அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
00:00

அன்புள்ள சகோதரிக்கு —
நான் 33 வயது பெண். 17 வயதில் திருமணம் நடந்தது. நான் மிகவும் அழகாய் இருப்பதாலும், என் கணவர் என் மீது அளவுக்கு அதிகமாய் பாசம் வைத்து இருப்பதாலும், இவ்வளவு நாள் என் வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி வந்தேன். எனக்கு ஒரு மகனும், மகளும் வாலிப வயதில் உள்ளனர்.
எனக்காகவும், என் குழந்தைகளுக்காகவும் என் கணவர் மிகவும் பாடுபட்டு, எங்களை நன்றாக வைத்து இருக்கிறார்.
என் கணவருக்கு, நான் வெளியில் நின்றாலோ, மற்ற ஆண்களிடம் பேசினாலோ பொறுக்காது. அவரும் நன்றாகத் தான் இருப்பார்.
இப்போது அவர் வயது, 38 ஆகிறது. நானும் கட்டுப்பாடு மிகுந்த சூழ்நிலையில் வளர்ந்ததால், அவரின் சந்தேக குணத்தை புரிந்து," அட்ஜஸ்' செய்து கொண்டேன்; பொறுமையாக இருந்தேன்.
என் மூத்த பையன் என் அருகில் உட்கார்ந்தாலோ, என் மடியில் படுத்துக் கொண்டாலோ, என் கணவர் முகம் மாறி, "பெரிய பையன் ஆகிவிட்டான்... கொஞ்சம் தள்ளியே இரு...' என்கிறார். இது போல் நடந்து கொள்வதால், அவர் மீது எனக்கு மிகவும் வெறுப்பு வருகிறது.
நான் என்ன மேடம் செய்வேன். எல்லாவற்றையும் புரிய வைத்து அவரை திருத்திய எனக்கு, இதை எப்படி புரிய வைப்பேன். பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை ஒதுக்க முடியுமா? மற்றபடி என் பையனிடம் அவர் மிகவும் பிரியமாக இருக்கிறார். இவ்வளவு பெரிய பையனையும் தூக்கி கொஞ்சுவார். எனக்கு தாங்கள் தான் நல்ல பதில் தர வேண்டும்!
இப்படிக்கு,
— அன்பு சகோதரி.


அன்பு சகோதரி —
உன் கடிதம் கண்டேன். அன்பு மகனைக் கொஞ்சினால் - கணவனுக்குப் பொறாமை... உன் எழுத்துகளில் உன் வருத்தம் தெரிகிறது.
உனக்கு வெகு சீக்கிரமே கல்யாணமாகி விட்டதாக எழுதியிருக்கிறாய்... 16 வயதில் பிள்ளை இருந்தாலும் - கணவன், மனைவி இருவருமே, இன்னும் நடு வயதில் தான் இருக்கிறீர்கள்...
ஒரு குழந்தைக்குத் தந்தையாகி விட்டாலும் - ஏன் - சிறுவயதிலேயே குடும்ப பாரத்தைத் தன் தோளில் சுமந்தாலும், உன் கணவரே இன்னமும் குழந்தைதான் என்பதைப் புரிந்துகொள் சகோதரி.
சாதாரணமாகவே, குழந்தை பிறந்தவுடன், ஒரு பெண், தன் கணவனை விடவும், தான் பெற்ற குழந்தைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறாள். ஆதலால், இந்த பிரச்னை, குழந்தை பிறந்தவுடனேயே ஆரம்பமாகி விடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
முதல் குழந்தை இருக்கும்போது, இரண்டாவதைக் கொஞ்சினால், மூத்தது காரணமில்லாமல் அழும். விழுந்து புரண்டு, தன் எதிர்ப்பைக் காண்பிக்கும். அருகில் யாருமில்லை என்றால் சின்னதைக் கிள்ளி விட்டு ஓடும்.
இந்த அளவு இல்லை என்றாலும், ஓரளவுக்கு தாலி கட்டினப் புருஷனிடம் இந்த, "சவலைக் குழந்தை'த்தனத்தைப் பார்க்கலாம். இதுபோன்ற சமயங்களில் நீ, உன் கணவனையும் ஒரு குழந்தை போல அருகில் இழுத்து மடியில் போட்டுக் கொள்ளலாம். திடீரென இப்படியொரு வழக்கத்தை ஆரம்பிப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.
நம் நாட்டில் - கணவன், மனைவி, குழந்தைகள் எல்லாரும் சேர்ந்து விளையாடுவதோ, ஒருவரையொருவர் அன்புடன் அணைப்பதோ, செல்லமாய் கன்னத்தில், நெற்றியில் முத்தமிடுவதோ, தட்டிக் கொடுப்பதோ கிடையாது.
குழந்தைகள் முன் - அப்பா, அம்மா சிரித்துப் பேசுவதோ, தொடுவதோ கிடையாது. கோபம் வந்தால், குழந்தைகளுக்கு எதிரில் புருஷனும், மனைவியும் சண்டை போட்டு, அடித்து உதைத்துக் கொள்கிறோமே தவிர, அன்பையும், பாசத்தையும், என்னவோ தப்பு காரியம் செய்வது போல, ஒளித்து ஒளித்து வைத்துப் பரிமாறிக் கொள்கிறோம்; இந்த நிலை மாற வேண்டும்.
அம்மாவுக்கு மகனிடம் பாசம் அதிகமாக இருப்பதும், அப்பாவுக்கு மகளிடம் அன்பு அபரிமிதமாக இருப்பதும், வெகு இயல்பானது. பெரும்பாலும் இப்படி எதிரெதிர் பாலில்தான் ஈர்ப்பும், பிரியமும் இருக்கும்; இது தவறும் இல்லை.
ஆனால், உன் கணவன் என்கிற குழந்தையை, மூலையில் நிற்க வைத்து, உன் பிள்ளையை மடியில் போட்டுக் கொஞ்சாதே. முதலில் கணவனை கலகலப்பாக்கு! தனிமை கிடைக்கும்போது அவரிடம் எடுத்துச் சொல்:
இன்னும் எத்தனை நாளைக்கு நம் பிள்ளை, இப்படி குழந்தையாக இருக்கப் போகிறான்... கல்லூரிப் படிப்பு, புது சினேகம் எல்லாம் வந்து விட்டால் - வீட்டுப் பக்கம் திரும்பியே பார்க்க மாட்டான். எனக்கு மட்டுமா அவன் குழந்தை... உங்களுக்கும் தானே... இப்போது அவனை விரட்டினால், விரட்டுகிறவர் பேரில்தான் வெறுப்பு வரும்... அதனால், அவனிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ள முயற்சியுங்கள். வளர்ந்து விட்டானே தவிர, மனசளவில் அவனும், உங்களைப்போல ஒரு குழந்தை தான். இதுபோன்ற மென்மையான வார்த்தைகளும், அன்பான அரவணைப்பும் கண்டிப்பாய் பலனளிக்கும் சகோதரி.
என் வாழ்த்துகள்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X