ரகசிய பூஜை! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
ரகசிய பூஜை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 மார்
2013
00:00

ஒருசமயம், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயருடைய அவைக்கு, நீண்ட ஜடாமுடி தரித்த, வாட்டசாட்டமான ஒரு சந்நியாசி வந்தார்.
வரும்போதே அவர், ""அரசே! விஜயநகருக்குப் பெரிய ஆபத்து ஒன்று காத்திருக்கிறது. அதைக் கூறி எச்சரிப்பதற்காக, இமயத்திலிருந்து வருகிறேன்,'' என்றார்.
அதைக் கேட்டதும், அரசர் சற்றுப் பதற்றம் அடைந்துவிட்டார். ஒரு தனியறையில், அரசருடன் ஆலோசனை நடத்தினார் சந்நியாசி.
""அரசே! தலைநகருக்கு வெகு தூரத்தில், காட்டில் ஒரு பழமையான பங்களா உள்ளது. அங்கு கெட்ட கிரகங்களைக் களைவதற்காக, ஏழு நாட்களுக்கு ஒரு பூஜை செய்யப்போகிறேன். ஏழாவது நாள் பூஜைக்கு நீங்கள் தனியாக அங்கு வாருங்கள். எல்லாம் நல்லபடியாக முடியும்...'' என்றார் சந்நியாசி.
மறுநாள் முதலே, சந்நியாசி யின் பூஜை தொடங்கி விட்டது. ஏழாம் நாள் அரசர் குதிரை மீதேறி அமர்ந்து தனியாக அந்தக் காட்டுப் பங்களாவை நோக்கிச் சென்றார். சந்நியாசி அரசரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
அரசரை வரவேற்ற அவர் ""அரசே! என்னுடைய காரிய சித்தியின் பெருமையைப் பாருங்கள். நான் உச்சரிக்கும் மந்திரத்தின் ஒலி வெகு தூரம் பரவித் திரும்பக் கேட்கும்,'' என்றார்.
உண்மை என்ன வென்றால், சந்நியாசி, கூறிய ஏதோ ஒரு ரகசிய ஒலி, உரக்கத் திரும்பக் கூறப்பட்டுப் பரவியது. அரசர் திடுக்கிட்டார்...
அதே சமயம், முண்டாசு அணிந்த உயரமான ஒரு மனிதன் உள்ளே வந்து, அரசருக்கு அருகில் அமர்ந்துக் கொண்டான்.
அறையில் ஒலித்த சத்தத்தைக் கேட்டு, உரத்த குரலில், ""அடேய்... இதெல்லாம் ரகசியம், பாதாள ரகசியம்...'' என்றார்.
அவர் குரல் நின்றதுமே, மந்திரம் ஒலிப்பதும் நின்று விட்டது. சிலர் விரைந்து ஓடும் ஓசை கேட்டது. அரசரிடம் அதிர்ச்சி! சந்நியாசிக்கு வியர்த்து விட்டது. ஆனால், முண்டாசு மனிதர் மட்டும், அமைதியாக இருந்தார்.
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, விஜய நகர வீரர்கள் மூன்று பேரைச் சிறைப்பிடித்து அழைத்து வந்தனர். அவர்கள் சந்நியாசி வேடத்தில் இருந்த எதிரிகளின் ஒற்றர்கள்! வீரர்களைப் பார்த்ததும், சந்நியாசி ஓடினார். ஆனால், அவரும் துரத்திப் பிடிக்கப்பட்டார்.
அப்போது முண்டாசு மனிதர் தனது முண்டாசைக் களைந்தார். அவரைக் கண்டு அரசர் திடுக் கிட்டார்... அருகில் தெனாலிராமன்!
""செல்லுங்கள் அரசே! விரைவில் இங்கிருந்து போய்விடுவோம். கீழே சுரங்கத்தில் வெடி வைக்கப் பட்டுள்ளது. அதை வெடிக்கச் செய்து இந்தப் பங்களாவைச் சிதறடிக்க வேண்டும் என்பது சந்நியாசியின் திட்டம். மறைந்து கொண்டு மந்திரத்தைச் திரும்பச் சொன்னவன், அவன்தான். எனக்கு ஆரம்பம் முதலே, சந்தேகம் தான். இப்போது பிடிபட்டு விட்டனர்...'' என்று தெனாலிராமன் சொன்னதும் தான், அரசருக்குத் தனது தவறு புரிந்தது.
""உண்மைதான் தெனாலிராமா! நீ சரியான நேரத்தில் வந்தாய்... இல்லா விட்டால், என்ன நடந் திருக்குமோ? நினைக்கவே நடுங்குகிறது...'' என்ற அரசர் தெனாலிராமனை வாரி அணைத்துக் கொண்டார்.
***

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X