கேள்வி: சில டாகுமெண்ட்களில், சொற்களில் முன் எழுத்துக்களை மட்டும் அகலமாகவும், சற்றுப் பெரிதாகவும் அமைக்கப்பட்டு கிடைக்கிறது. பெரிதாக அமைக்க பாண்ட் அளவினை அதிகப்படுத்தலாம்; எப்படி அகலமாக அமைக்க முடிகிறது. ஒவ்வொரு பாண்ட்டுக்கும் இது போல அகல எழுத்துக்கென தனி பாண்ட் தரப்படுகிறதா?
சி. கதிரேசன், மதுரை.
பதில்: இதற்கென தனி பாண்ட் அமைப்பு தரப்படவில்லை. இதனை மிக எளிதாக வேர்ட் புரோகிராமில் அமைக்கலாம். கீழே தந்துள்ளபடி செயல்படவும்.
1. முதலில் எந்த எழுத்துக்களை கூடுதல் அகலத்தில் அமைக்க வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
2.பின் இதில் ரைட் கிளிக் செய்து “Font” தேர்ந்தெடுக்கவும்.
3. “Font” என்ற பெயருடைய பல டேப்கள் உள்ள விண்டோ கிடைக்கும். இதிலும் “Character Spacing” என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து “Scale” என்பதனை அடுத்து 200% என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது எழுத்துக்களின் வழக்கமான அகலத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அகலமாக ஆக்கும். இதன் கீழாக உள்ள “Preview” என்ற இடத்தில் இவை எப்படி தோன்றும் எனப் பார்க்கலாம். இந்த அகலத்தை 600% கூட உயர்த்தலாம். இந்த அளவைத் தேர்ந்தெடுத்த பின்னர் ஓகே கிளிக் செய்து பின் வெளியேறவும். டாகுமெண்ட்டில் நீங்கள் விருப்பப்பட்ட எழுத்து செட் செய்த அகலத்தில் இருப்பதனைப் பார்க்கலாம்.
கேள்வி: டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களை ஒழுங்கு படுத்தும் வகையில், அவற்றை இழுத்து புதிய இடத்தில் அமைக்கும் போது, நான் விடும் இடத்தில், குறிப்பிட்ட வகையில் அமைய மறுக்கிறது. எப்படி நம் விருப்பப்படி இதனை அமைக்கலாம்?
சா. சூரிய பிரபா, தாம்பரம்.
பதில்: விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பில் டெஸ்க் டாப்பில் உள்ள ஐகான் ஒன்றை இழுத்துச் சென்று ஓர் இடத்தில் வைத்திட எண்ணி மவுஸால் இழுத்துவிட்டால் அது நீங்கள் விடும் இடத்தில் சரியாக அமராது. ஏற்கனவே உள்ள ஐகான்களுக்கு வலது/இடது பக்கம் மற்றும் மேல் கீழாகச் சரியான வரிசையில் இணையாகத் தன்னை அமைத்துக் கொள்ளும். அப்படி ஏன் வேண்டும்? நான் விடும் இடத்தில் தான் அப்படியே அமர வேண்டும் என எண்ணினால் கீழே குறிப்பிட்டுள்ளபடி செட் செய்திடவும். டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Arrange Icons By” என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Align to Grid” என்ற பிரிவினைப் பார்க்கலாம். இப்போது உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டுமா அல்லது எக்ஸ்பி சிஸ்டம் படி இயங்க வேண்டுமா என்பதனை முடிவு செய்து அதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள் அல்லது எடுத்துவிடுங்கள். டிக் அடையாளம் ஏற்படுத்தினால் எக்ஸ்பி ஏற்கனவே செட் செய்தபடி இயங்கும்.
கேள்வி: எனக்குக் கிடைத்த ஒரு எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் சார்ட் பார்மட் மிக அழகாக உள்ளது. இதனை எப்படி என் ஒர்க்ஷீட்டிற்கு மாற்றி அமைக்கலாம்? அப்படியே அனைத்து அம்சங்களுடன் உள்ளதாக அமைக்க முடியுமா?
இரா. வேலுச்சாமி, திண்டுக்கல்.
பதில்: நீங்கள் விரும்பும் அந்த சார்ட்டைத் தேர்ந்தெடுங்கள். அதை அப்படியே காப்பி செய்திடுங்கள். அடுத்து உங்கள் சார்ட்டை திறந்து கொள்ளுங்கள். இப்போது கவனமாக எடிட் மெனுவினைத் திறந்திடுங்கள். அந்த மெனுவில் பேஸ்ட் ஸ்பெஷல் என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைக் கிளிக் செய்து பின் Format என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். நீங்கள் பெற்ற சார்ட்டில் இருக்கும், உங்களைக் கவர்ந்த பார்மட்டிங் சமாச்சாரங்கள் எல்லாம் உங்கள் சார்ட்டிற்கு மாற்றப்பட்டு அந்த பார்மட்டில் உங்கள் டேட்டா இருக்கும். உங்கள் டேட்டா பத்திரமாக புதிய வடிவில் கிடைக்கும்.
கேள்வி: புதியதாக ஜிமெயில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். ஏற்கனவே ஹாட் மெயில் பயன்படுத்தி வந்தேன். இன்னும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இதில் உள்ள மெயில் மற்றும் காண்டாக்ட் முகவரிகளை ஜிமெயிலுக்கு மாற்ற எந்த பைலை காப்பி செய்து, இங்கு ஜிமெயிலுடன் இணைக்க வேண்டும்?
நா. கலைச்செல்வி, கோவை.
பதில்: சின்ன விஷயத்திற்கு நீண்ட கடிதம் எழுதி உள்ளீர்கள். சுருக்கமாக அதனைத் தந்துள்ளேன். பள்ளி செல்லும் மாணவியான மெயில் அக்கவுண்ட்டில் கவனம் செலுத்தி பயன் பெறுவதை உங்கள் கடிதம் விளக்கியுள்ளது. பாராட்டுக்கள். எந்த பைலையும் காப்பி செய்து இணைக்க வேண்டாம். ஜிமெயில் தளம் சென்று, செட்டிங்ஸ் பிரிவில் கிளிக் செய்திடவும்.
இதற்கு, ஜிமெயில் பக்கத்தில், மேல் வலது பக்கத்தில், கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ்விரி பட்டியலில், Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Accounts and Import” என்ற டேப்பில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். இதில் யாஹூ, ஹாட்மெயில் என இன்னும் சில மெயில் தளங்களுக்கான ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். இதில் உங்கள் மெயில் அக்கவுண்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும். மாற்றத்தை பக்கத்தின் கீழாகச் சென்று சேவ் செய்திடவும். உங்கள் அனைத்து காண்டாக்ட் மற்றும் மெயில் முகவரிகள் ஜிமெயில் தளத்தில் கிடைக்கும். அந்த அக்கவுண்ட்டிற்கு வரும் மெயில்களை 30 நாட்களுக்கு, சோதனை முறையில் ஜிமெயிலுக்கு பார்வேர்ட் செய்திடும் வகையிலும் செட்டிங்ஸ் இங்கு ஏற்படுத்தலாம்.
கேள்வி: ஆங்கில மொழி பயன்படுத்தும் ஆற்றல் குறித்து பயிற்சி தரும் இலவச இணைய தளம் உள்ளதா? பட்ட வகுப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். அதற்கேற்ற வகையில் தளம் ஒன்று கூறவும்.
டி.ஈஸ்வரி, புதுச்சேரி.
பதில்: உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள். உங்களுக்கு மட்டுமின்றி, அனைவரும் பயன்படுத்தி, ஆங்கில மொழி திறன் வளர்க்கும் வகையில் ஒரு தளம் உள்ளது. இதன் முகவரி http://www.verbalearn.com ஆங்கில சொற்கள் குறித்த உங்கள் அறிவை வளர்க்கும் வகையில் பல சோதனைத் தேர்வுகளை இது நடத்துகிறது. உங்கள் பதில் சரியா, இல்லையா என்று சொல்லி விளக்கமும் அளிக்கிறது.
முதலில் இந்த தளம் சென்றவுடன் ஒரு விளக்க வீடியோ கிடைக்கிறது. அதனை முதலில் பார்த்தால் இந்த தளத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று வழி காட்டப்படுகிறது. ஸ்டடி லிஸ்ட் தயார் செய்திடலாம். அதனை எப்படி உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது. SAT, ACT, GRE, General Vocabulary என்ற நான்கு பிரிவுகளில் சொற்களை வகைப்படுத்தி சிறு சிறு தேர்வுகளை நடத்தி நம் சொல் திறன் என்று காட்டுகிறது. SAT, ACT, GRE தேர்வுகளுக்கு தயார் செய்திடும் மாணவர்கள் இந்த தளம் சென்று தங்களின் நிலையை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மற்றவர்கள் General Vocabulary என்ற பிரிவில் தங்களுக்குத் தெரிந்த சொற்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம். Start Now பட்டனில் கிளிக் செய்து நீங்கள் எந்த பிரிவில் தேர்வு எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்று காட்டி அந்த தேர்வினை மேற்கொள்ளலாம். தளத்தில் உங்களைப் பதிவு செய்து விட்டால் உங்களின் சொல் திறன் எப்படி உள்ளது என்றும் நீங்கள் அமைத்துள்ள ஸ்டடி லிஸ்ட் என்ன வகையில் இன்னும் மேம்படுத்தப்படலாம் என்றும் காட்டப்படுகிறது. சிறுவர்களாய் இருந்து இந்த தளத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்றால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு உதவலாம்.
இதில் உள்ள இன்னொரு சிறப்பு சொற்களுக்கான ஆடியோ பைல்.இதனை இயக்கி நன்றாகப் பயிற்சியினை மேற்கொள்ளலாம்.
உங்கள் ஸ்டடி லிஸ்ட்டை கம்ப்யூட்டருக்கு மாற்றி பின் அதனை ஐபாட் சாதனத்திற்கு மாற்றி நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் சொற்களை பயிற்சி செய்து கொண்டு செல்லலாம். பல வகைகளில் உங்கள் ஆங்கில அறிவை வளர்க்கும் இந்த தளம் மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான ஒரு தளமாகும்.இந்த சேவை அனைத்தும் நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது என்பது இன்னொரு சிறப்பு.