தணியவில்லை சுதந்திர தாகம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2013
00:00

அந்த வீடு, குட்டி பங்களா போல் பிரம்மாண்டமாக காட்சியளித்தது. இன்னும் கட்டட வேலை முடியவில்லை. வெளியே சுவருக்கு பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது. கான்ட்ராக்டர் பாலு, அங்கிருப்பவர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.
""பரணி சார், தையிலே கிரகப்பிரவேசம் வைக்க நாள் பார்த்திருக்கிறதாகச் சொன்னாரு. அதற்குள் எல்லா வேலையும் முடிச்சாகணும். பெரிய பெரிய அதிகாரிங்க, அரசியல்வாதிங்க கிரகப்பிரவேசத்திற்கு வருவாங்க. சுறுசுறுப்பாக வேலை பாருங்க. மேஸ்திரி... நீங்க இன்னும் நாலு ஆட்களை வேணும்ன்னா கூட வேலைக்கு சேர்த்துக்குங்க. டயத்துக்கு வேலை முடியணும். அப்புறம் பரணி சார் கோபப்படுவாரு.''
இன்டீரியர் டெக்ரேட்டர், காரில் வந்திறங்க...
""சார் வாங்க...''
""பரணி சார், மாஸ்டர் பெட்ரூமில், பால்ஸ் சீலிங் போடணும்ன்னு சொன்னாரு, பார்க்கலாமா?''
""ஆமாம், என்கிட்டேயும் நீங்க வருவீங்கன்னு சொல்லியிருக்காரு; வாங்க காட்டறேன்.''
அந்த அறை, பெரிய ஹால் அளவிற்கு விஸ்தாரமாக இருந்தது.
""அறை நல்லா காற்றோட்டமாக இருக்கு.''
""சார், உங்க வேலை முடிஞ்சதும், இந்த அறையில் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. சீக்கிரம் முடிச்சுக் கொடுங்க,'' என்று சொன்னான் பாலு.
""இதென்ன பெட்ரூமில், சின்னதாக ரெண்டு அறைகள் தடுத்திருக்காங்க?''
""அதுவா, அது சுவாமி அறை. அந்த பக்கம் புத்தக அறை, ரீடிங் ரூம். புத்தக அறையில் வாட் ரோப், டேபிள், லைட் பிக்ஸ் பண்ணனும். சுவாமியின் அறையில் மணிக்கதவு, சுவாமி படங்கள்ன்னு ஆர்டர் கொடுத்திருக்கோம். ஸ்பிளிட் "ஏசி', எல்.இ.டி, "டிவி', கட்டில், பீரோன்னு நிறைய வேலை இருக்கு சார்.''
""சார், பெட்ரூமை வித்தியாசமாக அரேன்ஜ் பண்றாரு.''
""இது அவரோட பெட்ரூம் கிடையாது. அவரோடது மாடியிலே இருக்கு. இது அவரோட அப்பா, அம்மாவுக்காக பிரத்தியேகமாக, பார்த்துப் பார்த்து செய்யறாரு.''
""அப்படியா?''
""ஆமாம்... வயசானவங்களுக்கு ஏத்த மாதிரி, சகல வசதிகளோடு கட்டுறாரு. அவங்கப்பா புத்தகப் பிரியர். அவருக்கு படிக்கும் அறை; அம்மா, சாமி பக்தி அதிகம் உள்ளவங்க, அவங்களுக்கு நினைச்சப்ப சாமி கும்பிட, தியானம் பண்ண சுவாமி அறை.''
""ரொம்ப நல்லாயிருக்கு. அவரை பெத்தவங்க உண்மையில் கொடுத்து வச்சவங்க.''
”வரில் மாட்டப்பட்டிருந்த அப்பாவின் படத்தை, மெய்மறந்து பார்த்துக் கொண்டு நின்றார் பரசுராம்.
""என்னங்க... மாமா படத்தை புதுசா பார்க்கிற மாதிரி அப்படி பார்க்கறீங்க?'' அங்கு வந்த விசாலம் கேட்டாள்.
""விசாலம், எங்கப்பாவை நினைக்கும் போது, எவ்வளவு பெருமிதமாக இருக்கு தெரியுமா... தனக்காக வாழாமல், மத்தவங்களுக்காக வாழ்ந்த மனுஷர். நம் நாட்டு சுதந்திரத்திற்காக போராடி, வெள்ளைக்காரன் கையால், குண்டடிப்பட்டு செத்துப் போனாரு. எனக்கு அப்ப பத்து வயசு இருக்கும். அந்த நாளின் நினைவு இன்னும் பசுமையா இருக்கு.
""அன்னைக்கு வெள்ளையனே வெளியேறுன்னு, தேசியக் கொடியோடு, அப்பா தலைமையில், கிராமத்து ஜனங்க, கோட்டையை நோக்கி ஊர்வலம் போறதாக ஏற்பாடு. போவதற்கு முன், கம்பீரமாக தூய வெள்ளை கதர் ஆடையோடு புறப்பட்ட அப்பாவை நோக்கிப் போனேன். என்னை அருகில் அழைத்து என்ன சொன்னார் தெரியுமா? "பரசுராம், அப்பா உனக்காக எதையும் சேர்த்து வைக்கலைப்பா. மனசு நிறைய அன்பையும், பாசத்தையும் தான் சேமித்து வச்சிருக்கேன். நான், இந்த தேசத்து மக்கள், அடிமைத் தளையிலிருந்து விடுபடணும்ன்னு, போராட்டக்காரனாக மாறி, இந்த தேசத்துக்காக என்னை அர்ப்பணிச் சுக்கிட்டேன். நமக்காக மட்டும் வாழறது வாழ்க்கை இல்லப்பா. இந்த தேசத்துக்காக வாழணும்ன்னு நான் முடிவு பண்ணிட்டேன். எனக்குப் பின், நீங்களெல்லாம், இந்த சுதந்திர பூமியில் சந்தோஷமாக வாழணும். ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி வாழற இந்த அடிமைத் தளையிலிருந்து நாம் வெளிவரணும். இந்த அப்பாவோட மனச புரிஞ்சுக்கிட்டு, நீ நல்லா படிச்சு, உனக்கான வாழ்க்கையை நிர்ணயிக்கணும் செய்வியாப்பா...'
""அதுதான் அப்பாவோடு கடைசியாக நான் பேசியது. அன்னைக்கு நடந்த போராட்டத்தில், ஊர்வலத்தை கலைக்க, வெள்ளைக்காரன் சுட்டதில், துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி, அந்த இடத்திலேயே உயிர் போயிடுச்சி. இன்னைக்கு அரசாங்கம், அந்த இடத்தில், தியாகி சேதுராம் பூங்கான்னு அவர் நினைவாகக் கட்டியிருக்கு. அந்த பூங்காவில் காலடி எடுத்து வைக்கும் போது, ஒரு கோவில் கர்ப்பக்கிரகத்தில் நுழையற உணர்வுதான் இன்னைக்கும் எனக்கு ஏற்படுது விசாலம்.''
""உங்களோட நல்ல மனசுக்கு ஏத்தாற்போல, உங்க பிள்ளை பரணி, இன்னைக்கு நல்ல நிலையில் குடும்பத்தோடு, சென்னையில் பெரிய ஆபீசராக வாழ்ந்துட்டு இருக்கான்.''
""ஆமாம் விசாலம்... இப்படியொரு பிள்ளை நமக்குக் கிடைச்சது பெரிய கொடுப்பினை தான்.''
""அப்பா வாழ்ந்த கிராமம், அப்பாவின் நினைவுப் பூங்கா, இதை விட்டு வரமாட்டேன்னு இவ்வளவு நாள் பிடிவாதமாக இருந்த நீங்க, இப்ப மகன் புதுவீடு கட்டி, உங்களைக் கூப்பிட்டதும், போறதுக்கு சம்மதிச்சுட்டீங்களே... எப்படிங்க?''
""இவ்வளவு நாள், எனக்கு உடம்பிலே தெம்பிருந்தது. இரண்டு பேரும் தனியா வாழ்க்கை நடத்தினோம். இனி வரும் காலங்களை அப்படியே கழிக்க முடியாது. உனக்கும் வயசாயிடுச்சு. அதுவுமில்லாமல், பேரன், பேத்தி, மகன், மருமகள்ன்னு சேர்ந்து வாழணும்ன்னு, உன் மனசிலும் நிறைய ஆசை இருக்கும். அது எனக்கு புரியுது. அதான் போகலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.''
""நம்ப கமலா நாத்தனார், சென்னைக்கு போயிருந்தாளாம். பரணி, தான் கட்டிட்டு இருக்கிற புது வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் அவளுக்குக் காண்பிச்சானாம். நமக்காக, இந்த வீடு அளவுக்கு, ஒரு அறை கட்டியிருக்கானாம். அதிலே சின்னதா சுவாமி அறை, புத்தக அறை, அதுவுமில்லாமல், "ஏசி', "டிவி'ன்னு, சகல வசதிகளோடு இருக்காம். சொல்லி ஆச்சரியப்பட்டுப் போனா. நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்கன்னும் சொன்னா.''
கண்கள் அகல புன்னகையோடு சொல்லும் மனைவியை பார்த்தபடி இருந்தார், பரசுராம்.
போனில் அப்பாவை தொடர்பு கொண்ட பரணி, ""அப்பா, கான்ட்ராக்டர் பாலுவை அனுப்பறேன். உங்களுக்குத் தேவையான புத்தகங்கள், துணிமணிகள் மட்டும் எடுத்துக்கிட்டு, வீட்டிலே இருக்கிற மத்த சாமான்களை எல்லாம், அங்கேயே விலைக்குக் கொடுத்துட்டு வரச் சொல்லியிருக்கேன். ஒரு வாரம் டயம் எடுத்துக்கிட்டு, எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு கிளம்பி வாங்கப்பா. அடுத்த மாதம், 10ம் தேதி கிரகப் பிரவேசத்துக்கு நாள் குறிச்சாச்சு.''
""சந்தோஷம் பரணி. நீ அங்கிருக்கிற வேலைகளை கவனி. ஆள் அனுப்பி வை. நான் இங்கே எல்லாத்தையும் சரி பண்ணிட்டு கிளம்பி வர்றேன்.''
""ஐயா, என்னென்ன சாமான்கள், "பேக்' செய்யணும்ன்னு சொல்லுங்க. பரணி சார், முக்கியமான சாமான்களை மட்டும் எடுத்துட்டு வரச் சொன்னாரு,'' பாலு சொல்ல...
""ஆமாம்பா. பரணி போனில் சொன்னான். எங்க துணிமணிகள், சுவாமி படங்கள், புத்தகங்கள் எடுத்துக்கணும். அப்புறம், என் அப்பாவோட படம், அதோ சுவற்றில் மாட்டியிருக்கிறதே... பெரிய போட்டோ, அதை முதலில் பத்திரமாக, "பேக்' செய்துடு. உடைஞ்சுடக் கூடாது.''
""சரிங்க... அப்புறம் இந்த கட்டில், பீரோ எல்லாம், பழைய மரக்கடைக்காரங்களை டவுனிலிருந்து வரச் சொல்லியிருக்கேன். விலைபேசி கொடுத்திடலாம்.''
அங்கிருந்த கட்டில், மர பீரோவைப் பார்த்தார் பரசுராம். ""இதெல்லாம் தேக்கில் அந்த காலத்தில், வீட்டில் ஆசாரி வச்சு செஞ்சது. இத்தனை வருஷத்துக்கும் எத்தனை உறுதியா இருக்கு பார்த்தியா. இதையெல்லாம் பாதி விலைக்கு விற்க வேண்டியிருக்கு. பரவாயில்லை, ஏதும் தொகை வந்தா பரணிக்கிட்டே கொடுக்கலாம். அவனுக்கு எதாவது ஒரு செலவுக்கு ஆகும்.''
வாய்விட்டு சிரித்தான் பாலு.
""எதுக்குப்பா சிரிக்கிற?''
""ஐயா, இந்த சாமான்கள் விற்ற பணம், சாருக்கு உதவியா இருக்குமா... என்ன சொல்றீங்க? இதெல்லாம் அவருக்கு தூசு மாதிரி. புது வீட்டில் உங்க அறையை வந்து பாருங்க. அப்படியே திகைச்சுப் போயிடுவீங்க. "ஏசி', "டிவி' வாட்ரோப், பால்ஸ் சீலிங்ன்னு அசத்தியிருக்காரு.''
""நிறைய காசு செலவழிச்சிருப்பான் போலிருக்கே!''
""அவர் எங்கே சார் செலவழிச்சாரு. பாக்டரி லைசென்ஸ் ஆபீசராக உங்க பிள்ளை இருக்காரு. அவனவன், நான், நீன்னு போட்டி போட்டுக்கிட்டு எல்லா வேலையையும் செய்துக் கொடுத்திட்டாங்க. தேக்கு கட்டில், மலேசியன் வாட்ரோப், பெல்ஜியம் கண்ணாடின்னு, எல்லாம் உசத்தியான பொருட்களாக வாங்கிப் போட்டிருக்காங்க. சாரோட தயவு அவங்களுக்கு வேணும் இல்லையா,'' என்று சொன்னவன்...
""முதலில் பெரிய ஐயாவோட படத்தை கழட்டி, "பேக்' செய்றேன்,'' என்றவாறு வேலைகளை ஆரம்பித்தான் பாலு.
பெரிய மனிதர்கள், முக்கிய பிரமுகர்கள், கலந்து கொள்ள, கிரகப்பிரவேசம் நல்ல விதமாக நடந்தது. வந்தவர்கள் அனைவருமே, வீட்டின் அமைப்பைப் பாராட்டி புகழ்ந்தனர். முக்கியமாக எல்லாருமே, பரணியின் பெற்றோருக்காக தயார் செய்த அறையைப் பார்த்து வியந்தனர். விருந்து உபசாரம் முடிந்து, வந்த நண்பர்களும், உறவினர்களும் விடைபெற்றனர்.
அப்பாவின் அருகில் வந்தான் பரணி... ""அப்பா, வந்தவங்க எல்லாரும் உங்க அறையைப் பார்த்து புகழ்ந்தாங்க. நீங்க, உங்க வாயாலே எதுவுமே சொல்லலையேப்பா. உங்களுக்கு அறை பிடிச்சிருக்காப்பா?''
""சகல வசதிகளோடு அறை நல்லாதான் இருக்குப்பா. ஆனா, எனக்குதான் இங்கு தங்க மனசு ஒப்பலை. நான் கிளம்பறேன்.''
""அப்பா... என்ன சொல்றீங்க?'' திடுக்கிடலுடன் அவரைப் பார்த்தான்.
""இந்த நாட்டுக்கு சுதந்தரம் கிடைக் கணும்ன்னு, நம்மை அடிமைப் படுத்தி, நம்ம பணத்தையும், வளத்தையும் சூறையாடின வெள்ளைக் காரங்களை எதிர்த்துப் போராடி, தன் உயிரை விட்டவர் என் அப்பா, உன் தாத்தா.
""அவர் பேரனான நீ, அடுத்தவங்க பொருளை, அடுத்தவங்க பணத்தை, எந்த சங்கோஜமும் இல்லாமல், உனக்கு பயன்படுத்திக்கிறே. உன் உழைப்பில், உன் சம்பாத்தியத் தில், நீ எனக்காக இவ்வளவு வசதிகளைச் செய்திருந்தால், உண்மையில் என் மகனை நினைச்சு பூரிச்சுப் போயிருப்பேன். இந்த இடத்தில் வசிக்கிறதுக்கு, நான் புண்ணியம் பண்ணியதாக நினைச்சு இறுமாந்திருப்பேன்.
""உன்னோட இந்த செயலுக்கும், நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட, அந்த வெள்ளைக்காரனுக்கும், என்னப்பா வித்தியாசம். உன் சொந்த மண்ணிலே, நீ அடுத்தவங்க பொருளை லஞ்சமா வாங்கித்தானே வாழறே.
""நமக்கு இன்னும் உண்மையான சுதந்திரம் கிடைக்கலைப்பா. உன்னை மாதிரி ஆளுங்களுக்கு, இன்னும் கப்பம் கட்டிதானே ஜனங்க வாழ்ந்திட்டிருக்காங்க.
""எப்ப ஒரு தனி மனுஷன், அடுத்தவங்க பொருளை அபகரிக்காமல், உண்மையா உழைச்சு, தன் உழைப்பில் வாழுகிறானோ, அப்பதான் உண்மையான சுதந்திரம் கிடைச்சதா நினைக்கிறேன்.
""உன் தந்தையாக இந்த வீட்டில் தங்க எனக்கு உரிமை இருந்தாலும், ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் மகனாக இந்த வீட்டில் தங்க என் மனசு ஒப்பலை. எங்களை மாதிரி வயசானவங்களை ஆதரிக்க, எத்தனையோ முதியோர் இல்லங்கள் இருக்கு. நான் அங்கேயே தங்கி, என் மிச்ச நாட்களை திருப்தியா கழிச்சிடுவேன். கிளம்பறேன்பா.''
அங்கிருந்த வேலையாட்கள், இந்த காலத்தில் இப்படியொரு பைத்தியக்கார மனுஷனா என்று பார்த்துக் கொண்டிருக்க, தன் தந்தையின் படத்தை நெஞ்சார அணைத்து, மனைவி பின்தொடர, வெளியேறினார் பரசுராம்.
***

எஸ்.பிரவீணா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
11-பிப்-201301:42:31 IST Report Abuse
GOWSALYA பிரவீணா மிக அருமையான கதை....நம்ம நாட்டில் நடப்பதை அப்படியே சொல்லியிருக்கீக ...வாழ்த்துகள்.
Rate this:
Share this comment
Cancel
Balaji Rajagopalan - Tiruchirapalli (Trichy),இந்தியா
10-பிப்-201313:40:56 IST Report Abuse
Balaji Rajagopalan சமூகத்தில் உள்ளதை நெற்றி பொட்டில் அடித்தார் போல் உள்ள நிஜமான தகவலுக்கு தலை வணங்குகிறேன். பதிப்பாசிரியருக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள். ஒரு சிறிய வேண்டுகோள். இதுமாதிரி நல்ல பல விசயங்களை செய்திகளாய் பிரசுரித்தால் மிக நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X