முதலாளி (2)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2013
00:00

சேலத்தில் ஸ்டுடியோவை ஆரம்பிக்கும் முன்னரே, படப்பிடிப்பு நிலையத்திற்கு முக்கியமான தேவை என்னவென்று அவர் தெரிந்து வைத்திருந்தார். 1935ம் வருடமே, படப்பிடிப்புக்காக அவர் ஜெர்மன் நாட்டிலிருந்து, இரண்டு சிறந்த, "கேமராமேன்'களை வரவழைத்து தன்னுடன் வைத்துக் கொண்டார். இதற்கு சர்க்கார் அனுமதியையும் பெற்றுக் கொண்டார். ஒருவரின் பெயர், "போடோ கூச் வாக்கர்' இன்னொருவரின் பெயர், "பேய்ஸ்' இருவரும் தந்திரக் காட்சிகளை எடுப்பதில் நிபுணர்கள். சதி அகல்யாவிலிருந்து தொடர்ந்து வந்த புராணப் படங்களில் காணப்பட்ட தந்திரக் காட்சிகளை எடுத்தவர்கள் இவர்கள்தான்.
மாடர்ன் தியேட்டர்சாரின் படம் ரிலீஸ் ஆகிறது என்றால், படம் ஆரம்பத்திலிருந்தே பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன் மக்கள் வருவர். அதற்குக் காரணம், படத்தின், "டைட்டில்கள்!' ஒவ்வொரு படத்தின் டைட்டிலும், அவ்வளவு அற்புதமாக அமைந்திருக்கும். படத்திற்கு படம் வித்தியாசமான டைட்டில் கார்டின் வேலையும் ஆரம்பமாகி விடும். ஒரு படத்தின், "டைட்டில்' எடுக்க, பத்தாயிரம் செலவு என்றால், அதை விடப் பலமடங்கு செலவு செய்து, "டைட்டிலை' தன் திருப்திக்கு எடுக்க வைப்பார். அவரது மனதில் திருப்தி ஏற்படும் வரை, கேமராமேன்களும் சலிக்காமல் உழைப்பர்.
டைட்டில்களை காண்பிப்பதில் புதுமையைச் செய்தவர், டி.ஆர்.எஸ்., தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த விஷயத்திற்கு அஸ்திவாரமிட்டவர் கள் அந்த இரு ஜெர்மன் கேமராமேன்கள் தான். அவர்களுக்கு உதவியாளர்களாக நம் தமிழகத் தொழில் நிபுணர்களையே டி.ஆர்.எஸ்., நியமித்தார். அவர்களில் மிகவும் முக்கியமானவர்கள்
டபிள்யூ.ஆர்.சுப்பாராவ், ஜே.ஜி.விஜயம் ஆகிய இருவர் மட்டுமே. இவர்கள் தந்திரக் காட்சிகளில் நிபுணர்களாக திகழ்ந்தனர்.
மாடர்ன் தியேட்டர்சில் தொழில் கற்று, பின்னால் பெரும் டைரக்டர் ஆன கேமராமேன்களில் மிகவும் முக்கியமானவர்கள் ஜி.ஆர்.நாதன், மஸ்தான், ஆர்.எம்.கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.லால் ஆகியோர்.
இந்த இரண்டு ஜெர்மன் கேமராமேன்களும், படப்பிடிப்பு சம்பந்தமாக, சேலம் நகரத்தை விட்டு, 6 கி.மீ.,க்கு அப்பால் செல்ல வேண்டும் என்றால், கலெக்டரிடம் அனுமதி வாங்க வேண்டும். அதையும் டி.ஆர்.எஸ்., சுணங்காமல் செய்தார்.
ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, ஒவ்வொரு படத்திற்குப் பின்னாலும், டி.ஆர்.எஸ்.,சின் கடினமான உழைப்பு இருந்தது. அதற்குக் காரணம், அவர் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட கட்டுப்பாட்டு முறை.
தினமும் காலையில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆபீசில், அவரது கார் நுழையும்போது, மணி சரியாக 9:30 என்பது உறுதி. "ராமலிங்க விலாஸ்' என்று, அவரது தந்தையின் பெயரில் இருந்த அந்தப்பெரிய பங்களாவில் தான், காரியாலயம் இருந்தது. இரண்டு ஏக்கர் நிலத்தின் நடுவே அமைந்திருந்த அக்கட்டடம்தான், ஸ்டுடியோவின் ஜீவநாடி. படத்தயாரிப்பு ஸ்டுடியோவில் என்றாலும், நிதி நிர்வாகம், பட வெளியீடு சம்பந்தமான வேலைகள் இங்கே தான் கவனிக்கப்பட்டது.
தினந்தோறும் வரும் கடிதங்களை, அவர் படித்துவிட்டு பதிலை டைப்பிஸ்டுகளை அழைத்து, "டிக்டேட்' செய்வார். அப்போது இங்கு டைப்பிஸ்ட்டாக வேலை செய்தவர் டைரக்டர் முக்தா சீனிவாசனின் மூத்த சகோதரர் முக்தா ராமசாமி. இவர்கள் இருவருந்தான் பின்னாளில் முக்தா பிலிம்ஸ் என்கிற படக் கம்பெனியை துவங்கி, பல தமிழ்ப்படங்களை எடுத்தவர்கள்.
அடுத்தபடியாக, டி.ஆர்.எஸ்., வருவது, "ரிகர்சல் ஹால்' எனும் புரொடக்ஷன் காரியாலயத்திற்கு. அருகே ஒரு பெரிய பங்களா. அதற்கு எதிரே பெரியதொரு பந்தல், அந்தப் பந்தலில் தான், மியூசிக் ரிகர்சல் நடக்கும். அங்கு ஒத்திகை முடிந்ததும், மறு நாள் படப்பிடிப்புக்கான நடிகர், நடிகையர் ஒத்திகை. மாடர்ன் தியேட்டர்ஸ் வரலாற்றில், முதலில் காட்சி அமைப்புகளை நன்றாக ஒத்திகை பார்க்காமல், படப்பிடிப்புக்கு போனதாக ஆரம்பகால சரித்திரமே இல்லை எனலாம். சில நாட்களில், அந்த ஒத்திகையை டி.ஆர்.எஸ்., பார்ப்பதுண்டு. இதெல்லாம் தினந்தோறும் வாடிக்கையாக நடக்கும் வேலை என்று தான் சொல்ல வேண்டும்.
மாடர்ன் தியேட்டர்சுக்கு என்று, நிரந்தரக் கதாசிரியர்கள் உண்டு. சில நாட்களில், அவர்களிடமும், "டிஸ்கஷன்' நடக்கும். கவிஞர்கள் அமைத்த பாட்டுக்கு டியூன் போடும் முன், அந்த பாட்டுகள் கருத்தோடு எழுதப்பட்டு இருக்கின்றனவா என்று, முதலில் டி.ஆர்.எஸ்., பரிசீலிப்பார். அதற்கு பிறகுதான், அது மியூசிக் டைரக்டரிடம் போகும். அப்போதெல்லாம் எழுதிக் கொடுத்த பாட்டுகளுக்குத் தான் மெட்டு அமைத்தனர்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கதாசிரியர்கள் இலாகா, வசனகர்த்தாக்கள் இலாகா, கவிஞர்கள் இலாகா என்று, ஒவ்வொரு துறைக்கும் அங்கே ஆட்கள் இருந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் திறமையைக் காட்ட, தேவைப்பட்ட கதைகளுக்கு வித்தியாசமாக ஏதாவது மாறுதல் செய்ய வேண்டும் எனில், தங்களது கருத்தை எழுதித் தருவர். அவ்வளவு பேருடைய எழுத்துகளும் டி.ஆர்.எஸ்.,சிடம் போகும். அதில் மிகவும் நன்றாக இருக்கிறது என்பதை மட்டும் டி.ஆர்.எஸ்., எடுத்து, உபயோகித்துக் கொள்வார். எல்லாருடைய கருத்துகளையும் ஒன்றாகத் திரட்டிப் படமாக்கியதால், பட டைட்டிலில் கதை, "மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகா' என்றுதான் வரும்.
கதை முடிவான பிறகுதான், நடிகர், நடிகையர் தேர்வு நடைபெறும். இதைக்கூட எந்தெந்த பாத்திரத்திற்கு யாரைப் போடலாம் என்று, அவர்கள் எண்ணத்தைக் கேட்கும் வழக்கம் அவரிடம் இருந்தது. அதனால், நடிகர், நடிகையர் தேர்வு கலந்து ஆலோசிக்கப்பட்ட விஷயமாகத்தான் இருந்தது. பெரும்பாலும் திரை உலகில், அப்போது பிரசித்தி பெற்ற நடிகர், நடிகையர் தான், இங்கே முதலிடத்தைப் பிடிப்பர் என்றால் அதில் வியப்பு இல்லை.
இதற்குப் பின், படத்திற்கு டி.ஆர்.எஸ்., யாரை டைரக்டராக நியமிக்கிறாரோ, அவர்தான் படத்தை டைரக்ட் செய்ய வேண்டும். ஆக, படம் எடுப்பது ஒரு கூட்டு முயற்சி என்கிற கொள்கைகளை முதன்முதலில் உருவாக்கியவர் டி.ஆர்.எஸ்., தான்.
இது முடிந்தவுடன், "பட்ஜெட்' விஷயம். அதற்கென காரியாலயத்தில் அமர்ந்து, அங்கிருந்த முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தி, இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டும் என்று வரையறுத்து விடுவார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் எனும் கம்பெனியில், ஆரம்ப காலத்தில் சில நடிகர்கள் மாதச் சம்பளத்திற்கு வேலை செய்தனர். இப்போது அந்த பெயர்களை கேட்டால், உங்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கும். நாடக நடிப்புத் தொழிலில் கொடிகட்டிப் பறந்த காளி.என்.ரத்தினம், டி.ஆர்.எஸ்.,க்கு மிகவும் பிடித்த காமெடியன். என்.எஸ்.கே., இங்கே வரும் முன் காளி. என்.ரத்தினம் தான் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்து வந்தார்.
அவருடன் இருந்த மிகவும் முக்கியமானவர்தான் டி.எஸ்.துரைராஜ் மற்றும் வி.எம்.ஏழுமலை. பின்னால் வந்து சேர்ந்தவர், ஏ.கருணாநிதி. இவர்கள் எல்லாரும், அப்போது மாத சம்பளத்தில் இருந்தனர். நடிப்பு மட்டும் அவர்களது தொழிலாக இருக்கவில்லை. கதைகளுக்கான சில முக்கிய யோசனைகளையும், டி.ஆர்.எஸ்.,சிடம் சொல்வர். இப்படிப்பட்ட ஒரு ஜனநாயக முறை, அப்போது இங்கே இருந்தது.
"முதலாளி நம்மிடம் யோசனை கேட்கிறார்' என்பதில், இவர்களுக்கும் பரமதிருப்தி. அதனால், கதை நன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர்களும் நல்ல யோசனைகள் நல்கி வந்தனர். இதைப் போல், கூட்டு முயற்சியுடன் அவர் டைரக்ட் செய்து வெளியிட்ட படங்கள் எல்லாமே நன்றாக ஓடின. அவற்றின் வெற்றிக்குக் காரணம், டி.ஆர்.எஸ்., என்கிற தனிமனிதரின் அயராத உழைப்பு மட்டுமல்ல. சரியாகத் திட்டமிட்டு எதையும் செய்யும் வாடிக்கை தான்.
அப்போதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுக்கும் படங்களை, இப்போது மாவட்ட வாரியாக விற்றுவிடும் பழக்கம் போல், யாருக்கும் விற்கவில்லை. மாடர்ன் தியேட்டர்சில், "டிஸ்டிரிபியூஷன்' பகுதி என்று தனியாக இயங்கி வந்தது. அந்த வினியோகத்தைக் கவனித்துக் கொள்ள, ஒரு மானேஜர் இருந்தார். ஐம்பது பேருக்கு மேல் அங்கே, "ரெப்ரசென்டேடிவ்'களாக வேலை செய்து வந்தனர். படத்தின் ரிலீஸ் தேதி குறித்தவுடன், இவர்கள் அவ்வளவு பேரும் பெட்டியுடன் அந்தந்த ஊருக்குப் போய் விடுவர். தினமோ, வாரமோ, இல்லை, மாதமோ பண வசூல் ஒழுங்காக ஆபீசுக்கு வந்து சேரும். இப்படி வேலை செய்யும் பிரதிநிதிகளுக்கு, டி.ஆர்.எஸ்.,சைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால், தவறு நடப்பதற்கு அதிக சான்ஸ் இல்லை. சிறு தவறு நடந்தாலும், அந்த நபரின் வேலைக்கு உத்தரவாதம் கிடையாது. அதனால், மாடர்ன் தியேட்டர்ஸ் வளர்ந்தது.
ரிகர்சல் ஹால் வேலையோடு நிறுத்திக் கொள்வதில்லை அவர். மாலை சரியாக, 3:00 மணிக்கு அவர் ஸ்டுடியோவிற்கு வருவார். அவர் வருகிறார் என்றால், அந்தப் பக்கமாக ஈ, காக்காய் கூடப் பறக்காது. அதாவது, அவ்வளவு அமைதி கடைபிடிக்கப்படும் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறேன். இந்த சமயத்தில், ஸ்டுடியோவில் உள்ள அவ்வளவு தொழிலாளர்களும், தங்களுடைய வேலையில் மிகவும் கவனமாக இருப்பர்.
காரை விட்டு இறங்கியதும், முதலில் எதிரே இருக்கும் கார்ப்பென்டர் செக்ஷனுக்குள் நுழைவார். அதைத் தொடர்ந்து, "மோல்டிங் பிரிவு' அடுத்தது ஆர்ட் செக்ஷன், பிறகு, காஸ்ட்யூம்ஸ் டிபார்ட்மென்ட். அங்கே நடப்பதைக் கவனித்த பின், மேக்கப் செக்ஷன். வேலை நடந்தாலும், நடக்காவிட்டாலும் சம்பந்தப்பட்ட மேக்கப்மேன் அங்கே இருந்தாக வேண்டும். அடுத்தது லேபரட்டரி, தொடர்ந்து கேமரா, சவுண்ட், ஸ்டில்ஸ், எடிட்டிங், எலக்ட்ரிகல் என்று, எல்லா பகுதிக்கும் சென்று உலா வருவார்.
அவர் கண்களுக்கு மட்டும் எதுவுமே தப்பாது. இந்தத் தொழில் கட்டடங்களை அவர் நேரில் பார்ப்பதற்கு ஒரு முக்கியமான காரணமுண்டு. அந்தப் பகுதியில் வேலை செய்பவர்கள், குற்றங்குறைகளை நேரில் அவரிடம் சொல்லலாம். எழுதியும் தரலாம். எந்தப் பகுதியிலும், எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனத்தைச் செலுத்தினார்.
இவ்வளவு பகுதிகளையும் பார்வையிட்ட பின், ஸ்டுடியோ காரியதரிசியின் அறைக்கு வந்து அமர்வார். செகரட்டரி, மானேஜர் ஆகிய இருவரிடமும், அடுத்து படப்பிடிப்புக்கு வேண்டிய செட்டுகள், காஸ்ட்யூம்ஸ் ஆகியவற்றைப் பற்றி பேசி, சம்பந்தப்பட்டவர்களை அங்கே வரவழைப்பார். கதைக்கேற்றபடி, ஆர்ட் டைரக்டர் நான்கு விதமான செட் டிசைன்கள் போட வேண்டும். அதேபோல், காஸ்ட்யூமர் நான்கு விதமான டிசைன்கள் உடைகளுக்காகப் போட வேண்டும். இவற்றில் எது அங்கீகரிக்கப்படுகிறதோ, அவற்றை, பத்து தினங்களில் தயார் செய்து விட வேண்டும்.
படப்பிடிப்பு நடப்பதற்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன், இவையெல்லாம் தயாராக இருக்க வேண்டும். காஸ்ட்யூமர் டிரஸ்களை தயார் செய்தபின், அந்த ஆடைகளை படத்திற்கு, "புக்' செய்யப்படும், நடிகர், நடிகை, வில்லன் ஆகியவர்களை வரவழைத்து, மேக்கப்புடன், அந்த டிரஸ்களைப் போட்டுப் பார்த்து, அதை ஸ்டில் எடுத்து, டி.ஆர்.எஸ்.,சிடம் காண்பிக்க வேண்டும். அதில், மாறுதல் ஏதாவது இருந்தால், படப்பிடிப்புக்கு முன் அவை சரி செய்யப்பட்டு விடும். அதற்கு பின்புதான் படப்பிடிப்பு.
ஆடை அலங்காரத்தைப் பார்ப்பதோடு அவர் நிறுத்திக் கொள்ள மாட்டார். மேக்கப் டெஸ்ட் செய்து, கதாபாத்திரத்திற்குத் தகுந்தாற் போல், தலையில், "விக்', முகத்தில் மீசை இவையெல்லாம், ஓ.கே., செய்து விடுவார். அவரோ, இல்லை படத்தை டைரக்ட் செய்யப்போகும் நபரையோ, அருகில் வைத்து தான் இவ்வளவு வேலைகளையும், டி.ஆர்.எஸ்., கவனிப்பார். நடிகர், நடிகையர், இந்த மேக்கப் டெஸ்டுகளுக்கு ஒத்துழைப்பு தருவர். திரையில் தெரியப் போவது அவர்களது முகம்தானே!
இவ்வளவு வேலைகளையும் தன் ஒருநாள், "ஷெட்யூலில்' உள்ளடக்கிக் கொண்டு, தமிழகத்தில் வேலை செய்த முதல் ஸ்டுடியோ முதலாளியும், டைரக்டரும் டி.ஆர்.எஸ்., தான். இதற்கு அப்பால், டி.ஆர்.எஸ்., ஒரு முக்கியமான வேலையை, வெளியுலகத்திற்கே தெரியாமல் செய்து வந்தார். அது என்ன?
தொடரும்.

ரா.வேங்கடசாமி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X