ஆயுசு பரியந்தம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
00:00

தாமதமாக உதித்த பனிகால சாது சூரியன், காவிரி ஆற்றை பளபளப்பாக்கி, ஒட்டி இருந்த அக்ரகாரத்தை ஆக்ரமித்திருந்த நேரம்.
பெண்மணிகள் வாசல் தெளித்துக் கொண்டிருந்தனர். தொலைதூரத்து கோவிலிலிருந்து, ஒலிபெருக்கியின் உதவியுடன், பக்திப்பாடல் மிதந்து வந்தது. ஓரிரு பால்காரர்கள் மணியடித்தனர்.
பாகி மாமி, கோல மாவு டப்பாவை எடுக்க முனைந்த போது, ஆட்டோ ஒன்று வீட்டு வாசலில் வந்து நின்றது. மாமியை பார்த்து வணங்கினார் டிரைவர்.
பயணி இறங்குவதற்கு முன், பாகி மாமியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். நெடு நெடு உயரம், சிவந்த நிறம், பஞ்சத்தால் அடிபட்ட மாதிரி உடல்வாகு. தலையில் மெஜாரிட்டி பெற்ற வெள்ளி முடி! வயது ஐம்பதுக்கு மேல் எவ்வளவு சொன்னாலும் மாமி கோபித்து கொள்ள போவதில்லை. ஊரில் அவளுக்கு, "திருப்புகழ் மாமி, காந்திமாமி, கண்டிஷன் பாட்டி' போன்ற பல வகை பெயர்களை சூட்டியிருந்தனர்.
ஆட்டோவில் இருந்து ஒரு பெண் இறங்கினாள். கையில் இரண்டு வயதுக் குழந்தை. மற்றொரு கையில் பயணப்பை. தோளில் கைப்பை, ஆட்டோக்காரரிடமிருந்து கறாராக பாக்கியை வசூலித்து கொண்டாள்.
தில்லானா மோகனாம்பாள் மாதிரி இருந்தாள் அந்த பெண். காலில் மெட்டி இல்லை. நெற்றியில் பொட்டு இல்லை. காட்டன் புடவையை கச்சிதமாக உடுத்தியிருந்தாள். தலையை படிய வாரி, நேர் வகிடு மற்றும் பின்னல், கையில் குழந்தையுடன் நின்ற அவளுக்கு, நெற்றியில் திலகமிட்டால், அஷ்ட லட்சுமிகளில் ஒருவரான, சந்தானலட்சுமி தோற்றம் ஒத்து வரும்.
கேள்வி கேட்பதற்கு முன்பே அந்தப்பெண்...
""பிராமின்ஸ் சிரார்த்தம் பண்ற மாமி வீடு...''
""இது தான். நீ யாரு, என்ன வேணும்?''
இதற்குள் அக்கம் பக்கத்து பெண்களின் பார்வை, பாகி மாமியின் வீட்டு வாசலில் நடக்கப்போகும் காட்சியை காண தீர்க்கம் காட்டியது. இதை உணர்ந்த மாமி, ""என்னவானாலும் உள்ளே வந்து பேசு, பனியிலே குழந்தையை வெச்சிட்டு ஏன் நிக்கறே?''
மாமி உள்ளே செல்ல, அந்தப் பெண் தொடர்ந்தாள்.
பழைய காலத்து அக்ரகார வீடு ஏழ்மையின் எடுத்துக்காட்டாய் இருந்தது. ஓட்டுக்கூரை.
உள்ளே வந்த அந்த பெண், தாழ்வாரத்தின் அருகே உள்ள, லொட லொட பெஞ்சில் குழந்தையை கிடத்தி, சற்றும் எதிர்பாராத வினாடியில் குனிந்து மண்டியிட்டு மாமியை வணங்கினாள்.
""நன்னாரு... என்ன விஷயம்?''
""என் புருஷனுக்கு திவசம் செய்யணும். இன்னிக்கு திதி.''
மாமி இந்த விஷயத்தில் ரொம்பவும் கறார். குலம், கோத்திரம் ஆகிய சகல விஷயங்களையும் கேட்டு, அவள் சமாதானமாகிவிட்டால் மட்டுமே, இந்த மாதிரி காரியங்கள் செய்து வைக்க ஒத்துக் கொள்வாள். சுத்தம் பத்தமாக கர்ம சிரத்தையாக திவசம் பண்ண வருபவர்களுக்கே, அவள் சேவை ஈயப்படும்.
விளக்கைத் தூண்டியபடியே, ""என்னைப்பத்தி யார் கிட்டயோ கேள்விப்பட்டு வந்திருக்கே... என்னைப்பத்தி அவா சொல்லியிருப்பாளே,'' என்றாள் மாமி.
""கேள்விப்பட்டு தான் வந்தேன் மாமி. காலேலதான் ஈரோடு வந்தேன். முன்னாடியே தகவல் தர முடியலே, மன்னிக்கணும்.''
""ஒம் பேர் என்ன, புருஷன் யாரு?''
""எம் புருஷன் பேர் பாபு. என் பேர்...'' அவள் இழுத்தாள். வினாடி நேர தயக்கத்துக்குப் பின் சொன்னாள்... ""என் பேர் ஜீனத்.''
மாமிக்குள் பதற்றம் தொற்றியது.
""அப்படீன்னா நீ?''
""நான் என்ன ஜாதின்னு எனக்கே தெரியாது மாமி. ஒரு மாசக் குழந்தையாய் இருந்த போது, அழுது கொண்டிருந்த என்னை, மும்பை ரயில்வே ஸ்டேஷனில் கண்டெடுத்து வளர்த்தது, ஒரு முஸ்லிம் பெரியவர். ஜீனத் என்ற பெயரில் என்னை வளர்த்தார். ஒண்டிக்கட்டையான அந்த முஸ்லிம் பெரியவரின் பாதுகாப்பில் ஐந்து வயது வரை வளர்ந்தேன். அவர் மறைவுக்குப் பின், நிராதரவான என்னை, அவர் முதலாளியான ஒரு ஜெயின் வீட்டில் வேலைக்கார சிறுமியா சேர்த்து விட்டனர்; பாபுவும், அந்த ஜெயின் கடையில் எடுபிடியாக வேலை செய்திட்டிருந்தார்.''
""உம் புருஷன் பேரு பாபுங்கறே. நிஜப்பேர் என்ன?''
""அவர் பேரே பாபு தான் மாமி. பிராமினான்னு தெரியாது. அனாதைச் சிறுவனான அவரை, ரொம்ப சின்ன வயசுலேயே எடுத்து வளர்த்தது, ஒரு ஆங்கிலோ இந்தியன். அவர் பாபுன்னு கூப்பிட்டது அப்படியே நிலைச்சிடுச்சு. ரெண்டொரு வருஷத்திலே, அந்த ஆங்கிலோ இந்திய பெரியவர், கனடாவுக்கு போக வேண்டிய நிர்பந்தம். அவர் கம்பனியிலே வேலை செய்த, ஒரு தமிழ் பிராமணர் கிட்டே பாபுவை ஒப்படைத்தார். நினைவு தெரிஞ்ச நாள் முதல், அவர் அந்த பிராமணர் வீட்டிலேயே தங்கினார். வசதிக் குறைவாக இருந்த, அந்த பிராமணப் பெரியவருக்கு சிரமம் வைக்கக் கூடாது என்ற எண்ணத்துலே, பேப்பர் போடுவது லாண்டிரிக்கடை, கொரியர் கம்பெனி என பல விதமான வேலைகளில் ஈடுபட்டார். ஜெயின் முதலாளியின் கடையிலேயும் வேலை செய்தார்.
""படிப்பிலே நான் நல்லா வர்றதைப் பார்த்த, அந்த ஜெயின் பெரியவர், அவர் சம்பந்தப்பட்ட ஒரு தர்ம ஸ்தாபனத்திலே சேர்த்து படிக்க வைத்தார். கல்வி, தங்குமிடம் இலவசம், சாப்பாடு, துணிமணி இதர செலவுகளுக்கு பாபு உதவி செஞ்சார். அங்கு பள்ளி இறுதிவரை படித்தேன். அந்த ஸ்தாபனத்திலே ஆயா வேலை பார்த்துகிட்டு கம்ப்யூட்டர் படிச்சேன். பாபு உதவியோட, அந்த துறையில் டிப்ளமா பெற்று, நாலைந்து பேருக்கு கம்ப்யூட்டர் பயிற்சியும் கொடுக்க ஆரம்பித்தேன். பிரபல கம்ப்யூட்டர் கம்பனிலே எனக்கு வேலை கிடைச்சப்ப, எனக்கு, 22 வயது. 27 வயதான பாபு, மார்வாடிகளின் கடைகளில் சேல்ஸ் கணக்குகள் - ரிட்டன் பைல் பண்ற வேலைகளை பார்த்தார்.
""ரொம்பவும் சூடிகையான பாபு, ஓய்வு நேரங்களில் வேதம் படித்தார். ஒரு கட்டத்திலே நானும், பாபுவும் பதிவு திருமணம் செய்துகிட்டோம்.
""பாபு மூன்று வேளை சந்தியா வந்தனம் செய்து, எப்பவும் ஏதாவது மந்திரத்தை முணுமுணுத்தபடி இருப்பார். மத சார்பான விஷயங்களிலே என்னை, அவர் நிர்பந்தப்படுத்தியது இல்லை. என் புருஷனோட மத சம்பந்தமான ஈடுபாடும், அவரின் நடவடிக்கைகளும் அவர் மேல் எனக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தின. மெல்ல மெல்ல, அவர் வழியிலேயே போக ஆரம்பித்தேன். எனக்கு சகஸ்ர நாமம் கூட தெரியும் மாமி,'' என்று தோள் பையிலிருந்து, ஒரு சிறு போட்டோவை எடுத்துக் காட்டினாள். திருநீர் குங்குமம் சகிதம் ஒரு இளைஞன் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
பெஞ்சிலிருந்து குழந்தையின் சிணுங்கல் கேட்டது. போர்வையைப் பெயர்த்து, எழுந்து உட்கார்ந்து, பேந்த விழித்தது. பின்னர் புன்னகைத்தது. மாமியைப் பார்த்து கை அசைத்தது.
""பையனா, பொண்ணா?''
""பையன் மாமி. இவன் பிறந்து ஒரு வருடத்துக்குள்ளேயே பாபு ஆக்சிடென்ட்லே போயிட்டார். குழந்தை மேல ரொம்ப பாசம். பாபு மந்திரங்கள் சொல்றபோது, சின்ன குழந்தையான இவன், அவர் மடியிலே உட்கார்ந்து, பவ்யமா கேட்பான்.''
""இத பார் பொண்ணு, திவசம்ங்கறது சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாத்தையும் அனுசரிச்சு வேத மந்திரங் களோட, ஆச்சாரத்தோட செய்ய வேண்டிய புனிதமான ஒரு காரியம். இதுக்கான சேவையை, நான் ஒரு தொழிலா பண்ணல்லே. ஒரு பரிகாரமா, தர்மத்துக்காக இலவசமா பண்றேன். குலம், கோத்ரம் தெரியாத வாளுக்கு, எப்படி திவசம் பண்ணி வைக்க முடியும்?
"" உன் புருஷனுக்கு யாரோ பிரம்மோப தேசம் பண்ணி வைச்சதா சொல்றே. ஆனா, கோத்திரம் தெரியாதுங்கறே. உன்னோட புருஷனோட பெயர் - அப்பா, தாத்தா பேர் தெரியாதுங்கறே. <சிரார்த்தத்துக்கு தேவையான அடிப்படை விஷயங்களை தெரியாம எப்படி செய்யறது? மேற்கொண்டு இது ஆம்பிள்ளைங்க செய்யற சடங்கு. யாரைக் கொண்டாவது செய்து வைக்கலாம்ன்னா அதனாலே ஏகத்துக்கு பிரச்னை வரும்.
""காலங்காத்தாலே கைக்குழந்தையோட வந்து கேக்கறே. முடியாதுன்னு சொல்றதுக்கு வேதனையாயிருக்கு. ஒண்ணு பண்ணேன்... ஏதாவது ஒரு அனாதை ஆஸ்ரமத்துலே பணம் கட்டி, நாலு பேருக்கு சாப்பாடு போடவெச்சிடு... வேற வழி எனக்கு தோணல்லே.''
""மாமி தப்பா நினைக்கக் கூடாது. என் புருஷன் இருந்த மட்டும், மூணு வேளை சந்தியா வந்தனம் செய்து, சதா சர்வகாலமும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். அவர் பிறப்பு பற்றி எனக்கு தெரியாதுன்னாலும், அவர் பிராமணர்ங்கறதை பரிபூர்ணமாய் இப்பவும் நம்பறேன். நான் புருஷன் பேச்சை மீறி எப்பவும் நடந்ததில்லை. அவர் எனக்கு வாழ்வு கொடுத்த தெய்வம். அவருக்கு சாஸ்திரோக்தமாக திவசம் செய்யணும்ங்கறது என்னோட அபிலாஷை. அப்பா, தாத்தா பெயர் தெரியாம இருந்தா, அதற்கு பரிகாரமா, ஏதாவது சாஸ்திரங்களிலே இருக்குமே. அதை செய்யலாமே...
""மாமி, என்னோட வாழ்க்கை சரித்திரத்தை உள்ளபடியே உங்கக்கிட்டே சொன்னேன். நீங்க எனக்காக இதை ஏற்பாடு செய்து கொடுப்பீங்கன்னு நான் நம்பினேன். நான் பிராமணாள் வீட்டுப் பெண் அப்படீன்னு பொய்யைச் சொல்லியிருந்தா, ஒப்புட்டிருப்பீங்களோ என்னவோ. நான் புறப்படறேன் மாமி.''
"இந்த பெண்ணின் ஏக்கத்தை போக்காவிட்டால், நான் இதுவரை செய்த நோன்புகள், தர்ம காரியங்கள் யாவும் பயனில்லாமல் போய்விடுவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது...' மாமியின் அடிமனதில் ஒரு புயல் சின்னத்தை உருவாக்கியது.
மனதில் கொண்ட சங்கல்பம், வார்த்தைகளில் தொனித்தது.
""பொண்ணே, நில்லு. உம் புருஷனுக்கு இன்னிக்கி இங்கே சிரார்த்தம். திருப்திதானே? எங்காத்து அம்பியை விட்டு, காரியங்களை செய்ய சொல்றேன். உன்னை நான் சீதான்னு கூப்பிட்டுக்கறேன்.''
சீதா என்கிற புதுப்பெயர் பெற்ற ஜீனத்தின் மன இறுக்கம் விலகி, விழிகளில் கண்ணீர் வெள்ளமாய் பிரவகித்தது.
அடுத்து காரியங்கள் சுறு சுறுப்பாய் நடந்தன.
அம்பி என்றழைக்கப்பட்ட மாமியின் புதல்வன், திவசத்துக்கான பொருட்களை வாங்கி வரும்போது, குழந்தைக்கும் பால், ரொட்டி ஆகியவற்றோடு, விந்தி விந்தி நடந்து வந்தான்.
சாஸ்திரிகள் மற்றும் விப்ர பிராமணர்களுக்கும் தகவல் கொடுத்ததுடன், காவிரியில் குளித்துவிட்டு வந்தாள் மாமி.
குழந்தையைத் தூங்க வைத்து, சீதாவும் குளிக்கப் போனாள். குளித்துவிட்டு வரும்போது, காட்டன் புடவையில் மடிசார் கட்டுடன் வந்தாள். அவள் புடவை உடுத்தியிருந்த விதம், கன கச்சிதமாக இருந்தது. அனுபவம் மிக்கவர்களாலேயே அந்த மாதிரி உடுத்த முடியும்.
""எங்க காலனியிலே ஒரு மாமிகிட்டே உடுத்த கத்துக்கிட்டேன். சரியா இருக்கா மாமி?'' செய்கையால் ஆமோதித்தாள் மாமி.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் நடந்தவை, ஏதோ மாயாஜாலம் போல நிகழ்ந்தன. விறகு அடுப்பில் உலை வைத்தாள் மாமி.
விழித்தெழுந்த குழந்தையை குளிப்பாட்டினாள் சீதா. பதினொரு மணியளவில் சாஸ்திரிகள் மற்றும் சடங்கு விப்ரர்கள் வந்து விட்டனர்.
""சாஸ்திரிகள், எங்காத்து அம்பி இந்த பெண்ணோட கையிலேர்ந்து தர்ப்பை வாங்கி சிரார்த்தம் பண்ணுவான்,'' என்றாள் மாமி.
சாஸ்திரிகளைப் பார்த்து புன்னகைத்து, அவர் மடியில் தாவி அமர்ந்தது குழந்தை.
மந்திர கோஷங்கள் முழங்க ஆரம்பித்தன. ஒரு முனிபுங்கவர், தன் சீடர்கள் நடத்தும் வேள்வியில் கலந்து, அங்கீகரிப்பது போல, அந்த குழந்தை, ஒவ்வொரு கிரியையும் உன்னிப்பாக பார்த்து, புன்னகையால் ஆமோதித்தது.
"இது சாதாரணக் குழந்தை இல்லை. ஏதோ, வேத சம்பந்தம் இருக்கு இந்தக் குழந்தைக்கு...' என்று நினைத்துக் கொண்டாள் மாமி.
"திவசம் யாருக்கு செய்யறதோ, அவா பேர், அப்பா, தாத்தா, பேர், கோத்ரம் சொல்லுங்கோ...' என்றார் சாஸ்திரிகள்.
இப்போது மாமி சமையல் செய்வதில் இருந்து வெளிப்பட்டாள்.
குழந்தையின் வசீகரச் சிரிப்பு, சின்ன அங்க அசைவுகள், மாமிக்கு எதையோ உணர்த்தின. தன் கணவனின் படத்தையும், இச்சிறுகுழந்தையையும், மாறி மாறி பார்த்தாள். பிரபஞ்சத்தின் ரகசியங்கள் கூட, ஒரு வினாடி நேரத்தில் தானே, சித்தர்களுக்கும், மகா யோகிகளுக்கும் சிந்தையில் பளீரிட்டன.
கம்பீரமாக அறிவித்தாள் மாமி...
பித்ரு - சுவாமிநாதன்
பிதாமகர் - ஜெயராம சாஸ்திரி
ப்ரபிதாமகர் - சதாசிவ சாஸ்திரி... பரத்வாஜ கோத்ரம்.
பூணூலை இடம் மாற்றி சங்கல்பம் செய்து கொண்டிருந்த மாமியின் புத்திரன் அம்பி, முகத்தில் கேள்விக்குறியோடு அம்மாவை பார்த்தான். "சொல்றபடி செய்...' என சைகை செய்தாள் மாமி.
மந்திர உச்சாடனங்கள் மாமியை, கடந்த காலத்துக்கு இட்டுச் சென்றன.
அப்பளம், வடகம் செய்து விற்றுப் பிழைத்த, ஏழை அந்தணருக்கு பிறந்த பாகீரதி, பருவம் அடையும் முன்னமே, மனப்பக்குவம் அடைந்து விட்டாள். ஓரளவுக்கு அழகாய் இருந்தும், இரண்டாம் தாரம், மூன்றாம் தாரமோ அக்கறையில்லை. புருஷன் எனப்படுபவர் பணக்காரராக இருக்க வேண்டும். "பளிச்'சென்று பத்து பவுன் நகை, பட்டுப்புடவை சகிதம் பால்கனியில் அமர்ந்து, புது சினிமா பார்க்க வேண்டும். சினிமாப் பாட்டை சதாவும் முணு முணுக்க வேண்டும். வைரத்தோடு மினுமினுக்க, மற்ற பெண்களிடம் வம்படிக்க வேண்டும். இவை தான் பாகீரதியின் எதிர்காலக் கனவாக, ஏக்கமாக இருந்தது.
இப்போது விதி தன் வேலையைக் காட்டியது. தன் ஏவலாளர்களான சந்தர்ப்பம், சூழ்நிலை, வறுமை, பெற்றோரின் நோய் இத்தியாதிகளை ஏவிவிட்டு, பாகியை ஜெய்ராம சாஸ்திரிகளுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட வைத்தது. முதல் தாரத்து மகனுடன் பாகீரதியை திருமணம் செய்தார்.
சாஸ்திரிகள், பூரண சரஸ்வதி கடாட்சம் உள்ளவர். தீவிர வைதீக பிராமணர். அந்த வட்டாரத்தில், வேத சம்பந்தமான விஷயங்களில், அவரை மிஞ்ச ஆள் கிடையாது. அவர் சம்பாத்தியம் வாழ்வாதாரத்துக்கு போதுமானதாய் இருந்தது. புது மனைவியின் பவுன் நகை, பட்டுப்புடவை இந்தியாதி எதிர்பார்ப்புகளுக்கு ஈடு செய்ய இயலவில்லை.
பாகியின் ஆசைகள் நிராசையாகிப்போக, அவளின் சித்தம் இடம் கொடுக்கவில்லை. வாழ்க்கையின் ஏமாற்றங்கள், பணத்தின் மேல் அவள் கொண்ட வெறி, இவை அவளை பிசாசாக மாற்றி, பேயாட்டம் ஆட வைத்தன.
மாமி ஒரு முடிவெடுத்தாள். "இனியும், இந்த பிராமணனை நம்பி எந்த பயனும் இல்லை...'
அவளின் ரத்தத்தில் ஊறியது சமையல் கலை. கண் பார்த்ததை கை செய்யும் நளபாக வித்தையை இயல்பாகவே பெற்றிருந்தாள்.
தன் சமையல் திறமை மீது, அதீத நம்பிக்கை வைத்து, அதை காசாக்க முயன்ற பாகியின் எண்ணம் கை கூடியது.
கல்யாண சமையல் கான்ட்ராக்ட் எடுக்கத் துவங்கினாள். பாகியின் கை பக்குவத்தாலும், ஆட்களை விரட்டி வேலை வாங்கும் பாங்கினாலும், பேச்சு லாவகத்தாலும், அவள் பணி விருத்தியடைந்தது. ஜெயராம சாஸ்திரியின் மனைவி என்ற அந்தஸ்து, பக்க பலமாய் இருந்து, அவளை ஏற்றம் பெற வைத்தது.
புருஷனை எதிரியாக எண்ணிய பாகி; மனைவியைத் தொடக் கூட நாள் கிழமை பார்த்த ஜெயராம சாஸ்திரி; இவர்களிடையே இயற்கை புகுந்து ஒரு உலக மகா அதிசயத்தை நடத்திக் காட்டியது. ஜெயராம சாஸ்திரிகள் கருவைச் சுமந்து, ஒரு ஆண் குழந்தையை ஈன்றாள் பாகி.
பிள்ளை பிறந்த வேளை, அவள் கான்ட்ராக்ட் பணி விரிவடைந்தது. ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்டர்கள் கிடைத்தன.
பவுன் பவுனாக நகைகள் வாங்கினாள். பட்டுப்புடவைகள் அவள் அலமாரியை நிரப்பின. அவள் அடிமனதில் அப்போதும் ஒரு சின்னக்குறை. வேலை நிர்பந்தம் காரணமாக, நகைகளையும், பட்டாடைகளையும் அணிய முடியாத நிலை. சினிமாவுக்கு போக நேரமில்லை.
பணத்துக்காக அலைந்து அல்லாடிய பாகி மாமியை, பணம் இப்போது ஏகத்துக்கும் விரட்டியது.
தன் கணவனை இளக்காரமாகப் பார்த்து கொக்கரித்தாள். "பார்த்தீரா பிராமணரே... இந்த நகை, புடவை எல்லாம், என்னோட சொந்த சம்பாத்தியம். ஒரு குந்துமணி தங்கம் வாங்க வக்கில்லை உமக்கு...'
கான்ட்ராக்ட் வேலை விரிவான போது இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. ஒரு பழைய கட்டடம் விலைக்கு வர, பகுதி பணம் அட்வான்சாக கொடுத்து, வாங்கினாள். வங்கிக் கடன் கிடைத்தது. பாத்திர பண்டங்கள் கொண்டு செல்ல ஒரு வேன் வாங்கினாள். மளிகை, காய்கறி வியாபாரிகள், கடன் கொடுத்து தாராளம் காட்டினர். லட்சக்கணக்கில் பற்று வரவு இருந்தது.
சாஸ்திரிகளின் மூத்த தாரத்தின் மகன், இரண்டரை வயதுக் குழந்தை, திடீரென்று ஒரு நாள் காணாமல் போய் விட்டது. பாகியின் அசிரத்தையின் விளைவு என்று கூடச் சொல்லலாம். புத்திர சோகத்தால் பீடித்த ஜெயராம சாஸ்திரிகளும், ஏதோ விஷக்காய்ச்சலின் பங்களிப்பால், அடுத்த வருடம் பரலோகம் போய்ச் சேர்ந்தார்.
இந்த சோக நிகழ்வுகள், விதவைக் கோலம், இவை பாகி மாமியை பெரிய அளவில் பாதிக்கவில்லை. விட்டது பீடையும், சனியும் என்ற மனோபாவமே மேலோங்கி நின்றது.
இப்போது அடுத்த கட்ட வேலையைச் செய்தது விதி. விதவைக் கோலத்தில் ஒரு மாமி சமையல் கான்ட்ராக்ட் செய்வதை, ஒரு சகுனத்தடை என்று தயக்கம் காட்டியது சமூகம். போட்டி கான்ட்ராக்ட்காரர்கள் அந்த எண்ணத்துக்கு தூபம் போட...
பாகி மாமி சறுக்கினாள். ஒப்பந்தங்கள் சுருங்கி, பூஜ்யத்தை நோக்கி பயணித்தன. பாகியின் பகீரதப் பிரயத்தினங்கள் பயனற்றுப் போயின. கடன் கொடுத்த வங்கியும், வியாபாரிகளும், அவளை நெருக்க ஆரம்பித்தனர். "அட்வான்ஸ்' கொடுத்து வாங்கின வீடும், ஏதோ வில்லங்கத்தினால் வழக்கு வியாஜ்ஜியம் என்று கோர்ட்டுக்கு அவளை அலைக்கழித்தன.
இத்தருணத்தில், தான் பெற்ற பிள்ளை, காய்ச்சல் வந்து போலியோ தாக்குதலினால் ஊனமடைந்தான்.
மாமியின் பொக்கிஷங்கள் வெறிச்சோடின. நகைகள் வெல்வெட் பெட்டிகளிலிருந்து வெளியே வராமலேயே விற்பனையாகின. உடுத்தி அனுபவிக்க முடியாத காஞ்சிபுரம், தர்மாபுரம், மைசூர் பட்டுப்புடவைகள், புது மடிப்பு கலையாமலேயே மறைந்தன.
கணக்குப் பார்த்த போது, கணவரின் பூர்வீக வீடு மட்டுமே மிஞ்சியது. முன்னிருந்த நிலைக்கு வந்து விட்டாள். கணவரின் பெட்டியைத் துழாவிய போது கிடைத்தவை தடித்தடியான வேத புத்தகங்கள், திருப்புகழ் மற்றும் ருத்திராட்சமாலை. ஏதோ ஆவேசம் வந்தவள், ருத்ராட்ச மாலையை அணிந்து, வேத புத்தகங்களையும், திருப்புகழையும் கண்ணில் ஒற்றிக் கொண்டாள்.
தன் நிலையை உணர்ந்தாள் மாமி. கடைசியில் காவேரி, பவானி ஆறு சங்கமிக்கும் பவானி நகருக்கு வந்து, ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கி, தன் குலத்தொழிலான சமையலை செய்ய ஆரம்பித்தாள். திவசம் போன்ற காரியாதிகளுக்கு சமையல் செய்தாள். கூலி வாங்குவதில்லை என்று பரிகார நோக்கத்துடன் சேவை செய்யலானாள். வயிற்றைக் கழுவ, வடகம் வத்தல் வியாபாரம். மகனை ஒரு சாஸ்திரிகளின் உதவியாளராக சேர்த்து விட்டாள்.
"இனி, பணத்தை துரத்த மாட்டேன், பகட்டுக்கு ஆசைப்பட மாட்டேன்...' என்று, புது சபதம் ஏற்று, இன்று வரை கடைப்பிடிக்கிறாள்.
உச்ச ஸ்தாயி மந்திர கோஷம் மாமியை நிகழ்காலத்துக்கு மீட்டு வந்தது.
சிரார்த்த காரியங்களை முடித்து, பிண்டம் வைத்து நமஸ்காரம் செய்யப்பட்டது. தட்சணையோடு புறப்பட்டது சாஸ்திரி கோஷ்டி.
இலை போட்டு சீதாவுக்கும், அம்பிக்கும் பரிமாறினாள் மாமி. குழந்தைக்கு, தன் கையால் ஊட்டி விட்டாள்.
""அம்பி கிட்டே உன்னோட அட்ரசும், போன் நம்பரும் கொடுத்திருக்கல்லையா? உம் புறப்படு, இருட்டறதுக்கு முன்னே போய்ச் சேரு.''
மாமிக்கு அடுத்தடுத்து வேலைகள் இருந்தன. திருப்புகழ் வகுப்புக்கான பெண்கள், சற்று நேரத்தில் வந்து விடுவர். ஆறு மணிக்கு சவுந்தர்ய லகிரி படிக்க, மற்றுமொரு கோஷ்டி வரும், இடை இடையே குழந்தைகளுக்கு மந்திரிக்க வருவர். அப்பளம் விற்றதற்கான வசூல் செய்யப் புறப்படணும்.
கைப்பையை திறந்து, ஒரு கற்றை ரூபாய் நோட்டுகளை எடுத்து மாமியிடம் நீட்டினாள் சீதா. ""இதிலே, ஐயாயிரம் இருக்கு, சிரார்த்த செலவுக்கு வெச்சுக்குங்கோ... பத்தலைன்னா சொல்லுங்க.''
மாமி இடைமறித்தாள்.
""பணத்தை பையிலேயே வெச்சுக்கோ. இன்னிக்கி எனக்கு ஏதோ வேண்டுதல், அதற்காக செஞ்சேன்னு வெச்சுகோ. நான் சொன்னா சொன்னதுதான்.''
""அம்பி, மன்னியை பஸ்லே ஏத்திட்டு வந்திடு. சீதா, ஜாக்கிரதையா போய்ட்டு வா. எப்போ டைம் கெடைக்கறதோ அப்பப்ப வந்து பாரு. குழந்தையை பத்திரமாய் பார்த்துக்கோ.''
குழந்தை, பாகி மாமிக்கு டாட்டா காட்டியது. "இந்த குழந்தையோட தகப்பன், என் மூத்தாளுடைய காணாமல் போன மகன் என்பதை, இந்தக் குழந்தையின் அங்க சேஷ்டைகளும், புன்னகையும் தானே காட்டிக் கொடுத்தன. என்னால் உணரப்பட்ட இந்த உண்மையை ஊர்ஜிதம் செய்ய, என்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? இப்போது வெளிப்படுத்தினால் சுயநலத்துக்காக கதை விடுகிறேன் என்ற தப்பபிப்ராயம் அல்லவா ஏற்படும்? எல்லாரிடமும் சொல்லி அங்கலாய்ப்பதால், நான் செய்த பாவங்கள் நிவர்த்தி ஆகப்போவதில்லை. சித்தி என்ற ஹோதாவில் நித்தமும் கரித்துக் கொட்டினேனே... அந்த மகனுக்கு இன்று என் கையாலேயே பிண்டம் பண்ணி வைத்தால், செய்த பாவத்தின் தீவிரம் குறைந்து விடுமோ...' பாகியின் மனதில் எண்ணக் கலவைகள்.
இன்னும் சிறிது நேரம் அவர்கள் இங்கிருந்தால் அழுது, கரைந்து விடுவமோ என்ற பதட்டம், இப்போது மாமியிடம் ஒட்டிக் கொண்டது. "இன்று காலை வரை, வெறும் பாவ மூட்டையை மட்டுமே சுமந்த என்னை, இப்போது பாச மூட்டையையும் சுமக்க வைத்து விட்டானே இந்த குட்டிப் பேரன்...' பிராயச்சித்த நோக்குடன் தொடங்கப்பட்ட பாகி மாமியின் நெடும் பயணம் இனியும் தொடரும்.
***

பராசரம் நீலகண்டன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
18-பிப்-201305:13:47 IST Report Abuse
GOWSALYA இக்கதையை ஒரேமுறையில் முழுமையாப் படிக்க முடியாம கண்ணீர் தடைசெய்துவிட்டது. மிக அருமையான கதை சகோதரே.....வளர்க.
Rate this:
Cancel
l.kirshnanswamy samy - mumbai,இந்தியா
17-பிப்-201314:31:49 IST Report Abuse
l.kirshnanswamy samy கண்ணில் நீர் வடிய வைக்கும் அருமையான feel good கதை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X