அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2013
00:00

அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு —
முகம் பார்த்திடாத மகளின் பிரச்னைக்கு தீர்வு அளிப்பீரா? நான் ஒரு ஆசிரியை. என் கணவரும் ஆசிரியர் தான். எனக்கு ஒரு ஆண் குழந்தை இரண்டரை வயதில் உள்ளது. மணமாகி மூன்றரை ஆண்டுகள் கூட ஆகவில்லை. இருவருக்கும் சமமான படிப்பு, பதவி இருந்தும், ஒரு பாவையின் சூதினால் நான் பாதி வழியில் பரிதவித்து நிற்கிறேன். அந்தப் பாவையும் ஒரு ஆசிரியை தான்.
என் கணவரும், அவரது குடும்பத்தினரும் என்னை பெண் பார்த்து, "பூ' வைத்த பின், ஆறு மாதங்களுக்கு பிறகு தான் என் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன், என் பணி மாறுதலுக்காக அவர் அதிக முயற்சி செய்தார். அதன் பலனாக, திருமணத்துக்கு ஒரு மாதம் இருக்கையில், அவர் பணிபுரியும் இடத்திற்கு அருகிலேயே எனக்கு பணி மாறுதல் கிடைத்தது.
"பூ' வைத்த பின், அவர் எனக்கு கடிதம் எழுதினார். வீட்டிற்கும் வருவார். கடிதத்திலும் நேரில் பேசும் பொழுதும் மாறுதல் சம்பந்தமாகத் தான் விஷயம் இருக்கும். எல்லை மீறி ஒரு தவறான வார்த்தை கூட பேசியதில்லை.
இந்நிலையில் என் திருமணம் நடந்தது. முறைப்படி மாமியார் வீடு வந்தடைந்தேன். திருமணமான மூன்றாவது நாள், ஒரு பெண் தனியாக எங்கள் வீட்டிற்கு வந்தாள். அவளை அறிமுகப்படுத்துகையில், "இந்தப் பெண் என்னுடன் பணிபுரிந்தவர்' என அவர் கூறினார். காபி கொடுத்தேன். சிறிதுநேரம் அவருடன் பேசிவிட்டு சென்று விட்டாள். அப்போது அவள் கழுத்தில் தாலி இல்லை.
என் மணவாழ்க்கை மகிழ்வாய் தொடர்ந்தது. ஒரே ஊரிலேயே நாங்கள் தனிக்குடித்தனம் உள்ளோம். என் மாமனார் சமீபத்தில் இறந்தார். அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் முடிந்த பின், மாமியார் வீட்டிலிருந்து என் வீட்டிற்கு வந்து விட்டேன்.
அதற்கு அடுத்த நாள் என் கையில் காபி வாங்கி குடித்த அந்தப் பெண், ஒரு பெண் குழந்தையோடு வந்திருந்தாள் என்றும், அவளை என் கணவர்தான் மணமுடித்து (என் திருமணத்திற்கு பிறகு) உள்ளார் என்றும் அறிந்தேன்.
என் கணவரிடம் கேட்டதற்கு ஒத்துக் கொண்டார். நான் அழுதேன். அரசாங்க வேலை கிடைப்பதற்கு முன் என் கணவரும், அவளும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றுகையில் காதல் ஏற்பட்டதாம்.
ஒரே நேரத்தில் இருவருக்கும் அரசாங்க வேலை கிடைத்த உடன், இருவரும் வெவ்வேறு திசையில் பிரிந்தாலும், காதல் மட்டும் தொடர்ந்துள்ளது.
எனக்கு, "பூ' வைத்த அன்றே அந்த பெண்ணுக்கு விஷயம் தெரியுமாம். அதன் பின்பும் இவருடன் அவள் உறவு வைத்தது ஏன் என்று தெரியவில்லை? அவள் வேறு இனத்தைச் சேர்ந்தவள்.
காதலிக்கும் போது தடையாக இல்லாத ஜாதி, கல்யாணம் என்ற போது தடையாக உள்ளது என இவர் கூறியிருந்தால் கூட, அவள் ஏன் அன்றே போலீஸ்வரை செல்லவில்லை? ஒரு ஆடவனுடன் காதல் என்ற பெயரில் சுற்றியவள், கரம் பிடிக்க போலீஸ் வரை செல்லாதது ஏன்?
என் கழுத்தில் தாலி ஏறும் முன், அவள் வந்து தடுத்திருந்தால், இன்று என் வாழ்வு சந்தோஷமாகியிருக்கும். அந்தப் பெண் நான் வேலை பார்த்த பள்ளிக்கு அருகில் தான் வேலை பார்த்துள்ளாள்.
எனக்கு மணமான பின், என் வாழ்வில் குறுக் கிடாமல் சென்றிருக்கலாம்.
என் கழுத்தில் தாலி ஏறும் வரை தான் அவளுக்கு தடுக்க உரிமை உண்டு. அதன் பின் குறுக்கிட உரிமை இல்லை. திருமணத்திற்கு முன்பே படுக்கையை பகிர்ந்திருந்தால் கூட அவளுக்கு என் வாழ்வில் நுழைய இடம் இல்லை. என் கணவர் அவளையே திருமணம் செய்திருக்க வேண்டும்; இல்லையெனில் திருமணத்திற்கு பின் அவளுடனான தொடர்பை விட்டிருக்க வேண்டும்.
அவருடன் மேற்படி விஷயத்தைக் கூறி சண்டையிட்டதில், "நீ வளைகாப்புக்கு சென்றிருந்த போது அவளுடைய சகோதரர்கள் என்னை அடித்து அந்த கல்யாணத்தை யாருக்கும் தெரியாமல் செய்து வைத்து விட்டனர். உன்னிடம் இதைச் சொன்னால் ஏற்க மாட்டாய் என்று எண்ணி, உன்னிடம் மூன்று ஆண்டுகளாக மறைத்தேன்...' என்றார்.
அவர் கூறும் சமாதானத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் விஷயம் தெரிந்து நான் அழுகையில், அவரும் என்னுடன் அழுதார். நான் அவரோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், என் பெற்றோரிடம் கூட விஷயத்தைச் சொல்லவில்லை...
என் கணவரும், "இவ்விஷயத்தை உன் வீட்டில் சொல்ல வேண்டாம்' என்றார். 20 நாட்கள்தான் என்னால் மறைக்க முடிந்தது.
என் அழுகையைக் கண்டு என் பெற்றோர் விஷயத்தைக் கறந்து விட்டனர்.
என் வாழ்வுக்காக, அவர்கள் இவருடன் பேசியதில் ஒரு மாதம் தவணை கொடுத்தனர். அந்த ஒரு மாதத்தில் வழக்கறிஞரை அவர் சந்தித்து பேசி, நிமிர்ந்து கொண்டார்.
நாங்கள் கேஸ் போட்டால், அவள் இவரைப் பார்த்து, "இவர் யாரென்று எனக்குத் தெரியாது' என்று கூறிவிடுவாளாம். அவரும் (என்னைக் காட்டி) "இவள் தான் என் மனைவி, அவள் யாரென்று எனக்கு தெரியாது...' என்று கூறிவிடுவாராம்.
எங்களிடம் வேறு ஆதாரங்கள் இல்லை. இப்பொழுது ஆறு மாதமாக நான், என் பையனுடன் தனியாக வாழ்கிறேன். அவர், அவளோடு வாழ்கிறார்.
என் வாழ்வை இழந்து, நான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்து பரிதவிக்கிறேன். விதியை எண்ணி கண்ணீரின் துணையோடு ஒரு மழலையோடு மயங்குகிறேன். இதற்கு மேல் நான் எடுக்க வேண்டிய முடிவுகளை தயை கூர்ந்து தங்கள் பதிலில் எதிர்பார்க்கிறேன். இந்த மகளுக்கு உங்களுடைய ஆலோசனை கட்டாயம் தேவை.
இப்படிக்கு உங்கள் மகள்.

அன்புள்ள மகளுக்கு —
உன் கடிதம் கண்டேன். வரப்போகும் மருமகனைப் பற்றி உன் பெற்றோர் தீர விசாரிக்காமல், உன்னை மணம் செய்து கொடுத்தது பெரிய தவறு.
நிறைய பெற்றோர் அரசு உத்யோகத்துடன் கூடிய மாப்பிள்ளை என்றால், எப்படியாவது தம் பெண்ணை கட்டிக் கொடுத்து அனுப்பி விட வேண்டும் என்றுதான் நினைக்கின்றனரே தவிர, மாப்பிள்ளையின் பின்னணி பற்றி யோசிப்பதே இல்லை.
நீயே, உன் கடிதத்தில் மிகத் துணிச்சலாக ஒரு வார்த்தை எழுதியிருக்கிறாய்...
"என் கழுத்தில் தாலி ஏறும்வரைதான் அவளுக்கு தடுக்க உரிமை உண்டு. அதன்பின் குறுக்கிட உரிமை இல்லை. திருமணத்திற்கு முன்பே படுக்கையை பகிர்ந்திருந்தால் கூட அவளுக்கு என் வாழ்வில் நுழைய இடம் இல்லை. என் கணவர் அவளையே திருமணம் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் திருமணத்திற்குப்பின் — அவளுடனான தொடர்பை விட்டிருக்க வேண்டும்...'
— இவ்வளவு தீர்மானமாக பேசும் நீ, அவருடன் சண்டையும் போட்ட — எதற்காக உன் கணவரை அவள் வீட்டுக்கே அனுப்பி வைத்தாய்? உனக்கு உரிமையான பொருளை அழுது ஆர்ப்பாட்டம் செய்தாவது, உன் வசம் வைத்திருக்க வேண்டாமோ?
உன்னுடைய திருமணம் சட்டப்படி பத்திரிகை அடித்து, உறவினர் முன்னிலையில் நடந்திருந்தால், இரண்டாமவள் உன் கணவரின் முதல் காதலியாக இருந்தாலும் கூட செல்லாது.
அவருடைய அண்ணன்கள், என்னதான் மிரட்டி அடித்து உதைத்து தாலிகட்ட வைத்திருந்தாலும், அவள் உன் கணவரை பொறுத்தவரை சின்னவீடுதான். எப்போது அவர், தன் தவறை உணர்ந்து அழுதாரோ, அப்போது நீ சொல்ல வேண்டியதை இதமாய், பதமாய் சொல்லி, இவருடைய காற்று கூட அந்த பக்கம் போகாதவாறு தடுத்திருக்க வேண்டும்.
ஆனால், இப்படியெல்லாம் சொல்கிறேனே தவிர, விருப்பம் இல்லாத கணவனை, முரட்டுக் காளையை கொட்டிலில் கட்டிப் போடுவதைப் போல உன் பக்கம் நிறுத்தி வைத்து தான் என்ன பிரயோஜனம்?
அவர் சொல்வது போல, போலீஸ், விசாரணை என்று வந்தால், "எனக்கும், இவளுக்கும் எந்த ஒரு உறவும் இல்லை... இவளை எனக்குத் தெரியவே தெரியாது' என்று அவர் கூறினால், அது அந்தப் பெண்ணுக்குத் தானே அவமானம்.
யோசித்துப் பார்... நாளைக்கு நகைப்புக்கு இடமாகப் போவது அவர்கள் இருவருடைய வாழ்க்கையும் தானே அல்லாது உன்னுடையதல்ல! எந்த ஒரு புருஷனையும் அல்லது மனைவியையும், நாம் இருவரும் கணவன்-மனைவியாகி விட்டோம். ஆதலால், நீ என்னைத் தான் விரும்ப வேண்டும் என்று கட்டளை இட்டு, பிரியத்தை வரவழைக்க முடியாது.
அதை விடவும் மிகச்சிறந்த வழி, போனதெல்லாம் போகட்டும் என்று உன் குழந்தையுடன், உன் உத்தியோகத்துடன் நீ தனித்து வாழ முயற்சிப்பது தான்.
ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொள். எந்தக் காரணத்தைக் கொண்டும், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தராதே.
அப்படி உன் கணவர் நிர்ப்பந்தித்தால், இப்படிசொல்...
"நான் ஒன்றும் நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு வரவில்லை. என் வரையில் நான் அப்பழுக்கில்லாதவள் என்பதையும், இந்தப் பிள்ளை உங்களுக்குப் பிறந்தது தான் என்பதையும், ஆதாரத்துடன் எந்த கோர்ட்டில் வேணுமானாலும் ஏறி சொல்ல முடியும்.
"எனக்கு கணவன் என்கிற உறவுதான் இல்லாமல் போய்விட்டது. ஆனால், சட்டப்படியும், தர்மப்படியும் என் மகனுக்கு நீங்கள்தான் அப்பா. ஆதலால், உங்களுடைய வாரிசு ஆன அவனை, நான் நல்ல முறையில் வளர்ப்பேன். அதே சமயத்தில், உங்களுடைய சொத்தோ, ஓய்வு பெறும் போது கிடைக்கும் தொகையோ எதுவானாலும் அவனுக்குத் தான் வந்து சேர வேண்டும்.
"ஆதலால் நீங்கள் எங்கே வேண்டுமானாலும், எவருடன் வேண்டுமானாலும் இருந்து தொலையுங்கள். நாளைக்கு உங்கள் மகன் பெரியவனாகி, "அப்பா எங்கே?' என்று கேட்கும் போது, உங்களைக் காட்டி, நீங்கள் எனக்கு செய்த துரோகத்தையும் சொல்வேன்' என்று சொல்.
அதோடு நிறுத்திக் கொள்ளாதே... இனி எந்தக் காலத்திலும் உன் கணவன் அவளை விட்டு விட்டு உன்னிடம் வந்தாலும், இரக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளாதே. பெண்களின் இந்த இளகிய மனதுதான், ஆண்களை மேலும் மேலும் தவறு செய்ய ஊக்குவிக்கிறது.
"என்ன... கொஞ்ச நாள் அழுவாள், ஆர்ப்பாட்டம் செய்வாள். அப்புறம் தானே சரியாகி விடுவாள்...' என்கிற நினைப்பை உன் வரையில் பொய்யாக்கு.
சகலத்தையும் இழந்து, திரும்பி வந்தால், பரிவுடன் ஏற்று, மிச்சம் இருக்கிற நகைநட்டுக்களையும் எடுத்துக் கொடுக்க நீ ஒன்றும் கண்ணகி இல்லை; அவன் ஒன்றும் கோவலன் இல்லை.
நமக்குத் தேவை பாரதி கண்ட புதுமைப்பெண்ணே தவிர, சிலப்பதிகாரம் இல்லை. வாழ்ந்துகாட்டு.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (39)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram - San Jose,யூ.எஸ்.ஏ
14-மார்ச்-201303:59:48 IST Report Abuse
Sriram மரபு அணு சோதனை மூலம் அந்த பெண்ணின் குழந்தையின் தந்தை அவன் தான் என்பது கண்டு பிடிக்க முடியும். அவனை விடாதே
Rate this:
Cancel
Dhanapaul Selvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-மார்ச்-201313:51:41 IST Report Abuse
Dhanapaul Selvan "வாசகர்களே எனக்கு ஒரு டவுட்". இதற்கு கண்டிப்பாக காயத்ரி மற்றும் பட்டிகட்டன் கருத்துகள் வேண்டும். இவள் கணவனை அபகரித்த பெண்ணின் செயல் சமுக மற்றும் கலாசார பார்வையில் கண்டிப்பாக தவறே என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. காரணம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாரம்பரியம். ஆனால், ஆணாகிலும் சரி பெண்ணாகிலும் சரி, அனைவரும் தங்களுக்கு ஒரு சிறந்த வாழ்கை வேண்டும் என்றே ஓடுகிறார்கள், முயற்சிகிறார்கள், அந்த அடிப்படையில் சமூகத்திற்கும் கருத்து எழுதும் உங்களுக்கும் தவறு என்ற ஒரு செயலை, தன் வாழ்கை சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் அந்த பெண் இவள் கணவனை மணந்திருக்க வேண்டும். இந்த பெண்ணை ஒரு பெண்ணாக பாத்து இவள் சிறப்பாக வாழ ஆலோசனை சொன்ன நீங்கள் அனைவரும் அந்த பெண்ணையும் ஒரு பெண்ணாக பாத்து அவள் சிறப்பாக வாழ உங்கள் ஆலோசனை என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளேன். அந்த பெண் தவறு செய்தவள் தண்டனை அனுபவிக்கவே வேண்டும் என்று சமுக கலாசார பார்வையில் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் உங்கள் கருத்து என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளேன். வாழ்க வளமுடன்.
Rate this:
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
14-மார்ச்-201301:45:15 IST Report Abuse
HoustonRajaநல்ல கருத்து. யோசிக்க பட வேண்டியது. இந்த வார பகுதியை படித்ததில் எனக்கும் சில ஐயங்கள் தோன்றின. (1) இந்த பெண்ணிற்கு 3.5 ஆண்டுகள் கழித்தே இந்த விவரம் வெளியே வந்தது ஏன்? (2) கணவன் அழுதான் என்ற காரணத்திற்காக, அவனுடன் இந்த மனைவிக்கு தொடர்ந்து வாழ நம்பிக்கை வருமா? மற்றபடி சகுந்தலா கோபிநாத் அவர்களின் ஆலோசனையை முழுதும் ஏற்கிறேன். இந்த பெண் தனது அமைதி, குழந்தையின் ஆரோக்கியம்/பாதுகாப்பு ஆகியவற்றிக்கு முதலில் நிறைய நேரம்/சிந்தனை/உழைப்பு செலவிட வேண்டும். அதை விடுத்து, உறவு/சட்ட போராட்டத்தில் பெரும் கவனம் செலுத்துவதை தவிர்க்கலாம். இழந்த செல்வத்தை திரும்பவும் ஈட்ட அவசியமானதை கண்டிப்பாக செய்யவேண்டும்....
Rate this:
காயத்ரி - Chennai,இந்தியா
14-மார்ச்-201306:59:23 IST Report Abuse
காயத்ரி அன்பு தனபால் செல்வன் அவர்களுக்கு, நல்ல கேள்வி..சரி, இந்தப் பெண்ணிற்கு இவர் தான் முன்னாள் காதலன், அப்போது வாசகி கேட்டது போல் முதலிலேயே ஏன் மணக்கவில்லை..காதலிக்கும் போது குறுக்கிடாத ஜாதி திருமணத்தின் போது மட்டும் எப்படி நின்றது? சரி, காதலருக்கு வேறொரு பெண்ணுடன் மணமாகி விட்டது, குழந்தையும் இருக்கிறது..என்ன செய்திருக்கலாம்? எங்கிருந்தாலும் நலமுடன் வாழட்டும் என்று பிரிந்திருக்க வேண்டும்..ஆனால் பிரிய முடியாமல் அடம் பிடித்து மணமானவர் என்றாலும் நினைத்த வாழ்வை அடைய காதலரைக் கரம் பிடித்து ரகசிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.. துணிக்கடையில் பிடித்து எடுத்த சேலையை குழம்பிய நிலையில் நிராகரிக்கும் ஒரு பெண் இன்னொரு பெண் அதே சேலையை எடுத்து உடுத்தி இருக்கும் வேளையிலே அவரிடமிருந்து பறிப்பது போன்ற கீழ்த்தரமான செயலை அந்தப் பெண் செய்திருக்கிறார்..தவறென்று தெரிந்தே செய்திருக்கிறார்.. தவறுகள் செய்தால் தண்டனைகள் உண்டு தானே..அந்தக் கணவருக்கும் இந்தப் பெண்ணிற்கும் சம அளவிலேயே தானே தண்டனைகளும் பகிரப்பட வேண்டும்..'கபி அல்விதா நா கஹ்னா' என்ற இந்திப்படம் பார்த்திருக்கிறீர்களா? அதாவது ஷாருக்கும் பிரீத்தி ஜிந்தாவும் கணவர் மனைவி, ஒரு குழந்தையும் உண்டு, ராணி முகர்ஜியும் அபிஷேக்கும் கணவர் மனைவி, ராணிக்கு அபிஷேக்கின் மேல் எந்த ஈடுபாடும் இருக்காது, அதே போல ஷாருக்கிற்கும் பிரீத்தியின் மேல் மனக்கசப்புகளே மேலோங்கி இருக்கும்..ஷாருக்கிற்கும் ராணி முகர்ஜிக்கும் காதல் ஏற்பட்டு கடைசியில் இருவரும் தத்தம் ஜோடிகளைப் பிரிந்து இணைந்து காதல்() வாழ்க்கையை வாழுவதாகப் புரட்சிகரமான கருத்தைக் கொண்டு படத்தை அமைத்திருப்பார்கள்..இந்த வாசகியின் கணவர் அப்பாவிப்பெண்ணைத் திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாம், செய்யவில்லை, அடுத்து குழந்தை பிறந்தாயிற்று, அது பிறக்கும் முன்பே அடுத்த திருமணம், என்ன செய்திருக்க வேண்டும்.. மனைவியிடம் மனம் விட்டுப் பேசி பரஸ்பர விவாகரத்து வாங்கி இருக்க வேண்டும், பிறகு காதலியைக் கை பிடித்திருப்பாரேயானால் சேதாரம் அதிகம் இருந்திருக்காது..அப்படி செய்யவில்லையே..இல்லையா? இதற்கு அந்தப் பெண்ணும் உடந்தை..இருவருக்கும் சரிவிகிதப்பங்கு இருக்கிறது..கொடுமைக்கார மனைவியோ கணவரோ என்றால் கூடப் பாதை மாறுவதற்கு நியாயமான காரணம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆனால் இவர்கள் விஷயத்தில் சுய நலமல்லவா நர்த்தனம் செய்திருக்கிறது. சரி, இனி என்ன செய்யலாம் என்றால் வாசகி இவரை விவாகரத்து செய்து விட்டு தனக்கான இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் இனியாவது யாருக்கும் கனவிலும் துரோகம் இழைக்காமல் இன்னொரு குடியைக் கெடுக்காமல் இரண்டாவதாக மணம் செய்தவருடன் வாழ வேண்டும்..அந்தப் பெண்ணின் நிம்மதி கேள்விக்குறியே...இவர்களின் சந்தோஷத்திற்கு அப்பாவிப் பெண்ணையும் குழந்தையையும் பலிகடா ஆக்கியது எந்த விதத்திலும் நியாயமல்ல..கடவுள் நிச்சயம் தவறுகளை உணர வைப்பார். இன்னுமொரு வழி இருக்கிறது, இரண்டாவதாக வந்த பெண் இந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு கணவரை முதல் மனைவியிடம் சேர்த்து விட்டு விலகுவது..ஆனால் எதற்கும் துணிந்தவர் கிடைத்ததை விட்டுக் கொடுப்பாரா...இவர்கள் ஆட்டத்தில் பலியானது அந்தப் பெண்ண் மற்றும் குழந்தையும் தான்..அப்பா இருந்தும் இல்லாமல் வளரும் குழந்தையின் வலிகள் கொடுமை.....
Rate this:
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
15-மார்ச்-201315:57:29 IST Report Abuse
சகுனிதிரு தனபால் செல்வன் அவர்களுக்கு, உங்கள் கேள்வியில் உள்ள நியாயங்கள் மனிதாபிமான மற்றும் பெண் என்ற அடிப்படையில் சிந்திக்க கூடியவையாய் இருந்தாலும், நடைமுறையில் சாத்தியம் இல்லாதது ..... நீங்கள் தெரிவித்த கருத்து "தன் வாழ்கை சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் அந்த பெண் இவள் ""கணவனை"" மணந்திருக்க வேண்டும்"" என்பதை மறுபடியும் ஒரு முறை நீங்களே படியுங்கள் ..... கணவனை ...... புரிகிறதா ........ அங்கே தான் பிரச்சினை ........ அவள் மணந்தது வேறொருத்தியின் கணவனை ....... ஏற்கெனவே அரசு வேலை வாய்ப்புடன் வளமாக வாழும் ஒருத்தி, அடுத்தவள் கணவன் மீது ஆசை கொள்ளலாமா? ....... சரி ..... இன்னொன்றும் நீங்கள் கவனித்திருக்க வேண்டும் ........ நீங்கள் வாதாடும் இந்த பெண் முன்பே நம் ஹீரோவுடன் பழகி இருந்தாலும், அவரின் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்தை பற்றி நன்கு அறிந்திருக்கிறாள் ..... மணமக்கள் சந்தோஷமாக வாழ்ந்த காலகட்டத்தில், மகப்பேறுக்கு மனைவி சென்ற போது இந்த கருநாகம் கள்ளத்தனமாக உள்ளே நுழைந்திருக்கிறது ........ அதன் பின் அவள் சகோதரர்கள் கட்டாயப்படுத்தி, அடித்து உதைத்து நம் ஹீரோவுடன் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் என்றால் சட்டம் எதற்கு போலீஸ் எதற்கு ....... நம் ஹீரோ என்ன செய்துகொண்டிருந்தார் ......... உண்மையில் அவருக்கு இதில் விருப்பம் இல்லை என்றால் .... என்னதான் பயந்தாங்கொள்ளியாக இருந்திருந்தாலும் கூட ........ திருப்பி அடிக்க உடம்பில் தெம்பில்லாவிட்டாலும் கூட ...... காவல் துறைக்கு புகார் தெரிவித்திருக்கலாமே ....... அவர் எதற்கு இந்த பெண்ணுடனான சகவாசத்தை தொடர்ந்து ஒரு குழந்தை வேறு பெற்றுக்கொண்டார் ........ அவர் எண்ணம் ....... 2 மாடுகள் பூட்டிய வண்டி ஓட்டுவது ...... அதற்கு முதல் மனைவி ஒத்துக்கொள்ளவில்லை ........ இப்போது முதல் மனைவி உரிமை கொண்டாடுவதால் இருவருக்கும் நெருக்கடி ....... அதை விடுங்கள் .... பெண் என்ற ஒரே காரணத்துக்காக அவள் செய்த தவறை (துரோகத்தை) மன்னிக்கவோ மறக்கவோ முடியாது ....... சொல்லப்போனால் இது 'உரிமை கொண்ட' ஒரு பெண் மற்றும் அவள் குழந்தையின் "வாழ்க்கை" சம்பந்தப்பட்டது ..... இது ஒன்றும் நளாயினி காலமல்ல ...... புராண காலத்திலேயே ஆனானப்பட்ட கோவலன் மாதவியின் அழகில் மயங்கி கிடந்ததால் மதுரையை எரித்தாள் கண்ணகி ....... இந்த நவநாகரீக மங்கைக்கு என்ன கேடு? ...... ஊரில் (அ) இவள் ஜாதியில் என்ன ஆண்களா இல்லை ........ ஏன் .... இவ்வளவு அமர்க்களம் செய்து தங்கைக்கு இன்னொருத்தியின் கணவனுடன் அடிதடி திரு(மறு)மணம் செய்து வைத்த அந்த கில்லாடி அண்ணன்மார்கள், தன் தங்கைக்கு காலாகாலத்தில் ஒரு மணமகனை ஏற்பாடு செய்து தன் கடமையை நிறைவேற்றி இருக்கலாமே ......... ஏன் செய்யவில்லை ....... தங்கை மீது அவ்வளவு பாசமா அல்லது அந்த பெண் அவர்கள் குடும்பத்துக்கு அடங்கி நடக்கவில்லையா ........... அல்லது சகோதரர்கள் அறிவுரையை மதிக்கவில்லையா ....... அரசு பணியில் உள்ளவர் 2வது திருமணம் செய்யக்கூடாது என்பது படித்த அவளுக்கு தெரியாதா? ....... தெரிந்தே சட்டத்தை அவள் மீறியிருக்கிராளா? ......... என்றால் அவள் தண்டிக்கப்படுவதில் என்ன அநியாயம் இருக்கப்போகிறது ....... அடுத்தவர் குடியை கெடுத்து, தான் நிம்மதியாய் இருந்தால் போதும் என்ற சுயநலம் கொண்டவளுக்கு பச்சாதாபம் பார்ப்பது எதற்கு? ........ மனதறிந்து அவள் செய்த பாவத்திற்கு ......... அவளுக்கு உடனடி தேவை தண்டனை ........ வேண்டுமானால் குறைந்த பட்சமாக அது அவளுக்கும் அவளின் ஆசை கணவனுக்கும் இடையேயான நிரந்தர பிரிவு தான் ........ மற்றவை சட்டத்தின் கையில் ............
Rate this:
Cancel
padma - chennai,இந்தியா
13-மார்ச்-201312:19:26 IST Report Abuse
padma அப்படி எல்லாம் அவர்களை விட்டு விட கூடாது சகோதரி.... முதலில் நீ நிமிர்ந்து நில்...... கேஸ் போடு..... அவ்வளவு சுலபமாக யாரும் யாரையும் தெரியாது என்று சொல்லி விட முடியாது.................. நிறைய ஆதாரங்கள் திரட்டு.... உதாரமாக அவர்களின் போன் உரையாடல் மற்றும் sms பதிவுகளை பெற முயற்சி செய்..... அதுவரை பொறுமையாக இரு..... பிறகு கேஸ் போட்டு அவர்களை நார் நாராக கிழி சகோதரி..... அந்த மானகெட்ட பெண்ணை விடாதே அதே சமயம் உன் கணவனையும் விடாதே..... அதற்க்கு நீ மிகவும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.... கவலை கொள்ளாதே.............. நல்ல திறமையான advocate யை தொடர்பு கொண்டு கேஸ் ஐ வழி நடத்து..... குழந்தையை பார்த்துகொள்..... மனம் தளராதே ..... வாழ்க்கை போய் விட்டதே என்று தளர்ந்து விடாதே....... போராடு.....வெற்றி உனக்கே.... நியாயம் கண்டிப்பாக வெல்லும்.................. ... பத்மா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X