எனக்கே எனக்காக! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
எனக்கே எனக்காக!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
00:00

மங்களத்திற்கு நிலை கொள்ளவில்லை. வாசலுக்கும், உள்ளுக்குமாக ஆயிரம் முறை நடந்து விட்டாள்.
""மங்களம் கொஞ்ச நேரம் அமைதியாயிறேன்... ஊரிலேருந்து வர வேண்டாமா?''
""ஆமா, உங்களை சொல்லணும்... இவ்வளவு தூரத்துல கொண்டு போய் என் பொண்ணை கொடுத்திட்டு, ஒரு ஆத்திர அவசரத்துக்கு அவதான் உடனே வர முடியுதா அல்லது நாமதான் போயி பார்க்க முடியுதா?''
""இதப்பார்டா... இருபது வருஷம் கழிச்சு பேசுற பேச்சப் பாத்தியா? "மதுரை மாசி வீதியில் வீடு அமையுறது, அத்தனை லேசுப்பட்ட காரியமா? கூடல் நகரம்... கள்ளழகர் ஆத்துல இறங்குவதை பார்க்கிறதுக்கே, நாம திரும்ப திரும்ப ஜென்மம் எடுக்கணும்... நம்ம பொண் ராதாவை மதுரையில கட்டிக் கொடுத்ததுனாலதானே, அத்தனை பாக்கியமும் நமக்கு கிடைச்சுது...'ன்னு, எத்தனை முறை சொல்லியிருப்ப... இப்ப என்னன்னா... இந்த அலட்டு அலட்டுற.''
""சும்மா இருங்க. நேரம் காலம் தெரியாம... எப்பப் பாரு என்னைய நக்கல் செய்யலன்னா, உங்களுக்கு தூக்கமே வராதே... இருபது வருசத்துக்கப்புறம், "அம்மா நான் மாசமா இருக்கேன்... தலை பிரசவத்துக்கு அங்கே தான் வரப் போகிறேன்...'ன்னு, மக ராதா போன் செஞ்சதிலேருந்து, கையும் ஓடல, காலும் ஓடல... ஒரு வழியா, அந்த மீனாட்சி கண்ணைத் திறந்துட்டா. காலையிலேயே கிளம்பறேன்னு சொன்னாளே... இன்னும் காணோமேன்னு, நான் அல்லாடிக்கிட்டு இருக்கேன்... உங்களுக்கு கிண்டலா இருக்கு.''
""அப்படி இல்லம்மா... காருலதான் வராங்க! கூடவே மாப்பிள்ளையும் வராரு... அப்புறம் எதுக்கு இப்படி கவலைப்படற? உனக்கு பி.பி., இருக்கு; அடிக்கடி மயக்கம் வருது; படபடப்புல உனக்கு எதுவும் ஆயிடக் கூடாதேன்னுதான் நான் அப்படி பேசினேன். மதுரையிலேர்ந்து புதுச்சேரி வர்றதுக்கு நேரமாகும். காலையில, 6:00 மணிக்குத் தான் கிளம்பியிருக்காங்க. சாப்டுட்டு, கொஞ்ச நேரம் அமைதியா படு. பொண்ணு வர்ற சந்தோஷத்துல, எனக்கும் கூட இன்னும் நீ சோறு போடல... எனக்கு பசிக்குது,'' என்றவரை, பதட்டத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்...
""ஐயோ... மறந்துட்டேங்க, வாங்க,'' என்று பரபரப்பாக, அவர் கையை ஆதரவாக பற்றி, சாப்பாட்டு மேஜைக்கு அழைத்துச் சென்று, சாப்பாடு பரிமாறினாள்.
""உம்பொண்ணு வர்றதுக்கு முன்னாடியே, இந்த லட்சணம்ன்னா, வந்துட்டா... என்னை சுத்தமா மறந்துடுவ போலிருக்கே... உட்காரு, நீயும் கொஞ்சம் சாப்பிடு,'' என்றவர், சாப்பிட்டு விட்டு, வாசலில் கிடக்கும் கயித்துக் கட்டிலில் படுத்து, அப்படியே தலை சாய்த்தார்.
""வாங்க மாப்பிள... வாம்மா ராதா, அப்படியே நில்லு, ஆரத்தி எடுத்துடறேன்...'' என்ற ஆரவாரமான குரலில் கண் விழித்தவரிடம் சென்ற ராதா, ""அப்பா எப்படி இருக்கீங்கப்பா? என்னைய ஆசீர்வாதம் செய்யுங்கப்பா,'' என்று காலில் விழுந்த மகளை, வாரி அணைத்துக் கொண்டார்.
கொஞ்சமா, நஞ்சமா? இருபது ஆண்டுகள்... எத்தனை கேலிப் பேச்சுகள்? எத்தனை கண்ணீர்? எதிர்பார்ப்பு, ஏமாற்றம், எல்லாவற்றிலிருந்தும் இன்று விடுதலை.
""ஆமா... இவ யாரும்மா, உன் கூடவே?''
""இவ என் வீட்டுல வேலை செய்யுற பொண்ணு. பேரு மாலதி. கூடமாட ஒத்தாசையா இருக்குமேன்னுட்டு அழைச்சிட்டு வந்தேன்,'' என்றாள் ராதா.
""சரி... உள்ளே கூட்டிட்டு போம்மா, காலா காலத்துல உனக்கு குழந்தை பொறந்திருந்தா... இவ வயசுல உனக்கு, ஒரு பொண்ணு இருந்திருப்பா... இவ்வளவு காலத்துக்குப் பின், இப்பத்தான் விடிவு காலம் பொறந்திருக்கு. என்ன செய்யறது? எதுக்கும் நேரமும், காலமும் கூடி வரணும்ல!''
விருந்து, கேலி, உற்சாகம் என, நாட்கள் உருண்டன. ""என்னடி இது? மசக்கை, வாந்தி, மயக்கம்ன்னு எதுவுமே உனக்கு இல்லையா?''
""ஐயோ அம்மா... கொஞ்சம் சும்மாயிருக்கியா...'' என்று, அம்மாவை அப்போது சமாதானம் செய்தாள் ராதா.
இரவு அனைவரும் உறங்கியபின், ""அம்மா தூங்கிட்டியா?''
""என்னடி... ஏதாவது வேணுமா, பசிக்குதா, குழந்தை அசையறது தெரியுதா? நீ கூட இப்படித்தான்... கொஞ்ச நேரம் கூட ”ம்மா இருக்க மாட்டே. உதைச்சே கொன்னுடுவ.''
""அம்மா, கொஞ்சம் எந்திரிச்சி கொல்லப்பக்கம் வர்றியா... உன்கிட்ட பேசணும்.''
""என்னடி... என்ன ஆச்சு?''
""ஒன்னுமில்லம்மா, நான் சொல்றதக் கேட்டு, நீ அதிர்ச்சி அடைஞ்சிடக் கூடாது. நா நிறைய யோசிச்சிட்டேன். என்னை திட்டாதே. எனக்கு வேற வழியே இல்ல. இதுக்கு மேல் என்னால் பொறுமையா இருக்க முடியல. நா செய்யறது தப்பா, சரியாங்கிற கவலை எனக்கு இல்ல. முடிவுதான் என் கண் முன்னாடி இருக்குது.''
""என்னம்மா... என்ன ஆச்சு உனக்கு? அர்த்த ராத்திரியில கூட்டிட்டு வந்து உக்கார வைச்சிட்டு, ஏதேதோ பேசறியே... எனக்கு ஒன்னுமே புரியல. புரியும்படியாச் சொல்லு. எனக்கு குழப்பமாவும் இருக்கு, எதுக்கு இத்தனை பீடிகைன்னு பயமாவும் இருக்கு.''
""அம்மா... குழந்தை இல்லாம, நான் பட்ட கஷ்டங்கள் உனக்கு கொஞ்சம்தான் தெரியும். ஆனா, நான் பட்ட அடிகள், அவமானங்கள், கொஞ்ச நஞ்சமில்லம்மா... பார்க்கிறவங்க எல்லாம், "எத்தனை குழந்தைங்க?'ன்னு கேக்கறதும், "ஒன்னுமே இல்லையா? டாக்டர்கிட்ட போனீங்களா? இந்த கோவிலுக்கு போங்க; இந்த பரிகாரம் செய்யுங்க; அமாவாசைக்கு விரதம் இருந்து ஆலமரத்தை, 108 தடவ சுத்தி வாங்க; வெறும் வயத்துல, மலை வேம்பை அரைச்சுக் குடிங்க; வாழப்பழத்துல பிள்ளைப்பூச்சியை வெச்சு முழுங்குங்க'ன்னு பாடா படுத்தினாங்க.
""என் மனசைப்பத்திக் கவலைப்படாம அவங்கவங்களுக்கு தெரிஞ்ச தெல்லாம் செஞ்சாங்க. அப்பெல்லாம் என் மனசு என்ன பாடுபடும் தெரியுமா? அப்படியே செத்துடலாமான்னு இருக்கும். ஆனா, அவரு, "சும்மா இரு... உனக்கு நானு; எனக்கு நீன்னு இருந்திடலாம். குழந்தை இல்லைன்னா என்ன?' அப்படின்னு சொல்வாரு. என் மாமியாரும், என்னைத் தங்கமா கவனிச்சிக்கிட்டதால நானும் பேசாம இருந்திட்டேன்.
""திடீர்ன்னு மாமியாருக்கு உடம்பு ரொம்ப சரியில்லாம போனதால, அவங்களை கவனிக்கிறதுக்கும், வீட்டு வேலை செய்யறதுக்கும், அவங்க சொந்தக்கார பொண்ணுன்னு இந்த மாலதியை அழைச்சுட்டு வந்து, வீட்டோட வச்சிக்கிட்டாங்க. அந்த பொண்ணுக்கு, ஏற்கனவே கல்யாணமாகி, ஒரே வருசத்துல புருஷன் விட்டுட்டு ஓடிட்டான். சரி... நமக்கும் ஒத்தாசையா, பேச்சுத் துணையா இருக்கட்டுமேன்னு வச்சதுதான் தப்பா போச்சு.''
""என்னடி, என்ன சொல்ல வர்ற? எனக்கு வயத்தை கலக்குதே...''
""நீ எத நினைச்சு கலங்குறியோ, அதேதான் நடந்திடுச்சு... என்ன நடந்துச்சு, எப்படி நடந்துச்சுன்னு புரியல, மூணு மாசத்துக்கப்புறம் இவ தலையைச் சுத்துதுன்னு மயங்கி விழுந்தப்பதான் விவரம் வெளியில தெரிஞ்சுது. வேற யாரோன்னு நினைச்சு, அவங்க வீட்டுக்கே அனுப்பிடலாம்ன்னு பாத்தா... என் புருஷன்தான்னு சொல்லி அழுவுறா.
""அவரோ, எதுவுமே சொல்லாம கண்ணுல தண்ணியாக் கொட்டுறாரு. விஷயம் தெரிஞ்சதும், நெஞ்ச புடிச்சிக்கிட்டு விழுந்தவங்கதான், எங்க மாமியார். ஆறுமாசம் படுக்கையிலேயே கிடந்து, போய் சேர்ந்துட்டாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலம்மா.''
""ஐயோ... ஐயோ... நல்லவருன்னு நினைச்சேனே, இப்படி அநியாயம் செஞ்சிருக்கானே... பாவி நல்லாயிருப்பானா?''
""அம்மா வேண்டாம்மா... சாபம் விடாதே. எங்கிட்டயும் தப்பு இருக்கு. குழந்தை பொறக்கல... உடம்பு சரியில்ல, மாமியார் இறந்துட்டாங்கன்னு அவரைக் கவனிக்காம இருந்துட்டேன். சரியான நேரம் பார்த்து அவ கவனிச்சிட்டா.''
""அதுக்காக தப்பு செஞ்சுடறதா? இதே தப்ப நீ செஞ்சிருந்தா, அவரு சும்மாயிருப்பாரா? இப்படி ஏமாந்து நிக்கிறியே... அது சரி, அப்பறம் நீ எப்படி அவளை உன் கூடவே கூட்டிக்கிட்டு...''
""இப்ப முழுகாம இருக்கிறது அவதான். இது ஊரு உலகத்துக்கு தெரிஞ்சதுன்னா, அவர் மானம் போயிடும். எல்லார் முன்னாடியும் தலை குனிஞ்சு நிக்கணும்.''
""நிக்கட்டுமே... அப்பதான் புத்திவரும். இந்த மாதிரி ஆம்பிளைங்களை நிக்க வச்சு, தொண்டைக்குழியிலே துப்பாக்கி வச்சு சுட்டுத் தள்ளணும்.''
""அம்மா கொஞ்சம் நிதானமா பேசறீயா? அவரு என் புருஷன்.''
""ஆமாடி... உன்னை பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியுது. கொழந்த குட்டி இல்லேன்னாலும், சந்தோஷமா இருக்காங்கன்னு நினைச்சுகிட்டு இருந்தேனே... இப்படி வந்து நிக்கிறியே... நீ தான் மாசமா இருக்கேன்னு நினைச்சு, பாத்து பாத்து பலகாரமெல்லாம் செஞ்சு வைச்சேன். அந்த நாயி புள்ள பெக்கப்போவதுன்னு சொல்லுறியே,'' என்று தலையிலடித்துக் கொண்டு அழுத தாயை, சமாதானப்படுத்த முடியாமல், அப்படியே அமர்ந்திருந்தாள்.
""ஐயோ. நெஞ்சு வலிக்குதே,'' என திடீரென சரிந்தவளை, பதறிப் போய் கைத்தாங்கலாகப் பிடித்து, உள்ளே அழைத்து வந்து, கட்டிலில் படுக்க வைத்தாள்.
விடிந்தது. வீடே சோக மயமாகிப் போனது. அம்மாவின் உடல் நலம் மோசமானது. மருத்துவமனை, மருந்துகள் என, ஒரே துயரமானது. தொடர்ந்து பேசவே சந்தர்ப்பமில்லாது போனது. ஒரு வாரமாய் துவண்டு கிடக்கும் மனைவியை பார்த்த சுந்தரம், ""அம்மா ராதா... நீ உண்டாயிருக்கேன்னு ரொம்ப சந்தோஷப்பட்டா. உனக்கு பிரசவம் முடிஞ்சு நல்லபடியா அனுப்பி வைக்கணுமேன்னு ரொம்பவே கவலைப்பட்டா. ஆனா, இப்ப இப்படிக் கிடக்குறாளே... புள்ள தாச்சிப் பொண்ணு, நீ அவளுக்கு எல்லாம் செய்ய வேண்டியிருக்கே!''
""அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. அம்மாக்கு ஒன்னுன்னா, நா பாக்காம வேறு யாரு பார்ப்பாங்க? நீங்க கவலைப்படாதீங்கப்பா. நான் பார்த்துக்கிறேன்.''
கண்ணும் கருத்துமாக கவனித்ததில் உடல் தேறியது. ஆனால், இந்த விஷயத்தை... அவள் விட்டுக் கொடுப்பதாய் இல்லை.
""ராதா... இங்கே வா, இங்கப்பாரு உனக்கு என்ன வேணும்ன்னாலும் சொல்லு நான் செய்யறேன். ஆனா, அந்த நாயி, அவ எனக்கு எதித்தாப்பல நிக்கவே கூடாது. அவளை அவங்கப்பன் வீட்டுக்கு துரத்து, என் கண்ணு முன்னால நிக்கக்கூடாதுன்னு சொல்லு.''
""அம்மா... கத்தாதே, யாருக்கும் தெரியக் கூடாதுன்னுதானே இங்க அழைச்சிக்கிட்டு வந்திருக்கிறேன்! நீ ஊரையே கூட்டறியே... நீ தான் கதின்னு வந்திருக்கிறேன். நீயும் என்னை கைவிட்டுடாதம்மா,'' என, அழும் மகளை சமாதானம் செய்ய முடியாமலும், மனமில்லாமலும் அப்படியே அமர்ந்திருந்தாள் மங்களம்.
"அம்மா, இனி கொஞ்சம் சமாதானமாகி விடுவாள். கொஞ்ச நாளுக்கப்பறம் பேசிக்கலாம்...' என்றுதான் நினைத்தாள் ராதா. ஆனால், அந்த பெண்ணைப் பாத்தாலே எரிஞ்சு விழறதும், சாப்பாடு போடாமல் பழிவாங்குவதும், அந்த பெண் எப்போதும் அழுவதும் தொடர்ந்தபோது பயந்து போனாள் ராதா.
அன்று பிரதோஷம். அம்மா முழுநேரமும் பட்டினி கிடந்து, இரவு, உப்பு போடாத பொங்கலை கொஞ்சம் சாப்பிடுவாள். அது தெரியாத அந்த பெண், நிறைய வெங்காயம் போட்டு, சாம்பார் வைத்து உருளைக்கிழங்கு பொரியல் செய்து வைக்க, வீடே களேபரமானது. எங்கோ விழுந்த அடி, எங்கேயோ வெளிப்பட்டது. வார்த்தைகளில் ரவுத்ரம் வெடிக்க, மிரண்டு போனாள் அவள்.
""நீ சாப்பிடலன்னா என்னம்மா... நாங்க சாப்பிட்டுட்டு போறோம், புள்ளதாச்சிப் பொண்ணு வந்திருக்கா... அவ நல்லா சாப்பிட்டாத்தானே, குழந்தை நல்லபடியா பொறக்கும்?'' என்று அப்பா கேட்க, அவ்வளவுதான். பத்ரகாளியாகி விட்டாள் அம்மா.
பொறுத்து பார்த்த ராதா.
""எந்திரி மாலதி... கிளம்பு. இனிமேல் இங்க இருக்க வேணாம். நாம, நம்ம வீட்டிற்கே போய் விடுவோம்,'' எனக் கோபமாக கூற, அதற்குமேல் கோபமாகக் கத்தினாள் அம்மா.
""போடி... போ. என் கண் முன்னாடி நிக்காத. போயிடு போயிடு,'' என, பேய் பிடித்தவளைப் போல் கத்தியவள், அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
""என்னது, என்னவாயிற்று? ஏன் இப்படி அடிக்கடி மயக்கம் வருகிறது? இவ்வளவு நாட்கள் இப்படியில்லையே,'' என மருத்துவர் கேட்க...
குடும்ப மருத்துவரானதாலும், நாளைக்கு பிரசவம் பார்க்க அவரது ஒத்துழைப்பும் தேவை என்பதாலும், அவரிடம் அனைத்தையும் கூறினாள் ராதா.
""நீங்க தான் டாக்டர், அம்மாவிற்கு என் நிலைமையை புரிய வைக்கணும். தப்பு நடந்துடுச்சி... பேசி பிரச்னையை பெருசாக்கறத விட, அதற்கு தீர்வு என்னன்னுதானே பாக்கணும், எனக்கு மட்டும் கவலையில்லையா டாக்டர்.
""நானும் ஆரம்பத்துல கத்தினேன்; கதறினேன். சண்டை போட்டேன்; தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன். இன்னும் சொல்லப்போனா அவரையும், அவளையும் கொலை செஞ்சுரலாம்ன்னு கூட யோசிச்சேன். வெறி பிடிச்சாப்லதான் இருந்தேன். எல்லாத்தையும், நான் அவர்மேல வைச்சிருக்கிற அன்பு துடைச்சி போட்டுடிச்சு. அவளைப் பார்த்தாலும் பாவமா இருந்திச்சி... அதுக்கப்புறம்தான் யோசிச்சேன். தப்பு நடக்கறதுக்கு முன்னாடி, தடுக்கறது நியாயம். நடந்த பின்னாடி தீர்வைத்தான் யோசிக்கணும். நிறைய யோசிச்சுதான், இந்த முடிவு எடுத்தேன்.
""அவரும் பாவம், செஞ்ச தப்புக்கு நிறைய அழுதுட்டாரு. அவளுக்கும் வேறு யாரும் இல்ல, சரி போய் தொலையுது, புள்ளையப் பெத்து என்கிட்ட கொடுத்துட்டு எங்கேயாவது போயிடுன்னு சொல்லித்தான், இங்க கூட்டிக்கிட்டு வந்தேன்.
""கல்யாணமான இந்த இருவது வருசத்துல... ஒரு குழந்தையை பெத்துக்க முடியாம நான் பட்ட கஷ்டம் கொஞ்சமா, நஞ்சமா? "அதுவும் குறை உன்கிட்டதான் இருக்கு, கர்ப்பப்பை சின்னதாக இருக்கு...'ன்னு டாக்டர் சொன்னதும், என் இதயமே நொறுங்கி போச்சு. என் ராசாவுக்கு, ஒரு குழந்தையை பெத்துக் கொடுக்க முடியலேன்னு எப்படி துடிச்சேன் தெரியுமா?
""உங்களுக்கும், அம்மாவுக்கும் தானே அது அவ குழந்தை? ஊரு உலகத்துக்கு அது என்னோட குழந்தைதானே. வேறு யாரும் வந்து கூப்பிட்டாலும், போயிட முடியாதுல்ல டாக்டர்? அதுபோதும் டாக்டர்,'' என்று பெருங்குரலெடுத்து அழுதாள் ராதா.
கதவு திறந்து, ""ராசாத்தி, என்னை மன்னிச்சிடு. உன் புருஷன் உனக்கு துரோகம் செஞ்சிட்டாரேன்னுதான் நான் அப்படி நடந்துகிட்டேன். அதுவே உன்னோட வலிக்கு மருந்தா இருக்கும்ன்னு புரியாம போயிடுச்சு. சரி போ... நடந்தது நடந்துடுச்சி. நீ சந்தோஷமா இருந்தா அதுவே எனக்குப் போதும்,'' என்று தன்னைக் கட்டிக்கொண்டு அழும் அம்மாவை, ஏதும் புரியாமல், ""அம்மா நீ... நீ... எப்படி இங்கே?'' என்றாள் ராதா.
""நான் தான் வரச் சொன்னேன். நீ, என்கிட்ட தனியாப் பேசணும்ன்னு சொன்னதும், நீ வந்ததிலிருந்து அடிக்கடி அம்மா மயங்கி விழுறதும், என்னவோ பிரச்னைன்னு எனக்கு புரிஞ்சது. அதனாலதான், நீ பேசறத அம்மா கேட்கட்டும்ன்னு கதவுக்குப் பின்னாடி நிக்க வைச்சேன். அவங்களும் எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டாங்க. இங்க பாருங்கம்மா, ஒரு விஷயத்தை நாம் எப்படி பார்க்கிறோம்ங்கிறதுலதான் எல்லாமே அடங்கியிருக்கு. தப்பு நடந்துடுச்சேன்னு நினைச்சு, சண்டை போட்டு எல்லார் மனதையும் காயப்படுத்தி, காலமெல்லாம் அழுதுகிட்டே வாழறதுல என்ன லாபம் இருக்கு? தவறுகளை மன்னிக்கும்போது, இன்னொரு தவறுக்கு வழியில்லாமல் போய்விடும்,'' என்றார் டாக்டர்.
""ஆமா டாக்டர். காலமெல்லாம் அந்த குழந்தை, என் தவறை எனக்கு உணர்த்தி கொண்டேயிருக்கும். ஒரு நிமிட நேர தடுமாற்றம், இத்தனை பெரிய விளைவுகளை ஏற்படுத்தி வைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. எல்லாரும் என்னை மன்னிக்க வேண்டும். தயவு செய்து எங்கள பிரிச்சுடாதீங்க. ராதா இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியாது,'' என கையேந்தி நிற்கும் மருமகனையும்...
""ஆமாம்மா, என்னால் கூட அவரில்லாமல் வாழ முடியாது,'' என, காலில் விழும் மகளையும் ஆதரவாய் கரம்பிடித்து, ""நீங்க ரெண்டு பேரும் நல்லாயிருக்கணும்... அதுதான் எனக்கு வேணும். நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே எனக்குப் போதும்,'' என்று சொன்னபோது, மிக மெல்லியதொரு அழுகை ஒலி கேட்டது. எல்லாரும் திரும்பிப் பார்க்க... மாலதி நின்றிருந்தாள். ""மாலதி... இங்கே வாம்மா... என் பொண்ணே, உன்னை ஏத்துக்கிட்ட பின், நான் என்ன சொல்றது? என் பேரனை நல்லபடியா பெத்துக்குடு,'' என்று வாஞ்சையாக அணைக்க, எல்லார் முகத்திலும் நிம்மதி.
""எல்லாரும் ஒண்ணு சேர்ந்துட்டு, என்னைய மறந்துட்டீங்களே... ஏம்மா மங்களா? தப்பு செஞ்ச புருசனையே விட்டுக் கொடுக்கல ராதா. நீ என்னடான்னா, காலமெல்லாம் பூனைக்குட்டி மாதிரி, உன்னையே சுத்தி வந்த என்னைய மறந்துட்டியே... நியாயமா?'' என்று அப்பா உள்ளே வர...
""ஐயோ... என்னங்க நீங்க. உங்கள நான் எப்படி மறப்பேன்?'' என்றதும் எல்லாரும் சேர்ந்து சிரித்தனர்.
"மன்னித்தல் என்பது, எத்தனை பெரிய விஷயங்களை கூட, எவ்வளவு சிறியதாக மாற்றி விடுகிறது...' என்று வியந்தவாறே, அவர்களது சிரிப்பில் கலந்து கொண்டார் டாக்டர்.
***

கலா விசு

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X