விட்டு விடுதலை ஆகி நிற்பாய்....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2013
00:00

வழக்கம்போல, அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட, அகிலா படுக்கையிலிருந்து எழாமலே, அருகில் கிடந்த அலைபேசியை அழுத்தி, மணி பார்த்தாள். 5:25 என ஒளிர்ந்தது.
வலப்பக்கம் படுத்திருந்த சந்தான கிருஷ்ணன் படுக்கையில் இல்லை.
காலை, 4:30 மணிக்கே எழுந்து நடைப்பயிற்சி சென்றிருப்பான்.
இடப்பக்கம் ஏழு வயது மகன் தீலிபனும், ஐந்து வயது மகள் கலைச்செல்வியும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
ஆறு மணிக்கு அவர்களை எழுப்பி, பல்துலக்கச் செய்து, காபியை கொடுத்து படிக்கச் சொல்வாள்.
ஏழு மணிக்கெல்லாம் சந்தான கிருஷ்ணன் வீடு திரும்பி, வீடே கலகலப்பாகி விடும்.
முன்பக்க வராந்தாவில் அமர்ந்து, காலை பத்திரிகைகளை புரட்டியபடியே, வந்திருக்கும் கட்சித் தொண்டர்களின் சிபாரிசுகள், புகார்கள் எனத் துவங்கி, சில வேளைகளில், கட்டப் பஞ்சாயத்து வரை அவனது பணி நீளும்.
வேலைக்கார பெண் உதவியுடன், காலை பலகாரங்களை தயார் செய்து, 8:00 மணிக்கெல்லாம் பிள்ளைகளுக்கு உணவளித்து, பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வேலையைத் தொடர்ந்தால், 9:00 மணிக்கெல்லாம் சந்தான கிருஷ்ணன் குளித்து, உடை மாற்றி வருவான்.
காலைச் சிற்றுண்டியை முடித்து, 9:30 மணிக்கெல்லாம், தன் சகாக்களுடன் காரில் ஏறிப் புறப்பட்டு விடுவான்.
அதன் பின்னரே, அகிலா குளித்து முடித்து, அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று, வழிபட்டு, காலை உணவில் கை வைப்பாள்.
ஓர் அரசியல் பிரமுகருக்கு மனைவி ஆவோம் என்று, அகிலா கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
உறவுக்கார மாப்பிள்ளைகள் நிறையபேர், அகிலாவை பெண் கேட்டு வரத்தான் செய்தனர்.
அப்போது அகிலா, பட்டப் படிப்பு இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந் தாள். "படிப்பு முடியட்டும்' என்று சொல்லியே, அவளின் திருமணத்தை தள்ளிப் போட்டு வந்தார் தந்தை சிவராமன்.
சந்தான கிருஷ்ணன் குடும்பத்தினர், திடீரென வந்து பெண் கேட்ட போது, சிவராமனால் தட்டமுடியவில்லை. காரணம், சந்தான கிருஷ்ணனின் குடும்ப பின்னணி.
வந்தவர்களை கூடத்தில் அமர வைத்து, உள்ளே வந்த சிவராமன், அகிலாவை தனியே அழைத்துப் பேசியது, இப்போது கூட நினைவை விட்டு அகலவில்லை...
"அகிலா... இந்த கல்யாணத்துக்கு நாம சம்மதிச்சே ஆகணும். மறுத்தா, அப்புறம் வேறு யாருக்கும் உன்னை கல்யாணம் செய்து வைக்க முடியாதபடி செஞ்சிடுவாங்க. நம்ம ஜாதியிலேயே வலுவான ஆளுங்க அவங்க. அரசியல் செல்வாக்கும் அதிகம். அவங்க நம்ம வீடு தேடி வந்து உன்னை கேட்டதே, நாம செஞ்ச அதிர்ஷ்டம்ன்னு தான் சொல்லணும்...'
"நான் படிப்பை முடிக்கணும்பா...' என்று அகிலா சொன்னதும், "கல்யாணத்துக்கு அப்புறமும் நீ படிப்பை தொடரலாம்ன்னு சொல்லிட்டாங்கம்மா...' என்றார்.
"அவளை என்ன கேட்கிறது? கல்யாணத்துக்கு சம்மதம்ன்னு போய் சொல்லுங்க...' என்று ஆணை இடுவது போலச் சொன்னாள், அருகில் இருந்த அவளது அம்மா.
அகிலாவின் சம்மதம் அங்கே ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளப்படவில்லை.
காபி, பலகாரம் கொடுக்கும் போது, ஜாடையாகவே மாப்பிள்ளையை நிமிர்ந்து பார்த்தாள் அகிலா.
"கில்லி' பட பிரகாஷ்ராஜ் போலிருந்த சந்தான கிருஷ்ணனை பார்த்ததும், மனதில் ஒரு மிரட்சி தோன்றத் தான் செய்தது.
அவள் பயந்த அளவுக்கு, சந்தான கிருஷ்ணன், அவளிடம் எந்த கெடுபிடியும் இல்லாமல், மிகவும் மென்மையாகவே நடந்து கொண்டான்.
மாமனார், மாமியார் இருவருமே அவளிடம் பரிவுடன் பழகினர்.
மிகுந்த பிரயாசைப்பட்டு, புகுந்த வீட்டினரின் அனுமதியோடு, பாதியில் விட்ட பட்டப் படிப்பை முடித்தாள் அகிலா. அடுத்த நான்கு வருடங்களில், தீலிபன்; அடுத்து கலைச்செல்வி பிறந்தனர். அதோடு, குடும்பக்கட்டுப்பாடு செய்தாயிற்று.
கலைச்செல்வி பிறந்த மறுமாதம், சந்தான கிருஷ்ணன் வாழ்வில், ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது.
அந்த தொகுதியின் சட்டசபை உறுப்பினர் திடீரென இறந்துவிட, இடைத்தேர்தலில் சந்தான கிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட, தேர்தலில் வென்று, சட்டசபை உறுப்பினர் ஆனான்.
அடுத்து வந்த பொதுத்தேர்தலிலும், சந்தான கிருஷ்ணனே நின்று வெற்றி பெற்றுவிட, அவனது செல்வாக்கு, கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது.
வீட்டில், அகிலாவுக்கு நல்ல கணவனாகவும், பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாகவும், பெற்றோருக்கு நல்ல பிள்ளையாகவும், கட்சித் தொண்டர்களுக்கு நல்ல தலைவனாகவும் விளங்கி வந்தான்.
ஒன்று மட்டும், அகிலாவுக்கு நெருடலாகவே தோன்றியது.
"மக்களின் பிரதிநிதியாக தொண்டாற்றும் இவன், ஏன் எப்போதும், நான்கைந்து அடியாட்களுடனே, வெளியில் செல்கிறான்?பாதுகாப்புக்கு எதற்கு துப்பாக்கி?
"சட்டசபை உறுப்பினருக்கான சம்பளத்தை கொண்டு, எப்படி இப்படி ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ முடிகிறது?
"கார்களுக்கான பெட்ரோல் செலவுக்கே, அவனுக்கான சம்பள பணம் போதாதே!
"பங்களா போன்ற வீடு; வீடு முழுக்க குளிர்சாதன வசதி, காவிரி படுகையில் நெல் வயல், கரும்புத் தோட்டம், கல்குவாரி, லாரிகள் என, எப்படி இவற்றை எல்லாம், வாங்கிக் குவிக்க முடிகிறது?
"இருபத்தைந்தாயிரம் சம்பளம் வாங்கிய அப்பா கூட, சிரமத்துடன் தானே குடும்பத்தை ஓட்டினார்?
"இதைப் பற்றியெல்லாம் யோசித்தால், மூளை குழம்பி விடும்...' எனத் தோன்ற, யோசிப்பதையே நிறுத்தி விட்டாள்.
"பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து, படிக்க வைப்போம்!' என்று, மனதை தேற்றி வாழப் பழகி விட்டாள்.
இன்று, ஏன் இந்த வேண்டாத எண்ணங்கள் எழுகின்றன என எண்ணியபடியே, கடிகாரத்தை பார்த்தவள் திடுக்கிட்டாள்.
மணி 7:30 தாண்டி விட்டது.
"நடைப்பயிற்சி சென்றவர், ஏன் இன்னும் திரும்பவில்லை?'
வாசல்பக்கம் வந்து பார்த்தாள்.
வணக்கம் தெரிவித்த காரோட்டியை விசாரித்தாள்...
""நீங்க அவர் கூடப் போகலியா?''
""இல்லேம்மா... இன்னிக்கு, "நான் தனியா போய்க்கிறேன்'னு சொல்லிட்டு போனார்மா... ஏனோ தெரியலே இன்னும் வீடு திரும்பலே.''
அலைபேசியை எடுத்து, அவரது எண்களை அழுத்தினாள். தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக செய்தி வரவே, குழப்பத்துடன் திரும்பினாள்.
சற்றுநேரத்தில், அவளது அலைபேசியில் அழைப்பு வர, அழுத்திக் கேட்டாள்.
மறுமுனையிலிருந்து வந்த அந்த செய்தி, அவளை நிலைகுலையச் செய்தது.
மயங்கி விழுந்து விடாமல் இருக்க, அருகில் இருந்த தூணைப் பற்றியபடி சரிந்து அமர்ந்தாள்.
"சந்தான கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு விட்டான். ஆற்றோர புதரில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த அவனது உடலை, போலீசார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்...' என்ற இந்த செய்தி தந்த அதிர்ச்சியை, அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவளது தாய், தந்தை, மாமனார், மாமியார் என பலரும் கூடி, அவளுக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கினர். ஆனாலும், முடியவில்லை.
"ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்?'
இந்த கேள்வி திரும்ப திரும்ப வந்து, அவள் மனதைக் குடையத் தொடங்கியது.
"என்னவெல்லாம் மனக்கோட்டை கட்டி இருந்தார்...
"மகனை இன்ஜினியராகவும், மகளை டாக்டராகவும் ஆக்கிப் பார்க்க ஆசைப்பட்டாரே!
"இதோ... கண்ணாடிப் பேழையில் ரோஜா மாலை கழுத்தை அலங்கரிக்க, சடலமாக காட்சி அளிக்கிறாரே...'
இரண்டு மாதங்களுக்கு பின் ஒருநாள்...
காவல் துறை உதவி ஆணையர் அகிலாவைத் தேடி வந்தார்.
""மேடம்... குற்றவாளியை பிடிச்சாச்சு. உங்க கணவரை கொலை செய்தது ஒரு பெண்.''
"என் கணவனை கொலை செய்தது ஒரு பெண்ணா...' நினைப்பதற்கே சங்கடமாக இருந்தது.
""குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்திருக்காள். லாக் அப்பில் வைச்சிருக்கோம் மேடம். அந்த பெண் கொடுத்த வாக்கு மூலம், எங்களுக்கே அதிர்ச்சியா இருக்கு. அதை, "சிடி'யிலே பதிவு செய்து வந்திருக்கேன். பார்க்கறீங்களா?''
அகிலா தலையசைக்க, அங்கிருந்த மற்றவர் களை அப்புறப் படுத்தி, தனிமையில் இருந்த அகிலாவிடம், "சிடி'யைக் போட்டுக் காட்டினார் உதவி ஆணையர்.
திரையில் தோன்றினாள் அந்த பெண்.
முழங்கால் மடித்து, முகம் கவிழ்ந்து அமர்ந்திருந்த அந்த பெண்ணுக்கு, முப்பது வயதுக்குள் தான் இருக்கும்.
போலீசாரின், "கவனிப்பால்' முழங்கைகளில் சில இடங்களிலும், கன்னங்களும், ஆங்காங்கே வீங்கிச் சிவந்திருக்க, பேசத் துவங்கினாள் அந்த பெண்...
"சந்தான கிருஷ்ணன், ரொம்ப மட்டமான ஆளு. அவனாலே நான் ரொம்பவே, பாதிக்கப்பட்டேன். என் புருஷன் ஆசை ஆசையாய், ஒரு வீடு கட்ட ஆரம்பிச்சார். அப்ப ஆரம்பிச்சது தான், சந்தான கிருஷ்ணனோட தொல்லை. இந்த வீட்டை, தனக்கு வித்துடுங்கன்னு அடி மாட்டு விலைக்கு கேட்டான். அதுக்கு என் புருஷன் சம்மதிக்கலை, உடனே எங்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிச்சுட்டான்.
"வாசல்லே செங்கல், சிமென்ட் இறக்கிறதிலே ஆரம்பிச்சு, கரன்ட் கனெக்ஷன், வாட்டர் கனெக்ஷன் வரைக்கும், அவன் தயவு இல்லாம எதுவும் நடக்காதுங்கிற நிலையை உருவாக்கிட்டான். கடைசியா, என் புருஷனே ஒருநாள் காணாமப் போயிட்டார். எங்கே போனார், என்ன ஆனார்ன்னு தெரியாம போலீசுக்குப் போனேன். அவங்க, சரியா பதில் சொல்லலே. "கண்டுபிடிக்கிறோம், கண்டுபிடிக்கிறோம்'ன்னு காலத்தை கடத்தினாங்க.
"சந்தான கிருஷ்ணன் தான் ஏதோ செய்து இருக்கணும்ன்னு நினைச்சு, அவனையே நேர்ல பார்த்து கேட்டேன். அவன் அலட்சியமா என்னை பார்த்து, "உன் புருஷனைக் கொலை செஞ்சு, அவன் உடலை ஆற்றிலே வீசி எறிஞ்சிட்டோம். இனிமே, நான் தான் உனக்குப் புருஷன்'ன்னு சிரிச்சுகிட்டே சொன்னான். அப்பவே நான் முடிவு செய்துட்டேன். இவன் இனிமே உயிரோடு இருந்தா, இந்த ஊருக்கு நல்லது இல்லேன்னு! கொலை நடந்த அன்னிக்கு, நானே அவனுக்கு போன் செய்து, "உனக்கு மனைவியா இருக்க சம்மதம்'ன்னு சொல்லி, என் வீட்டுக்கு தனியா வரச் சொன்னேன். அவனும் வந்தான்.
"எனக்கு துணையா ரெண்டு ஆளுங்களை சேர்த்துக்கிட்டேன். கண்டம், துண்டமா அவனை வெட்டி ஆற்றோரம் ஒரு புதர்ல வீசிட்டோம். தெரு நாய் ஒன்று, அவன் உடலை கடிச்சுத் குதறினதை யாரோ பார்த்து, போலீசுக்கு தகவல் சொல்ல, போலீஸ் சீக்கிரத்திலேயே, அவன் உடலைக் கண்டு பிடிச்சுடுச்சு. மண்ணாசையும், பெண்ணாசையும், சந்தான கிருஷ்ணனின் உயிரைக் குடிச்சுடுச்சு. "கொலையும் செய்வாள் பத்தினி'ங்கிற பழமொழி, என் வரையில் உண்மையாயிடுச்சு. நான் செஞ்ச, இந்த கொலைக்காக வருத்தப்படலே, பெருமைப்படுறேன்...'
காட்சி நிறுத்தப்பட, அகிலா நிமிர்ந்தாள்.
சிறிதுநேரம் அவள் எதுவுமே பேசவில்லை.
பிரமிப்பு நீங்கிய பின், உதவி ஆணையரிடம் பேசினாள்...
""ஏ.சி., சார்... எனக்காக ஒரு உதவி செய்வீங்களா?''
""என்ன மேடம்?''
""என் கணவரை கொலை செய்ததா சொல்ற அந்த பெண்ணை, தயவு செய்து, எந்த கேசும் இல்லாம விட்டுடுங்க.''
திடுக்கிட்டவராக நிமிர்ந்தார் உதவி ஆணையர்.
""அது எப்படி மேடம் முடியும்?''
""நீங்க நினைச்சா முடியும் ஏ.சி., சார்... என் கணவர் ஏதோ அரசியல் காரணத்தினாலே கொலை செய்யப்பட்டதா இந்த ஊர் மக்கள் நம்பிக்கிட்டிருக்காங்க. இந்த பெண்ணோட வாக்குமூலம், வெளி உலகத்துக்கு தெரிஞ்சா, என் கணவருடைய உண்மை உருவம் வெளிப்பட்டு, மகா கேவலமாயிடும். நானும், என் பிள்ளைகளும் தலை நிமிர்ந்து இந்த ஊர்ல நடமாட முடியாது. என் பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக் குறியாயிடும். குற்றவாளி தண்டிக்கப்படணும்ங்கிறது தான் சட்டம். ஆனா, என் கணவரைப் போன்ற அயோக்கியர்கள் இந்த உலகத்திலே நடமாடவே கூடாது. இந்த பெண் செஞ்ச கொலை நியாயமானதுதான்னு என் மனசாட்சி சொல்லுது. ப்ளீஸ் சார்... அந்தப் பொண்ணை விட்டுடுங்க. "குற்றவாளி பிடிபடலே, தேடிக்கிட்டிருக்கோம்'ன்னு சொல்லிடுங்க.''
ஏதோ யோசனையுடன் எழுந்தார் உதவி ஆணையர்.
""மேடம்... ஸ்டேஷனுக்கு வந்து, நீங்க கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்குங்க... மற்றதை நான் பார்த்துக்கிறேன்.''
உதவி ஆணையர் வெளியேற, ஒரு முடிவுடன் எழுந்தாள் அகிலா.
இரு பிள்ளைகளையும் அணைத்தபடி வீட்டுக்குள் நுழைந்த அகிலாவை, வியப்புடன் பார்த்தார் சிவராமன்.
""அப்பா... நான் விடுதலை ஆயிட்டேன்; அந்த சொகுசு சாம்ராஜ்ய சிறையிலிருந்து நான் விடுதலை ஆயிட்டேன். அவருடைய எந்த சொத்தும் வேண்டாம்ன்னு பிள்ளைகளை மட்டும் அழைச்சிட்டு வந்துட்டேன். பாவப்பட்ட அவருடைய பணத்திலே, என் பிள்ளைகள் வளரக் கூடாது. நான் ஏதாவது ஒரு வேலைக்கு போய், என் பிள்ளைகளை படிக்க வைப்பேன். நான் முதல் மாதச் சம்பளம் வாங்குற வரைக்கும், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் தங்க இடம் கொடுத்து சாப்பாடு போடுவீங்களாப்பா?'' என்ற மகளை, கண்ணீர் மல்க, பெருமிதத்துடன் பார்த்தார் சிவராமன்.
""இனிமே, இதுதாம்மா உன்வீடு,'' எனச் சொல்லியபடி, பேரப்பிள்ளைகளை வாரி அணைத்தார் சிவராமன்.
***

ப. ஜெயலெட்சுமி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
11-பிப்-201302:05:19 IST Report Abuse
GOWSALYA மிக நல்ல கதை ...அகிலாவின் முடிவு வரவேற்க்கக் கூடியதே.
Rate this:
Share this comment
Cancel
Gobinathan Baladhandapani - Madurai,இந்தியா
10-பிப்-201318:03:42 IST Report Abuse
Gobinathan Baladhandapani தினமலர் கொஞ்சம் நல்ல கதைகளை தேர்வு செய்தால் நல்லா இருக்கும்... இது போன்ற மொக்க கதைகள் வெளி இட்டால் கதை படிக்கும் கொஞ்சம் நஞ்சம் வாசகர்களும் அடுத்த பக்கத்துக்கு ஓடி விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X