சி.பா.சித்தரின் பாடலை விட, அப்போது தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த பெண்கள், அதிர்ந்துபோய் திரும்பி பார்த்ததும், பக்கத்து மளிகைக் கடைக்கு வந்த பாவாடை சட்டைச் சித்து வெடைகள் ரெண்டும் மிரண்டு, காதைப் பொத்திக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியோடி யதும், விடலைகளுக்கு கிளுகிளுப்புக்குரிய விஷயங்களாகி விட்டன.
பட்டினத்தாரை பற்றிக் தெரியாவிட்டாலும் கூட அவரது பாடல் உபதேசமான, "உய்யடா உய்'யை பற்றி தெரியாத ஆண்கள் என்று இப்போது ஊருக்குள் ஒருவருமில்லை. அந்தளவுக்கு, சி.பா.சி., அவர்களால், மூலை முடுக்குகளெங்கும் அந்த அருள் நெறி பரப்பப்பட்டிருந்தன. ஏற்கனவே அப்படி பல முறை அன்னாரின் வாயால் கேட்ட பாடல் என்றாலும், ஏற்ற இறக்கங்களுடனான அவரது உச்சரிப்பு, ஆரம்ப வரிகளுக்கு அவர் காட்டும் அபிநயங்கள் ஆகியவை, திரும்ப திரும்ப கேட்டும், கண்டும் ரசிக்கத் தக்கவை. அதோடு நில்லாமல், அன்னார் அதற்கு தன் பாணியிலான வியாக்கியானத்தையும் பதவுரை, தெளிவுரை, பொழிப்புரை சகிதம் வழங்கவே, கடையே களை கட்டிவிட்டது.
அவ்வளவு நேரம் பேசிய பேச்சில், அட்டமா சித்தருக்கு ஒளிவட்டம் பீஸ் போய் விட்டிருந்தது. அடிவாரத்திலிருந்து சிவபான பீடியொன்றை எடுத்துக் கொளுத்தி, பெருவிரல் கவட்டுக்குள் வைத்து, உள்ளங்கை கூடாரத்துக்குள், ஆழ்ந்த இழுப்புகளில் லயித்து விட்டார். அவரது அந்தராத்மா, பழக்க தோஷத்தில் பரமாத்மாவை தேடி ,கொல்லிமலை முதல் கைலாயமலை வரை குட்டியாக்கரணம் போட தொடங்கி விட்டது. எடுத்த காரியம் அரைத் தாண்டலில் நிற்கிறதே என்பதால், கிணறுப் பள்ளம் வரை போய்விட்ட அந்தராத்மாவை ரிவர்ஸ் குட்டியாக்கரணம் போட வைத்து, அதன் ஆப்பாயில் மண்டையில் ஆணியடித்து, கட்டி நிறுத்தினார்.
"பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம்' என்ற பட்டினத்தாரின் நாற்றப் பாட்டொன்றை எடுத்து விட்டவர் (அவர் பாடிய அந்த பாடல், தணிக்கை மற்றும் பிரசுரத்துக்கு தகுந்த திருத்தத்துக்கு உள்ளானது. அசல் நாற்றத்தை அனுபவிக்கத் துணிவுள்ளவர்கள், மூக்கைப் பொத்தி, மூலப் பிரதியை காண்க), அதற்கு பதவுரை, தெளிவுரை வழங்கியதோடு, சொல்-நயம், பொருள் நயம் சிலாகித்து, இலக்கியச் சிறப்புரையும் ஆற்றி விட்டார். அஞ்சாறு நாள் அன்னங்கஞ்சி காங்காமல், சலைவாய் வறள, நாக்கை தொங்கப் போட்டு, காடு மேடெங்கும் பெட்டையின் பின்னே கூட்டமாக அலைந்து, தம்முள் ஒன்றை ஒன்று பல்லைக் கிஞ்சித்து கடித்துக் குதறி, கடைசியில் வலுவுள்ளது ஜெயித்து, கல்லெறிந்து அடித்தாலும், பிரிக்க முடியாதபடி, மணிக்கூர் கணக்காக எதிரெதிர் திசைகளில் இழுபட்டுக் கொண்டிருக்கும் மார்கழி நாய்கள், கூட, அதைக் கேட்டிருந்தாலே, தூத்திருமதிர்ச்ச என்று, காறித் துப்பிவிட்டு போயிருக்கும்.
அப்பேர்பட்ட ஐவேஸ் பாட்டையும், அதற்கு சித்தர் கொடுத்த கூவ விளக்கத்தையும் கேட்ட பின், எந்த ஆண் மகன்தான் இச்சையோடு பெண்குலத்தை நெருங்க முடியும்?
அத்தனை நேரம் சப்புக் கொட்டி கேட்டுக் கொண்டிருந்த சேமலைக் கவுண்டருக்கே, குமட்டிக் கொண்டு வந்ததென்றால், கடையிலிருந்த மற்ற ஆண்கள், குறிப்பாக விடலைகள், நிலையைச் சொல்லவா வேண்டும்! சாந்தி முகூர்த்த அறையாட்டம் திளைத்திருந்த திருச்சபை,
பேதி புடுங்குன வார்டாட்டம் வெலவெலத்துப் போய் விட்டது. ஒவ்வொருத்தனுக மூஞ்சியையும் பார்த்தால், கல்யாணமானவர்கள் உடனடியாக பொண்டாட்டி களை விவாகரத்து பண்ணீருவார்கள் என்றும், கல்யாணமாகாதவுனுக, மும்பைக்கோ, கடப்பாவுக்கோ ரயிலேறி, அரவானி ஆபரேஷன் செய்து கொண்டாலும் செய்து கொள்வர் என்றும் தோன்றியது.
வேலீல போறக்கு வெத்தலை பாக்கு வெச்சு அழைச்சு, வேட்டிக்குள்ள விட்ட தன் புத்தியை செருப்பாலடிப்பதா, சீவக்கட்டையால் மொத்துவதா என்று, யோசித்து நொந்து கொண்டிருந்தார் சேமலைக் கவுண்டர்.
விடலைகள் வேறு, "வொய் திஸ் கொலை வெறி கவுண்ரே?' என்று, வெந்த காதில் ஆசிட்டை ஊற்றினர்.
குற்ற உணர்ச்சியால் கவுண்டருக்கு அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை. அடுத்த கட்டம், அடிச்சவ்வையும் உரித்து உப்புக் கண்டம் போடுவது தான் என்பதால், சித்தரைப் பார்க்கவும் தெம்பில்லை. விடலைகளுக்கு புற முதுகும், சித்தருக்கு பொடனியும் காட்டியவாறு, ஜன்னல் பார்வையாக மேற்கே திரும்பிக் கொண்டார்.
அகமறியாமப் பேசி, முகமறியாம முளிச்சுக் கொண்டிருந்த அவர் இருந்தாற்போல, அட்டட்டட டடா... என்று ஏற்றிக் கட்டியிருந்த தொடையைத் தேய்த்தபடி உணர்ச்சிவசப்படவே, ""என்னாச்சு கவுண்ரே?'' என்று கேட்டார் டெய்லர்.
""என்னாச்சா? என்னென்னமோ ஆகுதப்பா! அல்லி நோடு,'' என்று ஜன்னல் பார்வையால் சுட்டிக் காட்டியதும், சக்கரத்தை நிறுத்தி எட்டிப் பார்த்தார் டெய்லர். வெட்டி ஆபீசர்களின் முகங்களும் மேற்கே திரும்பின.
சித்தர் வீட்டைக் கடந்து, கையில் ஒரு காகிதப் பொட்டலத்தோடு, அவளுக்கே உரித்தான அமர்த்தலான நடையில் வந்து கொண்டிருந்தாள் மும்தாஜ்.
பார்த்த இவர்கள் எல்லாருடைய வாய்களிலுமே புளித்தபுஞ்சிரி நெளிந்தது.
ஒழலப்பதியின் பிரசித்தி பெற்ற பெருமைகளில் ஒருத்தி மும்தாஜ். முப்பது, முப்பத்தைந்து வருடங்களுக்கு முன், வேலந்தாவளம் என்ற மலையாளக் கரையோரத்தின் சிவப்புக் கலங்கரை விளக்கமாக ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த போன தலக் கெட்டு பொற்காலத்தில், கம்பெனி வீடுகளில் இருந்த தொழில்காரிகள் எல்லாரும் சேர்ந்து, அவ்வூருக்குப் பெற்றுத் தந்திருந்த பெருமையை, இப்போது தனியொருத்தியாக இருந்து, அண்டை ஊர்களில் ஒன்றான ஒழலப்பதிக்கு பெற்று தந்து கொண்டிருப்பவள் இவள். பஞ்சாயத்து லெவல் தாண்டி, ப்ளாக் லெவலுக்கு போனாலே, ஒழலப்பதி என்று ஒரு ஊர் இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிற நிலைமாறி, ஒழலப்பதி என்றாலே, "முமுதாஞ் ஊரா?' என்று கேட்கிற அளவுக்கு பாலக்காடு மாவட்டம் முழுக்க அவளது புகழ் பரவியிருந்தது.
மும்தாஜிடம் ஒரு நற்குணம். யாரையும் தொழிலுக்கு அழைக் கவோ, கண்களில் ஜாடையாகவோ, தூண்டல் செயல்களில் ஈடுபடவே மாட்டாள். அவர்களா அணுகினால் மட்டுமே. இவற்றையெல்லாம் விட, வேற்றூர் தொழில்காரிகளிடமிருந்து அவளை வேறுபடுத்திக் காட்டுகிற பிரதான அம்சம் ஒன்றும் அவளிடம் உள்ளது. அவளது கடுத்த முகபாவம்.
இணக்கமின்மை, சிடுசிடுப்பு, அலட்சியம், கர்வம், உள்ளார்ந்த வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளே அதில் வெளிப்படும். யாராவது அவளிடம் வீண் வாயாடினாலும், கேலி செய்தாலும், வெட்டியான சல்லாபப் பேச்சுகளுக்கு முற்பட்டாலும், பெரிய மனுசன், சின்ன மனுசன் என்று பாராமல், பதிலடி கொடுத்து விடுவாள். தொழிலுக்கு விரோதமான முறையில் உள்ள அவளது இந்த குணம், முரண்பாடான வகையில், அதற்கு ஆதரவாகவே ஆகியிருந்தது.
அவளது அலட்சியமும், செருக்குமே அவள் மீது அதிக ஈர்ப்பை ஆண்களிடத்தில் உண்டு பண்ணின. ஆண்களை உள்ளூர வெறுக்கும் அவள், அந்த ஆண்களுடனான உறவையே தொழிலாக கொண்டு பிழைப்பது போலத்தான் இதுவும். அத்தெருவில் இருக்கும் அத்தனை பேர் பார்வையும், மும்தாஜ் மீதே இருக்கும். இது எதையும் பொருட்படுத்தாமல், அமர்த்தலான அல்லிராணி நடையில், நிமிர்ந்த நெஞ்சும், நேர்கொண்ட பார்வையுமாக வந்து கொண்டிருந்தாள்.
""அட அட அட... என்னா ஒரு நடை... என்னா ஒரு சைசு... ஏம்பா லண்டனு, என்னுமோ ஒலகமே அவகாலடீல உளுந்து கெடக்கறாப்புடியல்லொ மதாளிச்சுட்டு நடந்து வாறா,'' என்று சிலாகித்தார் சேமலைக் கவுண்டர்.
""ஒலகமே அவகாலடீல இல்லீன்னாலும், ஒள்ளப்பதியும் சுத்து வட்டாரமும், அவ காலடீலதானுங்ளே கவுண்ரே,'' என்றபடி, கழுத்தை சுருக்கி, பெடல் மிதிப்பை தொடர்ந்தார் டெய்லர்.
சித்தரை தைரியமாக ஏறிட்டு, ""ஏனுங் சித்தரே... நீங்க சொல்றாப்புடி இவளையெல்லாம் உட்டுட்டா, அப்பறம் எப்புடிங் சித்தரே உய்ய முடியும்? இவதானுங்ளே எங்குளுக்கெல்லாம் உய்வே,'' என்று சேமலைக் கவுண்டர் சொன்னதும், விடலைகள் விசிலடிக்காத குறையாக ஆர்ப்பரித்து, ""ஒரு வாசகஞ் சொன்னாலும் திருவாசகமாச் சொல்லிட்டீங் கவுண்ரே,'' என்று பாராட்டினர்.
முச்சந்தியை அடைந்திருந்த அவள், வடக்கே திரும்புவாளோ, தெற்கே திரும்புவாளோ என்று வெக்குனு பார்த்துக் கொண்டிருக்கையில், அவள் நேரே லண்டன் டெய்லர் கடைக்கு வரவும், "அடிச்சுதுரா ஓணம் பம்பர்!' என்று கூத்தாடியது கவுண்டரின் திகம்பர மனம். ""லண்டனு... <உனக்கு பெரிய இடத்து கிராக்கி ஒண்ணு வருதப்போ,'' என்றவர், ""ராணியாதி ராணி, ராஜ கம்பீரி, முமுதாஸ் தம்புராட்டி பராக் பராக்,'' என்று ராஜ சேவகன் பாணியில் அறிவித்தார்.
கப்பலை கவுத்துன டைட்டானிக் நாயகியாட்டம் வந்த அவளோ, கவுண்டரை, கண்டுகொள்ளாமல், வெயில் தாழ்ந்து விட்டதால் குட்டி செவுத்துல அமர்ந்து கொண்டிருந்த, கதை எழுதுகிற தம்பி மற்றும் சித்தருக்கு ஆசனம் கொடுத்த சிகாமணியை அள்ளுக் கண்ணில் நோட்டமிட்டபடி, வெளி ஸ்டூலில் வீற்றிருந்த சித்தர் அருகே செருப்பைக் கழற்றிவிட்டு, உள்ளே நுழைந்து, ஓரப் பார்வையால், உள்ளிருப்பவர்களைத் தரை தட்ட வைத்தவாறு டெய்லர் எதிரே நங்கூரமிட்டாள்.
""என்ன மும்தாசு... நானுனக்கு பராக்கெல்லாம் குடுக்கறேன்... நீ நம்மளயக் கண்டுக்கவே மாண்டீங்கறயே,'' என்றார் கவுண்டர்.
""உங்களயும் கண்டுட்டுத்தான் இருக்கறேன்; உங்களையாட்டம் பல பேரையும் கண்டுட்டுதான் இருக்கறேன். "ஜம்பக் சலசலங்குது; மொள்ளை மொலு மொலுங்குது'ங்கறாப்புடி, நானு சித்தருட்டுக்கட்ட வரில புடிச்சு என்னுமோ எளக்க நாட்டம் பண்ணி, எல்லாத்தையும் இளிக்க வெச்சுப்போட்டு, இப்ப பராக்கு குடுக்கறீங்களா பராக்கு,'' என காட்டமாகவே பதில் வந்தது.
நடப்பதையெல்லாம் பார்த்த சித்தருக்கு, நெற்றிக்கண் கோபமே வந்து விட்டது. தோள்துண்டை உருவி உதறியபடி, ஆங்காரத்தோடு எழுந்தவர், ""உங்களுக்கெல்லாம் சண்டைல சாவு கெடையாதப்பா,'' என்று தன் பிரத்யேக முத்திரையால் வாழ்த்திவிட்டு விறுவிறுவென நடந்து, பேருந்தின் பயணியர் நிழற்குடை திட்டுக்குப் போய் எரிச்சலாசனம் போட்டுக் கொண்டு, இன்னொரு பாணத்தையும் கொளுத்திக் கொண்டார்.
சித்தரின் ஆவேச நடவடிக்கைகளால் மும்தாஜூக்கு வந்திருந்த கோபத்தை வெளிக்காட்ட அவசியமில்லாமல் ஆகிவிட்டது. வந்த காரியத்தை பார்ப்பதற்காக, கையிலிருந்த பொட்டலத்தை பிரித்து, டெய்லரிடம் இரண்டு ஜாக்கெட் பிட்டுகளை கொடுத்தாள். அளவு ஜாக்கெட்டை பிரித்தவள், அவளுக்கு பின்னால் இருந்த கவுண்டரோ, மற்றவர்களோ காணாதபடி நின்று, அதை தையல் மிஷின் மீது விரித்து, ""அளவுல ஒண்ணும் மாத்தமில்ல. இங்க மட்டும் புடிக்குது,'' என்று சுட்டிக் காட்டினாள்.
டெய்லர் சன்னமாக ஒரு ஸ்மைல் அடித்தபடி, ""போன மாசந்தான இந்த ப்ளவுசத் தெச்சுட்டு போன... அதுக்குள்ள டைட்டாயிருச்சா? அதென்ன ஒவ்வொரு வாட்டியும், ப்ளவுஸ் தெக்க வரும்போது, அடல்ஸ் ஒன்லிலயே புடிக்குதுங்கற? சாப்பிடுற சாப்பாடெல்லாம் அங்கயே போகுதா?'' என்று பார்வையோட்டி விட்டு, ""எந்தளவுக்கு புடிக்குது? எத்தன இஞ்ச் கூட்டோணும்?'' என்று கேட்டார்.
""எங்கட்ட என்ன டேப்பா இருக்குது, அளந்து பாக்கறதுக்கு? நீங்க தான் அளந்து பாத்துக்கோணும்,'' என்று அட்டென்ஷனில் நின்றாள் மும்தாஜ்.
""அவுருதான் தெச்சுட்டிருக்காறாரல்லொ! அவுரப்போயி ஏன் இமுசு பண்ணீட்டு? இப்புடித் திரும்பி நில்லு மும்தாசு... நானு அளந்து சொல்றன்,'' என்று துணி வெட்டும் மேஜை மீதிருந்த டேப்பை எடுத்து எழுந்தார் கவுண்டர்.
மும்தாஜ் அட்டென்ஷன் தளராமல், அபவுட்டேர்னில் திரும்பி, ""ம்ங்.. நீங்க, உங்க புள்ளைக்கு ஜாக்கெட் தெக்கீல அளந்து சொல்லுங்கொ,'' என்று, அவரிடமிருந்த டேப்பை பிடுங்கி, டெய்லரிடம் நீட்டினாள்.
அப்போது முச்சந்தியில் ஒரு அசம்பாவிதம்.
தம்பதி சமேதராக மேற்கேயிருந்து வந்து கொண்டிருந்த, எக்ஸெல் சூப்பர் ஒன்று, பஞ்சாயத்து சேந்தி கிணத்தருகே வளைவில் திரும்பிக் கொண்டிருந்தபோது, தடாலெனச் சரிந்து விழுந்தது. முச்சந்தி பார்வையாக இருந்த கவுண்டருக்கு அது தென்பட்டு, ""அட டட டடா... வண்டி உளுந்துருச்சப்பா பாவம்,'' என்று சொல்வதற்குள்ளாகவே, இதர வெட்டி ஆபீசர்கள் அனைவரும், சம்பவ இடத்துக்கு விரையும் போது, சுற்றுபாடிலிருந்தும் சனம் ஓடி வந்தது. கவுண்டர் தன் உடம்பை ஸ்டூலிலிருந்து தூக்கி எடுத்து நிறுத்துவதற்குள், டெய்லரும், மும்தாஜூம் கூட, அங்கே சேர்ந்து விட்டனர். குண்டுரு குண்டுருவென இவரும் உருண்டு சென்றார்.
கிழக்கே சங்கராயபுரத்தை சேர்ந்த, சமீபத்தில் திருமணம் முடிந்திருந்த அந்த இளம் தம்பதி, இங்கே முன்சீப் சள்ளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு வந்து விட்டு, திரும்பிக் கொண்டிருக்கின்றனர். பில்லியனில் அமர்ந்திருந்த மனைவியின் சேலை தலைப்பு, சக்கரத்தில் சிக்கி, வண்டியோடு இருவரும் விழுந்து விட்டனர். முக்கில் வேகம் குறைந்து வந்து கொண்டிருக் கையில் சம்பவம் நிகழ்ந்ததால், அடி ஒன்றும் பலமில்லை. இருவருக்கும் சிராய்ப்புக் காயங்கள்தான். ஆனால், பாதிக்கு மேல் சக்கரத்தில் சுற்றி சுற்றி சிக்கியிருந்த சேலையை உருவி, எடுக்க பலர் முயன்றும் முடியவில்லை.
பயணியர் நிழற்குடையிலிருந்து மேற்சொருகிய கண்களோடு வந்திருந்த சிவபாணச் சித்தரும், ஓரமாக நின்று, நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை முதுகில் கை கட்டி, விச்ராந்தியோடு பார்க்கலானார்.
சேலைக் சிக்கலை கூர்ந்தாய்வு செய்த லண்டன் டெய்லர், ""வெளிய நிக்கற அளவுக்கு அதைய வெட்டி எடுத்தானுங் உண்டு,'' என்று, ""டே தேவாங்கு, ஒரு ஓட்டமுட்டு கத்திரி எடுத்துட்டு வா,'' எனப் பணித்தார்.
கத்திரி வந்தது. அவர் நிதானமாக தன் தொழில் வித்தைகள் அனைத்தையும் காட்டி, சேலையை கந்தரகோளமாக வெட்டி எடுத்தார். இடுப்பில் ஒரு சுற்றுக்கு மட்டுமே மிச்சமிருக்க, அதுவரை சக்கரத்தருகே குந்திட்டு அமர்ந்து, நெஞ்சில் முழங்கை மடக்கி, பெருக்கல் குறியிட்டு மானம் மறைத்துக் கொண்டிருந்த இளம் மனைவி, எழுந்து நின்று உடுத்தி பார்த்தாள். வெட்டி எடுக்கப்பட்ட பாகம், கைகள் காத்த மானத்தளவு கூட எட்டவில்லை.
சக்கர வியூகமிட்டிருந்த கூட்டத்தில், சேமலைக் கவுண்டர் தலைமையிலான வெட்டி ஆபீசர் திருச்சபையினர் மற்றும் இதர ஆண்கள் பலரின் பசித்த கண்கள், அந்த இளம் மனைவியின் அரைகுறை ஆடை உடலை நுனிப்புல், அடிப்புல் மேயலாயின. இளம் கணவன் வேட்டிக் கட்டியிருந்தாலாவது ஆபத்பாந்தவனாகி அதை அவிழ்த்து கொடுக்கலாம். அவனோ பேன்ட்காரன். என்ன செய்வது, ஏது செய்வது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
அப்போது, தான் கட்டியிருந்த சேலையை சரசரவென அவிழ்த்து, ""இந்தா கண்ணு... இதைக் கட்டிக்க,'' என்று கொடுத்தாள் மும்தாஜ்.
பாதிக்கப்பட்ட மனைவி, கணவன் இருவருக்குமே திகைப்பு.
இங்கே எவரையும் அறிந்திராத அந்தக் கணவன் ""என்னுங் நீங் கட்டிட்டிருக்கற சீலையவே அவுத்துக் குடுத்துட்டீங்... அப்பறம் நீங் எப்படி?'' என்று கேட்டான்.
உள்பாவாடையும், ஜாக்கெட்டுமாக நின்றிருந்த மும்தாஜ், ""இந்த உடுதுணி கூட இல்லாம, முண்டக்கட்டையாக கூட என்னைய இந்த ஊர்ல இருக்கற அனேக ஆம்பளைக பாத்திருக்கறாங்கொ,'' என்று கூறி, இறுமாப்புடன் மேற்கு நோக்கி நடக்கலானாள்.
பசித்தவர் கண்கள், வெறியோடு இப்போது அவளுடலில் பாய்ந்தன.
"உய்யடா உய்' என்று, அவர்களை நோக்கிக் கூவிய சித்தர், முதுகில் கட்டிக்கொண்டிருந்த கையை விடுவித்து, "உனக்காக ஒரு மள பெய்யும் மும்தாசு...' என்று, அவள் செல்லும் திக்கில் ஆசிர்வதித்தார்.
— முற்றும்.
ஷாராஜ்