பிரிந்தோம், சந்தித்தோம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2013
00:00

அந்த , "டிபார்ட்மென்டல் ஸ்டோர்'ன் கூட்டத்தில் புகுந்து, சாமான்களை வண்டியில் அள்ளிக்கொண்டு, பில் போடும் கவுன்டருக்கு வந்து நிற்கையில், பத்மாவை கொஞ்சம் கூட எதிர்பாராமல் சந்திப்போம் என்று, மனோகர் கனவு கூடக் காணவில்லை.
அவனுக்கு முன், தன் பொருட்களுடன் வரிசையில் நின்றிருந்தாள் பத்மா. மனோகருக்கு அவளை அடையாளம் கண்டுகொள்ள சில நொடிகள் ஆயிற்று!
பத்மாவா இது!
பிள்ளை பெற்ற பின், சதை போட்டு பருமனாக இருந்தவள், இப்போது அவன் அவளைக் காதலித்து, மணம் செய்து கொண்ட போது இருந்தது போல் இளைத்து, "டிரிம்'மாகி இருந்தாள். நீண்ட கூந்தல் வெட்டப்பட்டு, அரை முதுகிற்கும் மேல், கிளிப்பினால் இணைக்கப்பட்டிருந்தது. காதுகளில் ஏதோ பிச்சிலி நகை போன்ற வளையங்கள், கைகளும், கழுத்தும் மொட்டையாக இருந்தன. உடம்பை ஒட்டிய ஜீன்சும், லூசான டாப்சும் அணிந்திருந்தாள். அவளிடமிருந்து லேசான பெர்ப்யூம் மணம் வந்தது. அவனுடன் ஐந்து ஆண்டுகள், மந்தத்தனத்துடன் குடும்பம் நடத்திய பத்மா!
பக்கவாட்டில் பார்த்த முகம் சட்டென பின்னால் திரும்பி, ""விக்...'' என்று கூப்பிடப் போனவள், மனோவின் முகத்தை பார்த்ததும் சற்று திடுக்கிட்டாள்.
மனோகர் வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன், ""பத்மா...'' என்றான்.
""யெஸ்... மனோ?'' என்றவள், சட்டென்று உள்ளே நோக்கி, ""விக்ரம்... கம்,'' என்று குரல் கொடுத்தாள்.
"டக் டக்' என்று ஷூ சப்தம் போட, ஏழு வயதுச் சிறுவன், அவளை நோக்கி ஓடி வந்தான்.
மனோகர் இன்னும் ஆச்சரியத்துடன், அந்த சிறுவனை பார்த்தான். அந்த சிறுவன் அவன் சாயலில் இல்லை. பத்மாவின் முகம் தான் இருந்தது. மனோகரிடமிருந்து, அந்த கூர்மையான நாசி மட்டும் தான்.
பத்மா அவனை அருகில் அழைத்து, அணைத்துக் கொண்டு, அவன் கையிலிருந்த இன்னொரு சாக்லெட் பாரை பார்த்து, ""ஒன் மோர்... விக்ரம்...டூ மச்...'' என்றவள், அதையும் அவள் கூடையில் போட்டு, பில்லிங் கவுன்டரில் நகர்த்தினாள்.
மனோகரை எதிர்பாராமல் பார்த்ததில் ஏற்பட்ட அதிர்ச்சி அவளிடம் தெரிந்தாலும், அவள் அதை வெளியே காட்டிக் கொள்ள வில்லை.
""பத்மா... நீ இப்போது பெங்களூரிலா இருக்கிறாய்... உன்னோடு நான் பேச வேண்டும்,'' என்றான் அவசரமாக மனோ.
""உங்கள் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வாங்க... நான் காத்திருக்கிறேன். இங்க எதுவும் வேண்டாம்,'' என்று, அவனை நேராகப் பார்க்காமலே சொன்னவள், பில் தொகைக்கு தன் பர்சை திறந்து, அதிலிருந்து ஒரு கிரெடிட் கார்டை எடுத்து நீட்டினாள்.
மனோகர் தன்னுடைய பொருட்களை, "பேக்' செய்யச் சொல்லிவிட்டு வெளியே வந்தபோது, பத்மா, விக்ரமின் கைகளைப் பிடித்தபடி, ஒரு ஹூண்டாய் கார் அருகே நின்றிருந்தாள். மனோகர் திகைப்பு மாறாமல் அருகில் சென்றவுடன், ""பக்கத்தில் தான் கப்பன் பார்க்... அங்கே போய் பேசலாம். நீங்க உங்க வண்டில வர்றீங்களா... இல்ல கார்ல வர்றீங்களா,'' என்றாள் பதட்டம் எதுவுமில்லாமல்.
மனோகர், ""என் காரில் போகலாமே?'' என்றான். பத்மா முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல், தோள்களைக் குலுக்கிக் கொண்டு, ""ஓகே...லெட் இட் பி ஹியர்...'' என்று, ""விக்ரம்... வா,'' என பையனை அழைத்து, ""எங்க உங்க கார்?'' என்றாள்.
பார்க்கில் காலியாக இருந்த பெஞ்சில் சென்று, அமரும் வரை எதுவும் பேசவில்லை. விக்ரம் மட்டும், ""இந்த அங்கிள் யார் மம்மி?'' என்ற போது, எனக்கு தெரிஞ்ச அங்கிள், என்று புன்னகையுடன் பதில் சொல்லி, ""ஹலோ சொல்லு,'' என்றாள் அவனிடம்.
"அங்கிளா... அப்பாடா நான் உனக்கு...' என்று, கத்த வேண்டும் போல் இருந்தது மனோகருக்கு. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு, ""ஹலோ...'' என்று அந்த சின்னக் கைகளை குலுக்கினான்.
பார்க்கில், அங்கங்கே மனிதர்கள் பேசி, நடந்து கொண்டு இருந்தனர். சின்ன பிள்ளைகள் புல் தரையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
"விக்ரம், அதோ நீ அங்கே போய் விளையாடு...' என்று, அவன் பார்வையில் படும்படியான இடத்தைக் காட்டினாள் பத்மா. பின், மனோகர் பக்கம் திரும்பி, ""அப்புறம்...'' என்றாள்.
மனோகர் சட்டென்று பதில் வராமல், ""உன்னை பெங்களூரில் பார்ப்பேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை,'' என்றான்.
பத்மா புன்னகை செய்தாள். ""வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்கும் காரியங்களா நடந்து கொண்டேயிருக்கிறது?''என்றாள் தொடர்ந்து.
அவன் நான்கு ஆண்டுகளுக்கு முன், "விவாகரத்து வேண்டும்' என்று கேட்பதற்கு முன், அவளே எதிர்பாராமல், "எனக்கு, விவாகரத்து வேண்டும்...' என்று கேட்ட பத்மாவின் முகத்தில், அன்று கண்ட உறுதியும், தெளிவும், இன்று இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
""நீ இங்கு வேலையில் இருக்கிறாயா?'' என்றான் மனோகர்.
""இல்லை... நான் இப்போது ஒரு ஆன்த்ரப்ரினர்... அதாவது, ஒரு சிறு தொழில் செய்பவள்.''
""என்னது... என்ன தொழில்?''
பத்மா புன்னகை செய்தாள். ""எனக்கு நன்கு பரிச்சயமான வேலை. சமையல்... நான் ஒரு மெஸ் நடத்துகிறேன்... முக்கியமாக வேலைக்கு செல்லும், தனியாக இருக்கும் பெண்களுக்காக.''
திடுக்கிட்டான் மனோகர்.
""ஏன்... சமையல்... நீ முன்பு பார்த்த சாப்ட்வேர் வேலைக்கே போயிருக்கலாமே?''
""ஏன் போக வேண்டும்... சமையல் என்றால் என்ன கேவலமா?''
மனோகர் சட்டென்று தன் தவறை உணர்ந்தவனாய், ""இல்ல... நான் அதுக்காகச் சொல்லலை,'' என்று இழுத்தான்.
அவனை நேராகப் பார்த்தாள் பத்மா.
""சாப்ட்வேர் பீல்ட் மாறிக் கொண்டேயிருக்கும் ஒன்று... உங்களுடன் ஐந்து வருடம் குடும்பம் நடத்தியதில் எனக்கு கிடைத்தது சமையல் செய்யும் பக்குவமும், அனுபவமும் தான்... எனக்கு சாப்ட்வேர் துறையின் மாற்றங்களுடன் ஈடு கொடுக்க விருப்பமில்லை... அதனால் தான், இந்த வேலையை எடுத்துக் கொண்டேன்... எனக்கு உதவி செய்ய இன்னும் இரண்டு பேர் இருக்கின்றனர்.''
""ஆணா... பெண்ணா?''
பத்மா மறுபடியும் புன்னகை செய்தாள். ""அது உங்களுக்கு அனாவசியம்... என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே... உங்களை பற்றி சொல்லுங்கள்,'' என்றாள்.
""என்ன சொல்வது?''
""காமினியை நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா?'' என்றாள் பத்மா.
""இல்லை... வி ஜஸ்ட் லிவ் டுகெதர்... சேர்ந்து வாழ்கிறோம். அவ்வளவுதான்,'' அப்போது மனோகரின் குரலில் ஒலித்தது தோல்வியா, ஆற்றாமையா என்று அவனுக்கே புரியவில்லை.
""ஐ ஸீ... காமினி ஏன் உங்களை கல்யாணம் செய்து கொள்ள விரும்பவில்லை?''
மனோகர் சற்று நேரம் மவுனமாக இருந்தான். காமினி, பத்மாவிடம் விவாகரத்து பெற்ற பின், தங்கள் திருமணத்தை பற்றி பேசிய போது சொன்னது நினைவுக்கு வந்தது.
"மனோகர்... நான் மற்ற பெண்களைப் போல் அல்ல என்பதை, நீ புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு திருமணம், குடும்பம், குழந்தைகள் போன்றவைகளில் துளிக்கூட நம்பிக்கை கிடையாது. நான் எப்போதும் என் விருப்பப்படி சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். திருமணம், குழந்தை என்று தளைகளை மாட்டிக் கொண்டு, வீடு, வேலை என்று என்னால், இரு குதிரை சவாரி செய்ய முடியாது. நான் என் தொழிலையும், என் சுதந்திரத்தையும் மட்டுமே நேசிக்கிறேன்... லெட்ஸ் பி டுகெதர்... சேர்ந்து வாழ்வோம், பிரிய வேண்டிய நேரம் வந்தால், எந்த பிரச்னையும் இன்றி போவோம்...' என்றாள் காமினி அழுத்தந்திருத்தமாக.
மனோகருக்கு அப்போது ஒரு வகையில் உவப்பாகவே இருந்தது. தேவையான பெண் துணை, குடும்பம், குழந்தை என்ற பிடுங்கல்கள் இல்லை என்பது, ஒருவிதமான உல்லாசத்தை கொடுத்தது. ஆனால், நாளடைவில் காமினியின் சுதந்திரப்போக்கு அவனுக்கு அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது தான் நிஜம்.
இப்போது, இருவரும் பேருக்குத் தான் சேர்ந்து வாழ்கின்றனர். விரிசல் என்றோ விழுந்து பெரிதாகி கொண்டிருந்தது. ஆனால், முழுசாக வெளிப்பட்டு விலகவில்லை.
சமீப காலமாக, மனோகருக்குத் தான் பத்மாவையும், குழந்தையையும் துறந்தது தவறோ என்ற உறுத்தல் தோன்ற ஆரம்பித்தது.
""என்ன மனோ... பதிலைக் காணோம்... எந்த உலகில் இருக்கிறீர்கள்?'' என்ற பத்மாவின் குரல், அவன் சிந்தனைகளை கலைத்தது.
""ம்.... சாரி... நீ எப்படி இருக்கிறாய்?''
""எனக்கென்ன... ஐ ம் ஹாப்பி,'' என்றவள்,"" நான் நிஐமாகவே உங்களுக்கு, ஒரு வகையில் நன்றி சொல்ல வேண்டும்.''
""எதற்கு... நான் பணம் கொடுத்து உன்னை டிவோர்ஸ் செய்ததற்கா?'' என்றான்.
""நோ...நோ... எனக்கு அசாத்திய தன்னம்பிக்கையை உண்டுபண்ணியதற்கு... உங்கள் அலட்சியமான போக்குதான் என்னை நான் முழுமையாக புரிந்து கொள்ள உதவியது.''
மனோகர் சற்று மவுனமாக இருந்தான்.
""நான் தப்பு செய்து விட்டேனோ என்று தோன்றுகிறது,'' என்றான் மெதுவாக.
பத்மா வாய்விட்டு சிரித்தாள்.
""நீங்கள் என்ன அந்த காலத்து சினிமா கதாநாயகன் போல் பேசுகிறீர்கள். நாம் இருப்பது, 21 நூற்றாண்டில்... உங்கள் மனசுக்கு எது சரி என்று தோன்றியதோ, அதை நீங்கள் செய்தீர்கள். என் மூளைக்கு எது நியாயம் என்று பட்டதோ, அதை நான் செய்வேன். காமினியின் மனசுக்கு எது பொருத்தம் என்று தோன்றுகிறதோ, அதைத் தான் அவள் செய்வாள். இதில் தப்பும், சரியும் எங்கே வந்தது,''என்றாள் பத்மா.
மனோகர் அதிசயமாக பத்மாவை பார்த்தான். "வெறும் அசமந்தமாக இருந்தவள், எப்படி பேசுகிறாள்?' என்று தோன்றியது. அவன் மனசில் தோன்றியதை, அப்படியே படித்தவள் போல் தொடர்ந்தாள்.
""என்ன... அப்ப வாய் திறக்காத பத்மாவா, இன்று இப்படிப் பேசுகிறாள் என்று தோன்றுகிறதா? வாஸ்தவம் தான். வாழ்க்கையும், மனிதர்களும், நிகழ்வுகளும் தான் நமக்கு பள்ளி, கல்லூரியை விட அதிகமாக கற்றுக் கொடுக்கின்றன. <உடல் சுகத்திற்காக, இன்னொரு பெண்ணிடம் போய்விட்டு, மனைவியை அலட்சியம் செய்யும் கணவனை தொழுது ஏற்றுக் கொள்ளும் கன்னிகளும், நளாயினிகளும் இன்று இருக்க முடியாது. அவரவர் வாழ்க்கையை நிர்ணயிக்கும், தேர்ந்தெடுக்கும் உரிமை, ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இருப்பதை, இன்று, ஆண்-பெண் இருவருமே உணர்ந்து விட்டனர்... அதனால் தான், உங்கள் செயல்களுக்கு நான் வால்யூ ஜட்ஜ்மென்ட் தர விரும்பவில்லை. சொல்லப் போனால், நான் தானே முதலில் உங்களிடம் விவாகரத்து கேட்டேன்... அதனால், நீங்கள் தவறு செய்ததாக எண்ணி, குற்ற உணர்வு கொள்ள தேவையில்லை.''
""இல்லை பத்மா... நான் உன்னையும், விக்ரமையும் சரியாக கவனிக்க தவறி விட்டேன்.''
பத்மா மறுபடியும் புன்னகை செய்தாள்.
""மனோ... ஒரு ஆணுக்கு தாம்பத்ய உறவில் இருக்கும் நெடுநாள் விருப்பம், ஒரு பெண்ணுக்கு அதுவும், குழந்தை பிறந்த பின், இருப்பது மிகவும் அரிது. சமீபத்தில், ஆங்கிலத்தில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதி இருந்த நாவல் படித்தேன். அதில் அவர், குழந்தைகளை, நடக்கும், பேசும், சிரிக்கும், விளையாடும் கருத்தடை சாதனங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். அதுதான் உண்மை... அந்த சுகம், நீங்கள் விரும்பிய வகையில் கிடைக்காத போது, அதை தேடிப் போகிறீர்கள்... அவ்வளவுதான்!
""ஏன், நீங்கள் காமினியிடம் குழந்தை பெற்றுக் கொள்ளலாமே?''
மனோகர் அவளை நேராகப் பார்க்காமல் பதில் சொன்னான்...
""அவளுக்கு குழந்தைகள் சுமந்து பெற்றுக் கொள்வதில் விருப்பம் கிடையாது.''
""ஓ...'' என்று வியப்புடன் சொன்ன பத்மா தொடர்ந்து, ""காமினியின் காரெக்டருக்கு அவள் முடிவு பொருத்தமானதுதான்,'' என்றாள்.
அங்கு மவுனம் நிலவியது.
""விக்ரமுக்கு நான் தான் அவன் அப்பா என்று தெரியுமா?'' என்றான் சற்று ஏக்கத்துடன்!
""தெரியாது.... நான் சொல்லவும் மாட்டேன்... அவனாக வளர்ந்து, பெரியவனாகி, ஒரு நாள் கேட்கும்போது பார்க்கலாம்,'' என்றாள் பத்மா.
""நீ வேறு கல்யாணம் செய்து கொண்டிருக்கலாமே... அந்த அபிப்ராயம் <உனக்கு இல்லையா?'' என்றான் மனோகர்.
""இன்றைய தினத்தில் எனக்கு இல்லை... நாளை மாறலாம். யார் கண்டனர்?''என்றாள் பத்மா.
பத்மாவை அதிசயமாக பார்த்தான் மனோகர்.
""போகலாமா?'' என்றபடி எழுந்தாள் பத்மா.
""ப்ளீஸ்... உன் விலாசம்... போன் நம்பர்.''
பத்மா மீண்டும் புன்னகை செய்தாள்.
""வேண்டாமே... பிரிந்தோம்... சந்தித்தோம்... பிரிகிறோம். சில உடைந்த உறவுகளை திரும்ப ஒட்ட வைக்க முடியாது; தேவையுமில்லை.''
""வெறும் நண்பர்களாகவாவது இருப்போமே!''
பத்மா இப்போது பெரிதாக சிரித்தாள்.
""எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். நீங்கள் எனக்கு நண்பரும் அல்ல, பகைவனும் அல்ல... மாஜி கணவர். அதோடு விட்டு விடுவோம்,'' என்ற பத்மா, ""விக்ரம் வா... அங்கிளுக்கு பை சொல்லு,''என்று அழைத்தாள்.
""பை பை அங்கிள்... உங்க பேரு என்ன?'' என்றான் விக்ரம்.
""மனோகர்.''
""எங்கப்பா பேர் கூட அதுதான். ஆனால், அவர் எங்க கூட இல்லை... பை அங்கிள்,'' என்று கைகளை ஆட்டி சிரித்தபடி, பத்மாவுடன் நடந்து செல்லும் தன் மகனை பார்க்க முடியாமல், மனோகரின் கண்களில் கண்ணீர் திரை படர்ந்தது.
***

தேவவிரதன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sakthi - madurai,இந்தியா
01-பிப்-201315:07:35 IST Report Abuse
sakthi கருத்து யார்வேனாலும் சொல்லலாம் ஆனா எல்லாராலும் கதை எழுத முடியாது. ஒருத்தரோட படைப்ப பாராட்ட கூட வேண்டாம் ஆனா குறை சொல்லாமல் இருக்கலாம்ல?????????
Rate this:
Share this comment
Cancel
Meena Ramesh - Mysore,இந்தியா
28-ஜன-201312:58:12 IST Report Abuse
Meena Ramesh Its really good..Best Wishes..
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
28-ஜன-201312:26:16 IST Report Abuse
anandhaprasadh பத்மாவை ஒரு தைரியமான பெண்ணாகச் சித்தரித்த ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்... அதேபோல் சாப்ட்வேர் துறைதான் வெற்றிபெற ஏதுவானது என்ற எண்ணத்தையும் உடைத்தெறிந்திருக்கிறார்... மனோகர் எதனால் விவாகரத்து கேட்டான் என்று தெளிவாக சொல்லப்படவில்லை... பத்மாவுக்கும் மனோகருக்கும் கணவன் மனைவியாக வாழ விருப்பமில்லை என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்... ஆனால் விக்ரம் என்ற குழந்தை என்ன பாவம் செய்தது... நாளை அது பள்ளி செல்லும்போது பிற மாணவர்கள் தங்கள் தந்தை பற்றிப் பேசும்போதும் அவர்களோடு வரும்போதும் இந்தக் குழந்தையின் மனது என்ன பாடுபடும்.... பார்க்'ல மீட் பண்ண அப்பாவை அங்கிள்'ன்னு கூப்பிட வேச்சுட்டியேம்மா... உங்களுடைய பிரச்னைக்காக என்னை பலிகடா ஆக்கிடீங்களேம்மா" என்று அவன் கேட்டால் பத்மா என்ன பதில் சொல்ல முடியும்? பத்மா சொல்வது போல, "தன் அப்பா யாரு'ன்னு பின்னால அவன் தெரிஞ்சுக்கட்டும்" என்று மறைக்க அவளுக்கு எந்த உரிமையும் இல்லை... அப்படி தகப்பன் யாரென்றே தெரியாமல் வாழ நாம் ஒன்றும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிறக்கவில்லை... பத்மாவும் மனோகரும் தனிப்பட்ட வாழ்க்கையில் வென்றிருக்கலாம்... ஆனால் ஒரு தாயாய், தகப்பனாய் இருவருமே வாழ்க்கையில் தோற்றுவிட்டனர் என்பதே எனது கருத்து... காமினி போல பல பெண்கள் இன்று உள்ளனர்... அதைப்பற்றி விமர்சித்தால் பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்ற பெயரில் தர்க்கம் செய்யும் சில "கலாசார முன்னோடிகள்" என்னைத் தாளித்து எடுத்து விடுவர்.... எனவே இந்த மண்ணில் பிறந்த மாணிக்கம், மாதர் குலத் திலகம் என்று காமினியை நான் பாராட்டுகிறேன்....
Rate this:
Share this comment
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
30-ஜன-201301:05:02 IST Report Abuse
GOWSALYAநண்பரே...நீங்க சொன்னது உண்மைதான்,"' பெரும் கலாச்சார முன்னோடிகள்"' நிறைய இருக்கார்கள்.அதற்காகப் பயப்பட்டால்,நாம் ஒன்றும் எழுத முடியாது.உங்க கருத்தும் அதுபோல மிக நன்றாக இருக்கிறது.பத்மாவும் மனோகரும் குழந்தையில்லாம இருந்திருக்கலாம்.ஆனால்,இதில் பாதிக்கப்பட்டது விக்ரம் என்ற சிறுகுழந்தை தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X