இனி எல்லாம் நலமே! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இனி எல்லாம் நலமே!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மார்
2013
00:00

இரண்டு மணி நேரம் பர்மிஷன் போட்டு, நண்பர் வீட்டு திருமணத்திற்கு சென்ற வெங்கட்ராமன், ஆபீஸ் உள்ளே நுழையும் போதே, எதிர் டீக்கடையில் மனோகர் யாரிடமோ பேசி கொண்டிருந்ததை பார்த்தார். மனோகர், அந்த ஆபீசுக்கு ஆறு மாதங்கள் முன்தான் மாற்றலில் வந்தவர். வேலையில் மிகவும் திறமைசாலி. ஆபீசில் மற்றவர்களிடம், அவர் வெட்டி கதை பேசி, நேரத்தை போக்குவதை, இதுவரை வெங்கட்ராமன் பார்த்தது இல்லை. அதனாலேயே, ஆபீஸ் நேரத்தில், யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று, தன்னையும் அறியாமல் எழுந்த ஆர்வத்தில், சற்றே, நின்று திரும்பி பார்த்தவர் அதிர்ந்தார். "கந்து வட்டி ராஜனுடன் இவருக்கு என்ன பேச்சு! அவன் பெரிய ரவுடி ஆச்சே? மனோகரிடம், இவனிடம் எல்லாம் பழக்கம் வச்சுக்க வேணாம்ன்னு எச்சரிக்கை செய்யணும்...' என்று எண்ணினார். மானேஜர் வெங்கட்ராமன் தன்னை பார்த்து விட்டார் என்று உணர்ந்த மனோகர், ராஜனை காலில் விழாத குறையாய் அனுப்பிவிட்டு, தன்னுடைய இடத்திற்கு வந்தமர்ந்தார்.
அன்று மனோகர் முடித்து, வெங்கட்ராமனிடம் கையெழுத்தாக வேண்டிய கோப்புகள் நிறைய இருந்தன. ஆனால், இரண்டு முறை ஆபீஸ் பாயிடம் கேட்க சொல்லியும், எந்த கோப்பும், தன் மேஜைக்கு வராததால், தானே மனோகரிடம் சென்றார்.
""என்ன மனோகர்? பைல் ஏதும் எனக்கு வரலை? நாளைக்கு ஹெட் ஆபீசிற்கு அனுப்பணுமே!''
வெங்கட்ராமன் தன்னைத் தேடி வருவார் என்று, மனோகர் எண்ணவில்லை. ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தவர், அவர் குரல் கேட்டு திடுக்கிட்டுப் போனார்.
""சாரி சார்... இதோ இப்போ முடிச்சிடறேன்,'' குரலில் பதற்றமும், தடுமாற்றமும் இருந்தது.
""எப்பவும் நான் எள்ளுன்னு சொல்றதுக்கு முன்னாடியே, எண்ணெய்யா நிற்பவர் நீங்க. ஆனா, இன்னைக்கு உங்க மேஜையில் இருந்து, ஒரு பைல் கூட மூவ் ஆகலை. என்னாச்சு உங்களுக்கு?''
""வெரி சாரி சார்... கொஞ்சம் தலைவலி, அவ்ளோதான். ஒரு மாத்திரை போட்டுகிட்டா சரியாகிடும். "ஓவர் டைம்' பார்த்து முடிச்சிட்டு, வீட்டுக்கு போறேன் சார்.''
""வேணாம் மனோகர். உடம்பு சரி இல்லாம நீங்க, "ஓவர் டைம்' பார்க்க வேணாம். வீட்டுக்கு போய் ஓய்வு எடுங்க. நாளைக்கு வந்து பார்த்துக்கலாம். நான் ஹெட் ஆபீசுக்கு போன் செய்து சமாளிச்சுக்கறேன்.''
தயக்கமாய் மனோகர் நிற்க... ""கிளம்புங்க மனோகர்,'' என்று சொல்லி, தன்னுடைய இடத்திற்கு சென்று விட்டார்.
மறுநாள், சீக்கிரமே வந்து வேலை பார்த்து கொண்டிருந்த மனோகரை, வெங்கட்ராமன் தன்னுடைய அறைக்கு வர சொன்னார். தயக்கமாய் உள்ளே நுழைந்தவர், ""இன்னும் ரெண்டு மணி நேரத்துல முடிச்சுடுவேன் சார்,'' என்றார்.
""உங்களை நான், இப்போ கூப்பிட்டது வேலை விஷயமா இல்லை. உங்க பிரச்னை என்னன்னு தெரிஞ்சுகிட்டா, ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு பார்க்கத்தான்,'' அவர் குரலில் கனிவு தெரிந்தது.
""எனக்கு, ஒரு பிரச்னையும் இல்லை சார். நேற்று கொஞ்சம் உடம்பு சரி இல்லை அதான்,'' மழுப்பலாய் பதில் கூறினார்.
""சரி... அப்போ வெளியில் உங்களுக்கு வட்டிக்கு காசு கொடுத்த ராஜன் நிற்கிறான். நீங்க போய் பேசிட்டு வாங்க,'' வெங்கட்ராமன் மிகவும் சாதாரணமாக சொல்ல, மனோகர் முகத்தில் இருள் படர்ந்தது.
""சார்... அவனைத்தான், "நேத்தே இனிமேல் இங்கே என்னைத் தேடி வரக்கூடாது. நானே பணத்துடன் வர்றேன்'னு சொன்னேனே,'' குரல் தொய்ந்து போய் ஒலித்தது.
""பதற்றபடாதீங்க. அவனிடம் பேசி சமாளித்து அனுப்பி விட்டேன்.''
முகத்தில் நிம்மதி படர்ந்தது மனோகருக்கு. பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவர், ""நன்றி சார்...'' என்று சொன்னபோது. கண்கள் கலங்கி இருந்ததை பார்த்த வெங்கட்ராமன், பதறி விட்டார்.
""என்ன மனோகர், என்ன ஆச்சு?''
""நீங்கள் எனக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்து இருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியாது சார். ராஜன் நேத்தே, சாயங்காலத்துக்குள் பணம் வராவிட்டால், இன்னைக்கு ஆபீசில் எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தி விடுவேன் என்று எச்சரிக்கை செய்துவிட்டு போனான். அதான், நீங்க அவன் பெயரை சொன்னவுடனே, எனக்கு உயிரே போய்விட்டது.''
""என்ன தான் கஷ்டம்னாலும், இந்த மாதிரி கந்து வட்டிக்கு எல்லாம் பணம் வாங்காதீங்க மனோகர். ஆபீசில் லோன் கொடுப்பாங்களே, அதற்கு, "அப்ளை' செய்து வாங்கி இருக்கலாமே!''
""என் அவசரத்திற்கு ஆபீசில் லோன் அப்ளை செய்து, வெயிட் பண்ண அவகாசம் இல்லை சார்,'' சொல்லும் போதே, வருத்தம் தொனித்தது குரலில்.
""வீட்டில் யாருக்காவது உடம்பு சரி இல்லையா? அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்க, இவனிடம் கடன் வாங்கினீர்களா?''
பதில் சொல்லாமல் மனோகர் நிற்க, வெங்கட்ராமனுக்கு, ஒரு மாதிரி ஆகிவிட்டது.
""சாரி... உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா சொல்ல வேணாம்,'' அவர் சொன்னதை கேட்டு பதறி விட்டார் மனோகர்.
""எனக்கு உங்களிடம், எப்படி என் பிரச்னையை சொல்லறதுன்னு தெரியலை சார்,'' குரலில் தயக்கம் இருந்தது.
""உங்கள் திறமையை மனதில் வைத்து, உங்களை உதவி மானேஜர் பதவிக்கு சிபாரிசு செய்து, ஹெட் ஆபீசிற்கு, நான் கடிதம் அனுப்பி இருக்கேன். இந்த நேரத்தில், நீங்க பண பிரச்னை காரணமா, வேலையில் தரம் குறைய குறைய உங்களை பதவி உயர்வுக்கு கன்சிடர் செய்யமாட்டாங்க. உங்க பிரச்னையை என்கிட்டே சொன்னா, என்னால ஏதாவது உதவ முடியுமான்னு பார்க்கிறேன். இதை, உங்க மேலதிகாரியா இல்லாம, ஒரு சகோதரனா சொல்றேன் மனோகர்.''
உண்மையான அக்கறையுடன் வெளிவந்த வெங்கட்ராமனின் வார்த்தைகள், மனோகரை ஏதோ செய்தது. அவரிடம், தன் மனக்குமுறலை கொட்டினால். கொஞ்சம் மனபாரம் குறையும் என்று தோன்றியது.
எப்படி துவங்குவது என்று மனோகர் யோசிக்க, ""வாங்க மனோகர்... கேன்டீன் போய், ஒரு டீ குடிச்சிட்டு வருவோம்,'' என்றழைத்தார் வெங்கட்ராமன்.
மவுனமாய், மனோகர் டீ பருகி முடிக்கும் வரை இருந்தவர், மெல்ல பேச்சை துவங்கினார்.
""சொல்லுங்க மனோகர்.''
""சார்... என் மகன்தான் என் பிரச்னையே. வாரம் குறைந்தது, ஆயிரம் ரூபாயாவது பாக்கெட் மணி வேணும்ன்னு ஒரே பிடிவாதம். மூணு மாசம் முன்னாடி, "லேப்-டாப்' இப்பவே வேணும், இல்லேன்னா தற்கொலை செய்துக்குவேன்'ன்னு மிரட்டினான். கையில காசு இல்லாததால், அப்போதுதான் ராஜனிடம் நாப்பதாயிரம் வாங்கினேன். போன மாசம், அதே வார்த்தைகளை திரும்ப சொல்லி, என்னை மிரட்டி, ஐபோன் லேட்டஸ்ட் மாடல் வாங்கிட்டான். திரும்பவும் ராஜன்கிட்ட தான் ஓடினேன். முந்தா நாள், எண்பதாயிரத்துக்கு பைக் ஒண்ணு வந்து இருக்கு, அதை வாங்கி தந்தே ஆகணும்ன்னு ஆர்ப்பாட்டம் செய்தான். இனி, பொறுக்க முடியாதுன்னு, கை நீட்டிட்டேன். உடனே, அவன் அறை கதவை சாத்திக்கிட்டு, எங்களை எல்லாம் நிலைகுலைய வச்சுட்டான். கதவை உடைத்து பார்த்தால், அங்கே காதில் ஹெட் போன் மாட்டிகிட்டு, பாட்டு கேட்டுகிட்டு உட்கார்ந்து இருக்கான். "ரொம்ப பயந்து போய்ட்டீங்களா? நான் கேட்டது வரலை, இது உண்மை ஆகும்'ன்னு சொல்லிட்டு, நண்பனை பார்க்க போயிட்டான்.
""அவன் அம்மாவோ, "ஒரே பிள்ளை, அவன் கேட்பதை வாங்கி கொடுங்க. புள்ள போச்சுன்னா வருமா'ன்னு, எங்கிட்ட சண்டைக்கு நிக்கறா. எப்போதுமே பிராண்டட் ஷர்ட், ஷூ, ஜீன்ஸ் மட்டும்தான் போடுவான். விலை அதிகமா இருக்கறது வாங்கினாதான், நண்பர்கள் மதிப்பாங்கன்னு, அவனுக்கு நினைப்பு. இப்படி, அவன் கேக்கறத வாங்கி கொடுத்தே, எனக்கு ஏகப்பட்ட கடன் வந்துடுச்சு.
""இப்போ குடும்பத்தை நடத்தறதே ரொம்ப சிரமமா இருக்கு. ரெண்டு மாசமா வட்டி வராததால, ராஜனே என்னை தேடி இங்க வந்துட்டான்,'' சொல்லும்போதே உடைந்து அழுதார் மனோகர்.
கேன்டீனில் உணவருந்தி கொண்டிருந்த மற்றவர்கள் கவனம், இவர்கள் மேல் திரும்பும் முன், அவரை தேற்றி, மீண்டும் ஒரு சூடான தேனீரை பருக வைத்து, ஆசுவாசப்படுத்தினார் வெங்கட்ராமன்.
பிரச்னை என்னவென்று புரிந்தவுடன், அதன் ஆரம்பப் புள்ளி மனோகர்தான் என்று தெரிந்தது. மகன் மேல் உள்ள பாசத்தால், அவனை ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் விட்டுவிட்டு, இன்று வேதனைப்படுகிறார் என்று புரிந்தது.
""நம்மிடையே பெருகி இருக்கிற நுகர்வு கலாசாரம்தான், இந்த மாதிரி பிள்ளைகள் நடந்துக்கறத்துக்கு காரணம்ன்னு எனக்கு தோணுது. நமக்கு ஒரு பொருள் தேவையா, தேவை இல்லையான்னு எல்லாம், நாம யாரும் கவலைப்படறதே இல்ல. பொருட்களா வாங்கி குவிச்சுகிட்டே இருக்கோம். இந்த காலத்து பிள்ளைகளுக்கோ, "என் நண்பன்கிட்ட இருக்கு, எனக்கும் வேணும்' அப்படிங்கற மனோபாவம் நிறையவே இருக்கு, சரி மனோகர், கவலைப்படாதீங்க, எல்லாத்தையும் சரி செய்துடலாம். இப்போ, எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. நான் போகணும். நாளைக்கு ஞாயிறு தானே? என் வீட்டுக்கு வாங்க... நாம அங்க நிதானமா பேசலாம்.''
மனோகருக்கு சற்று தயக்கமாய் இருந்தது. இதுவரை மேலதிகாரியாய் பார்த்து மட்டுமே பழகிய ஒருவர் வீட்டுக்கு, எப்படி செல்வது என்று யோசனை.
""எதுவும் தயங்க வேணாம் மனோகர். இங்கதான் நான் உங்க அதிகாரி. மத்தபடி ஒரு சகோதரன். என்ன சரியா?''
தயக்கம் சற்று குறைய, ""சரி வர்றேன் சார்,'' என்று சொன்னார்.
வெங்கட்ராமன் முகம் மலர்ந்தது, ""என் மனைவியும், மகனும் உங்கள பார்த்தால் சந்தோஷப்படுவர்.''
""உங்களுக்கும் ஒரே பையனா சார், என்ன படிக்கிறான்?'' மனோகர் கொஞ்சம் சகஜமாய் பேச துவங்கியது வெங்கட்ராமனுக்கு நிம்மதியாய் இருந்தது. அவர் பிரச்னையில் இருந்து விடுபட தன்னாலான உதவியைக் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணினார்.
""இன்ஜினியரிங் மூணாவது வருஷம். மறக்காம வாங்க... உங்ககிட்ட நிறைய பேசணும்.''
மறுநாள், வெங்கட்ராமன் வீட்டுக்கு சென்றார் மனோகர்.
வீட்டிற்கு வந்த மனோகரை மனைவிக்கும், மகனுக்கும் அறிமுகம் செய்துவிட்டு, பொதுவாக சில விஷயங்களை பேசி கொண்டிருந்தார். மெல்ல மனோகரிடம், ""உங்களுக்கு உடனடியா ராஜனுக்கு வட்டி கட்ட எவ்ளோ தேவை இருக்கும்?'' என விசாரித்தார் வெங்கட்ராமன்.
""என்ன ஒரு பத்தாயிரம் இருந்தால், இப்போதைக்கு சமாளிக்கலாம். ஆனால், நான் அதற்கு இப்போ எங்கே போவேன் சார்?''
உள்ளே திரும்பி, எங்கோ செல்ல கிளம்பி கொண்டிருந்த மகனை அழைத்தார். ""கிருஷ்... அங்கிளுக்கு அவசரமாய் பத்தாயிரம் தேவைப்படுது. நாளைக்கு பாங்கில் இருந்து எடுத்து கொடுக்கட்டுமா?'' மகனிடம் அனுமதி கேட்பவரை பரிதாபமாய் பார்த்தார் மனோகர். "பணம் கொடுப்பதற்கு மகனிடம் கேட்க வேண்டுமா? இவர் ரொம்பவே பாவம்...' என்ற எண்ணம் வருவதை, அவரால் தவிர்க்க முடியவில்லை.
""நண்பர்களுக்கு தேவை ஏற்படும் போது, உதவி செய்வது தான் நல்ல பண்பு, அப்படின்னு சொல்லி கொடுத்ததே நீங்க. உங்க நண்பருக்கு கொடுக்க கூட என்னிடம் கேட்கணுமா?''என்றான் கிருஷ்.
""அது இல்லே கிருஷ், நீதானே வரவு செலவு எல்லாம் பார்த்துக்கறே, அதனால், நம் பட்ஜெட்டில் ஏதும் துண்டு விழாமல் இருக்கணும் இல்லையா?''
""பாத்துக்கலாம் அப்பா. இந்த பணம், உங்க மெடிக்கல் இன்சூரன்ஸ் கட்ட வைத்திருப்பதுதான். அதற்கான கெடு இன்னும் இரண்டு மாதம் கழித்துதான் வருது. அதற்குள் அங்கிள் திருப்பி கொடுத்துவிட போகிறார். சரிதானே அங்கிள்?''
"என்னது... முளைச்சு மூணு இலை விடலை, இவன் வரவு செலவு பார்க்கிறானா? ரொம்பதான் இடம்கொடுத்து வச்சு இருக்கார்...' என்ற எண்ணம் தோன்றிய அதே நிமிடம், பணத்தை திருப்பி கொடுக்க, உனக்கு இரண்டு மாதம் தான் கெடு என்று, மறைமுகமாய் சொன்னவனின் புத்திசாலித்தனத்தை, மனோகரால் மனதிற்குள் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
மனோகர் எண்ணத்தை படித்தவர் போல பேசினார் வெங்கட்ராமன். ""பதினாலு வயசு இருக்கறப்ப, ப்ளாஸ்மா, "டிவி' வேணும்ன்னு ரொம்ப பிடிவாதம் பிடிச்சான். அன்னிக்கு, அவனை உட்கார வச்சு, என்னுடைய வருமானம், செலவு கணக்கு எல்லாத்தையும் சொன்னோம். அவனே, கணக்கு போட்டு, கையில் எவ்வளவு மிஞ்சும்ன்னு பார்த்தான். அதில், தான் கேட்ட பொருளை வாங்க முடியாதுன்னு புரிஞ்சுகிட்டான். அதுக்கு அப்புறம், "அட்வைஸ்' செய்வது போல இல்லாமல், பேச்சோடு பேச்சாக, சேமிப்பு பற்றியும், முதலீடு பற்றியும், கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி அவனுக்கு புரிய வச்சோம். மாசா மாசம் வீட்டுக்கு பட்ஜெட் போடும் போது, அவன் எங்க கூட இருக்கும்படி பார்த்துப்போம். இப்போ ரெண்டு வருஷமா, அவனே பட்ஜெட் போட்டு, வரவு செலவையும் பார்த்துக்கறான்.''
அவர் பேசப்பேச, தான் எங்கே கோட்டை விட்டோம், என்று புரிந்தது மனோகருக்கு.
""அதுமட்டும் இல்லாம, இப்ப ரெண்டு வருஷமா மாலை நேரத்தில், ஒரு கம்ப்யூட்டர் விற்பனை செய்யும் கடையில் விற்பனையாளனாய் சேர்ந்து பணம் சம்பாதிக்கிறான். அதை சரியானபடி முதலீடும் செய்யறான். பணத்தின் அருமை தெரிந்து, அதை செலவு செய்யறான். அதனால், அவனிடம் கலந்தாலோசிக்காம, நாங்க எந்த செலவும் செய்ய மாட்டோம்.''
""எனக்கு இப்ப என்ன செய்யறதுன்னு புரியலையே சார். என் பையனின் பிடிவாதத்திற்கு நான்தான் காரணம்ன்னு தெரியுது. பாக்கெட் மணி கொடுத்த நான், அதை என்ன செலவு செய்யறான்னு கேட்டு இருக்கணும்... கேக்காம விட்டது என் தப்புதான். அவன் சின்ன பிள்ளையாய் இருந்த போதிலிருந்து, அவன் கேட்டது எல்லாத்தையும், ஒரே பிள்ளைன்னு வாங்கி கொடுத்து, கெடுத்து விட்டேன். என் பொருளாதார சூழ்நிலை குறித்து, ஒருநாளும் அவன்கிட்ட பேசினது இல்ல. அது பற்றி அறிந்திருந்தால், ஒரு வேளை அவன் இப்படி எல்லாம் நடந்துகிட்டு இருக்க மாட்டானோன்னு இப்போ தோணுது,'' குரலில் இயலாமையும், வருத்தமும் கலந்து வந்தது.
""இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை. நீங்க அவன் கிட்ட பொறுமையாய் பேசி பாருங்க. பனிரெண்டாவது படிக்கும் பிள்ளைகளுக்கு மொபைல் போன், பைக் போன்றவை அவசியமற்றது அப்படின்னு விளக்கி சொல்லுங்க.''
வெங்கட்ராமன் சொல்வதை கேட்ட மனோகர், ஏதோ தயங்குவது போல தோன்றியது.
""அவனிடம் பேச பயப்படறீங்களா? அவன் தற்கொலை பண்ணிப்பேன்னு சொன்னதாலா?''
மவுனமாய் தலையசைத்தார் மனோகர்.
""அவன் சும்மா உங்களை பயம் காட்ட சொல்லி இருப்பான். அப்படி சொல்லி, ஒருமுறை காரியம் நடந்ததால், அதே அஸ்திரத்தையே உங்களிடம் அடிக்கடி உபயோகிக்க துவங்கி இருக்கிறான். இருந்தாலும், நீங்க பயப்படறதால, ஒரு சின்ன ஆலோசனை... அவனை மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் அழைச்சுகிட்டு போங்க. கண்டிப்பா நல்ல மாற்றம் தெரியும். இந்த மாதிரி பிடிவாதமாய் இருக்கும் சில டீன் -ஏஜ் பிள்ளைகளுக்கு, கவுன்சிலிங் மூலம்தான் மனதளவில் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும்.''
புரிகிறது என்பது போல தலையாட்டினார் மனோகர்.
""நீங்க சொல்றதால இன்னைக்கி, ஒரு சின்ன முயற்சி செய்து பார்க்கறேன். என் வரவு செலவு மற்றும் கடன் கணக்கை, அவனிடம் எழுதி கொடுத்து, பார்க்க சொல்லி பேசி பார்க்கறேன். அப்பவும் புரிஞ்சுக்காம முரண்டு செய்தான்னா... மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் போக வேண்டியதுதான்.''
""உங்களுக்கு ஆபீசில் லோன் கிடைக்க ஏற்பாடு செய்றேன். அதை வச்சு ராஜனிடம் வாங்கியதை அடைச்சிடுங்க. அப்புறம் உங்களுக்கு பதவி உயர்வு வரும்போது, சம்பளம் அதிகமாகும். அதனால், உங்களையும் அடுத்த வாரத்துல, ஒரு நாள் எனக்கு தெரிஞ்ச நிதி ஆலோசர்கிட்ட அழைச்சுகிட்டு போறேன். அவர், உங்க பணத்தை சரியானபடி செலவு செய்யவும், முதலீடு செய்யவும் ஆலோசனை தருவார். அது உங்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும். முடிந்தால் உங்க பையனையும் கூட அழைச்சுகிட்டு வாங்க.''
வெங்கட்ராமன் தன் மேல் எடுத்து கொண்ட அக்கறையை கண்டு, மனோகருக்கு அப்படியே மனம் நெகிழ்ந்து போனது. ""என் மகனுக்கு தான், நான் நன்றி சொல்லணும் சார். அவன் இப்படி பிரச்னை செய்யாவிட்டால், உங்களை போன்ற நல்ல வழிகாட்டியும், நண்பரும் எனக்கு கிடைத்தே இருக்க மாட்டார்,'' என்று சொன்ன மனோகரை, மென்மையாய் அணைத்து கொண்டார்.
இனி எல்லாம் சரி ஆகிவிடும் என்று மனோகருக்கு தோன்றியது.
***

நித்யா பாலாஜி

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X