கடந்த வாரத்தில், மூன்று பெண்மணிகளை அடுத்தடுத்த நாட்களில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. மூவரும், சமுதாயத்தில் அந்தஸ்துமிக்க பணிகளில் உள்ளவர்கள். ஒருவர் மத்திய அரசின் போதை கடத்தல் கட்டுப்பாட்டுத் துறையில் பணிபுரிபவர். சமீபத்தில் பிடிபட்ட போதைப் பொருள் பற்றியும், அதை கடத்தியவர்களை பிடித்ததில் தன் பங்கு பற்றியும் கூறினார்.
மர்மப் படம் பார்ப்பது போல இருந்தது அவர் கூறிய சம்பவங்கள். ஆண்களுக்கு இணையாக - ஏன், ஆண்களுக்கும் மேல் துணிவாக செயல்பட்டுள்ளார்! ஒரு கட்டத்தில் கடத்தல் கும்பல் தலைவன், தன்னை நான்கு பேர் பின் தொடர்வதாக எண்ணி, அருகே வந்த வெளியூர் பஸ் ஒன்றில் தாவி ஏறி, சென்று இருக்கிறான். அவனுள்ளே ஒரே குறு குறுப்பு... பஸ்சிலும் தன்னை நான்கு பேர், "வாட்ச்' செய்கின்றனர் என்று... சம்பந்தமே இல்லாத அந்த நால்வரிடமும் சென்று, "உங்களுக்கு எவ்வளவு லட்சம் வேணும்ன்னு கேளுங்க... தந்து விடுகிறேன்... என்னை பின் தொடராதீங்க... என்னை கைது செய்திடாதீங்க...' என கெஞ்சி இருக்கிறான். அவர்கள், ஏதோ பைத்தியம் புலம்புகிறது என எண்ணி, சும்மா விட்டு இருக்கின்றனர்.
— இதெல்லாம், அவன் வேறு ஒரு நகரில் கைதான பிறகு கூறியவை; உண்மையிலேயே இவர்கள் கண்ணில் அதுவரை சிக்காமலேயே இருந்திருக்கிறான்... இவர்களும் கடத்தல் கும்பல் தலைவன் சிக்காமல் போயிட்டானே என்ற வருத்தத்தில் இருந்திருக்கின்றனர்.
பெண்கள் இவ்வளவு தூரம் தைரியத்துடன் செயல்படுகின்றனரே என எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டேன். அடுத்த நாள், டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் ஒரு பெண்மணியை, அவரது அலுவலகத்தில் சந்திக்க நேர்ந்தது. சில வருடங்களுக்கு முன் அறிமுகமானவர் அவர்; பட்டமேற்படிப்பெல்லாம் படித்தவர். அவர், எனக்கு அறிமுகமான நேரத்தில், மிகுந்த பொருளாதாரச் சிக்கலில், வேலையின்றி சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது, சொந்தமாக டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார்.
நான் சென்ற நேரம் மிகவும் பிசியாக இருந்தார். "சென்னை - கேஎல் (கோலாலம்பூர்) - புரூனே - லபுவான்... டிக்கெட் போட்டுறலாம். இவ்வளவு ஆயிரம் வரும்...' என சரமாரியாக ஆங்கிலத்தில், டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தார்.
அவரது, ஆங்கில நடையையும், உச்சரிப்பையும் வாய் பிளந்து, "ஆ'வென பார்த்துக் கொண்டிருந்தேன். "லபுவான்' என அவர் குறிப்பிட்ட ஊர் பற்றி, நான் கேள்விப்பட்டதே இல்லை... அது எங்கே இருக்கும் என எண்ணியபடியே அவரை நோட்டம் விட்டேன்.
ஸ்டார்ச் செய்த காட்டன் சாரியை அம்சமாக உடுத்தி இருந்தார். கழுத்தில் தாலி தவிர இன்னொரு செயின். கைக்கு மூன்றாக, ஆறு விரல்களில் மோதிரம்... செல்வச் செழிப்பு தெரிந்தது.
"மணி... எப்படி இருக்கே? என்ன சாப்பிடுறே... காபி, டீ, சாப்பிடறீயா?' எனக் கேட்டார்.
"காபி...' என்றேன்.
தன் இருக்கையை விட்டு எழுந்து சென்றவர், அலுவலகத்திலேயே இருந்த காபி மிஷினில் காபி போட்டு எடுத்து வந்தார்!
பல லட்ச ரூபாய் டர்ன் ஓவர் ஆவதாகவும், கார், வீடு வாங்கி விட்டதாகவும், நண்பர்களின் ஒத்துழைப்பும், வெற்றியைப் பிடிக்க உதவியதாக கூறினார்.
மகிழ்ச்சி தெரிவித்து விடை பெறும் முன், "மேடம் லபுவான்னு ஏதோ ஒரு ஊர் பெயர் சொன்னீங்களே... அது எங்கே இருக்கு?' எனக் கேட்டேன்; சொன்னார். விடை பெற்றேன்.
பரவாயில்லையே... பெண்கள் திறமையான, "பிசினஸ் உமனா'கவும் திகழ்கின்றனரே என எண்ணி மகிழ்ந்தேன்.
அதற்கு அடுத்த நாள் —
வெளிநாட்டு பணத்தை டீல் செய்யும், அலுவலகம் ஒன்றுக்குச் செல்ல நேர்ந்தது. அந்த நிறுவனத்தையும், ஒரு பெண்மணி தான் மானேஜ் செய்கிறார். நேரில் அறிமுகம் இல்லாதவர்; பல முறை போனில் பேசியுள்ளார். 28-29 வயதிருக்கும்; "போஷாக்காக' இருந்தார்!
சென்னை பெண்களுக்கே உரிய தைரியம் உண்டு அவரிடம்; ரொம்ப உரிமை எடுத்துப் பேசுவார். நான் சென்று இருந்த நேரம், டிராவலர்ஸ் செக் தயார் செய்வதிலும், அமெரிக்க டாலர்களை எண்ணுவதிலும் மும்முரமாக இருந்தார். லட்சக்கணக்கான ரூபாய் பற்றி போனில் பேசிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் காத்திருந்தேன்! தன் வேலைகளை முடித்து, என்னுடன் பேச அமர்ந்தார். தனக்குள்ள ஒரு சிக்கலைக் கூறினார். அதைத் தீர்த்து வைப்பதாக உறுதியளித்த பின், அவரது பிசினஸ் பற்றி விசாரித்தேன். ஆரம்ப முதலீட்டுக்கு தன் கணவர் உதவி செய்ததாகவும், இப்போது, அவர் அளித்த பணம் அனைத்தையும் திரும்பக் கொடுத்து விட்டதாகவும் கூறினார். அப்பெண்மணியின் கணவர் வேறு தொழில் செய்வதால், இந்த அலுவலகம் முழுவதையும் அவரே மானேஜ் செய்வதாக கூறினார். 10-12 பேரை பணியில் அமர்த்தி வேலை வாங்குவதாகவும் கூறினார்.
அடுத்தடுத்த நாட்களில், மூன்று சக்சஸ்புல் பெண்களை சந்தித்த அனுபவம் பற்றி லென்ஸ் மாமாவிடம் விவரித்துக் கொண்டிருந்தேன். "அட போப்பா... பெண்கள் முன்னேறிட்டாங்க... முன்னேறிகிட்டு இருக்காங்க... அப்படி, இப்படின்னு நீ தான் மெச்சிக்கணும்... இங்க பாரு... இந்த, "பிசினஸ்' பேப்பரை... என்ன எழுதி இருக்காங்கன்னு...' என்று பேப்பரை என் முன்னே போட்டார்!
சில வருடங்களுக்கு முன், ஆங்கில நாளிதழ் ஒன்றில், ஆபீஸ் பையன் வேலைக்கு, "டிரெயினிங்' எடுத்துக் கொண்டிருந்தபோது, அந்த பெண் நிருபர் அங்கு சீனியர் ரிப்போர்ட்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார். செய்திகளை, "படபட'வென டைப் செய்யும் அவரது வேகத்தை கண்டு மிரண்டிருக்கிறேன். ஒருநாள் இவரைப் போல செல்வாக்கு மிக்க செய்தியாளராக வர வேண்டும் என சபதமெடுத்துக் கொள்வேன் அந்த நாளில்!
"விமன் இன் மீடியா: அன்கிளாமரஸ் ஸ்டோரி...' என்ற தலைப்பிலான கட்டுரை அது...
"மாமா இது இங்கிலீஷûல இல்ல இருக்கு... என்ன எழுதி இருக்காங்கன்னு நீங்களே சொல்லி விடுங்களேன்...' என்றேன்.
கூற ஆரம்பித்தார்: அம்மு ஜோசப்ன்னு ஒரு பெண்மணி, "விமன் இன் ஜர்னலிசம்: மேக்கிங் நியூஸ்'ன்னு ஒரு புத்தகம் எழுதியிருந்தாங்க... மூன்று வருடமா, நாடு பூரா சுற்றி, 200க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்களைப் பார்த்து, பேசி, இந்த புத்தகத்தை எழுதி இருக்காங்க...
இது தொடர்பா, பெங்களூருல இரண்டு, மூன்று அமைப்புகள் சேர்ந்து, ஒரு, "ஒர்க்ஷாப்' நடத்தி இருக்காங்க... அதில் கலந்து கொள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாட்டிலே இருந்து பெண் செய்தியாளர்கள் பங்கு பெற்றனராம்!
கேரளாவில் இருந்து வந்த பிரதிநிதிகள், "பெண்கள் தலைமை ஏற்று குடும்பம் நடத்தும் சமுதாயம் எங்களது என்று பெயரளவில் சொல்கின்றனரே தவிர, நடைமுறை தலைகீழானது. நாங்கள் பணிபுரியும் பத்திரிகை அலுவலகங்களில் மகளிருக்கென தனி, "டாய்லெட்' கூட கிடையாது... அப்புறம் தானே ஓய்வறை பற்றி சிந்திக்க... இதுபற்றி நிர்வாகத்திடம் முறையிட்டால், "நிதி வசதி இல்லை!' என ஒரே வரியில் கூறி விடுகின்றனர். இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும், "மலையாள மனோரமா' நாளிதழில் குறைந்த அளவு பெண் பத்திரிகையாளர் தான் உள்ளனர்!' என்று கூறியுள்ளனர்.
ஆந்திரா நிலையோ இன்னும் மோசம். மொத்த ஆந்திராவிலும் குறைந்த அளவே தான் பெண் பத்திரிகையாளர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் தான் நிருபர்கள்; மற்றவர்கள் அலுவலகத்தில் அமரும் சப் - எடிட்டர்களாம்!
ஆந்திரா, கர்நாடகாவை ஒப்பிடும் போது, தமிழகமும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருக்கிறதாம்! தமிழ் நாட்டின் வட மாவட்டம் ஒன்றில், நாயுடு குடும்பத்தில் பிறந்த பெண் ஒருவர். 18 வயதிலேயே அவருக்கு திருமணம் செய்து வைத் தனர்.
அந்த கிராமத்தில், பெண்கள் புத்தகம் ஏதும் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு உண்டாம்! காரணம், தலைக்கனம் வந்துவிடும் என்பதாம்!
இந்த பெண்மணி, வீட்டுக்குத் தெரியாமல் வார இதழ்கள் வாங்கி படித்து வந்திருக்கிறார். ஒரு இதழ் சிறுகதைப் போட்டி அறிவிக்க, அதில், இப்பெண்மணி வென்றுள்ளார். விஷயம் குடும்பத்தாருக்குத் தெரிய வர, தங்கள் குடும்பத்திற்கு பெருத்த அவமானம் நேர்ந்துவிட்டதாகக் கருதி, "இதுபோல தொடரக் கூடாது...' என எச்சரித்துள்ளனர்.
எச்சரிக்கைகளை மீறி, ரகசியமாக தொடர்ந்து எழுதியுள்ளார் அப்பெண்மணி. பின்னர், அப்பத்திரிகையில் நடந்த பயிற்சி வகுப்புக்கு அழைப்பு வர, ஊர் பஞ்சாயத்திற்கு தன் மனைவியை இழுத்துச் சென்றுள்ளார் கணவன். அது, ஆட்டோ சங்கர் பிரபலமாக இருந்த நேரம்! "ஆட்டோ சங்கர் கடத்தி, கொலை செய்து விடுவான்!' என பஞ்சாயத்தில் பயம் காட்டியுள்ளனர்.
இப்போது, அப்பெண்மணி, பத்திரிகைத் துறையில் பணியில் சேர்ந்து, பல வருடமாகி விட்டது. அவரது கணவரும் சென்னைக்கே வந்து விட்டார்.
அவங்க சொல்றாங்க, "இங்கே வந்து என்னை உளவு பார்க்கும் வேலையை கனகச்சிதமாகச் செய்து வருகிறார் என் கணவர். இந்த, "ஒர்க் ஷாப்'புக்கு வரும் போது கூட, ரயில் நிலையம் வரை வந்து, நான் வேறு ஆண் எவருடனாவது செல்கிறேனா என உளவு பார்த்தார். நான் அதிகம் பேச மாட்டேன்; ஆனால், நினைத்ததை சாதித்து விடுவேன். என் பணி மிகவும் பிடித்திருக்கிறது; கணவரை விட்டு விலகினால்கூட, இதை விட்டுப் போகவே மாட்டேன்...' என்று கூறினாங்களாம்ப்பா... என்று கட்டுரையின் சுருக்கத்தைக் கூறினார் மாமா!
பின்னர், தனிமையில் அமர்ந்து சிந்தித்த போது, தொழிலில், உத்தியோகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தை, பெண்கள் கஷ்டப்பட்டு அடைந்து வருகின்றனர். ஆனால், அவர்கள் சொந்த வாழ்க்கையில் சோகங்கள் சேர காரணம் எதுவாக இருக்கும்? என யோசனை செய்து, யோசனை செய்து, தலைவலி வந்தது தான் மிச்சம்!
உங்களில் யாருக்காவது இதன் காரணங்கள் தெரிந்தால் எனக்கு எழுதுங்களேன்!
***