வயலின் வனிதா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2013
00:00

அந்த அரங்கில் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி இருந்தது. இடம் இல்லாததால், அரங்கின் ஓரங்களிலும் ரசிகர்கள் முண்டிக் கொண்டு அமைதியாக நின்றபடியே நிகழ்ச்சியில் மெய் மறந்திருந்தனர். குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவுக்கு அப்படி ஓர் அமைதி. கூட்டத்தினரின் கவனமெல்லாம் மேடையிலிருந்த வயலின் வித்வான் விஸ்வநாதனின் மீதே பதிந்திருந்தது. வயலின் கச்சேரி நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தார் விஸ்வநாதன். வயலினில் விந்தைகள் புரியக் கூடியவர் விஸ்வநாதன். அவர் கச்சேரிக்காக, பல ஊர் சபாக்கள் தேதி கிடைக்காமல் காத்துக் கொண்டிருந்தன. ரசிகர்களும்தான்!
அன்றைய கச்சேரிக்கு, அவரது மகள் வனிதாவும், மனைவி மஞ்சுளாவும் வந்திருந்தனர். அரங்கின் முன் வரிசையில் அவர்கள் உட்கார்ந்திருந்தனர். மறுநாள் பெங்களூரில் கச்சேரி. வனிதா பெங்களூரு பார்த்ததே இல்லை என்று கூறியதினால், அவளையும் தன்னோடு கச்சேரிக்குக் கூட்டிப் போகத் தீர்மானித்தார் விஸ்வநாதன். அவரும், வனிதாவும் இல்லாதபோது மனைவி மஞ்சுளா மட்டும் வீட்டில் தனியாக இருப்பாள் என்பதால், தன் மனைவியையும் அழைத்து வந்திருந்தார்.
கச்சேரி முடிந்ததும், அன்றிரவே மூவரும் காரில் பெங்களூரு போவதாகத் திட்டம். மஞ்சுளா அவருடைய இரண்டாவது மனைவி; வனிதாவின் சிற்றன்னை. தன் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் வனிதா. குழந்தையைப் பாசமுடன் அணைத்துக் கொள்ளும் தாயைப் போல, அவர் வயலினை இடது மார்பகத்தில் அழுத்திக் கொண்டு கண்களை மூடியபடி கச்சேரி செய்யும் காட்சியைக் கண்ட வனிதா, "நானும் அப்பாவைப் போல இவ்வளவு பெரிய சபையில் வயலின் வாசிக்க வேண்டும். அப்பாவை போலவே புகழ் பெற வேண்டும்!' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
அப்போது கடலலை போல சபையோர் கரவொலி எழுப்பினர். விஸ்வநாதன் அந்தக் கீர்த்தனையை ஒரு மிடுக்கோடு நிறைவு செய்து நிறுத்தியபோது, கரவொலி அடங்க வெகு நேரமாகியது. அதன் பிறகு விஸ்வநாதனை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அன்புப் பிடியிலிருந்து விடுபட்டு, உணவை முடித்துக் கொண்டு, காரில் கிளம்பும் போது பத்து மணியாகி விட்டது.
விஸ்வநாதன் காரை ஓட்டிக் கொண்டே, ""பனிரெண்டு மணி வரை பயணம் செய்யலாம். பிறகு ஒரு ஒட்டலில் ரூம் எடுத்துத் தூங்கி விட்டு, விடியற்காலையில் காரைக் கிளப்பினோ மானால், காலை எட்டு மணிக்கெல்லாம் பெங்களூரு போய் விடலாம்,'' என்றார்.
""உங்க பெண், இன்னிக்கு உங்க கச்சேரியை ரொம்ப ரசிச்சி, உணர்ச்சிவசப்பட்டுட்டா...'' என்றாள் மஞ்சுளா.
வனிதாவின் மடியில் அப்பாவின் வயலின் பெட்டி இருந்தது. அதைத் தடவிக் கொண்டிருந்தன அவள் கைகள். அவள் கண்கள் மூடியிருந்தன. "ஒருநாள் நான் என் அப்பா மாதிரியே இந்த வயலினை அற்புதமாகக் கையாளுவேன்!' என்று அவள் மனசுக்குள் கூறிக் கொண்டிருந்தாள்.
மஞ்சுளாவின் பேச்சைக் கேட்டவர், ""என்னைப் போலவே அவளுக்கும் வயலினில் ஈடுபாடு இருக்கு. அப்பா பெயரைக் கூறும்படி ஒருநாள் புகழ் பெறுவாள் வனிதா...'' என்று கூறியவர், பின் சீட்டிலுள்ள தன் அருமை மகளை திரும்பிப் பார்த்தார். வனிதா கண் மூடியபடி, சங்கீதக் கனவில் லயித்திருந்ததைக் கண்டு, "குழந்தை தூங்குகிறாள்' என்று காரோட்டத்தில் கவனம் செலுத்தத் திரும்பிய அதே வேளையில், வீதியின் வளைவில் இருளைக் கிழித்துக் கொண்டு, கொள்ளிவாய் பிசாசு போல, "ஹெட் லைட்டுகள்' இரண்டும் பளிச்சிட, புயல் வேகத்தில் டயர்கள் சாலையைக் கவ்விக் கடித்து கிறீச்சிட.
""ஐயோ நம்ம காரை நோக்கி நேரே வருதே அந்த லாரி...!'' என்று மஞ்சுளா தன் வார்த்தைகளை முடிக்கும் முன் எல்லாம் முடிந்து விட்டன. விஸ்வநாதனின் கார் பொம்மையாக உருண்டு, புரண்டு, சாலையை அடுத்திருந்த வயல் பள்ளத்தில் விழுந்தது. வலப்பக்கத்துச் சக்கரங்கள் இரண்டும் வானத்தை நோக்கிச் சுழன்று கொண்டிருந்தன. மோதித் தள்ளிவிட்டு, அதே வேகத்தில், பீதியடைந்து சிட்டாய்ப் பறந்து மறைந்தது அந்த லாரி.
அந்தக் கொடுமையை உலகுக்குக் காட்ட சூரியன் உக்கிரமாக வெளிப்பட்டான். கூட்டம் மொய்த்துக் கொண்டது. போலீஸ், ஆம்புலன்ஸ் வண்டிகள் அலறிக் கொண்டு வந்தன. ஆனால், விஸ்வநாதனையும், மஞ்சுளாவையும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
""இந்தப் பெண் குழந்தைக்கு இதயத்துடிப்பு இருக்கிறது சீக்கிரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்...!'' என்றார் இன்ஸ்பெக்டர்.
""இவ்விரு உடல்களையும் மார்ச்சுவரிக்கு அனுப்புங்கள்!''
""சார்! இந்தக் குழந்தையின் அணைப்பி லுள்ள வயலின் பெட்டியை விடுவிக்க முடியல்லே!'' என்றார் ஒரு கான்ஸ்டபிள்.
""வேண்டாம். அப்படியே டாக்டரிடம் ஒப்படையுங்கள்... சோதனைக்குப் பிறகு அவர் செய்ய வேண்டியதைச் செய்வார். அந்தக் குழந்தையின் நிலை என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆகவே, பலவந்தமாக நீங்கள் ஏதும் செய்ய வேண்டாம்; நலுங்காமல் ஸ்டெச்சரில் வைத்து ஆம்புலன்சில் ஏற்றுங்கள்!'' என்றார் இன்ஸ்பெக்டர்.
நினைவிழந்த வனிதாவைச் சுமந்தபடி மருத்துவமனைக்கு நோக்கி விரைந்தது ஆம்புலன்ஸ்.
புகழ்பெற்ற வயலின் மேதை விஸ்வநாதனின் ஒரே பெண் வனிதா. சின்ன வயதிலேயே தாயை இழந்த வனிதாவை, விஸ்வநாதன் தாய்ப்பாசத் தையும் சேர்த்து வளர்த்தார். தன் வயலின் நாதத்திலேயே குழந்தையின் அழுகையை நிறுத்தினார். வயலின் இசைத்தே குழந்தையைத் தூங்க வைத்தார். வனிதா தவழ்ந்து, தளர் நடைபயின்றபோது, அப்பா வயலின் சாதகம் செய்வதையே அசையாமல் பொம்மை போல உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பாள். இசை ஞானம் அவள் ரத்தத்தோடு கலந்து விட்டது. வனிதாவிற்கு ஐந்து வயதானதுமே, அவள் வயலினை தன் பிஞ்சுக் கைகளால், அப்பாவைப் போலவே இயக்க முயற்சிப் பதைக் கண்ட விஸ்வநாதன், அவளுக்கு முறையாகக் கற்பிக்கலானார். சின்னக் குழந்தையாக இருக்கும் போதே, வயலின் இசையினால் வசீகரிக்கப்பட்ட வனிதா, அதில் ஆர்வம் காட்டியதில் வியப்பில்லை; வனிதாவுக்கு பனிரெண்டு வயதான போதுதான் அந்தப் பயங்கரம்; சிற்றன்னை, தந்தை இருவரையும் ஒரே சமயத்தில் இழந்த அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. வனிதா அனாதையானாள்.
மருத்துவமனையின் கட்டிலில் வெள்ளைத் துணிகளுக்கு நடுவே கண் மூடி படுத்திருந்தாள் வனிதா. டாக்டர்களும், நர்சுகளும் கட்டிலைச் சூழ்ந்து நின்றபடி வனிதாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் அவளுக்கு நினைவு திரும்பவில்லை. காரின் பின் சீட்டில் இருந்ததினால் அவளுக்கு உடலில் பெரிய காயங்கள் ஏதுமில்லை.
""வெளியில் தெரியும்படியான காயம் ஏதுமில்லா விட்டாலும் உட்காயம் ஏதாவது ஏற்பட்டிருக் கலாம். அதை, "ஸ்கேன்' செய்து பார்க்க வேண்டும்! ஆனால், அதற்குள் இக்குழந்தைக்கு நினைவு திரும்பினால் நல்லது!'' என்றார் ஒரு டாக்டர்.
""கார் உருண்டு, புரண்டு அதிர்ச்சியில்தான் இப்படி மூர்ச்சையாகி இருக்க வேண்டும். பயங்கரமான ஆக்சிடெண் டாயிற்றே! தாய், தந்தை இருவரையும் ஒரே சமயத்தில் இழந்து விட்டாளே... இந்தக் குழந்தை!'' கரகரத்த குரலில், கண்களில் நீர் திரளக் கூறினார் நர்ஸ்.
""இந்தக் கோமாவிலிருந்து குழந்தையை விடுபடச் செய்து விடலாம். ஆனால், அதை விடப் பெரிய "ஷாக்' தன் பெற்றோரை பறிகொடுத்ததை அறியும் போது ஏற்படுமே... அதை எப்படித் தாங்கிக் கொள்ளும் இந்தக் குழந்தை?'' என்று கவலை யோடு தன் முகவாயைத் தடவிக் கொண்டார் ஒரு டாக்டர்.
""விபத்து நடந்து நாலு நாளாயிற்று. இந்தக் குழந்தையின் உறவினர் யாருக்காவது தகவல் அறிவிக்கப்பட்டதா? போலீஸ் தரப்பிலிருந்து என்ன செய்தி வந்துள்ளது?'' என்று கேட்டார் தலைமை டாக்டர்.
""விபத்தில் உயிரிழந்த இக்குழந்தையின் தந்தை பிரபல வயலின் வித்வான். அவருக்கு இவள் ஒரே குழந்தை. அவருடைய சகோதரி, இக்குழந்தையின் அத்தை மும்பையில் இருக் கிறாராம். அவருக்கு தகவல் தரப்பட்டிருக் கிறது. இன்று அல்லது நாளை அவர் இங்கு வரலாம் என்று எதிர்பார்க்கின்றனர்!'' என்று மருத்துவமனையின் வார்டன் விவரங்களைக் கூறினார்.
கவலையோடு டாக்டர்களும், நர்சுகளும் வனிதாவின் கட்டிலை விட்டு அகன்றனர். டாக்டர்களின் தீவிர முயற்சியினால் வனிதா வுக்கு அன்று பிற்பகல் நினைவு திரும்பியது. கண் விழித்தாள். காத்திருந்த நர்ஸ், டாக்டரிடம் ஓடினார்.
மிரள மிரள விழித்த வனிதாவின் கைகள் அந்த வேளையில் வயலின் பெட்டியைத் தேடின. அவள் குறிப்பறிந்த நர்ஸ், அருகே ஒரு ஸ்டூல் மீது வைக்கப்பட்டிருந்த விஸ்வநாதனின் வயலின் பெட்டியை, துழாவும் வனிதாவின் கைகளில் கொடுத்தார். அதை வாங்கித் தன் மார்போடு அணைத்துக் கொண்ட வனிதா மெல்லிய குரலில், ""நான் இங்கே... எப்படி வந்தேன்? இது மருத்துவமனை போலிருக்கே? எனக்கு என்ன? என் அப்பா எங்கே?'' என்று கேள்விகளை அடுக்கினாள்.
- தொடரும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X