சாய் பாபாவும் குழந்தை பாக்கியமும் | கலைமகள் | Kalaimagal | tamil weekly supplements
சாய் பாபாவும் குழந்தை பாக்கியமும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 டிச
2012
00:00

உலகம் தோன்றி நாள் முதலாகவே உயிர்கள் பிறந்து, மடிந்து மீண்டும் பிறந்து வாழ்ந்து மடிந்து நம் கர்ம வினைகளை நீக்கி இறைவனடி அடைகின்றன. இச் சுழற்சியில் மனித இனம் பலச் சிறப்புகளோடு நம் வினைகள் நீங்கி வாழ்கின்றது. பல்லாயிரம் ஆண்டுகளாக நம் குலம் தழைக்க குழந்தை பிறக்கவில்லை என்றால் அது பெரும் குறையாகக் கருதப்பட்டு வருகிறது. குழந்தை பாக்கியம் பெறாத தம்பதிகளை சிலர், சமூகத்தில் முழு மனித வாழ்க்கை வாழ்பவராகவும் கருதுவதில்லை. சாஸ்த்திரங்கள் கூட பிள்ளை இல்லாதவர்கள் “புத்’ எனும் நரகத்தை அடைவதாகக் கூறுகிறது. ஒரு தம்பதியருக்கு குழந்தை இல்லையென்றால் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து அக்குலம் தடை பட்டு விடுகிறது. இதனால் அவர்களின் முன்னோர்களுக்குச் செய்து வந்த கர்மாக்கள் நின்று விடுகிறது. சாஸ்த்ர ரீதியாகவும், சமூக ரீதியாகவும் குழந்தை பாக்கியம் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. எனவே தான் அக்காலம் முதல் இன்று வரை குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள் பற்பல தானங்களையும், தர்மங்களையும், யாகங்களையும் செய்து வருகிறார்கள். தசரத சக்கரவர்த்திக்கு மூன்று மனைவிகள் இருந்தும் புத்ர பாக்கியம் இல்லாமல் தவித்து, பின்னர் இறை அருளால் புத்ர காமேஷ்டி யாகம் செய்து இராமனைப் பெற்றதை நாம் அறிவோம். ஆனால் நம் சாய் பகவான் தன்னை அடைந்து வேண்டிய பல தம்பதிகளுக்கு யாகம், யக்யம், தான, தர்மம் என எந்தக் கட்டளையையும் விதிக்காமல் தன் தவபலத்தால் அவர்களின் கர்மத் தடைகளை நீக்கி குழந்தை பாக்கியத்தை அருளியுள்ளார்.
சாய் பகவானின் புகழ் சீரடி தாண்டி பரவுவதற்கு பெரும் துணையாக இருந்த நிகழ்வு இது. திரு கோபால்ராவ் குண்ட் என்பவர் கோபர்காங்கில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்த போதிலும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால் தம்பதியர் பெரும் துக்கத்தில் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் சாய்பாபாவிடம் மிகுந்த பக்தியுடன் இருந்து வந்தார்கள். அடிக்கடி சாய் பகவானைத் தரிசித்துக் கொண்டிருந்தார் கோபால் ராவ். இவரைத் தாமு அண்ணா என்றும் பக்தர்கள் அழைத்தார்கள்.
கோவாவில் இருந்த ராலே எனும் பக்தர் பாபாவிற்காக 300 மாம்பழங்களை அனுப்பியிருந்தார். பாபாவின் முன் அம் மாம்பழங்கள் வைக்கப்பட்டன. அதிலிருந்து நான்கு மாம்பழங்களை எடுத்து பாபா வைத்து கொண்டார். மீதிப் பழங்களை சாமாவிடம் கொடுத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யும் படி கூறினார். பாபா பொதுவாக தனக்கென்று எதையும் தனியே வைத்துக் கொள்பவர் இல்லை என்பதால் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கோ இருப்பவர்களின் உள்ளங்களையும் அறியும் பாபா அருகில் இருப்பவர்களின் எண்ணங்களை அறிந்தவராய் இந்த மாம்பழங்கள் தாமுவிற்கு உரியது என்று மட்டும் கூறினார். பாபா தனியே எடுத்து வைத்துக் கொண்ட பழங்கள் விசேஷமானவை தங்களுக்குக் கிடைக்காதா என்றும் ஏங்கினார்கள்.
மாம்பழங்கள் எல்லாம் விநியோகிக்கப்பட்ட பின் தாமு அண்ணா பாபாவைத் தரிசிக்க வந்தார். அப்போது பாபா இந்த மாம்பழங்கள் யாரைச் சேர வேண்டுமோ அவர்களையே சேர வேண்டும். இம்மாம்பழங்களை உண்பவர்கள் “உண்டு மரிக்க வேண்டும்’ என்று கூறி மாம்பழங்களை அவரிடம் கொடுத்தார். இதைக் கேட்ட தாமு மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். பாபாவினால் கொடுக்கப்படும் பிரசாதங்கள் அமிர்தம் போன்றவை. உடல் நலம் பெற்று வாழும் சிறப்பு மிக்கவை. ஆனால் பாபா இப்படி கூறுகிறாரே என்று குழம்பினார். அருகில் இருந்த மஹல் சாபதி விளக்கம் கூறினார். ஒருவருக்கு பிள்ளை பிறக்கிறது என்றால் அது கூட இறத்தலுக்குச் சமமானதே என்றார். அப்போது பாபா இந்த மாம்பழங்களை நீயே தின்று விடாதே உன் இரண்டாவது மனைவிக்கு கொடு இந்த ஆம்ரம்லீலை புரியும் என்றார்.
அவர்களுக்கு இந்த மாம்பழங்கள் (ஆம்ரம்) நான்கு ஆண் குழந்தைகளையும், நான்கு பெண் குழந்தைகளையும் கொடுக்கும் என்றார். தசரதரை விட அதிக சந்தோஷமடைந்தார் தாமு அண்ணா. பாபாவின் ஆசிர்வாதத்தினால் பல கர்மத்தடைகளும் நீங்கி தம் குலம் தழைத்ததை எண்ணி பெரும் மகிழ்வு கொண்டவராய் சீர்டியில் இன்று வரை தொடரும் விழாவைத் துவங்குவதற்கு காரணமாக இருந்தார் (ஸ்ரீராம நவமி திருவிழா).
நைஜாம் சமஸ்தானத்தில் இருந்த நாந்தேயைச் சேர்ந்தவர் ரத்தன்ஜி என்பவர். இவர் பெரும் பணக்காரராக இருந்தார். அளவில்லாத சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்த போதும் அழகான குழந்தை வீட்டில் அழுது, சிரித்து விளையாடி வீட்டை அழுக்கடையச் செய்யாததால் வீடு இருளில் மூழ்கியதாகவே எண்ணி வருத்தத்தில் இருந்தார். அவரிடம் தன் குறைகள் நீங்க ஏதாகிலும் வழி சொல்லுமாறு வேண்டினார். தம் தெய்வம் சாய்பாபாவைச் சந்தித்து ஆசி பெற்றால் அனைத்துக் குறைகளும் கலைந்து போகும் என்றார். பாபாவைத் தரிசித்தால் தம் குறைநீங்கும் என்ற நம்பிக்கை கொண்ட ரத்தன்ஜி பாபாவைத் தரிசிக்கப் புறப்பட்டார்.
அத்துடன் தம் தீவினைகளை நீக்கி அருள் புரிய போகும் பாபாவிற்கு 5 ரூபாய்களை காணிக்கையாகச் செலுத்தவும் எண்ணம் கொண்டார். திட்டமிட்டபடியே பாபாவைத் தரிசித்து அழகிய மாலையை அணிவித்தார். பின்னர் ஆயிரமாயிரம் மக்களுக்கு அடைக்கலம் தந்து அருள் புரியும் பகவானே என் மனக்குறை நீங்கி மகிழ்வடைய அருளுங்கள். தாங்களே எனக்கு தெய்வம் உங்களை சரண் அடைகிறேன் அருளுங்கள் என்று கூறி காணிக்கை செலுத்த எண்ணினார்.
அப்போது பாபா அவரிடம் தாம் முன்பே காணிக்கையில் பெரும் பகுதியான மூன்று ரூபாய் 14 காசுகள் பெற்றுக் கொண்டு விட்டதாகவும் மீதி பணம் 1 ரூபாய் 84 காசுகளை மட்டும் தறுமாறும் கேட்டார். இதற்கு முன்னர் பாபாவை எங்கும், ஏன் கனவில் கூட காணாத போது இது எப்படி நடந்திருக்கும் எனக் குழம்பினார் ரத்தன். ஆயினும் பாபாவின் முன்னிலையில் எதுவும் பேசாத ரத்தன் பாபாவின் சொற்படியே செய்துவிட்டு, பாபா தயவு செய்து அருளுங்கள். தங்களையே நம்பியுள்ளேன் எனக்கு எது தேவை என்பதை தாங்கள் அறிவீர்கள் என்றும் கூறினார். ரத்தனை ஆசிர்வதித்த பாபா உன் குறைகள் நீங்கி விட்டன. கவலை இல்லாமல் இருப்பிடம் செல்லலாம் என்று கூறி தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். பாபாவின் மேல் நம்பிக்கை கொண்ட ரத்தன் மன அமைதி கொண்டவராய் பாபாவிடம் உதி பெற்றுக் கொண்டு இருப்பிடம் சென்றார். இருந்தபோதும் பாபா நம்மிடம் முன்னர் எப்போது காணிக்கை பெற்றார் என்றும் எண்ணிக் கொண்டிருந்தார்.
தாஸ்கனுவைச் சந்தித்த ரத்தன் சீரடியில் நிகழ்ந்தவைகளைக் கூறி தாம் சந்தோஷமாக இபுருப்பதாகவும் கூறினார். ஆனாலும் பாபா தம்மிடம் முன்னரே காணிக்கை பெற்றுக் கொண்டதாகக் கூறியது புரியவில்லை என்றார். தாஸ்கனுவும் அதன் விளக்கத்தை அறிய எண்ணினார். ஆனாலும் அவருக்கு அது விளங்கவில்லை. சிறிது நேரத்தில் ரத்தன்ஜியின் கணக்குப்பிள்ளை ஒரு கணக்கினைக் கொண்டு வந்தார். அதில் செலவு கணக்கு மூன்று ரூபாய் 14 காசுகள் என்று இருந்தது. அது சில நாட்களுக்கு முன் மௌலி சாஹேப் என்ற முகமதிய பெரியவரை வரவேற்று அவருக்கு உபசரிப்பு செய்ததற்கான செலவுகள் என்பது புரிந்தது இதன் மூலம் தானும் பிற முனிவர்களும் வேறல்ல என்பதையும் உலகில் நடக்கும் அனைத்தையும் அறிந்தவன் என்பதையும் பாபா உணர்த்துவதாக ரத்தன் உணர்ந்தார்.
இந்நிகழ்வுக்கு பிறகு மேலும் அதிக நம்பிக்கை கொண்டார் ரத்தன். தாஸ்கனுவும் ரத்தனின் மகிழ்வு நிரந்தரமாகும் என்று ஆசிர்வதித்தார். பின்னர் அவருக்குப் பல குழந்தைகள் பிறந்தன. தம் பிறவைப் பயனை அடையச் செய்த பாபாவின் திருவருளுக்கு என்று அடிமை என்று ரத்தன்ஜி எண்ணி பாபாவின் தரிசனத்தை அடிக்கடி பெற்று வந்தார்.
சாய்பகவான் தன்னை நாடி வந்து பக்தர்கள் விரும்பும் அனைத்தையும் அருளும் அருளாளர். ஒரு பெண் பாபாவைத் தரிசித்து குழந்தை பாக்கியம் இல்லாததால் தான் அடைந்த துன்பத்தை விளக்கி தம் குறை போக்க வேண்டும் என்று கேட்க சீரடி வந்து தங்கியிருந்தாள். அவள் பெயர் ஒளரங்கா பாதர். அவள் ஸோலாபூரைச் சேர்ந்தவள். பலமுறை மசூதிக்கு வந்தாள் ஆனால் எப்போதும் கூட்டமாகவே இருந்தது, பாபாவை சந்திக்க முடியாமல் தவித்தாள். அதனால் அவள் பாபாவின் முக்கிய அடிவரான சாமாவிடம் தனக்காகப் பாபாவிடம் பேசும்படி கூறினாள். பாபா அனைத்தும் அறிந்தவர் இருந்தபோதும் தாம் முயற்சிப்பதாகக் கூறினார். பாபாவின் உணவு வேளையின் போது ஊதுபத்தி, தேங்காயுடன் மசூதியின் ஓரத்தில் நிற்குமாறும், தான் அழைக்கும் போது வந்து பாபாவைப் பணியுமாறும் கூறினார். அதன்படி குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அப்பெண் வந்து நின்றாள்.
பாபா உணவு உண்ட பின் சாமாவின் துண்டில் கையைத் துடைத்தவர் லேசாகக் கிள்ளினார். (சாமாவின் ஏற்பாடுகளை அறிந்தவராய்) இது குறித்து இருவருக்கும் விவாதம் நிகழ்ந்த பின்னர் பாபா தம் இருக்கையில் அமர்ந்தார். அப்போது சாமா அப்பெண்ணிற்கு ஜாடை காட்ட அப்பெண் ஓடி வந்து பாபாவின் பாதம் பணிந்து தம் பிரார்த்தனையைச் சொல்லாமல் ஊதுபத்தியும் தேங்காயையும் சமர்ப்பித்தாள். பாபா அத்தேங்காயை எடுத்து கையில் வைத்து ஆட்டினார். தேங்காய் உருண்டு சப்தமிட்டது. உடனே பாபா தேங்காய் என்ன சொல்கிறது எனக் கேட்டார். தேங்காய் உருளுவது போல் தம் வயிற்றிலும் ஒரு குழந்தை உருள வேண்டும் என்று இப்பெண் வேண்டுகிறாள் என்றார் சாமா. பின்னர் பாபா விளையாட்டாய்ப் பேசி விட்டு தேங்காயை உடைத்து ஒரு பகுதியை ஆசிர்வதித்து அளித்தார்.
12 மாதங்களில் அப்பெண் ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றாள். பின்னர் பாபாவை வந்து தரிசித்து 500 ரூபாய் காணிக்கை செலுத்திச் சென்றாள்.
அவள் கொடுத்த பணத்தில் பாபாவிடம் வளர்ந்த “சயாம் கர்ண’ என்ற குதிரைக்கு சமாதி கோயில் கட்டப்பட்டது. பாபா இது போன்று பல தம்பதியருக்கு புத்ர பாக்யம் அருளுயுள்ளார். பாபாவின் லீலைகள் அளவிட முடியாதவை. நாளும் பேசினாலும் எழுதினாலும் குறைந்து விடாதவை.
மனித வாழ்வின் நான்கு நிலைகளில் இல்லறம் என்பது மிகச் சிறந்தது. இல்லறம் நல்லறமாக விளங்க பெரிதும் உதவுவது புத்ரபாக்யமே. அந்நலறம் இனிதே தொடர உதவும் புத்ரபாக்கியத்தினை அருளிய பாபாவைப் பணிவோம் பாவங்களிலிருந்து விடுபடுவோம்.

- குச்சனூர் கோவிந்தராஜன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X