மானாவாரி தொழில்நுட்பத்தில் இயற்கை விவசாயி | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
மானாவாரி தொழில்நுட்பத்தில் இயற்கை விவசாயி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 அக்
2012
00:00

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று என்ற ஊரைச் சேர்ந்த முன்னோடி பண்ணையாளர் சென்னகேசவன் (98423 48915). இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேளாண்மையில் ஈடுபட்டு வருபவர். பல புதிய எளிய முறைகளை அறிமுகம் செய்பவர். ஆடு வளர்ப்பிலும், பண்ணைக்குடில் அமைப்பதிலும் அனுபவம் உள்ளவர்.
மானாவாரி விவசாயம்தான் மற்ற எல்லா வகை விவசாயத்தை விடவும் லாபகரமானது. வரவுசெலவு கணக்குப் பார்த்தால் நஞ்சையிலோ, தோட்டக்கால் விவசாயத்திலோ நாம் செலவழித்ததுகூட வருவதில்லை. ஆனால் மானாவாரி வேளாண்மையில் செலவுகள் மிகவும் குறைவு. வரவும் நன்றாகவே உள்ளது. ஆனால் இதை முறையாகச் செய்ய வேண்டும். முறை தவறிச் செய்தால் நமக்கு வருமானம் கிடைக்காது.
மானாவாரி தொழில் நுட்பத்தின் முதல் அடிப்படை நமது பகுதியின் மழை அளவு. எவ்வளவு மழை எப்போதெல்லாம் பெய்கிறது என்ற தகவல் திரட்டு நம்மிடம் இருக்க வேண்டும். நான் கடந்த 35 ஆண்டுகளுக் குரிய எங்களது பகுதிக்கான மழை அளவுப் பட்டியலை வைத்துள்ளேன். ரெயின்பால் எனப்படும் மழைப்பொழிவு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இதேபோல காலமும் மாறு படுகிறது. ஆனால் ஒரு இடத்தில் பெய்யும் மழையின் முறையானது கிட்டத்தட்ட தவறாமல் ஆண்டுதோறும் இருக்கிறது.
நீண்டநாள் பயிர்களையும் தேர்வு செய்யலாம். குறுகிய காலப் பயிர்களையும் தேர்வு செய்யலாம். நமது மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை, மழை அளவு ஆகியவற்றை வைத்து நாம் பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும். நீண்டகாலப் பயிர்களான பருத்தி, மிளகாய் போன்றவற்றை நாம் தேர்வு செய்யும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறுகிய காலப்பயிர்களான பாசி, உளுந்து போன்றவற்றை தேர்வுசெய்து சாகுபடிசெய்வதால் சிக்கல் வருவது இல்லை.
நேரடி விதைப்பைத் தவிர்ப்பது நல்லது. மாட்டை வைத்து கொறுக்கலப்பை கொண்டு விதைகளை நேருக்கு நேராகப் போடவேண்டும். டிராக்டர் கொண்டு போடும்போது விதை மேலாக விழுந்துவிடும் அல்லது முளைக்க முடியாத ஆழத்தில் சென்றுவிடும். இதனால் முளைப்புத்திறன் குறைந்துவிடுகிறது. விதைநேர்த்தி கட்டாயம் செய்யவேண்டும். ஆவூட்டத்தில் ஊறவைத்து விதைநேர்த்தி செய்யும்போது மிகவும் பயன் கிட்டுகிறது. விரைவில் முளைக்கிறது.
கடைபிடிக்க வேண்டிய மண்வள நுட்பங்கள் - பெய்யும் மழை நீர், நிலத்தை விட்டு வெளியேறாமலும் அதே சமயம் வரப்புகள் உடையாமல் இருக்கும்படியாகவும் சம மட்ட வரப்புகள் அமைக்க வேண்டும். இதனால் சத்தான மண் அடித்துச் செல்லாமல் பாதுகாக்கப் படுகிறது. இதற்கடுத்ததாக வடிகால்களும் வாய்க்கால்களும் சீராக அமைக்க வேண்டும். அதாவது வரத்து நீருக்கும், போக்கு நீருக்கும் இடம் கொடுக்க வேண்டும். அடுத்ததாக சரிவுக்குக் குறுக்காக உழவேண்டும். சித்திரை மாதம் பெய்யும் மழையை விட்டுவிடாமல் உழுதுவைக்க வேண்டும். வரப்புகளை ஆண்டுதோறும் பலப் படுத்தி வரவேண்டும். பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டிகள் பயன்படுத்த வேண்டும்.
-கே.சத்தியபிரபா, உடுமலை.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X