புண்ணிய வசத்தால் மனிதப் பிறவி கிடைக்கிறது என்பர். அப்படிப்பட்ட பிறவி கிடைத்தாலும், எல்லாருமே சந்தோஷமாகவும், சவுக்கியமாகவும் இருப்பதாக சொல்லிவிட முடியாது. இதற்குக் காரணம், பாவம், சாபம், புண்ணியம் என்றெல்லாம் சொல் கின்றனர். அவனவன், அவற்றின் பலன்களை அனுபவித்து விட்டுப் போகிறான். ரொம்பவும் பாவம் செய்தவர்கள், விலங்கு, புழு, பூச்சி என பல ஜீவன்களாக பிறவியெடுத்து, பாவமோ, சாபமோ நிவர்த்தியான பின், விமோசனம் பெறுகின் றனர் என்று சொல்லப் படுகிறது.
அர்ஜுனன் தீர்த்த யாத்திரை சென்றபோது, பல புண்ணிய தீர்த்தங் களில் நீராடி, அகஸ்திய தீர்த்தம், சவ்பத்ர தீர்த்தம், பவ்லோம தீர்த்தம், காரந்தம தீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம் என்ற ஐந்து புண்ணிய தீர்த்தங்கள் உள்ள இடத்தை அடைந்தான். அந்த தீர்த்தங்களில் முதலை இருப்பதாகவும், அதில் இறங்க வேண்டாம் என்றும் அங்கிருந்த ரிஷிகள் தடுத்தனர். ஆனாலும், முதலில் சவ்பத்ரம் தீர்த்தத்தில் இறங்கினான் அர்ஜுனன். உடனே, அதிலிருந்த முதலை இவன் காலை கவ்விக் கொண்டது. மிகவும் சிரமப்பட்டு அந்த முதலையைத் தூக்கி, கரையில் போட்டான் அர்ஜுனன். உடன் அந்த முதலை ஒரு சவுந்தர்யவதியாக ஆடை, ஆபரணாதிகளுடன் உருவம் மாறி நின்றது.
அர்ஜுனன் ஆச்சரியப்பட்டு, "பெண்ணே... நீ யார்? எப்படி உனக்கு இந்த முதலை உருவம் ஏற்பட்டது...' என்று கேட்டான்.
அதற்கு அந்த பெண், "நான் ஒரு தேவகன்னிகை. நானும், என் தோழியர் நான்கு பேரும் போய்க் கொண்டிருந்தபோது, ஒரு மகா தபஸ்வியைக் கண்டோம். அவருடைய தவத்தை கலைத்து; அவரை அடைய விரும்பினோம்.
"அவர் கோபித்து,"என் தவத்தை கலைக்க முயன்ற நீங்கள், பூலோகத்தில் முதலையாகப் பிறந்து, தண்ணீரில் வசிக்கக் கடவீர்...' என்று சாபமிட்டார். நாங்களும் மனம் வருந்தி, சாப விமோசனம் கேட்டோம். "அதற்கு அந்த ரிஷி, "நீங்கள் நூறு வருஷம் முதலையாக இருந்த பின், ஒரு மகா புருஷன் வந்து உங்களை தண்ணீரிலிருந்து எடுத்து கரையில் போடுவான். அப்போது, உங்கள் சாபம் நீங்கி, சுய உருவம் பெற்று, தேவலோகம் செல் வீர்கள்...' என்றார். அது முதல் நாங்கள் முதலையாகி, இந்த தீர்த்தத்தில் கிடக்கிறோம்.
"இப்போது நீங்கள் என்னைத் தூக்கி கரையில் போட்டதால், என் சாபம் நீங்கியது. என் தோழிகள் நால்வரும் மற்ற நான்கு தீர்த்தங்களிலும் முதலையாக இருக்கின்றனர். அவர்களையும் எடுத்து கரையில் போட்டு, அவர்களும் சாப விமோசனம் பெற உதவ வேண்டும்...' என்று கேட்டுக் கொண்டாள். அர்ஜுனனும் அப்படியே அந்த நான்கு முதலைகளையும் எடுத்து, கரையில் போட்டதும், அவர்களும் சுய உருவம் பெற்று, தேவ கன்னிகைகளாக மாறினர். எல்லாரும் அர்ஜுனனுக்கு நன்றி சொல்லி, தேவலோகம் போய் சேர்ந்தனர். மேற்கொண்டு தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தான் அர்ஜுனன்.
இங்கு கவனிக்க வேண்டியது, மகா சாதுவான ரிஷி, தவம் செய்து கொண்டிருந்த போது, அவருடைய தவத்தை இந்த தேவ கன்னிகைகள் கலைத்ததால், சாபம் பெற்றனர். சாதுக்களை நிந்திப்பதோ, அவர்களுடைய ஆசார அனுஷ்டானத்துக்கு இடையூறு செய்வதோ பாவம். இப்படி செய்ததால் தான் தேவ கன்னிகைகளுக்கு முதலை ஜென்மா கிடைத்தது. இது போலவே புலி, சிங்கம் மற்றும் இதர எல்லா விலங்குகளுமே ஏதோ ஒரு பாவத்தின் காரணமாகத் தான் அந்த ஜென்மாவை அடைந்துள்ளன. இதில், புலியாகவோ, நாயாகவோ, புழுவாகவோ பாவத்துக்கு தகுந்தபடி எத்தனை ஜென்மம், எடுக்க வேண்டும் என்றும் உள்ளது. அத்தனையையும் எடுத்துத் தான் தீர வேண்டும். அதனால் தான் பாவம் செய்ய வேண்டாம் என்றனர்; கேட்டால்தானே!
***
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!