எனக்குத்தான்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
எனக்குத்தான்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 மார்
2013
00:00

அருண் ஓவியத்தில் கெட்டிக்காரர். அவருடைய ஓவியங்களுக்காக அவருக்கு அடிக்கடி பரிசுகள் கிடைத்தன. முதலில் நகர அளவில் தன்னுடைய ஓவியத்தைப் போட்டிக்கு அனுப்பி, "தானே திறமைசாலி' என நிரூபித்து வென்றார்.
இரண்டாவதாக மாநில அளவு, மூன்றாவ தாக தேச அளவு, நான்காவதாக உலகளவு என்று தன்னுடைய திறமையைக் காட்டிக் கொண்டே வந்தார். அவர் ஓவியம் உலக மெங்கும், "ஆஹா, ஓஹோ' என்று புகழ் பெறத் துவங்கியது. ஆகவே, அவருக்குக் தலைக்கணமும் ஏறியது.
ஒரு சமயம் வெளிநாட்டில் இருந்து சர்வதேச ஓவியக் கண்காட்சிக்காக, இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் அவரும், அவர் ஓவியங்களும் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தது.
எனவே, அருண் இரவு, பகலாகச் சிந்தித்து மிக, மிக எதார்த்தமான நேர்த்தியான ஓவியம் ஒன்றினை வரைந்தார். அது உலக அளவில் புகழ் பெறப் போவது நிச்சயம் என்று அவரது நண்பர்கள் புகழ்ந்தனர்.
கண்காட்சி ஆரம்பமானது. அருண் தன் ஓவியத்தை அதில் வைத்திருந்தார். அவர் வரைந்த ஓவியம் இரண்டு எருதுகள் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக, மூர்க்கமாக முட்டிச் சண்டை போடுவது போன்று வரையப்பட்டிருந்தது. மற்றவர்களின் ஓவியங்களை விட இவரின் ஓவியம் மற்றவர்களைக் கவர்ந்தது.
""ஆஹா, என்ன அழகு, என்ன நேர்த்தி, எத்தனை இயற்கை? இவ்வளவு தத்ரூபமாகப் படம் வரைவதற்கு அருணை தவிர வேறு எவராலும் முடியாது!'' என்று பார்த்தவர் புகழாரம் சூட்டினர்.
கண்காட்சிக்கு வந்திருந்த வெளி நாட்டுக்காரர்கள், நம் நாட்டு அரசியல்வாதிகள், பெரும் புள்ளிகள் ஆகிய அனைவரும் ஒட்டு மொத்தமாகச் அருணை புகழ்ந்தனர்.
கண்காட்சியில் வெற்றிக் கேடயமும், பத்து லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் அருணுக்குத்தான் என்று அனைவரும் தீர்மானித்தே விட்டனர்.
அருண் வெற்றிப் போதையில் தள்ளாடினார். ஆகாயத்தில் பறப்பது போல உணர்ந்தார். தன் வாழ்நாளில் இன்று மிக நல்ல நாள் என்று அவர் ஆனந்தக் கூத்தாடினார். மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார்.
"இனி யாரும் என் சாதனையை முறியடிக்க முடியாது' என்று கூறிக் கொண்டார்.
அந்தக் கண்காட்சியை வேடிக்கைப் பார்க்கச் சிறுவன் ஒருவன் வந்திருந்தான். அவன் மாடு மேய்ப்பவன். அருணின் ஓவியத் திறமைகளை மூலைக்கு மூலை புகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்துத் தானும் அந்த ஓவியத்தைப் பார்க்க ஆவலாக வந்தான்.
அருண் ஓவியத்தின் முன் கூட்டமாக இருந்தது. ஒவ்வொருவரும் அந்த ஓவியத்தை அணு அணுவாக ரசித்து, "சபாஷ்!, பலே!' என்று பாராட்டிக் கொண்டிருந்தனர்.
அச்சமயத்தில் தான் அந்தச் சிறுவன் எட்டிப் பார்த்தான். அவர் வரைந்த ஓவியத்தைப் பார்த்தவுடன், குபீர் என்று சிரிப்பு வந்துவிட்டது அவனுக்கு.
விழுந்து விழுந்து சிரித்தான் சிறுவன். அவன் சிரிப்பதைப் பார்த்த கூட்டத்தினரும், ஓவியர் சூழ வந்து நின்று கேட்டனர்.
""தம்பி, அந்த ஓவியத்தில் சிரிக்கும்படி என்ன இருக்கிறது. மிகச்சிறந்த ஓவியக் கலைஞர் ஒருவரை உன் சிரிப்பு புண்படுத்தி விட்டது. அவரிடம் மன்னிப்புக் கேள்!'' என்றனர்.
சிறுவன் விட்டு விட்டுச் சிரித்து விட்டு, "இந்த ஓவியத்தை வரைந்த மாமேதை யார்?' என்று கேட்டான்.
""ஏன், நான் தான் வரைந்தேன். கலை உணர்ச்சியுடன் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றை நகைச்சுவை ஆக்கி விட்டாயே... ஓவியத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?'' என்று சீறினார் அருண்.
""ஓவியத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்பது உண்மைதான். ஆனால், ஓவியத்தில் உள்ள மாடுகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்! உங்களுக்குத் தெரியுமா?'' என்றான் சிறுவன்.
அனைவரும் திகைத்தனர்.
"நீ என்ன சொல்ல விரும்புகிறாய் தம்பி?'' என்று கண்காட்சி அமைப்பாளர் கேட்டார்.
""ஐயா, ஓவியம் அற்புதம் என்பது உண்மைதான். ஆனால், இது தத்ரூபமில்லை!''
""புரியவில்லையே!'' என்றார்.
""ஐயா, இரண்டு எருதுகள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாகச் சண்டையிடும் காலத்தில், அந்த எருதுகள் வால்களை தங்களது பின்னங்கால்கள் இரண்டிற்கும் நடுவே நன்றாக இடுக்கி வைத்துக் கொள்ளும். ஆனால், ஓவியர் போட்டிருக்கும் படத்தில் எருதுகள் இரண்டும் வாலை மேலே நெளிவுகளுடன் உயர்த்திக் கொண்டிருக்கின்றன. இம்மாதிரி ஒரு சண்டையை உலகத்தில் உள்ள எந்த மாடுகளும் எப்போதும் செய்திருக்கவே முடியாது!'' என்றான் மாடு மேய்க்கும் அச்சிறுவன்.
கண்காட்சிக்கு வந்திருந்தவர்களும் ஓவியரும் பிரமித்துப் போயினர்.
அவ்வளவுதான், விஷயம் அப்படியே பரவி அருணுக்கு கிடைக்க வேண்டிய பரிசு கிடைக்காமல் போனது.
தனக்கு எல்லாம் தெரியும் என்று ஆணவம் கொண்ட அருண், அவமானத்தால் தலைகுனிந்தார்.
***

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X