துப்பறியும் புலிகள் 007 | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
துப்பறியும் புலிகள் 007
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 மார்
2013
00:00

சுதன்குமார் பெரும் பணக்காரர். உயர்ந்த உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுத் தன்னந்தனியாக வாழ்ந்து வந்தார். அவரது மனைவியையும் ஒரே மகனையும் விதி, அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டு விட்டது. வாழ்க்கையில் ஒருவித வெறுப்போடு காலந் தள்ளி வந்தார். அவரது செல்வத்தையும், தனிமையையும் பயன் படுத்திக் கொண்டு உற்றார், உறவினர் வந்து ஒட்டலாயினர். ஆரம்பத்தில், அவர்களை அனுமதித்த சுதன், நாளடைவில் அவர்களுடைய உள் நோக்கத்தைப் புரிந்து கொண்டார். நிரந்தர மாகத் தன் விருந்தாளிகளாகத் தங்கி, தின்று அழித்து, அதிகாரமும், அட்டகாசமும் செய்வதைத் சகித்தவர், ஒருநாள், உறவினர் களையெல்லாம் விரட்டினார்.
""இனி யாரும் என் வீட்டு வாசல்படி ஏறக்கூடாது. இங்கு வராதீர்கள்,'' என்று விரட்டினார்.
சுதன்குமாருக்கு எல்லாமே வெறுத்து விட்டது. ஆனாலும், ஒரு நபர் மீது மட்டும் அவருக்குப் பாசமுண்டு. அது அவரது தூரத்து உறவுப் பையன் நரேஷ். மற்றவர்களைப் போல் அவன் இவரிடம் வந்து முகாமிட்டு அட்டகாசம் செய்யவில்லை. பல மைல்களுக்கு அப்பால், வேறு ஊரில் வசித்து வந்தான்.
சுதன்குமார் அவனுக்குத்தான் நலம் விசாரித்து கடிதம் எழுதுவார். அன்றும் அதற்காக, வரதனை கூப்பிட்டார். முதுமையும், மன உளைச்சல்களும் சேர்ந்து சில காலமாக அவர் கைகளில், நடுக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. ஆகவே, வரதன்தான் அவருக்காகக் கடிதங்களை எழுதி வந்தான்.
வரதன் அவருடைய வீட்டுக் காரியஸ்தன். இருபது வருடமாக சுதன் குமார் அவரது உறவினன் போல இருந்து வருகிறவன். அவர் குடும்பத்து சுகதுக்கங்களில் பங்கு கொண்டவன். சுதனின் தேவைகளையெல்லாம் கவனித்து வருபவன்.
""உன் வேலையை எல்லாம் முடித்துக் கொண்டு வா வரதன். நரேஷûக்குக் கடிதமெழுதணும்,'' என்றார் பெரியவர்.
திடீரென்று யாரும் எதிர்பார்க்காதபடி அது நிகழ்ந்து விட்டது. சுதன்குமார் மாரடைப்பினால் மரணமடைந்தார். என்ன தான் அவர் உற்றார் உறவினர்களை கோபத்தில் விரட்டினாலும் உரிமை விட்டுப் போகுமா? நெருங்கிய உறவினர்களெல்லாம் வந்து கூடினர். பாசமில்லா விட்டாலும், அவருடைய பணமிருந்ததே.
சுதன்குமாரின் அந்திமக் காரியங்கள் முடிந்த பின், ஒருநாள் அவரது உறவினர்களைக் கூட்டினார் சுதன்குமாரின் வக்கீல்.
""பெரியவர் திடீரென்று இறந்ததால், உயில் என்று எதுவும் எழுதவில்லை. ஆகவே, அவரது சொத்துக்கள் அவரது நெருங்கிய உறவினர்களுக்குச் சமமாக பங்கிட்டுத் தரப்படும்,'' என்றார்.
அப்போது கூடி இருந்தவர்களிலிருந்து ஒரு குரல், ""உயில் ஏதுமில்லையா? யார் கூறியது. இதோ, போன மாதம் எனக்கு வந்த கடிதம். மாமா சுதன்குமார் கைப்பட எழுதி கையொப்பமிட்டிருக்கிறார்,'' என்று கூறியபடி, ஒரு கடிதத்தை வக்கீலிடம் நீட்டினான் அந்த இளைஞன். அவன் தான் நரேஷ்.
சுதன்குமார் அன்புக்குப் பாத்திரமானவன்; வக்கீல் கடிதத்தைப் பார்த்தார். அவனையும் பார்த்தார். கடிதத்தில், "தம் சொத்துக்களை தனக்குப் பின், அவன் (நரேஷ்) அடைய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார் சுதன்குமார்.
நடந்தவைகளை விவரித்து விட்டு, ஹனியைப் பார்த்துக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.
""சுதன்குமார் சொத்துக்களுக்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறாயா ஹனி. வக்கீல் என்னிடம் வந்தார். நரேஷ் கொடுத்த கடிதத்தில் அவருக்கு சந்தேகம். ஆகவே, என் உதவியை நாடினார். எனக்கு இதில் ஒன்றும் புரிய வில்லை. கடிதத்தில், சுதன்குமார் கையொப்பமிருக்கிறது. கடிதமும் அவர் எழுதியது போலத்தானிருக்கிறது. ஆனால், வக்கீலுக்கு ஏதோ ஒரு நெருடல். உனக்கு சூட்சுமமாக ஏதாவது தோன்றுமே. சுலபமாக சிக்கலைத் தீர்த்து விடலாமே, என்றுதான் உன்னிடம் வந்தேன்!'' என்றார் இன்ஸ்பெக்டர்.
காபியுடன் வந்த ஹனியின் சித்தி இன்ஸ்பெக்டரிடம், காபியை நீட்டிக் கொண்டே, ""உங்க இலாகாவிலேயே, ஹனியைச் சேர்த்துக் கொண்டு விடுங்களேன், அவள் மேலே படிக்க வசதியாக, வருவாய் கிடைத்த மாதிரியும் இருக்கும்,''என்றாள்.
""அதுக்கென்ன, உரிய சமயத்தில் அது நடக்கும். இப்போ உங்க பெண்ணுக்குப் பாராட்டும், பரிசும் வழங்க மேலிடத்துக்கு சிபாரிசு செய்து எழுதி இருக்கிறேன். சீக்கிரமே அந்த சந்தோஷ சமாசாரத்தைக் கேக்கப் போறீங்க,'' என்றார் இன்ஸ்பெக்டர் காபியை ருசித்தபடி.
""இப்போ சுதன்குமார் வீட்டிலே யாரு இருக்காங்க?'' என்று கேட்டாள் ஹனி.
""யாருமில்லே... வீடு பூட்டி இருக்கு. சாவி வக்கீல்கிட்டே இருக்கு,'' என்றார்.
""நான் அந்த வீட்டை நோட்டமிடலாமா?''
""தாராளமாக...'' என்றவர் ஹனியை தன் போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு, வக்கீல் வீட்டுக்குப் போய், அவரையும் அழைத்துக் கொண்டு, சுதன்குமார் பங்களாவுக்கு வந்தனர்.
ஹனி, சுதன்குமார் அறையை ஆராய்ந்தாள். அவரது மேஜை டிராயரில் பேனாவோ, பேப்பரோ ஏதுமில்லை.
""எழுதுவதற்கான எந்தவிதமான சாதனமும் இங்கில்லையே,'' என்றவள் அடுத்து, காரியஸ்தன் வரதன் அறையில் உள்ள மேஜையில் இங்க் புட்டி, பேனா, லெட்டர் பேட் எல்லாம் இருப்பதைக் கண்டாள். வரதன் எழுதி நிராகரித்து கசக்கிப் போட்ட கடிதங்களும் இருந்தன. அவன் கையெழுத்தையும், நரேஷ் உயில் என்று கூறிக் காட்டிய சுதன்குமார் எழுதிய கடிதத்தின் எழுத்துக்களையும் சுதன்குமார் பழைய பைல்களில் உள்ள கடிதங்களில் அவர் கையெழுத்துக்களையும் தன்னோடு கொண்டு வந்திருந்த பூதக் கண்ணாடியினால், வெகு நேரம் சோதனை யிட்ட ஹனி, இது போர்ஜரி கடிதம் என்று கூறினாள்.
""எப்படி சொல்கிறாய்? இது போர்ஜரி கடிதம் என்று... யார் செய்திருப்பார்கள்?'' என்று கேட்டனர் இன்ஸ்பெக்டரும், வக்கீலும்.

விடைகள்: போர்ஜரி செய்தவன் நரேஷ். மாமாவிடமிருந்து தனக்கு வரும் கடிதங்களின் எழுத்தை உற்றுப் பார்த்து ஆராய்ந்து, அவர் எழுதியது போலவே ஒரு உயிலை எழுதித் தயாரித்திருந்தான் கள்ளக் கையெழுத்தில் வல்லவனான நரேஷ். ஆனால், மாமாவின் கடிதங்களை அவர் எழுதவில்லை. வரதன்தான் எழுதுகிறான் என்பது அவனுக்குத் தெரியாது. அவன போர்ஜரி செய்தது வரதனின் கையெழுத்தை. ஆகவே ஹனியிடம் சிக்கிக் கொண்டான். சூப்பர் இல்ல...!

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X