நம்பிக்கை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
நம்பிக்கை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
00:00

""இரண்டு நாளைக்கு முன் நாம பார்த்த பொண்ணும் அமையலைடா; நீ செய்யற வேலை பிடிக்கலையாம்; வேணாம்னுட்டாங்க,'' அம்மா சொன்னதும், சக்திவேலுவுக்கு வருத்தம் கொப்பளித்தது.
""வேலைல என்னம்மா இருக்கு? மனசாட்சிக்கு விரோதமில்லாம செய்யற எல்லா தொழிலும், நல்ல தொழில்தானேம்மா?'' என்றான் சக்திவேல்.
""பார்க்கலாண்டா கண்ணு; உனக்குன்னு ஒருத்தி எங்கேயாவது பிறக்காமலா போயிருப்பா?'' என்ற அம்மாவின் குரலில், நீண்ட காலமாக பெண் தேடிய அலுப்பு.
அதற்கு மேல் பேசப் பிடிக்காமல், காக்கி யூனிபார்முடன் மருத்துவமனை நோக்கி நடந்தான் சக்திவேல்.
"அம்மா சொன்னபடி, தந்தையைப் போல், ஒரு சலூன் கடை வைத்திருந்தால் கூட, பெண் கொடுத்திருப்பர். நான் ஏன் ஆஸ்பத்திரி தொழிலை தேர்ந்தெடுத்தேன்?' மனசுக்குள் எதிரொலித்த குரலை அடக்கிக் கொண்டு நடந்தான். அவன் மீது, அவனுக்கே வெறுப்பாக வந்தது.
கோவை நகரின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகளில் அதுவும் ஒன்று. விதவிதமான நோய்கள், வலிகள், பிரச்னைகளுடன், முகம் முழுக்க கவலையுடன் அமர்ந்திருக்கும் நோயாளிகள். குழந்தைகள், முதியோர், ஏழை, பணக்காரன் என, எந்த பாகுபாடும், நோய் அரக்கனுக்கு இல்லை போலும். அத்தனை பேரையும் பீடித்துக் கொள்கிறான். வெளி உலகில் எவ்வளவு இறுமாப்புடன் பேசுபவனையும், ஒரே நிமிடத்தில் ஆட்டங்காணச் செய்து விடுகிறது நோய்.
சுனாமியாக திடீரென புகுந்து விடும் நோய், வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது.
செல்வத்துக்கும் திடீரென வந்த நெஞ்சுவலி, அவர் குடும்பத்தை சுனாமியாகத்தான் புரட்டிப்போட்டு விட்டது.
"நேத்து காலை வரைக்கும் நல்லாதான் இருந்தாரு. தலைவலி, காய்ச்சல்ன்னு கூட மருத்துவமனை பக்கம் போனதில்லை. புள்ளைங்கள பள்ளிக்கூடத்துல விட்டுட்டு, ஆபீஸ் போனதும், நெஞ்சுல கைய வச்சிட்டு உக்காந்துருக்காரு. கூட வேலை பார்க்கறவங்க உதவியால, மருத்துவமனைக்கு கொண்டாந்தோம். இருதயக் குழாய்ல அடைப்பு; பைபாஸ் ஆபரேஷன் செய்யணும்ன்னு சொல்லிட்டாங்க. ரெண்டரை லட்சம் ரூபாய் செலவாகுமாம். என்ன பண்றதுன்னே தெரியல...' என்றபடி, பக்கத்து படுக்கையில் இருந்தவரின் மனைவியிடம், விசும்பிக் கொண்டிருந்தாள், செல்வத்தின் மனைவி சித்ரா. பதிலுக்கு, அந்தப் பெண் தன் சோகத்தை சொல்ல ஆரம்பித்தாள்.
இதைக் கேட்டபடி, பித்து பிடித்தவர் போல் இருந்தார் செல்வம். "ஆபரேஷன் பணத்துக்கு என்ன செய்வது? தன் சம்பளத்தை மட்டுமே நம்பியுள்ள மனைவி, இரண்டு பிள்ளைகள், வயதான தாய் ஆகியோரை எப்படி காப்பாற்றப் போகிறேன்? எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத எனக்கு, ஏன் இந்த நோய்? கும்பிடும் தெய்வங்களெல்லாம் இல்லாமலே போய் விட்டனரா?'
அடுத்தடுத்து மனதுக்குள் எழுந்த கேள்விகள்; அவரை விசும்ப வைத்தன. மனைவிக்கு தெரிந்தால் அசிங்கம்; அவள், மேலும் அழுவாள். அடக்கிக் கொண்டார்.
""என்ன சார் சின்னப்புள்ளை மாதிரி அழறீங்க?'' காக்கி யூனிபார்மில் நுழைந்தான் அந்த இளைஞன்.
""அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா; சொல்லு நீ யாரு?'' என்றார் செல்வம்.
""என் பேரு சக்திவேலுங்கய்யா; நாளைக்கு உங்களுக்கு ஆபரேஷன்; அதுக்கு உங்களை தயார்படுத்தணும்,'' என்றான்.
அறைக்கதவை அவன் மூட முயன்ற போது ஓடிவந்து, "யாருப்பா?' என்ற சித்ராவை; "கொஞ்சம் வெளியில இருங்கம்மா...' என்று வெளியே அமர்த்தினான்.
பையில் இருந்த எலட்ரிக் ரேஸர் பிளக்கை, ஸ்விட்சில் பொருத்தினான். செல்வத்தின் ஆடைகளைக் களைந்து, உடல் ரோமங்களை வேகமாக அகற்றத் துவங்கினான். கூச்சம் மனதை தின்ன, கண்களை மூடியபடி படுத்திருந்தார் செல்வம்.
""சார்... இன்னும் பத்து பேருக்கு மேல் எனக்கு வேலை இருக்கு; கொஞ்சம் சரியா படுங்க,'' என்றான் சக்திவேல்.
""சாரிப்பா... என்னவோ மனசு கஷ்டம். பணப் பிரச்னை; அதை விட டாக்டர் கத்தி வைக்கப்போறதை நினைச்சு பயம்,'' என்றார் செல்வம்.
""ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கஷ்டம் சார். பணப் பிரச்னை பெரிய பிரச்னைதான். ஆனா, ஆபரேஷனைப் பத்தி பயந்துக்காதீங்க. பத்தே நாள்ல வீட்டுக்கு போயிடலாம். பிறந்து ஒரு வாரமான குழந்தைங்க கூட, இதய ஆபரேஷனுக்கு வருதுங்க. என்ன பாவம் சார் செஞ்சது அந்த பிஞ்சுங்க... நல்லா படிச்சிருக்கீங்க; நீங்க போய் அழுவறீங்களே?''
""என் குடும்பத்தை பத்தி யோசிச்சேன். எனக்கு ஏதாச்சும் ஆச்சுதுன்னா; அவங்க கதி?'' மீண்டும் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது செல்வத்துக்கு.
""அப்படியெல்லாம் தப்பா எதுவும் ஆயிடாது சார். தண்ணி குழாய் அடைச்சிக்கற மாதிரிதான் இதுவும். கனெக்ஷனை மாத்திவுடற மாதிரி, காலில் இருந்து ரத்தக்குழாயை எடுத்து, இதயத்துல அடைப்பு இருக்கற குழாய்க்கு பதிலா பொருத்திடுவாங்க. அப்புறம் ரத்தம் ஒழுங்கா ஓட ஆரம்பிச்சுடும். வழக்கம்போல் எல்லா வேலையும் நீங்க செய்ய ஆரம்பிச்சுடலாம்,'' என்றான் சக்திவேல்.
அவன் பேச பேச, ஆபரேஷனை பற்றிய பயத்தை, மனசில் இருந்து யாரோ அகற்றுவது போல் இருந்தது. அவன் ரேஸர் ஸ்விட்சை நிறுத்தும் போது, மனம் லேசாகி இருந்தது.
""நீங்க எங்க வேலை பார்க்கறீங்க சார்?''
""பத்திரிகை உதவி ஆசிரியரா இருக்கேன்.''
""என் வேலையைப் பத்தி என்ன நினைக்கறீங்க?'' என்ற சக்திவேலின் முகத்தில் சோகம் அப்பியிருந்தது.
""ஏம்பா... சம்பளம் சரியா தர மாட்டேங்குறாங்களா?''
""அதில்லை சார்... இந்த மாதிரி வேலை செய்யறேன்னதும், யாரும் எனக்கு பொண்ணே தர மாட்டேங்குறாங்க. எனக்கு இந்த வேலையே பிடிக்கல.''
""எல்லா தொழிலும் உசந்ததுதான்பா. உன் தொழிலும் மேலானதுதான். நாம் செய்யும் தொழிலை; நாமே குறைச்சலா பேசறது நல்லாவா இருக்கு? கண்டிப்பா உன்னை புரிஞ்சுகிட்ட பெண் உனக்கு மனைவியா வருவா பாரு,'' அவனை சமாதானம் செய்தார் செல்வம்.
""என்னை சமாதானம் செய்யறதுக்காக, நீங்க ஏதோ பேசறீங்க. ஆனா, ஊர்ல யாரு மதிக்கறாங்க? கொஞ்சம் இருங்க சார்,'' என்ற சக்திவேல், சட்டை பையில் இருந்த சிறிய நோட்டை எடுத்தான். ""ஏதாச்சும் எழுதி, கையெழுத்து போட்டுக் கொடுங்க சார்,'' என்றான்.
அந்த நோட்டை வாங்கினார் செல்வம்.
வெள்ளை
பட்டாம் பூச்சிகளாய்
தாதியர்!
நோய் விரட்டும்
தெய்வங்களாய்
மருத்துவர்கள்!
மருத்துவப் பணிக்கு
அஸ்திவாரமாய்,
ஆபரேஷனுக்கு
பூபாளமாய்
சக்திவேல்!
வாழ்க உன் பணி!

என, எழுதி, கையெழுத்திட்டார் செல்வம்.
""கடைசி நாலு வரிக்கு என்ன சார் அர்த்தம்,'' என்ற, சக்திவேலின் முகத்தில் இனம் புரியாத சந்தோஷம்.
""நாளைக்கு எனக்கு ஆபரேஷன் நடக்கப் போகுது. இன்னைக்கே நீ வந்து என்னை தயார் படுத்தலையா? கட்டடம் கட்டுவதற்கு முன், அஸ்திவாரம் அமைப்பாங்களே, அதுமாதிரி உன் வேலை. பொழுது விடியும் போது படிக்கும் ராகம் பூபாளம். அதுபோல, ஆபரேஷனுக்கு பிறகு நோயாளிங்க வாழ்க்கை விடியணும்ன்னா, உன்னோட இந்த பூபாளம் முக்கியம்பா. உன் தொழில் ரொம்ப உசத்தி,'' என்ற செல்வத்தின் கரங்களை பற்றிக் கொண்டான் சக்திவேல்.
""ரொம்ப தாங்ஸ் சார். மனசு நிறைஞ்சாப்ல இருக்கு.''
""உன் பேச்சைக் கேட்ட பிறகு; எனக்கும் மனசு தெளிஞ்சிருக்கு. ஆபரேஷன் பயம் போயிடுச்சி. தாங்ஸ் சக்திவேல்,'' என்றார் செல்வம்.
அதன்பின், அந்த பெரிய ஆஸ்பத்திரி, அவர்கள் இருவருக்குமே வேறு தோற்றம் தந்தது.
ஆறு மாதத்துக்கு பின்... கர்ணனின் கவசம் போல், மார்புக்கு பெரிய பெல்ட் மாட்டிக் கொண்டு, அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார் செல்வம். மார்பில் ஆபரேஷன் வடு நன்கு குணமாகி, காய்ந்து போயிருந்தது. டேபிளில் கிடந்த திருமண அழைப்பிதழில், "மணமகன் சக்திவேல் - மணமகள் செல்லப்பொண்ணு' என்ற எழுத்துகள், கொட்டை எழுத்தில் மின்னிக் கொண்டிருந்தன.
***

மு. இசக்கியப்பன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X