திண்ணை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மார்
2013
00:00

"பேசும் படம்' பத்திரிகையின் உதவி ஆசிரியராக நான் இருந்த சமயம். அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார். சென்னை தியாகராய நகரில், அவர் தன் சொந்த வீட்டில் எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் இருந்தார். முன் கூட்டியே அவரை சந்திக்க அனுமதி பெற்று, அவரது இல்லத்திற்கு சென்றேன். மாடிப் பகுதியில் தங்கியிருந்தார். காரியதரிசியிடம் வந்த விவரம் தெரிவிக்கப்பட்டு, விசிட்டிங் கார்டையும் கொடுத்து அனுப்பினேன்; அழைத்தார்.
"பேசும் படம்' ஆண்டு மலருக்காக, அவரது வாழ்த்து செய்தியும், கட்டுரையும் வழங்கும்படி கேட்டுக் கொண்டேன். பதில் ஏதும் அவர் பேசவில்லை. "என் விசிட்டிங் கார்டின் பின்புறத்திலேயே, "சினிமாவின் மீது எனக்கு விருப்பம் கிடையாது...' என்று ஆங்கிலத்தில் எழுதி, என்னிடம் தந்து, விடை கொடுத்து அனுப்பி விட்டார். கீழே வந்த நான், மறுபடியும் அவரிடம் சென்று, "இந்த விசிட்டிங் கார்டில் எழுதியுள்ளதை மலருக்கு பயன்படுத்திக் கொள்ளலாமா?' என்று பணிவுடன் கேட்டேன்.
என்னிடமிருந்து விசிட்டிங் கார்டை திரும்பவும் வாங்கிக் கொண்டு, என்னை அனுப்பி விட்டார்.
அதுதான் ராஜாஜி.
"பாரத ரத்தினங்கள்' என்ற நூலில் பொம்மை சாரதி.

அண்ணாதுரை எழுதிய, "சந்திரமோகன்' நாடகத்தில், அண்ணாதுரை காகபட்டர் வேடம் போட்டு சிறப்பாக நடித்தார். காகபட்டருக்கு பிரதம சீடனாக ரங்கு என்பவர் வருவார். அதில், திரவுபதியைப் பற்றிய உரையாடல் காகபட்டருக்கும், ரங்குவிற்கும் நடக்கும். திரவுபதிக்கு ஐந்து கணவன்மார்கள். ஒரே சமயத்தில், தருமர் சொக்கட்டான் ஆடவும், பீமன் சாப்பாடு போடவும், அர்ச்சுனன் உலாவப் போகவும், சகாதேவன் தரும நூல் படிக்கவும், ஒருவன் பாட்டுப் பாடவும் கூப்பிட்டால், அவள் என்ன செய்வாள்?' என்று காகபட்டர், ஒரு கேள்வி கேட்டார்.
"என்ன செய்ய முடியும்? ரொம்ப சங்கடம் தான்!' என்பார் ரங்கு.
"நினைப்பதற்கே இவ்வளவு சங்கடம் என்கிறாயே, இதைப்போல எவ்வளவு சங்கடங் களை அந்த பதிவிரதை தாங்கியிருப்பாள்' என்பார் காகபட்டர்.
"என்ன செய்தாள், சுவாமி?' என்று ரங்கு கேட்க, "திரவுபதி உடனே கிருஷ்ண பரமாத்மாவை நினைத்துக் கொண்டாள். அப்போது கிருஷ்ண பரமாத்மா, ருக்குமணியுடன் ஊஞ்சலில் உட்கார்ந்து சல்லாபித்து கொண்டிருந்தார். கிருஷ்ண பரமாத்மா யாருடன் இருந்தார்?' என்று காகபட்டர், சீடனைக் கேட்க, "ருக்மணியுடன்' என்று ரங்கு சொல்ல வேண்டும்.
ஆனால், ஒருநாள், "சந்திரமோகன்' நாடகத்தில், இந்தக் காட்சி வரும்போது, "கிருஷ்ண பரமாத்மா யாருடன் இருந்தார்? என்று காகபட்டர் கேட்டபோது, "ருக்மணியுடன்' என்று சொல் வதற்கு பதில், "திரவுபதியுடன்!' என்று தவறாக சொல்லி விட்டார் ரங்கு.
காகபட்டர் வேடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் திகைத்துப் போயிருப்பர். ஆனால், அண்ணாதுரை சமாளித்து, "ஏண்டா மண்டு... ராதா, ருக்மணி, சத்தியபாமா என, ஆயிரம் கோபியர்கள் இருப்பது கிருஷ்ண பரமாத்மாவுக்கு போதாது என்று, திரவுபதியையும் அவரிடம் அனுப்பி வைத்து விட்டாயா?' என்று சொன்னார்.
கைத்தட்டலில் கொட்டகை அதிர்ந்தது, ரங்கு பெருமூச்சு விட்டார். அண்ணாதுரை, தவறான வசனத்தை சமாளித்து சரிபண்ணி விட்டதற்காக சமயோசிதமாக சேர்த்துக் கொண்ட இந்த வசனம், பின் இந்த நாடகத்தில் ஒரு பாகமாகவே சேர்க்கப்பட்டு விட்டது.
சென்னை முன்னாள் மேயர்

வேலூர் நாராயணன், "ஒரு மேயரின் நினைவுகள்' நூலில்.
போப்பாண்டவரின் வாடிகன் நகரில் பேச்சு வழக்கிற்கு இத்தாலி மொழியையும், சடங்குகளுக்கு லத்தீன் மொழியையும், வெளிநாடுகளுக்கு கடிதம் எழுத, பிரெஞ்சு மொழியையும் பயன்படுத்துகின்றனர்.
போப்பாண்டவரை சுருக்கமாக, "போப்' என்கிறோம். போப் என்பது, "பாபா' என்ற லத்தீன் மொழியிலிருந்து உருவானது. இதற்கு, "தந்தை' என்று பொருள்.
***

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X