சஹாரா... பயங்கரமானவளே!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2013
00:00

இன்று மனிதன் இவ்வளவு நாகரிக மடைந்து முன்னேறி இருப்பதற்குக் காரணம், அவன் தொடர்ந்து பல பயணங்களை மேற்கொண்டதினால்தான். உணவும், உறை விடமும் தேடி, ஆதிமனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்துக்கு அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டிருந்தான். இன்று அனேகமாக உலகின் நிலப்பகுதிகள் அனைத்திலும் மனிதன் வாழ்கிறான். இன்னமும் கூட மனிதன் போகாத, காணாத நிலப்பகுதிகள் ஒரு சில இருக்கத்தான் செய்கின்றன.
இன்று ஆகாய விமானமும், ஹெலிகாப்டரும் கண்டுபிடிக்கப்பட்டிருக் கிறது. கடக்க முடியாத நிலப்பகுதிகளை இவற்றின் மூலம் சுலபமாகக் கடந்து விடலாம். விமானம் கண்டுபிடிக்கப்படாத நாளில் பாலைவனங்களை மனிதன் எப்படிக் கடந்தான்? ஒட்டகங்கள் ஓரளவுக்கு உதவின. பல ஆயிரம் மைல்கள் பரந்து கிடக்கும் பெரும் பாலைவனங்களில் எப்படிப் பயணிப்பது? பாலைவனத்தின் எல்லைப் பகுதிகளில் (ஓரங்களில்) இருக்கும் இடங்களுக்குச் செல்ல மட்டுமே ஒட்டகங்கள் இருந்தன.
பாலைவனங்களின் மையத்துக்குப் போய் அதை ஆராய வேண்டுமானால் அது சாத்தியமா? அதுவும் உலகின் மிகப் பெரிய பாலைவனமான சஹாராவில்? 50 ஆயிரம் சதுர மைல் பரப்பளவைக் கொண்டது சஹாரா பாலைவனம். உலகின் மிகத் தனிமையான, வீணான, மக்கள் வாழாத பகுதி இந்த சஹாரா! இன்று கூட ஒரு சில வெள்ளையரே இப்பாலைவனத்தை ஓரளவுக்குக் கண்டிருக் கின்றனர். பாலைவன வாசிகளான பெதூயின் இனத்தவரிலும் கூட வெகு சிலரே இதன் மையத்தை அடைந்திருக்கின்றனர்.
"ஓயாஸிஸ்' எனப்படும் பாலைவனச் சோலைகள் சஹாராவில் வெகு சிலவே உண்டு. எங்கும் மணல்... மணல்.... மணல்தான். உப்பு மண் திடல்களும் உண்டு. சஹாரா பாலைவனம் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வடமொழியில் "சாகரம்' என்றால் சமுத்திரம். இந்த "சாகரம்' என்ற வார்த்தையின் மறுவலே, "சஹாரா' என்கின்றனர். இப்பாலைவனத்தில் புதை மணல் பகுதிகள் பல உண்டு. பெரும் மணல் மேடுகள் பல நூறு மைல்களுக்கு நீண்டு கிடக்கும். இதன் மையப்பகுதியை, "எம்ப்டி குவார்ட்டர்' சூனியப் பிரதேசம் என்கின்றனர்.
சஹாராவை முழுவதும் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை "வில்பிரட் தெசிகர்' என்பவருக்கு ஏற்பட்டது. பயிர் பச்சைகளின் மீது மேகக் கூட்டம் போல வந்து தாக்கி, நாசமாக்கும் வெட்டுக் கிளிப் பட்டாளம், சஹாராவின் மையப்பகுதியிலிருந்தே வருகின்றன என்று நம்பினார். அதைப் பற்றி ஆராய எண்ணம் கொண்டார் தெசிகர்.
1946ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சஹாரா பாலைவனத்தைக் கடக்கும் பயணத்தை மேற்கொண்டார். பெதூயின் இன மக்களையும், ஒட்டகங்களையும் திரட்டினார். தனது நீண்ட பயணத்துக்கு, மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவுப் பண்டங்களையும், ஆட்டுத்தோல் பைகளில் குடிநீரும் சேமித்துக் கொள்ளப்பட்டன.
சஹாராவின் சூனியப் பகுதியின் தென் எல்லையை நெருங்கியதுமே, பயணத்தில் பங்கு கொண்ட பெதூயின் இன மக்களில் பெரும் பகுதியினர், "மேலே தங்களால் வர முடியாது!' என்று அடம் பிடித்தனர். திரும்பிச் செல்ல உணவு வசதியோடு தங்கள் ஊதியத்தை கொடுத்துக் கணக்கைத் தீர்க்கும்படி வற்புறுத்தினர். தெசிகருக்கு வேறு வழியில்லை. அவர் குழுவில் இப்போது பனிரெண்டு பேரே எஞ்சினர்.
உணவு பண்டங்களும் வெகுவாகக் குறைந்து விட்டன. எஞ்சியுள்ள பாலைவனத்தை எப்படிக் கடப்பது என்று மலைப்பு ஏற்பட்டது. காஸலி என்னும் ஒரு அராபிய மானைச் சுட்டுக் கொன்றனர். ஆனால், பாலைவன நரி ஒன்று அதை இரவில் இழுத்துக் கொண்டு போய் விட்டது. பாலைவனத்தில் முட்புதர்கள் கூட இல்லை. ஓயஸிஸ்கள், நீர் வற்றிய வறண்ட பள்ளங்களாக இருந்தன. தகிக்கும் சூரிய வெப்பத்தில், கால்கள் மண்ணில் புதையப் புதைய மெதுமெதுவே பயணித்தனர்.
பாலைவன ஜீவராசியான பாலைவனத் தேள்களின் பயங்கரம் வேறு. ஒரு சமயம் காலையில் தெசிகர், தம் கால் சராயை அணியும்போது, அதனுள் இருந்த தேள் அவரைக் கொட்டி விட்டது. பாலைவனப் பாம்புகளின் விஷமோ அதைவிட மிகக் கடுமையானது. அதே போல சிவந்தரோமம் மண்டிய கால்களைக் கொண்ட பாலைவனச் சிலந்திகள் வேறு. வெகு வேகமாக இவை ஓடி ஒளியும். பெதூயின் மக்கள் இச்சிலந்தியோடு விளையாடுவர். ஆனால், தெசிகருக்கு இதைக் கண்டாலே அருவருப்பு.
ஒவ்வொரு நாள் பயணமும் நரக வேதனை. உடலுக்குத் தெம்பளிக்கப் போதுமான உணவில்லை. தாகத்தினால் வாய் உலர்ந்தது. உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டது. ஒட்டகங் களும் தள்ளாடின. காய்ந்து வறண்டு கிடந்த ஒரு ஓயஸிஸ்ஸில் இரவு முழுவதும் தோண்டினர் தண்ணீரைக்காண. பல மணிநேரப் பாட்டுக்குப் பின், பிசுபிசுப்பான பச்சை நிறத்தில் ஒரு திரவம் வெளிப்பட்டது. பெதூயின் மக்கள் அதன் நாற்றம் தாங்காமல், முகம் திருப்பிக் கொண்டனர். ஒட்டகங்கள் கூட அதைக் குடிக்க மறுத்து விட்டன.
ஒரு மாத முடிவில் எஞ்சியிருந்த பெதூயின்கள் மீண்டும் புரட்சி செய்தனர். நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் தங்களைப் பணியிலிருந்து விடுவிக்குமாறு கட்டாயப் படுத்தினர். தெசிகருக்கு வேறு வழியில்லை. அவரோடு பயணிக்க இப்போது நான்கு பேர் மட்டுமே. ரஷீத் இனத்தவர் அவர்கள். எம்ப்டி குவார்ட்டரை நன்கு அறிந்தவர்கள்.
பாலைவன சம்பிரதாயப்படி, உணவுப் பங்கீடு மேற்கொள்ளப்பட்டது. ஐந்து பேருக்கும் மீதமுள்ள உணவு இப்போது, ஐம்பது பவுண்டு சோளமும், மாவும், கொஞ்சம் தேயிலை, வெண்ணெய், சர்க்கரை. குடிநீரோ ரொம்பக் குறைவு. ஒரு நாளைக்கு ஒருவருக்கு ஒரு கோப்பை நீர்தான். இறைச்சிக்காக ஒரு ஒட்டகத்தைக் கொன்றனர்.
பாலைவனப் பயணம் தொடர்ந்தது. ஒரு மாபெரும் மணல் மேட்டைக் கடந்தாக வேண்டும். அதன் உயரம் 600 அடிகள். அதன் மணல் புதை மணல் ரகத்தைச் சேர்ந்தது. மிகச் சரிவானது; புதை மணலை ஒட்டகங்கள் தங்கள் பரவும் பாதங்களால் சமாளிக்கும். ஆனால், சரிவில் பயணிப்பது அவற்றுக்கும் கஷ்டம். ஒட்டகங்களின் சுமைகள் அகற்றப்பட்டன; மூட்டைகளை ஒட்டகமோட்டிகள் மேட்டின் உச்சிக்கு இழுத்துக் கொண்டு போயினர். அங்கிருந்து அவற்றைக் கீழே உருட்டித் தள்ளி, பிறகு சேமித்துக் கொண்டனர்.
கொடுமையான களைப்படையச் செய்யும் பயணம். மிக மிக மெதுவாக தவழ்ந்து ஊர்ந்து சென்றனர். தாங்க முடியாத வெப்பத் தையும், நீர்ப் பசையற்றுப் போவதையும் தவிர்க்க, இரவு வேளைகளில் பயணம் செய்தனர். ஆனால், பாலைவனத்தில் இரவில் கடும் குளிராக இருக்கும். உறை பனிக் குளிர். நரம்புகளில் தொடர்ந்து ரத்த ஓட்டம் மிக குளிரைத் தாங்கிக் கொண்டு நடந்தனர். ஓய்வு கொண்டால், குளிரில் விறைத்துப் போக வேண்டியதுதான். ஒருநாள், இரவு தெசிகர் களைப்பினால், தூங்கி விட்டார். பிறகு அவர் எழுந்து உடலை அசைத்து நகரப் பெரும் பாடுபட வேண்டி இருந்தது.
சஹாராவின் மையத்தை நெருங்க, நெருங்க அதன் மணல் கூரான முனைகளைக் கொண்ட ஸ்படிகம் போல கண்ணாடித்துகள்கள் போலிருந்தது. அத்துகள்கள் கால் வெடிப்புக்களில் புகுந்து கொண்டால், வேதனை தாங்க முடியாததாக இருக்கும். காய்ந்த உப்பு மணல் திடலில் பயணிப்பது மகாகொடுமை. எதிர்பாராமல் ஒரு ஒட்டகம் மயங்கிக் கீழே விழ, அதன் மீதிருந்த ஆட்டுத் தோல் குடிநீர்ப் பைகளில் விரிசல் கண்டு, மதிப்புமிக்க ஏராளமான குடிநீர், பாலைவன மணலில் ஓடிப் பாழாயிற்று. அலமலந்து போயினர்.
நீரும், உணவும் இன்றி. ஒரு ஒட்டகம் அடிக்கடி கீழே மணலில் படுத்து விடும். எழுந்திருக்காது. ஐந்து பேரும் தங்கள் ஒருங்கிணைந்த முயற்சியினால், அதை கிளப்பி நிற்கச் செய்வர். தெசிகரும் பல முறை களைப்பினால், மயங்கி விழும் நிலைக்கு ஆளானார்.
சோளக் கஞ்சியிலே பல நாள் பசியாறி வெறுத்துப் போனவர்களுக்கு தலைமை ஒட்டகமோட்டி ஒருநாள் பாலைவன முட்செடிகளுக்கிடையே ஒரு முயலைப் பார்த்து அதைக் கொன்றான். அதன் இறைச்சியை சுவைமிக்க விருந்தாக்கி மகிழ்ந்தனர்.
தலைமை ஒட்டகக்காரர், ""நாம் இன்னும் மூன்று நாளில், தாபாராவையும், காபா கிணற்றையும் அடைந்து விடுவோம்,'' என்று கூறினான்.
அசரீரியாகக் கருதி, தெசிகர் அவன் பேச்சை ஏற்றுக் கொண்டார். அது உண்மையாக இருந்தது. மூன்றாம் நாள் அந்த ஓயஸிஸை அடைந்தனர். ஒட்டகங்கள் மேயப் புல்வெளியும், குடிக்க நல்ல தெளிந்த நீரும் அங்கு இருந்தன. நீர் நிலையைத் தேடி, நீர் அருந்த பாலைவன மிருகங்கள் அங்கு வரும் என்ற நினைப்பும் சுகமாக இருந்தது. பயணப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு சஹாராவின் மையப்பகுதியான எம்ப்டி குவார்ட்டரை அடைந்தார் தெசிகர்.
அராபிய பாலைவனத்தின் கொடுமை யிலிருந்து தப்பி உயிர் பிழைத்தாலும் தங்களுடைய மிகக் கடுமையான மோசமான பயணம் இனிமேல் தான் என்பதை அவர் மறக்கவில்லை. விசுவாசமிக்க நான்கு ரஷீத் இன மக்கள் தனக்குப் பலமாக இருந்ததற்கு அவர்களுக்கு நன்றி கூறி திரும்பி வந்தார்.
சஹாரா பயங்கரமானவளே!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X