நினைவஞ்சலி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2013
00:00

ஒரு நவம்பர் மாத விடியலில், தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி, ஒரு பிரபல நாளிதழை எடுத்து, மேலெழுந்த வாரியாய், பக்கம் பக்கமாய் பார்த்துக் கொண்டிருந்த பழனித்துரை, அந்த நாளிதழின் எட்டாவது பக்கத்தில், அரைப்பக்க அளவிலான ஒரு நினைவஞ்சலியில், தன் மகன் சண்முகத்தின் முகம் கண்டதுமே, சட்டென்று அதிர்ந்து போனார்.
ஆச்சரியத்தில் அகன்ற விழிகளோடு, அந்த நினைவஞ்சலியின் கவிதை வரிகளை அவர் வாசித்தபோது, அவர் கண்கள் கண்ணீர் ஊற்றாயின. "தணிகைச் செல்வன் பி.ஈ., தாமரைச்செல்வி எம்.சி.ஏ.,' என, பேரன், பேத்திகளின் கல்வித் தகுதிகளை கண்டதுமே, அவருக்குள் ஒரு பெருமிதப் பேரலை.
கடந்த பதினாறு ஆண்டுகளில், தன் தந்தை வழிச் சொந்தங்களின் ஆதரவே இல்லாமல், தானாய் தவழ்ந்து எழுந்து, தடுமாறி நின்று நிமிர்ந்து, தந்தைக்கு ஒரு பிரபல நாளிதழில் நினைவஞ்சலி வெளியிடும் அளவிற்கு, உயர்ந்து விட்ட பேரன், பேத்தி, மருமகளை, தள்ளி நின்றாவது பார்த்து மகிழ வேண்டும் என்ற ஆசை, முதன் முதலாய் பழனித்துரையின் மனசுக்குள் அரும்பியது.
தளவாய்புரம் என்ற பேரூரில் தான், அவர் மகன் சண்முகத்தின் குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தது.
பழனித்துரையின் மூன்று மகன்களில், மூத்தவன் தான் சண்முகம். இருபது ஆண்டுகளுக்கு முன்பே, தன் சொத்தை, மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்ததில், சண்முகத்தின் பங்காக, மூன்று லட்சத்தை அவன் மனைவி சந்திராவிடமே, தந்து விட்டார் பழனித்துரை.
மூன்று லட்சம் பெற்றுக் கொண்ட பின், தன் கணவனையும், இரண்டு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு, தளவாய்புரம் போய் குடியேறிவிட்ட சந்திரா, கணவனிடம் ஒரு லட்சம் வரை, அவன் குடிப்பதற்கென்றே, அவனிடம் அடிபட்டு உதைபட்டு இழந்தது,
பழனித் துரைக்கு தெரியாத விஷயம்.
தினம் தினம் ஐநூறு, ஆயிரம், இரண்டாயிரம் என கேட்டு, சண்டை போட்டுப் போட்டு வாங்கினான்.
அந்த சண்டையும், வீட்டுச் சுவர்களுக்குள் நடைபெறாது. அவள் தலைமுடியைப் பிடித்து, தரதரவென தெருவிற்கே இழுத்துச் சென்று, ஊரே வேடிக்கை பார்க்க, அவளை அடித்து, உதைத்து, அவளோடு சேர்ந்து பிள்ளைகளையும் பந்தாடி, ஒரு ஆண்டிற்குள், ஒரு லட்சத்தை சந்திராவிடம் பறிமுதல் செய்து, மதுவிற்கு அர்ப்பணித்த சாதனையைச் செய்தான்.
தினம் தினம் அவன் குடித்த மதுபானம், அவன் உதட்டில் உறவாடி, அவ்வப்போது அவனுள்ளே பகை வைத்த போது, பயலுக்கு மருத்துவமனை படுக்கையும் அடிக்கடி தேவைப்பட்டது.
அப்படி தேவைப்படும் போதெல்லாம், மருத்துவமனையில் அவனை கொண்டு போய் சேர்த்து, அவனோடு சேர்ந்து, அவனுக்கு அங்கே காவல் கிடக்கவும் சலிக்கவில்லை சந்திரா.
குணமாகி வீடு திரும்பும் சண்முகம், அதன் பிறகாவது குடிக்காமல் இருந்தானா? இல்லை... ஏதாவது ஒரு வேலைக்குத்தான் போனானா? போவதே இல்லை.
போக வேண்டாம். வீட்டிலேயே கிடக்கட்டும். தனக்கொரு ஆண் துணையாய், தன் பிள்ளைகளுக்கு அப்பாவாய், வீட்டில் சும்மா இருந்தாலுமே போதும் என்ற ஆசையில், ஒரு நூறு தடவையாவது அவனை மருத்துவமனையில் சேர்த்து, அவனோடு இருந்து, அவன் ஆசைப்படி செலவழித்து, வீட்டிற்கு கூட்டி வந்தவள் தான் சந்திரா.
வீடு வந்ததுமே, பழைய குருடி கதவைத் திறடி என்ற கதை தான்.
மறுநாளே குடித்து விட்டு, தெருவில் கிடக்கும் அவனை, என்ன செய்து தான் திருத்துவது?
விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட்டு, ஒரு மிகப்பெரிய ஓட்டலில், பாத்திரம் தேய்த்துக் கழுவும் வேலையை வாங்கிக் கொண்டாள் சந்திரா.
பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு, அவள் ஓட்டலில் மட்டுமின்றி, பத்து - பனிரெண்டு பணக்காரர்கள் வீட்டிலும், வேலைக்காரியாய் கசங்கிவிட்டு, வீடு திரும்பும் நேரம், ஏறக்குறைய இருட்டத் துவங்கி விடும்.
ரோட்டில் கிடக்கும் சண்முகத்தை, அவள் வீட்டிற்குக் கூட்டிச் செல்ல படும் பாடு, பெரும்பாடாய் இருக்கும். பிணம் போலக் கிடக்கும் அவனை, ஆட்டோவில் கொண்டு செல்லவும் வசதி இருக்காது.
அப்படியே அவன் கையை எடுத்து, தன் தோளில் போட்டு, தன் தோளில் அவனைச் சாய வைத்து, அவனது, 60 கிலோ எடையைத் தாங்கமாட்டாமல், அவள் நடந்து போகும் கொடுமையை, தினம் தினம் தெருக்களெல்லாம் பார்த்துத் தலையில் அடிக்கும்.
ஒரு வழியாய் வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்து விடுவாள் சந்திரா.
"இப்படி செய்தீங்கன்னா எப்படீங்கப்பா... ரெண்டு பிள்ளைகளும் படிக்க வேண்டாமா... நாளைக்கு உங்க தம்பிக பிள்ளைகள்ளாம் படிச்சு, நல்ல உத்யோகத்துல இருப்பாங்க... நம்ம பிள்ளைகள மட்டும், நாம கஷ்டப்பட விடலாமா?
"நீங்க வேலைக்கே போக வேண்டாம்ப்பா... குடியையும் கூட, உடனே நிறுத்த வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமா நிறுத்த முடியாதா... பிள்ளைகளுக்காகப்பா... தயவுசெஞ்சு நான் சொல்றதக் கேளுங்கப்பா...'
சண்முகத்தின் கால்களைக் கட்டிக் கொண்டு, சந்திரா பல ஆயிரம் தடவையாவதுஅழுது இருப்பாள்.
அவளை உதைத்துத் தள்ளி விட்டு, அவன் ஓயாமல் குடித்த குடி, அவனை ஒருவழியாய் ஓய வைத்தது.
பல வருடங்களாய் குடித்த சண்முகத்தை, பதிலுக்கு குடிக்கத் துவங்கியது மதுபானம். அவனது கல்லீரலில் வாய் வைத்த விபரீதம் டாக்டர்களுக்கு தெரிந்தது.
அவனை காப்பாற்ற, இரண்டு லட்சம் வரை செலவாகும் என டாக்டர்கள் தெரிவித்த போது, கண்கலங்கிய சந்திரா, இரண்டு பிள்ளைகளையும் மடியில் போட்டுக் கொண்டு, கணவரின் காலோரம் கிடந்து, அழுது அழுது ஒரு முடிவெடுக்கவே, ஆறேழு நாட்கள் ஆகி விட்டன.
விதிப்படி நடக்கட்டும்... வேறென்ன செய்ய முடியும்? இருக்கிற இரண்டு லட்சத்தையுமே செலவழித்து விட்டு, அவனை குடிகாரனாய் மட்டுமே மீட்டுவந்து, அவனை தெருவோரம் கிடக்கவிட்டு, பிள்ளைகளின் எதிர்காலத்தை திக்கற்ற காட்டில் விட, அவளுக்கு விருப்பமில்லை.
மனசைக் கல்லாக்கி, கண்களை குளமாக்கி, விதிப்படி நடக்கட்டும். தன்னிடம் அவ்வளவு வசதி இல்லை என்று, டாக்டர்களிடம் சொல்லியவள், இரண்டு லட்சத்தை மட்டுமே காப்பாற்றிக் கொண்டாள். சண்முகம் இறந்து போனான்.
அவன் இறந்த பின், அவன் தம்பிகள் வந்து, அவளை அடித்து உதைக்காத குறையாய்,
மருத்துவமனை வாசலில் ஆத்திரம் தீரப் பேசி விட்டுப்போன பிறகு, அவன் அப்பா பழனித்துரை, வாயைத் திறக்காத மவுனத்தினால் மட்டுமே, மருமகளை சபித்துவிட்டுப் போன பிறகு, சந்திராவின் நாட்கள் ஒவ்வொன்றும், ஒரு நிமிஷ நிம்மதி கூட இல்லாத நாட்களாய் தான் நிதம் நிதம் கழிந்தன. கணவனின் போட்டோவை பார்த்துப் பார்த்து கண்ணீர் விட்டாள்.
"சரி... சரி... விடு. எமன்கிட்ட இருந்து அவனை மீட்டுக் கொண்டாறதுக்கு, நீ சாவித்திரியும் இல்ல... உன் புருஷன் சத்தியவானும் இல்ல... குடிச்சுக் குடிச்சு அவனேதான அவனை அழிச்சுக்கிட்டான்... நீ என்ன செய்வ?
"மனசப்போட்டுக் குழப்பாம... இருக்கிற பணத்தை பேங்குல போட்டுட்டு, நீ மறுபடியும் ஒரு வேலை வெட்டியப் பாத்து, பிள்ளைகளை காப்பாத்து... விதவைன்னு மனு எழுதிப்போடு... அரசு சலுகை என்ன உண்டோ, அதவச்சு பிள்ளைகளை படிக்க வை. உன் புருஷன் வீட்டாளுங்க, வாரநேரம் வரட்டும். வருத்தப்படாத...' என்று, மிச்ச மீதி உறவுகள், அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, அதனதன் திசையைப் பார்த்துச் சென்றன.
காலம் மட்டும் கைகளைக் கட்டிக் கொண்டு, சந்திரா வீட்டு வாசலில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கவா செய்யும்?
அதுவும் மாதங்களாய், வருடங்களாய், மளமளவென்று உருண்டு புரண்டு ஓடிவிட்டது.
சண்முகம் இறந்த பின், பதினாறு வருடங்கள், பூவையும், பொட்டையும், வளையல் களையும் தான் சந்திரா மறந்தாளே தவிர, சண்முகத்தை மறக்கவில்லை.
அவனை பற்றி உயர்ந்த மதிப்பீடையே, தன் பிள்ளைகள் மனசில் விதைத்து வளர்த்து, அவர்கள் தங்கள் அப்பாவை தெய்வமாய் வழிபட்டு வரும் அளவிற்கு கொண்டு வந்தாள்.
பதினாறாவது ஆண்டு நினைவஞ்சலி, சண்முகத்தின் தந்தை பழனித்துரையின் கண்களுக்குத் தென்பட்டு, அவர் விழிகளை நனைய வைத்தது.
தன் இளைய மகன்கள் இருவரிடமும், ஓடிப்போய் அந்த நினைவஞ்சலியைக் காட்டினார் பழனித்துரை.
இறுகிக் கிடந்த அவர்கள் இருவரின் முகங்களிலும், அதைக் கண்டு எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
"புருஷன் உசிரு பெருசில்ல... இரண்டு லட்சம் தான் பெருசுன்னு, அன்னைக்கு உங்க மகனை சாகவிட்ட குடும்பம்தான் அது. மறந்து போச்சா உங்களுக்கு?
"அந்த இரண்டு லட்சம், இன்னைக்கு இருபது லட்சமாயிருக்கும் போது, ஒரு மூவாயிரம் ரூபா விளம்பரத்துல என்ன ஆயிரப் போகுது?
"இதெல்லாம் ஒரு நாடகம்... புருஷன் மேல பாசம் உள்ளவ மாதிரி ஜனங்க கிட்ட காட்டற பந்தா பாசாங்கு... இதையே கொண்டு போயி, அவ முகரையில வீசி எறிஞ்சு, அவ நாக்கப் பிடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்டு வந்தா, வீட்டுக்குள்ள வாங்க... இல்லேன்னா, அந்த மோசக்கார மருமக கூடவே நீங்களும் போய் இருங்க... போங்க...' என்று, இளைய மகன்கள் இருவருமே, விரட்டியடித்த பின், அந்த கோபம் குறையாமல், தளவாய்புரம் போய்ச் சேர்ந்தார் பழனித்துரை.
அந்த ஊர் பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே, நாலா திசைச் சுவர்களிலும், தன் மகன் சண்முகத்தின் முகம் காட்டும், நினைவஞ்சலி போஸ்டர்களை கண்டார்.
பேருந்து நிலையத்தில் இருந்து, அந்த பேரூருக்குள் அவர் நடந்து சென்றபோது, "தெய்வத்திரு சண்முகம் கல்வி அறக்கட்டளை, சண்முகம் சுயதொழில் உதவிமையம், சண்முகம் முதியோர் இல்லம், சண்முகம் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், சண்முகம் படிப்பகம், சண்முகம் பூங்கா...' அந்த பேரூர் எங்கிலுமே, சண்முகத்தின் பெயரால் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள்!
சண்முகம்... சண்முகம்... சண்முகம்... அவ்வளவு புகழுக்குரியவனா தன் பிள்ளை? அவன் அப்படியா வாழ்ந்திருக்கிறான் இந்த ஊரில்? இறந்து போன அவனை, இன்னமும் ஏன் இப்படி தலையில் வைத்து ஆடுகிறாள்? ஏதோ ஒரு நாடகம் ஆடுகிறாள். இவளை பற்றி, தன் இளைய மகன்கள் இருவரும் சொன்னதும் சரிதான்.
ஊரை ஏமாற்றத்தான் இப்படி எல்லாம் செய்கிறாள்... பணத்திற்காக, புருஷனை சாகவிட்ட இவள், பணத்தாசையை, இந்த தளவாய்புரமே அறியும்படி அம்பலப்படுத்த வேண்டும் என்ற ஆத்திரத்தை, குறைய விடாத பழனித்துரை, ஒரு மிகப்பெரிய உணவகத்தின் நுழைவு வாயிலில் போடப்பட்டிருந்த ஒரு நீளமான பெஞ்சில் களைப்போடு அமர்ந்து, சுடச்சுட தேநீர் வாங்கி அருந்தினார்.
அதன் பின், தேநீருக்கு காசு தந்து, ஓட்டல் முதலாளியிடம் தன் மருமகளின் வீட்டு முகவரியை விசாரித்தார்.
கஷ்டப்பட்ட காலங்களில், அதே ஓட்டலில் தான் வேலை பார்த்திருக்கிறாள் சந்திரா.
அதனால், அந்த ஓட்டல் முதலாளி, சந்திராவின் வீட்டு முகவரியை மட்டும் கூறாமல், அவள் தன் கணவன் இறந்த பிறகும், அவன் பெயரில் எல்லாமே செய்து, அவனைக் கவுரவித்து வருவதையும், பழனித்துரையிடம் பாராட்டவும் செய்தார். அவ்வளவுதான். பழனித்துரையின் நெஞ்சில் ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த கோப நெருப்பில், அந்த பாராட்டு, கொட்டிய எண்ணெயாய் இருந்தது.
பணத்தையே இன்னைக்கு கட்டி அழ வேண்டியது தான? என்னவோ, புருஷனுக்காகவே வாழ்ந்தவ மாதிரி, ஏன் எதுக்கு இந்த நாடகம்? ""சண்முகத்தோட தம்பிக ரெண்டு பேருமே, ஊர்ல இவளை காறித் துப்புறாங்க... நேர்ல போய் அவளை செருப்பால அடிச்ச மாதிரி நாலு வார்த்தை கேட்டு வாங்கப்பான்னு என்னை அனுப்பி வச்சிருக்காங்க,'' என்று, உணர்ச்சிவசப்பட்டு, மனசில் கிடந்ததை எல்லாம், கொட்டித் தீர்த்துவிட்ட பழனித் துரையை, வியப்பும், வேதனையுமாய் பார்த்த ஓட்டல் முதலாளி, அவரை அருகில் அமர வைத்தார்.
அன்பாய், ஆதரவாய் முதலில் பேசி, அதன் பின், அவரது கலங்கிய மனதைத் தெளிய வைப்பதற்கு, வெறும் பத்தே நிமிடங்கள் தான் எடுத்துக் கொண்டார்.
""உங்க மகன் இறந்து, பதினாறு வருஷங்களுக்குப் பின் வந்தாலுமே, சண்டை போடத்தான் வந்திருக்கீங்களா... பேரன், பேத்திகளை பாக்கணும்ன்னு வரலியா?''
ஓட்டல் முதலாளி ஆதங்கமாய் கேட்டபோது, ""எப்படிங்கய்யா வர முடியும்... எங்க பணத்தை மட்டுமே காப்பாத்திக்கிட்டு, எங்க பிள்ளையைப் பலிகொடுத்த வளையும், அவ பெத்த பிள்ளைகளையும் பார்க்க, எப்படிய்யா மனசு வரும்?'' கோபமாய் குமுறினார் பழனித்துரை.
அவர் தோளைத் தட்டிக்கொடுத்து, சமாதானப்படுத்தினார் முதலாளி.
""சண்முகத்தைக் காப்பாத்தீருக்கணும். அது தானே உங்க கோபம்?''
""ஆமாம்...'' என்று தலையாட்டினார் பழனித்துரை.
""உங்க மருமக, ரெண்டு லட்சத்தையும் செலவழிச்சு காப்பாத்தீருக்கணும்... காப்பாத்திருந்தா, அதோ... அந்த சாக்கடையோரமா, உணர்வே இல்லாம பிணம்போல கிடக்கிற உங்க பிள்ளைய பாத்து ரசிச்சுக்கிட்டே, இப்ப இங்க, என்னோட சந்தோஷமா பேசுவீக இல்லையா?
""உங்க மருமகதான் பாவம், இதே ஓட்டலுக்குள்ள, இப்பவும் பாத்திரம் தேச்சுக் கழுவிக்கிட்டிருப்பாங்க... உங்க பேரன் பி.ஈ., முடிச்ச இன்ஜினியரா ஆயிருக்க மாட்டான்... இந்த ஓட்டல்லதான் டேபிள் துடச்சுக்கிட்டிருப்பான். அந்த பேரனையும், சந்தோஷமாய் பாத்துட்டுப் போவீக...
""உங்க பேத்தி, எம்.சி.ஏ., முடிச்சு, கம்ப்யூட்டர் முன்னால உக்கார மாட்டா... சாப்பிட்டவங்க இலைய எடுத்துக்கிட்டிருப்பா... அந்த பேத்தியையும் சந்தோஷமாய் பாத்துட்டுப் போவீக...
""இன்னிக்கு அந்த வாழ்க்கையை, உங்க மகன் சண்முகத்துக்கு தந்தது, சந்திரா செஞ்ச தவறுதான். ரெண்டு லட்சத்துல வேறொரு கணவன், வேறொரு வாழ்க்கைன்னு போகாம, சண்முகத்தோட ஆத்மா சாந்தியடையுற அளவுக்கு, அவர் பிள்ளைகள உயர்த்தி, அவர் பெருமையை உயர்த்தி, அவர் பெயர் துலங்குற அளவுக்கு அவர் தலைமுறைய உயர்த்தி வச்சு...
""அதுவும் காணாதுன்னு, அந்த மனுஷனுக்கு கோவில் கட்டாத குறையா, இன்னமும் வழிபாடு நடத்துறாங்களே... அது உங்க மருமக செஞ்ச தவறுதான்,'' என்றார்.
ஓட்டல் முதலாளியின் கையைப் பிடித்த படி, குலுங்கிக் குலுங்கி அழுதார் பழனித்துரை.
""படிப்பறிவில்லாத என் பயக பேச்சைக்கேட்டு அறிவில்லாம பேசிட்டேன்... எனக்கு எழுபது வயசாகியும், உங்களைப் போல இப்படி சிந்திக்கத் தோணலியே... என் மருமகள என்னென்னமோ பேசிட்டேன்.
""குடிச்சுட்டு மிருகமா கிடந்த என் மகனையும், இன்னைக்கு தெய்வமாக்கி, ஊரே வழிபடுற அளவுக்கு, அவன் புகழ் உடம்ப வாழ வச்ச புண்ணியவதி... அவகிட்ட மன்னிப்பு கேட்டு, அவளையும், அவ பிள்ளைகளையும் மனசார ஆசிர்வதிக்கணும். என்னை கூட்டிட்டுப் போவீங்களா?'' என்று, கெஞ்சலாய் கேட்டுக் கொண்ட பழனித்துரையை, முதலில் வயிறார சாப்பிட வைத்து, அதன் பின், ஒரு டாக்சியை வரவழைத்து, டிரைவரிடம் சந்திரா வீட்டு முகவரி சொல்லி, பழனித்துரையை டாக்சியில் ஏற்றி விட்டார் முதலாளி.
***

வே.குருநாதன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
11-பிப்-201302:41:39 IST Report Abuse
Skv இது தானே அரசாங்கமே விரும்புது, கசானா ரொம்பணும் மக்கள் எக்கேடும் கேட்டால் என்ன ? ஒரு விதவை எப்பாடும் பட்டு மக்களை காப்பாத்திடுவா. ஆனால் விடோயர் உடனே மறுதாரம் கட்டி குடிச்சு அவளையும் அடிச்சு நொறுக்குவான் பிள்ளைகளையும் படிக்க வுடாம படுத்துவான்
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
11-பிப்-201301:54:10 IST Report Abuse
GOWSALYA உண்மைதான்......சண்முகம் மாதிரியாக எத்தனை மனிதர்களை "'சொல்வதெல்லாம் உண்மை""நிகழ்ச்சியில் காண்கிறோம்.எப்போ இந்தக் குடிமயக்கம் நம்மக்களிடம் இருந்து மாறும்?.....மாற அரசாங்கம் உதவுமா?
Rate this:
Share this comment
Cancel
oviya.vijay - Madurai  ( Posted via: Dinamalar Android App )
10-பிப்-201312:52:00 IST Report Abuse
oviya.vijay அருமையான கதை... ஆனால் சண்முகம் மாதி்ரி கேரக்டர்கள் எப்போது தான் தி்ருந்துவார்களோ இந்த நிச உலகில்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X