொல் டேட்டா ஸ்டோரேஜ் பிரிவில் பயன்படுத்தப்படுகிறது. இது அரை பைட்டுக்கு இணையானது. ஒரு பைட் என்பது 8 பைனரி பைட்ஸ் என்பதால், நிப்பிள் என்பது 4 பைட்ஸ் ஆகும். இதனை ஒரு ஹெக்ஸா டெசிமல் கேரக்டர் கொண்டும் குறிப்பிடலாம்.
கேள்வி: கேரேஜ் ரிட்டர்ன் என்பது எதனைக் குறிக்கிறது? கம்ப்யூட்டரில் அதன் செயல்பாட்டை மேற்கொள்ள என்ன செய்திட
வேண்டும்?
எஸ்.பூமிநாதன், திண்டிவனம்.
பதில்: டைப்ரைட்டர் பார்த்திருக்கிறீர்களா? இன்னும் இவை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. அதில் இடது புறமாக ஒரு லீவர் இருக்கும். ஒரு வரியில் இறுதிவரை டைப் செய்த பின்னர், இதனை அழுத்தி இழுத்துவிட்டால், அடுத்த வரியின் முதல் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவோம். கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை இதனை என்டர் கீ மேற்கொள்கிறது. இதனை அழுத்தினால், அடுத்த வரியின் முதல் கேரக்டருக்குக் கர்சர் செல்லும். ஆனால், தொடர்ந்து டைப் செய்தால், இதனை அழுத்தாமலும், கர்சர் அடுத்த வரியில் தன் பணியினைத் தொடரும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
கேள்வி: என் போல்டரில் சில பைல்களின் பெயருக்கு முன்னால், $$என்ற அடையாளங்கள் உள்ளன. இவை எதனைக் குறிக்கின்றன? இவற்றை அழித்துவிடலாமா?
டி.கார்த்திக், திருப்பூர்.
பதில்: நீங்கள் குறிப்பிடும் இந்த பைல்கள் அனைத்தும் தற்காலிக பைல்களே. இந்த பைல்களின் துணைப் பெயராக “.tmp” என்ற எக்ஸ்டன்ஷன் பெயர் இருக்கும். பெரும்பாலும் இவை டெம்பரரி போல்டரில் தங்க வைக்கப்படும். இவை எதனால் ஏற்படுகின்றன? ஏறத்தாழ அனைத்து புரோகிராம்களும் இது போன்ற தற்காலிக பைல்களை உருவாக்குகின்றன. நாம் ஆட்டோ சேவ் மற்றும் பைல்களுக்கான டேட்டாவினை அமைக்கையில், இது போன்ற தற்காலிக பைல்களை புரோகிராம்கள் அமைக்கின்றன. இந்த புரோகிராம்களை, வேலை முடித்து மூடுகையில், பைல்கள் சேவ் செய்யப்பட்டு பதியப்படுகையில், இந்த தற்காலிக பைல்கள் அனைத்தும் நீக்கப்படும். ஆனால் இவ்வாறு நீக்கப்படுவது, முறையாக புரோகிராம்கள் மூடப்படும்போதுதான். கம்ப்யூட்டர் கிராஷ், முறையாக இல்லாமல் கம்ப்யூட்டரை நிறுத்துவது, பொதுவான புரோகிராம் பிரச்னைகள் எனப் பல்வேறு காரணங்களினால், புரோகிராம்கள் முறையாக மூடப்படுவது இல்லை. அது போன்ற வேளைகளில், இது போன்ற தற்காலிக பைல்கள் நீக்கப்படுவதில்லை. ஆனால், இவற்றை நாமாக நீக்குவதனால், மெயின் பைலுக்கு எந்த தீங்கும் ஏற்படப் போவதில்லை. பொதுவாக, டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களை அனைத்தையுமே நாம் நீக்கிவிடலாம். இவை அவ்வப்போது நீக்கப்பட வேண்டும். ஹார்ட் டிஸ்க்கில் இந்த பைல்கள் இடத்தைப் பிடிப்பதனால், இவை கம்ப்யூட்டர் இயக்க வேகத்தினை மந்தப்படுத்தும்.
கேள்வி: இதுவரை டாஸ்க் பாரில், ஐகான்களை என் இஷ்டப்படி அளவை மாற்றியும், இடம் மாற்றியும் அமைத்து வந்தேன். ஆனால், திடீரென எந்த மாற்றத்தையும் என்னால் ஏற்படுத்த முடியவில்லை. இது வைரஸால் ஏற்படுத்தப்பட்ட தடையா? எப்படி நீக்குவது? அவாஸ்ட் இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பயன்படுத்தி வருகிறேன்.
என். விஜயராணி, கடலூர்.
பதில்: கம்ப்யூட்டரில் திடீரென டாஸ்க் பாரை லாக் செய்துவிட்டீர்கள். இது போல விபத்து நடப்பது வாடிக்கை தான். டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இப்போது பாப் அப் மெனு ஒன்று கிடைக்கும். அதில் ‘Lock the Taskbar’ என்று உள்ளதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்தால், டாஸ்க் பார் லாக் அகற்றப்பட்டுக் கிடைக்கும். இனி உங்கள் விருப்பம் போல் டாஸ்க் பாரினைக் கையாளலாம்.
கேள்வி: நான் (வயது 67) எப்போதும் ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் அழுத்தி, அந்த பட்டியிலிலிருந்து புரோகிராம்களை இயக்கி வருகிறேன். எனவே, என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்த போது, டாஸ்க்பாரில் எந்த புரோகிராம் பட்டனும் இருக்கக் கூடாது என்ற வகையில் அமைத்தேன். ஆனால், சமீபத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பட்டன் அதில் அமர்ந்து கொண்டது. இதனை எப்படி நீக்குவது?
என். காசிநாதன், வத்தலக் குண்டு.
பதில்:விண்டோஸ் இயக்கத்தில் கீழாக, நீளமான கட்டமாக இருப்பதுதான் டாஸ்க் பார். இது உங்களுக்குத் தெரியும். மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதன் இயக்கத்தைச் சற்று மாற்றி அமைத்தது. நீங்கள் புரோகிராம் ஒன்றை இதில் பின் செய்து வைத்து, வேண்டும் போது அதில் கிளிக் செய்து இயக்கலாம். எனவே புரோகிராம் இயங்காத போதும், பின் செய்யப்பட்ட புரோகிராமின் ஐகான் காட்சி அளிக்கும். பல புரோகிராம்கள் இதில் பின் செய்யப்படும் போது, ஒன்றின் மீது
ஒன்றாக அடுக்கப்பட்டு காட்சி அளிக்கும். இதனை டாஸ்க்பாரில் இருந்து நீக்குவதும் எளிதுதான். அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், ‘Unpin this program from taskbar’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதே போல, எந்த ஒரு புரோகிராமின் ஐகானை இதில் அமைக்க, புரோகிராம் பட்டியலில், புரோகிராமின் பெயர் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் ‘Pin to Taskbar’ என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
கேள்வி: பிரிண்ட் ஸ்கிரீன் கீயில் Sys Rq எனவும் எழுதப்பட்டுள்ளதே? இதன் பொருள் என்ன? இதன் பயன்பாடு என்ன?
சி. ஷண்முகம், மதுரை.
பதில்: Sys Rq என்பது System Request என்பதன் சுருக்கமாகும். இது மெயின் பிரேம் கம்ப்யூட்டரில் மையக் கம்ப்யூட்டரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் ஒரு கீயாகும். முன்பு பேஜர் கொடுத்து ஒருவரின் கவனத்தை திருப்புவோம் அல்லவா! அது போலத்தான் இதுவும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கு எந்த செயல்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை.லினக்ஸ் பயன்பாட்டாளர்கள் இதனைப் பயன்படுத்தி சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகள் குறித்து ஆய்வு செய்திட இந்த கீயை முதலில் பயன்படுத்துவார்கள். சிஸ்டம் கிராஷ் ஆனாலும் இந்த கீ அதிகம் பயன்படும்.
இன்னொன்றையும் கவனத்தில் கொள்க. அனைத்து கீ போர்டுகளிலும் பிரிண்ட் ஸ்கிரீன் கீயில் இதுவும் எழுதப்பட்டிருக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். சிலவற்றில் இது இருப்பதில்லை.