அந்த வெடிகுண்டு இரவு 12.45க்கு வெடித்தது.
இரண்டு ஜெர்மன் அதிகாரிகள் திடுக்கிட்டுத் தீவிரமாக நகர்ந்தனர். அவர்கள் ஏக்கத்துடன் காத்திருந்த அந்தவேளை வந்து விட்டது. அவ்வேளை 1944ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி. யாராலும் மறக்க முடியாத தேதி என்று கருதினர். அந்தத் தேதியில்தான் ஜெர்மனியை ஆண்ட ராட்சதன், ஐரோப்பாவை அடிமைப்படுத்திய அடால்ப் ஹிட்லர் இறந்தான் என்பது.
அதிர்ச்சியுற்று அவசரமாகச் செயல்பட்ட இரு ஜெர்மன் ராணுவ அதிகாரிகளில் ஒருவரான, கர்னல் கிளாஸ்வான் ஸ்டாபன்பெர்க் கம்பீரமான தோற்றம் உடையவர். உடலில் காயங்கள் அடையாளங்கள் இருந்தபோதிலும் அழகானவர்; வட ஆப்பிரிக்கப் போரில் ஈடுபட்டிருந்த போது, அவரது டிரக்கை எதிரிகள் தாக்கிய நேரத்தில், பலத்த காயமடைந்தார் ஸ்டாபன்பெர்க். ஒரு கண் பறிபோயிற்று; இடதுகண் இருந்த இடத்தில் ஒரு கருப்புத் துணி மூடி இருந்தது. செயற்கையான வலது கால், இடதுகையில் மூன்று விரல்கள் மட்டுமே. இப்படிப் போர்த்தழும்புகளைக் கொண்ட ஸ்டாபன்பெர்க்தான், ஒரு பிரீப் கேஸில் வெடிகுண்டிகளை நிரப்பி, ஓநாய்க் குகை என்றழைக்கப்படும் கிழக்கு பிரஷ்யாவிலுள்ள ஹிட்லரின் தலைமையகத்து மாநாட்டுக் குடிசையில், ஹிட்லரின் இருக்கைக்குப் பின்னே வைத்தவர். குண்டு வெடிப் பதற்காகக் காத்திருந்தார். உற்று நோக்கியபடி ஓநாய்க் குகையில் மிச்சம் மீதி என்ன இருக்கிறது என்பதை அறிவதற்காக.
இவ்வளவு பெரிய குண்டு வெடிப்பில் உயிருடன் யாரும் பிழைத்திருக்க முடியாது என்ற நம்பிக்கையில், தன் காவல் பொறுப்பைத் தன் கூட்டாளியான ஜெனரல் பெல்ஜி பெல்லிடம் ஒப்படைத்து விட்டு, அங்கிருந்து கிளம்பினார் ஸ்டாபன்பெர்க்.
தன் வருகைக்காகக் காத்திருந்த மற்றொரு உயர் அதிகாரியிடம் "ஹிட்லர் இறந்து விட்டார்... இறந்திருக்க வேண்டும்!' என்று கூறி இருவரும் தலைமையகத்திலிருந்து அபாய எச்சரிக்கை அறிவிப்பு ஒலி எழுப்பப்படுமுன், தயாராக உள்ள தங்கள் விமானத்தில் ஏறி பெர்லினுக்கு விரைந்தனர்.
நாஜிகளுக்கு எதிராகப் புரட்சி செய்ய முழு வீச்சில் ஈடு பட்டிருந்த குழுவினர், ஓநாய்க் குகையிலிருந்து வரும் செய்திக்காக தங்கள் சதித்திட்டம் வெற்றி கரமாக நிறை வேறியது என்று தெரிந்துகொள்ள காத்திருந்தனர்.
உற்சாகம் கொப்பளிக்கும் மனநிலையில், நாஜி ஜெர்மனியின் கெடுமதி கொண்ட மேதை செத்தான் என்ற மகிழ்ச்சியில், விமானத்தில் பறந்து கொண்டிருந்தார் ஸ்டாபன்பெர்க். அவர் எண்ணம் தவறு.
ஹிட்லர் இறக்கவில்லை. குண்டு வெடிப்பினால் நிலைகுலைந்து போனார். அவ்வளவே!
விடிவதற்குள் சதித்திட்டம் அம்பல மாகியது. ஸ்டாபன்பெர்க்கும் கூட்டாளியான ஹாப்டனும், வேறு இரண்டு "எடிசி'களும், இரு அதிகாரிகளும் பெர்லின் அரசவை முற்றத்தில் சுட்டுக் கொல்வதற்காக நிறுத்தப்பட்டனர்.
துப்பாக்கியைச் சுடுபவர்கள் அதை உயர்த்தும் போது, "ஸ்டாபன்பெர்க் புனிதமான ஜெர்மனி நீடுழி வாழ்க!' என்று குரலெழுப்பிக் கோஷமிட்டார்.
சரித்திரத்தின் உன்னதமான வீரர்களுக்கும், ஒற்றர்களுக்கும் கிட்டக்கூடிய மரணம் அது.
உலகிலிருந்து ஒரு கொடிய அரக்கனை ஒழிப்பதற்காகப் பாடுபட்ட ஒருவனை எப்படி துரோகி என்றழைக்க முடியும் என்று சிலர் கேட்கலாம். ஆனால், ஒரு ராணுவ அதிகாரியான அவர் செயல், "அரசு எதிர்ப்புக் குற்றம்' ராணுவ விதிகளின்படி. அப்போது அவருடைய நாடு (ஜெர்மனி) தொடர்ந்து வாழ்வதற்காக, தன் எதிரிகளான அமெரிக்கா, பிரிட்டனுடன் போராடிக் கொண்டிருந்தது. இவ்வேளையில், அந்த நாட்டை ஆளுபவரின் செயலும் அவர் நல்லவரோ, கொடியவரோ உதவுவதுதான் ராணுவ அதிகாரியின் கடமை. இதை ஸ்டாபன்பெர்க்கின் கூட்டாளிகள் அவரிடம் கூறிய போது, அவர் கூறியது என்ன தெரியுமா? இத்தகைய காரியத்தைச் செய்யும் துணிவுள்ளவனுக்கு சரித்திரம் தன்னைத் துரோகி என்று பழிக்கும் என்பது தெரியும். ஆனால், அவன் இக்காரியத்தைச் செய்யா விட்டால் அவன் மனசாட்சி அவனை, "துரோகி' என்று தூற்றும்!''
க்ளாஸ்வான் ஸ்டாபன்பெர்க், பிரபு குடும்பத்தில், 1907ம் ஆண்டு பிறந்தவர். பின்னால் நாஜிகள் அவரை, இயல் நிலைக்குக் குறைவானவர், சீர்கேடுற்றவர் என்றெல்லாம் வர்ணித்தாலும் ராணுவத்தில் எல்லாராலும் பாராட்டப்பட்ட அதிகாரியாக, ஜெனரல் பதவிக்கு உயரும் தகுதி பெற்றவராக விளங்கியவர். கவர்ந்திழுக்கும் காந்த சக்தி கொண்டவர். தீரமும், நுண்ணறிவும் மிக்கவர். பெருந்தலைவருக்குரிய இம்மூன்று தகுதிகளையும் உடையவர்.
எல்லா ஜெர்மானியப் பிரஜைகளைப் போலவே, முதல் உலகப் போரில், ஜெர்மனி தோல்வியுற்றதற்காக வெட்கப்பட்டவர். ஹிட்லரின் வளர்ச்சியில் மயங்கி, தாய் நாட்டுக்கு அமைதியையும், அடக்க முடியாத பலத்தையும் தரக்கூடியவர்' என்று நாஜி இயக்கத்தில் இணைந்தார். ஹிட்லர் ரத்தம் சிந்தாமல் செக்கோஸ்லோ வேகியாவை 1938ல் ஆக்கிரமித்துக் கொண்ட போது கூட, அங்கு மூன்று மில்லியன் ஜெர்மானியர் வாழ்ந்தனர். ஸ்டாபன்பெர்க், நாஜிகளின் தலைவரான ஹிட்லர் சமாதானத்தை நிலை நாட்டுவார் என்றே கருதினார். ஆனால், அதே ஆண்டு நவம்பரில், யூதர் களுக்கு எதிராக அவர் மேற் கொண்ட செயல், யூதர்களின் வழிபாட்டுத்தலங்களை எரித்தது ஆகியவைகளினால், ஆழ்ந்த மதப்பற்றுக் கொண்ட ஸ்டாபன்பெர்க் அதிர்ச்சியுற்றார். ஹிட்லரைப் பற்றி அவர் பீதியடைந்ததை நியாயப்படுத்தியது 1939ம் ஆண்டுப்போர்.
போலந்து, பிரான்ஸ் போர்க் களங்களில் ஸ்டாபன்பெர்க் போர்வீரர் என்ற தகுதியின் உச்சத்துக்குப் போனார். அதே சமயம், தன் சகாக்களிடம் ஹிட்லரை அகற்ற வேண்டியதின் அவசியம் பற்றியும் பேசினார். இத்தகைய புரட்சியை நடத்திச் செல்வதற்கான வயது அவருக்கு இல்லைதான். ஆனால், மனோதிடம் இருந்ததே!
ரஷ்யாவின் மீதுபடையெடுத்துப் பேரழிவு ஏற்படுத்திய புது ஜெர்மனி, தொடர்ந்து வெற்றிமேல் வெற்றியாகக் குவித்துக் கொண்டிருந்தது ஜெர்மனி.
கவுரவத்தையும், கண்ணியத்தையும் காக்க ஹிட்லரை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால் ஏதும் செய்ய முடிய வில்லை. ஆனால், ஹிட்லர் வெல்லப் போவதில்லை என்பது 1943ல் நிச்சயமானதும், ஹிட்லரின் எதிரிகள் அவரைக் கொல்ல வேண்டும் அல்லது பதவி இறக்கம் செய்ய வேண்டும் என்று நம்பினர்.
தொடரும்.