"தினத்தந்தி' நாளிதழ் நிறுவனர், ஆதித்தனாரிடம் பணியில் இருந்த போது, ஒரு முறை ஒரு மாநாட்டுக்கு, தேதி வாங்குவதற்காக, ஈ.வெ.ரா.,விடம் சென்று, அந்த குறிப்பிட்ட தேதியில், வேறு நிகழ்ச்சி இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்காகச் சென்றேன். ஆதித்தனார், ஒரு கடிதமும், இருநூறு ரூபாய் பணமும் கொடுத்து, "அந்த தேதியில் வருவதற்கு, ஈ.வெ.ரா., ஒப்புக் கொண்டால், இருநூறு ரூபாயை கொடுத்து, தேதியை நிச்சயம் செய்து கொண்டு வந்து விடுங்கள்...' என்று கூறியிருந்தார்.
அதன்படி, ஈ.வெ.ரா.,விடம் சென்று, நிகழ்ச்சியைக் கூறி, தேதி கேட்ட போது, "வேறு நிகழ்ச்சி இல்லை; வந்து விடுகிறேன்...' என்றார். நான் உடனே, இருநூறு ரூபாயை மெல்ல அவர் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அருகே, கீழே வைத்தேன். "ஐயா இதைக் கொடுக்கச் சொன்னார்...' என்றேன்.
"ஆதித்தனார் எப்போதும் இப்படித்தான். அவருகிட்ட பணம் வாங்கலாமா?' என்று சொல்லிக் கொண்டே, பணத்தை வாங்கிச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். ஈ.வெ.ரா., உட்கார்ந்த இடத்துக்கு எதிரே, ஒரு பெரிய டைரி இருந்தது. அந்த தேதியில் நிகழ்ச்சி என்று அவர் குறித்து கொள்ளவில்லை.
ஆனால், சட்டையின் உட்பையில் கையைவிட்டு, ஒரு சிறிய பாக்கெட் டைரியை எடுத்து, அதில் குறித்துக் கொண்டார்.
"ஐயா... கீழே ஒரு பெரிய டைரி இருக்கிறதே... அதில் குறிக்கவில்லையே...' என்றேன்.
ஈ.வெ.ரா., சொன்னார்: இது பெரிய டைரி... எல்லாரும் பார்க்கிற மாதிரி கீழே இருக்கும். பலபேர் வந்து, "எங்க ஊருக்கு வரணும்'ன்னு உயிரை வாங்குவாங்க. லேசிலே போக மாட்டாங்க; அவன் கண்ணுக்கு எதிரே இந்த பெரிய டைரியிலே குறிப்பு எழுதுவேன். புறப்பட்ருவான். பணம் யார் கொடுக்கிறார்களோ அவங்களுக்குத்தான் தேதி. அந்த நிகழ்ச்சிக்கு வர்றதுதான் உறுதி. அப்படி பணம் கொடுத்தா எழுதறதுக்குத்தான் இந்த சின்ன டைரி. இதுலே எழுதினாத்தான் வர்றது உறுதி. சட்டைப் பையிலே பத்திரமாக இருக்கும், என்றார் ஈ.வெ.ரா., என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
— ஆர்.சீனிவாச மூர்த்தி எழுதிய, "நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சிகள்' நூலிலிருந்து...
ஒரு ராணுவ வீரருக்குத் தேவையான சீருடை, படுக்கை மற்றும் போர்க்கால உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படும். இப்படி வழங்கப்படும் ஒவ்வொரு உடை மற்றும் உபகரணங்களுக்கு ஏற்ப, அதற்கு ஆயுட்காலம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அந்த காலம் முடிந்த பின், அதற்கு மாற்றாக புதிய உடைகள் வழங்கப்படும்.
நம் ஊர்களில் உள்ளவர்கள், விடுமுறையில் வரும் ராணுவ வீரர்களிடம் முக்கியமாக கேட்கும் இரண்டு பொருட்கள் எதுவென்றால், மிலிட்டரி, "ரம்' மற்றும் குளிர்காலத்தில் போர்த்திக் கொள்ள உதவும் கம்பளிப் போர்வை! ஒரு ராணுவ வீரன் விடுமுறையில் வரும் போது, மிலிட்டரி, "ரம்' வேண்டுமானால் கொடுக்க முடியுமே தவிர, கம்பளிப் போர்வை, கொசு வலை மற்றும் இதர கம்பளி ஆடைளை, யாருக்கும் தருவது இயலாத காரியம். ஒரு வீரரின் தேவைக்கு மட்டும்தான், அவருக்கு கொடுக்கப்படும். தவிர, ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் கொண்டு வந்து கொடுக்க வாய்ப்பில்லை. இதையும் மீறி, நச்சரிப்பு தாங்காமல், யாராவது தானம் செய்கின்றனர் என்றால், அது, அந்த வீரர் வெளிக் கடையில் விலைக்கு வாங்கி வந்து தருவது தான்.
***
நடுத்தெரு நாராயணன்