சரஸ்வதி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2012
00:00

கிழக்குச் சிவந்திருந்தது. சேவல்களின் கூவல், அந்த நாற்பது வீடுகள் அடங்கிய ஊரையே விடிந்து விட்ட சேதி சொல்லி எழுப்பிக் கொண்டிருந்தது. வறண்டு கிடந்த அந்த பூமியிலும், ஈரத்தைக் காட்டிக்கொண்டிருந்த மேற்குப் பக்கம் கம்மாக் கரையில், காலைக் கடன்களை முடித்துவிட்டு, தன் குடிசைக்கு வந்த குமரன், அம்மா கிணற்றிலிருந்து சேந்தி வைத்திருந்த பானை நிறைந்த தண்ணீரை ஊற்றி, உடலைக் கழுவி, மாற்றுடை அணிந்து, சின்னத் தோள் பையைத் தயாராக எடுத்து வைத்தான்.
""யம்மோவ்... நான் பொறப்பட்டுட்டேன். பஸ்சை பிடிக்கோணும்னா இப்ப பொறப்பட்டாத்தான் செரியாருக்கும்.''
""பசியாறிட்டுப் போ ராசா.''
""என்ன வெச்சிருக்கேம்மா?''
""பழைய கஞ்சி கொஞ்சம் கெடக்குதுய்யா... ஊத்தித் தாறேன். குடிச்சிற்றுப் போனாத்தான் தெம்பாருக்கும். காணத்தொவையலுன்னா ஒனக்குக் கொள்ள ஆசையாச்சேன்னு, பாட்டி நேத்திக்கு ராவே, எங்கயோ வாங்கிக் கொண்டாந்து வெச்சிருந்தா. அத வறுத்து, தொவையலும் அறச்சு வெச்சிருக்கேன்.''
""நேரமாவுதும்மா... சுருக்காக் கஞ்சிய ஊத்து. மடமடன்னு குடிச்சுட்டு ஓடணும். ஆமா, பரிச்சைக்குக் கெட்டுறதுக்குப் பணம் கெடச்சுதா? பாட்டி எங்கே?''
""பாட்டி பணத்துக்குத்தான் போயிருக்கா. இப்ப வந்துருவா. அதுக்குள்ள கஞ்சியக்குடி.''
வட்டில் நிரம்பக் கஞ்சியை ஊற்றிக் கொண்டு வைத்தாள். ஒரு கிண்ணத்தில், கையுருண்டையளவு காணத்துவையலை அருகில் வைத்தாள்.
""ஐயோ அம்மா... இன்னுமா பணம் கெடைக்கலை? ஒங்கிட்டப் படிச்சுப் படிச்சிச் சொன்னேனே... இப்பதான் பாட்டி பணம் பொரட்டப் போயிருக்காங்கறியே... ஒருவேளை பணம் கெடைக்காட்டா என்ன பண்றது. பரிச்சைக்குப் பணம் கெட்டற கடைசி நாளு இன்னைக்குத்தானேம்மா... பணம் கெட்டலைன்னா, நான் ரெண்டு வருசமா கஷ்டப்பட்டுப் படிச்சப் படிப்பும் போயி... நான் ஸ்கூல் வாத்தியாராகறக் கனவும் கலஞ்சு போயிடுமேம்மா?'' கண் கலங்கியது. நெஞ்சுக்குள் பயத்தினால் ரத்த ஓட்டம் அதிகரித்துப் படபடப்பேற்பட்டது.
""அட என்ன புள்ளடா நீ? எதுக்கெடுத்தாலும் பயமும், படபடப்பும் இந்த வயசில வரப்படாதுய்யா... நீ படிச்சு வாத்தியாரானாத்தான் நம்ம குடி ஒயரும்ன்னு தானே, ஒங்கம்மாவும், பாட்டியும் இந்த பாடுபடுதம். ஒன்னோட பரிச்சைக்காகத்தானேய்யா காட்டு வேலைக்குப் போனக் காசெல்லாம், காட்டுக்காரர் கையில விட்டு வெச்சிருக்கம்?
""பாட்டி போயி கேட்டா, அந்த மகராசன் மருவார்த்த சொல்லாமக் குடுத்துருவாருய்யா... பதறாமக் கஞ்சக் குடி. நீ கஞ்சி குடிக்குறதுக்குள்ள பாட்டி பணத்தோட வாராளா இல்லியான்னு பாரு.''
கஞ்சி வட்டிலை அவனருகே நகர்த்தி வைத்தாள். பதற்றம் குறையாமலே வட்டிலருகே அமர்ந்து, நீரும், சோறுமாயிருந்த கஞ்சியைக் குடிக்கத் துவங்கினான். அவனுக்கு அம்மா படும் பாடும், அம்மாவைப் பெற்ற பாட்டி, தாத்தாவின் மறைவிற்கு பின், தங்களோடேயே இருந்து, காட்டு வேலைகளுக்குப் போய், தன் சம்பாத்தியத்தை இந்த வீட்டுச் செலவுகளுக்கே தந்து கொண்டிருப்பதும், அப்பாவின் மறைவிற்கு பின், அம்மா அடிக்கடி உடல்நலமின்றி நலிந்து விட்டதையும், தன் ஒரே அக்காவின் கல்யாணத்திற்காக அவர்கள் பட்ட கடன்களை அடைப்பதற்கே அல்லாடிக் கொண்டிருந்த போதிலும், தன் படிப்பிற்கும் தடை சொல்லாமல், அவர்கள் வரிந்து கட்டி, உழைத்து, உழைத்து உருக்குலைந்து போய்விட்டதையும் நினைத்துப் பார்த்தான்.
அந்த ஊரிலுள்ள, நாற்பது வீடுகளென்பதை விட, நாற்பது குடிசைகளிலும், வெளியூர் சென்று ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிலும் ஒ@ர ஆளான அவன், இறுதித் தேர்வுக்குப் பணம் கட்டி, பரிட்சையிலும் தேறிவிட்டால், அவன்தான் இந்த ஊரின் முதல் படிப்பாளி; முதல் ஆசிரியராகியும் விடுவான்.
ஆனால், பணத்தைக் கட்ட அன்றே கடைசி நாள் என்பதால், கஞ்சி வாயிலிருந்தாலும், கண்கள் மட்டும் வாயிலையும், பாட்டியையும் குறிவைத்துக் காத்திருந்தது.
"கடவுளே... பாட்டி வந்துவிட வேண்டும்... கையில் பணத்துடன் வந்துவிட வேண்டும்...' கண் மூடிப் பிரார்த்தித்தபடியே கஞ்சியைக் குடித்தான். அதுகூட, அவனுக்குப் பிடித்தக் காணத்துவையல் என்பதால் மட்டுமே, கஞ்சியினை விட்டுவிட இயலாமல் குடித்தான்.
அப்பாடா... அவன் கஞ்சியைக் குடித்து முடித்து, கையைக் கழுவுவதற்கும், பாட்டி வந்து சேர்வதற்கும், சரியாக இருந்தது.
"கடவுளே... கடவுளே... கடவுளே...' கண்ணை மூடிக் கொண்டான் குமரன்.
""யல யய்யா... குமரா... எதுக்குல இந்த பயம் பயந்து சாவுறா... பாட்டி பணத்தோட வந்துட்டாய்யா,'' அம்மா சொன்ன வார்த்தைகளில், குமரனுக்குப் போய்க் கொண்டிருந்த உயிர், திரும்பியது போன்ற சந்தோஷத்தில் கண் திறந்தான்.
பாட்டி வந்ததும், தன் கையில் வைத்திருந்த ஐநூறு ரூபாய் நோட்டை, மகிழ்வோடு தன் பேரன் கையில் தந்தாள்.
""காட்டுக்காரரு, நல்ல மனிசரு. நம்ம பணம் முன்னூத்தியெம்பதுதானாம். நூத்தியிருவது ரூவா கடனாத்தந்தாரு. யய்யா குமரா... இந்த பணத்த வெச்சி, பரிச்சைல பாஸ் பண்ணிருவேல்ல?'' பாட்டி வெள்ளந்தியாகக் கேட்டாள்.
""கட்டாயம் பாஸ் பண்ணிருவேன் பாட்டி. பஸ்சுக்கு நேரமாயிருச்சி. இப்ப போனாத்தான், பஸ்சை பிடிக்க முடியும். நான் போயிட்டு வரட்டா?''
""குமரா... காலம் கெட்டுக் கெடக்குய்யா! பணத்தப் பத்திரமாப் பாத்துக்க. இந்த பணத்த வாங்குறதுக்கே பாடாப் பட்டாச்சு. பணம்வெச்சிருக்கற சேப்பத் தொட்டுத் தொட்டுப்பாத்துக்க. தொலச்சிறகிலச்சிறப் போறே,'' என்று, பாட்டி எச்சரித்தாள்.
""அதெல்லாம் எனக்குத் தெரியும் பாட்டி. யம்மா போயிட்டுவாறன்... பாட்டி போயிட்டு வாறன்.'' பதிலுக்குக் காத்திராமல், பணத்தைப் பேன்ட் பாக்கெட்டில் பத்திரப் படுத்தி, ஓடினான் குமரன்.
பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிரமப்பட்டுப் படிக்கட்டில் தொற்றிக் கொண்டான் குமரன். பேருந்து புறப்பட்டது.
காலையிலேயே எழுந்து விட்டாள் சரஸ்வதி. எழுந்ததும், எழும்பாததுமாய், தன் சேலை மடிப்பிற்குள் கையைவிட்டுத் துழாவினாள். ஒருபக்கம் பணம் சிணுங்கியது. இன்னொருபக்கம் கசிந்துவிட்டப் பழம், விரல்களில் பிசுபிசுத்தது. ஒருபக்கம் கண்டதையெல்லாம் பத்திரப்படுத்தும் அவளின் சேலைத்தலைப்பு பையினுள், ஏதேதோ தட்டுப்பட்டது. ஆனால், அவள் பத்திரப்படுத்தி வைத்திருந்த அதைத்தான் காண முடியவில்லை.
""சவத்துப்பயச் சுருட்டு மட்டும் எங்கன போச்சு?'' வாயில் ஓழுகும் கோளைநீரை உறிஞ்சித் துப்பியபடி, சேலை மடிப்பை துழாவினாள். கிடைத்துவிட்டது... அவள் வாங்கி வைத்திருந்த சுருட்டுக் கட்டு கையில் கிடைத்து விட்டது.
சந்தோஷமாய் ஒரு சுருட்டை உருவி, முன்னும் பின்னும் வாயினுள் விட்டு, எச்சில்படுத்திவிட்டு, அதன் காம்புப் பகுதியை உதட்டில் செருகி, தீப்பெட்டியில் நெருப்புக் கிழித்துப் பற்ற வைத்து, வாய்க்குள் காற்றை இழுத்தாள். குப்பெனப் புகை வாய்க்குள் முண்டி, அவள் நாசித் துவாரங்கள் வழியாய் வெளியில் வந்து, வெண்மையாய் காற்றில் கலந்து பிசிறடித்து நாறியது.
இரண்டு இழுப்பு இழுத்து, புகையை வெளியேற்றிவிட்டு, வாயில் அநியாயத்திற்கு ஊறிய எச்சிலை, துப்பிக் கொண்டே நடந்தாள். 52 வயதைக் கடந்துவிட்ட அவளுக்கு, இப்போதும் தான் யார், தன்னை பெற்றவர்கள் யார், எந்த ஊர்... என்பதெல்லாம் தெரியாது.
யாராவது அவளிடம் பெயர் கேட்டால் மட்டும், துலக்கியறியாத மஞ்சள் நிறப் பல்லைக்காட்டி, "சரஸ்வதி...' என்பாள். பிச்சை எடுத்துத்தான், அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
அவளின் வாழ்க்கையோட்டத்தைப் பற்றி, அவளே சிந்திப்பதில்லை. அவளும் ஒரு ஜென்மம்தான். அவளுக்கும் ஒரு வாழ்க்கைதான். அதற்கென ஏதாவது, தாத்பரியம் உண்டா என்று, அவளே யோசிக்காத போது, மற்றவர்கள் யோசிக்கவா போகின்றனர்?
தலைக்கு எண்ணெய் தேய்க்காவிட்டாலும், கைகளால் இறுக்கமான கொண்டை போட்டுக் கொள்வாள். ஒரே சேலையை எத்தனை நாள் கட்டியிருந்தாலும், அவளின் சேலைமடிப்பு மட்டும் கலையவும் செய்யாது. மடிப்பிற்குள், அவள் அள்ளி அடைத்து வைத்திருக்கும் எந்த பொருளும், தவறிவிடவும் செய்யாது.
அவளைப் பொறுத்தவரை, ஆண்பெண் வித்தியாசம் கிடையாது. யாரைப் பார்த்தாலும் சிரிப்பாள். இடம், பொருள், ஏவல் தெரியாமல், எதிர்ப்பட்டவர்கள் கையைப் பிடித்து, சிநேகமாய் நலம் விசாரிப்பாள்.
புதிதாய் பார்ப்பவர்கள் சுதாரிக்கும் முன், பத்து ரூபாயை வாங்கி விடுவாள்.
காலையிலேயே கடைத்தெருவிலுள்ள, தேநீர் கடைகளின் முன்பாகக் கூட்டம் கூடத் துவங்கியிருந்தது.
தன் வழக்கப்படி, காலையிலேயே டீ குடிக்கும் கடையை நோக்கி நடக்கத் துவங்கினாள் சரஸ்வதி. கடைக்குமுன், புதிய மனிதர்கள் பலர் நின்றிருந்தனர்.
கூட்டத்திற்குள் நுழைந்து, எதிரில் நிற்கும் ஆஜானுபாகுவானவரைப் பார்த்ததும், அவரிடம் வெகுநாள் பழகியவளைப் போல், கறைபடிந்த பற்கள் தெரியச் சிரித்தாள் சரஸ்வதி.
""யண்ணே... சொகமாருக்கீயளா... எப்ப வந்திய... ஊட்ல எல்லாருஞ்சொகமாருக்காவளா?'' உரிமையோட ஆஜானுபாகுவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
காலையிலே ஒருத்தித் தன்னைத் தெரிந்து வைத்து, இவ்வளவு இணக்கமாகப் பேசும்போது, அவளை தெரிந்தவன் போலக் காட்டிக்கொண்டால் தான், மரியாதையாக இருக்கும் என எண்ணியவன், அவளைப் பார்த்து சிரித்தபடியே, தன் கையை நாசுக்காக அவளிடமிருந்து விலக்கிக் கொண்டான்.
""டீ குடிக்கிறாயா?'' ஆஜானுபாகு, பெருந்தன்மையாகக் கடைக்காரரிடம், அவளுக்கு ஒரு தேநீர் தரச் சொன்னான்.
சந்தோஷப்பட்டாள் சரஸ்வதி.
""எங்கண்ணன்னா, அண்ணன்தான்... யண்ணோவ்.''
""என்னம்மா?'' அவன்.
""ஒங்களப் பாத்துக் கன்னாளாச்சு... சரஸ்வதிக்கு ஒரு பத்து ரூபா தாங்கண்ணா...'' கை நீட்டி, அவனிடம் உரிமையோடு வேண்டினாள். அவனுக்கும், அவள் கையேந்தலையும், உரிமையாகக் கேட்பதையும், தட்ட முடியவில்லை.
சட்டைப் பையிலிருந்து, ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அனாயசமாய்த் தந்துவிட்டு, மெல்ல அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.
""ஒம்பேரு சரஸ்வதியா?'' பக்கத்தில் நின்ற ஒருவன் வாயைக் கொடுத்தான்.
""எம்பேரு சரஸ்வதிதான்... யண்ணா சொகமாருக்கியளா?'' வெள்ளை முழுக்கைச் சட்டை போட்டிருந்த அவன் கையைப் பிடித்துக் கொண்டாள் சரஸ்வதி.
தன் சட்டையில், அவள் கையில் நிறைந்திருந்த அழுக்கு பட்டிருக்குமே என்ற ஆத்திரத்தில், அவள் கையைத் தட்டி விட்டவன், அவளோ, மற்றவர்களோ சற்றும் எதிர்பார்க்காத @நரத்தில், ஓங்கி அவள் கன்னத்தில் அடித்தான்.
""ஏ ஆத்தா...'' அலறியபடி தன் கன்னத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, ஒரு மூலையில் சரிந்தாள். அவள் நாசித் துவாரங்களிலிருந்து, மூக்குச்சளி ஒழுகியது. அதை துடைத்துக் கொண்டு, எழும்போதே ஒப்பாரி வைக்கத் துவங்கினாள்.
அருகில் நின்றவர்கள், அடித்தவனைக் கடிந்து கொண்டனர். அவனுக்கே, தர்ம சங்கடமாகி விட்டது. விலகினான். விலகி நின்றவனை நோக்கி, அவள் சென்றாள்.
""நீங்க அடிச்ச அடியில, என் செவிடு பிஞ்சு போச்சு... என்னா வலி வலிக்குது தெரியுமா... நான், ஒங்க தங்கச்சிண்ணா, இனிமே, இவ்வளவு பலங்கூட்டி அடிக்காதங்க... நீங்க அடிச்ச அடிய வேற யாரும் தாங்கிக்கிட மாட்டாவ தெரியுமா?
""யண்ணா... ஒரு பத்து ரூவா தாங்கண்ணா...'' அடிபட்டதை மறந்து, அவனிடம் கெஞ்சினாள்.
அவன் வாய் திறக்காமல், தன் வெள்ளைச் சட்டைப் பையிலிருந்து, நூறு ரூபாய் நோட்டை எடுத்துத் தந்துவிட்டுப் போனான்.
அவள் அதை சிரித்தபடியே வாங்கினாள்.
""எங்கண்ணன்... அவிய என்ன அடிச்சாலும், பாசத்தோட நூறு ரூவாத் தந்துட்டாவ...'' திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு, கடைக்காரர் கொடுத்த தேநீரை, வாங்கிப் பருகினாள்.
பேருந்தைவிட்டு இறங்கியதும், தன் பேன்ட் பாக்கெட்டில் பணம் பத்திரமாய் இருக்கிறதா என்று, கவனமாய் பார்த்த குமரனுக்கு, "பகீர்' என்றது.
பணம் வைத்திருந்த பாக்கெட்டிற்குள், கைவைத்துப் பார்த்தான்; கையைவிட்டு துழாவிப் பார்த்தான். தான் வைத்திருந்த புத்தகப் பை, மற்ற பைகள் எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்தான்.
தன் காலுக்கடியில், பூமி நழுவிக் கொண்டு, அதலபாதாளத்தை நோக்கிச் செல்வதைப் போலிருந்தது. தலைக்குள் எல்லாமே இருண்டுவிட்டதைப் போல ஒரு சூன்யம் மூண்டு கொண்டது.
""ஐய்ய்ய்யோ... இனி நான் என்ன செய்வேன்?'' தலையிலடித்துக் கொண்டு, தான் பயணம் செய்த பேருந்துக்குள் ஓடிப் போய், எங்காவது பணம் விழுந்து கிடக்கிறதா என்று தேடினான்.
பயணிகளையெல்லாம் இறக்கிவிட்டு விட்டு, காலியாக நின்றிருந்த அந்த பேருந்தில், அவன் வைத்திருந்த ஐநூறு ரூபாய் பணமும் கிடைத்துவிடாதா என்ற நப்பாசையில், இருக்கைகளின் இண்டு இடுக்கு, சந்து பொந்து என, எல்லாவற்றையும் அலசிவிட்டு, கண்ணீரும், கம்பலையுமாய் திரும்பிய அவனை கவனித்தார் கண்டக்டர்.
""தம்பி என்னப்பா தேடறே?''
""பணம் சார்... டீச்சர் ட்ரெய்னிங் பரிட்சைக்கு, பணம் கட்டக் கடைசி நாள் இன்னைக்குத்தான். பாட்டியும், அம்மாவும் காட்டுவேலைக்குப் போயி கடன் வாங்கித் தந்த பணம்.''
""எவ்வளவு?''
""ஐநூரு...'' சொல்லிவிட்டு, "ஓ' வென அழுதான்.
""பஸ்லதான் பலதரப்பட்டப் பயலுகல்லாம் ஏறுவானுகல்ல... நாமதான் பாத்து வரணும். பணத்தப் பத்திரமாப் பாத்துக்கணும். இன்னிக்கு கூட்டம்ன்னா கூட்டம்... அப்படி ஒரு கூட்டம். எவனாவது, ஒங்கிட்ட நின்னவன்தான் பைக்குள்ள கை வெச்சிருப்பான்; அழாதேப்பா. இனிமே, நீ பரிட்சைக்கு எப்படி பணம் கெட்டுவே?'' கண்டக்டர் கேட்டபோது தான், தனக்கு முன் நீண்டு கிடந்த, இல்லாமையின் இயலாமையை உணர்ந்தான் குமரன்.
அம்மாவும், பாட்டியும் காலையில் சொல்லி அனுப்பிய புத்திமதிகளும், அவர்களின் கனவுகளும் மனதில் வந்தன.
""ஐயோ... நான் என்ன செய்வேன்?'' அதற்குள் தன்னைச் சுற்றிக் கூடிவிட்டவர்களை விட்டு நகர்ந்து நின்று, தலையிலும், மார்பிலும் அடித்து, ஓலமிட்டு அழுதான். சுற்றி நின்றவர்களெல்லாம், அவனின் இக்கட்டான நிலையைக் கண்டு கண்கலங்கினாலும், அங்குள்ள யாரா<லும் உதவிக்கு வர முடிய வில்லை.
""சும்மா அழுதுகிட்டு நிக்காத தம்பி... பரிட்சைக்குப் பணம் கெட்றதுக்கு, வேற வழி இருந்தாப் பாரு... இல்லன்னா, ஒங்க பள்ளிக் கோடத்து எட்மாஸ்டரு கைல கால்ல விழுந்து, நாளபின்ன தாறேன்னு சொல்லிப்பாரு,'' அறிவுரை சொல்லிவிட்டுப் போனார் கண்டக்டர்.
யோசித்தான் குமரன். குடி முழுகிவிட்டது! பயிற்சிப் பள்ளிக்குப் போனால், தலைமை ஆசிரியர் தன் நிலைக்குக் கொஞ்சம்கூட இரக்கப்பட மாட்டார்! வீட்டிற்குப் போனால், அம்மாவும், பாட்டியும் இடிந்து போய்விடுவர். அம்மாவுக்கு மாரடைப்பே ஏற்பட்டாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. என்ன செய்யலாம்? யோசித்தான்!
"இனி வீட்டிற்கோ அல்லது பள்ளிக்கோ போவதில் அர்த்தமில்லை... திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை. அதுவுமற்றவனுக்கு, சாவுதான் வழி...' என்ற ஞானம் பிறந்தது.
செத்துவிட்டால், எல்லாத் துயரங்களும் அழிந்து போய் விடும் என்ற உறுதியோடு, கண்களைத் துடைத்துக் கொண்டு நடந்தவனைக் கவனித்துக் கொண்டிருந்த சரஸ்வதி, குறுக்கே வந்து மறித்தாள்.
""எங்க போறப்பு?''
""சாவறதத் தவிர வேற வழி?''
""ஏ கிறுக்கி... அவனே பணத்தத் தொலச்சிட்டு, பரிட்சைக்குப் பணம் கெட்ட முடியாம இருக்கான். நீ போயி, அவங்கிட்டயும் கைய நீட்டிட்டியா... போ தூர.'' ஒருவர், அவளை அடித்து விரட்ட வந்தார்.
""இது யார்ன்னு நெனச்சிய... எங்க அக்கா மவனாக்கும். எங்க சொந்தக்காரன். எங்கக் கெளையாரு. யல தம்பி, ஒனக்கு ரூவாதான்ல வேணும்... எவ்வளவு?''
""ஐநூறு.''
""பதறாதெ நாந்தாறென்.'' சொன்னவள், அவன் முன்னால் தன் சேலைமடிப்பு முழுவதையும், அவிழ்த்துப் போட்டாள்.
அந்த மடிப்பினுள்ளிருந்து, பணம், பண்டங்கள், சுருட்டுக் கட்டு, தீப்பெட்டி என, என்னவெல்லாமோ விழுந்தன.
அந்த இடத்திலேயே அமர்ந்து, தான் இதுவரை பிச்சையெடுத்து, சேர்த்து வைத்திருந்த பணத்தை அடுக்கினாள். எல்லாப் பணத்தையும் அடுக்கிவிட்டு, சில்லரைகளை மட்டும், மீண்டும் தன் சேலை மடிப்பில் பத்திரப்படுத்திக் கொண்டவள், ஒரு சுருட்டை எடுத்துப் பற்ற வைத்து, புகையை உறிஞ்சினாள்.
""யல தம்பி... இதுல எவ்வளவு இருக்குன்னு எண்ணுப்பு.'' அடுக்கி வைத்திருந்த பணத்தையெல்லாம், குமரனிடம் தந்தாள். அதை வாங்கி எண்ணினான் குமரன். சரியாக ஐநூறு இருந்தது!
""ஐநூறு இருக்குமா...''
""ஒனக்கு எவ்வளவு வேணும்?''
""ஐநூறு...''
""சாமிதான் இவ்ளோ பணத்த தந்திருக்கு. இல்லன்னா சரஸ்வதிக்கு இவ்வளவு எப்படி வரும்? போ... இதக் கொண்டு போயி பரிச்சைக்குப் பணத்தக் கெட்டிப்புட்டு, ஒழுங்கா படிச்சுப் பரிச்ச எழுது. இதெல்லாம் சரஸ்வதிக்கு எப்படித் தெரியுதுன்னு பாக்கறியா? எல்லாம் சாமி சொல்லித்தருதுப்பு... போ.'' தன் மூட்டையை, சேலைமடிப்பிற்குள் அடக்கிக்கொண்டு, எதுவுமே அங்கு நடந்ததைப் போலக் காட்டிக் கொள்ளாமல், யாரிடம் பிச்சை வாங்கலாம் என்ற தேடலில், சுருட்டை உறிஞ்சி இழுத்தபடி, நடையைக் கட்டினாள் சரஸ்வதி.
"திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை...' என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்ட குமரன், அவள் போகும் திசை நோக்கிக் கும்பிட்டுவிட்டு, பரிட்சைக்குப் பணம் கட்ட, பள்ளி நோக்கி ஓடினான்.
""இவ கிறுக்கியில்ல... கல்விக்குக் கடவுள் சரஸ்வதின்றாங்கல்ல, அந்த சரஸ்வதி இவதான். நமக்குத்தான் இத்தன நாளும் இது தெரியாமப் போயிருச்சி.'' ஒரு பெண், தன்னை மீறித் தன் கன்னக் கதுப்பில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
***

தாமரை செந்தூர்பாண்டி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
16-டிச-201204:10:06 IST Report Abuse
GOWSALYA பாண்டி மனிதாபமான உணர்வுகளைக் காட்டிய ஒரு நல்ல கதை....ஏழைக்குத் தான் ஏழ்மையைப் பற்றித் தெரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X