மனமே கடவுள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2013
00:00

பத்து வயது பேரன், அந்த பேட்டரி காரை அழகாக, வளைத்து வளைத்து ஓட்டுவதை, சந்தோஷம் மேலிட ரசித்துக் கொண்டிருந்தார் ராம்பிரசாத்.
""என்னப்பா... பேரனுக்கு, காஸ்ட்லி கார் வாங்கிக் கொடுத்துட்டு, அவன் விளையாடுவதை ரசிச்சுட்டு இருக்கிங்களா?''
பக்கத்தில் வந்து நிற்கும் மகன் சிவாவை பார்த்து புன்னகைத்தார்.
""அமெரிக்காவிலிருந்து என் பேரன் வந்திருக்கான். என்னோடு இருக்கிற இந்த ஒரு மாசமும், அவனை சந்தோஷமாக வச்சுக்கணும்ன்னு பார்க்கிறேன்.''
""அதுக்காக, இவ்வளவு விலையில் தேவையாப்பா. இதை எடுத்துட்டும் போக முடியாது. எதுக்குப்பா இவ்வளவு செலவு செய்றீங்க?''
""ப்ளீஸ்ப்பா... இதிலே தலையிடாதே. என் பேரனுக்காக, எவ்வளவு செலவழிச்சாலும், அது எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது. சரி, உன்னோட சேவிங்சை, இந்தியாவில் இன்வெஸ்ட் பண்ணனும்ன்னு சொன்னியே. இடம் வாங்கி போட்டா, பின்னாடி நல்ல விலை போகும். வளசரவாக்கத்தில் பார்ப்போமா?''
""உங்ககிட்டே பொறுப்பை ஒப்படைச்சுட்டேன். எழுபத்தைந்து லட்சம் வரைக்கும் இன்வெஸ்ட் பண்ணலாம்ன்னு இருக்கேன். அதுக்குத் தகுந்த மாதிரி பாருங்கப்பா.''
""இன்னைக்கு உன் ப்ரெண்ட்ஸை, மீட் பண்ணப் போறேன்னு சொன்னியே!''
""ஆமாம்பா. சாப்பிட்டு போகணும். நீங்க இன்னைக்கு பாக்டரிக்கு போறீங்க இல்லையா.''
""ஒரு வாரம் லீவு போட்டாச்சு. இன்னைக்கு அவசியம் போகணும். வேலை நிறைய இருக்கு.''
ராம் பிரசாத், "ராம் மேட்சிங் ஒர்க்ஸ்' என்ற பெயரில், தீப்பெட்டி பாக்டரி நடத்திக் கொண்டிருந்தார். பிசினஸ் நல்லபடியா நடந்து, பணம் கை நிறைய புரள, ஒரே மகனான சிவாவும், அமெரிக்காவின் தலைநகரில் பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிய, குடும்பத்துடன் ஒரு மாத விடுமுறையில் இந்தியா வந்திருந்தான்.
மகன், மருமகள், பேரன், கணவருக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தாள் லட்சுமி.
""சிவா, இந்த தடவையாவது, நம்ப குலதெய்வம் கோவிலுக்கு எல்லாருமாக போய் பொங்கல் வச்சு, அபிஷேகம் பண்ணிட்டு வருவோம்பா. என்ன சொல்ற?'' என்று கேட்டாள் லட்சுமி.
""அம்மா... என்னை பத்திதான் உனக்கு தெரியுமே. எனக்கு இந்த கடவுள் நம்பிக்கையெல்லாம் கிடையாது. நம்ப கடமைகளை ஒழுங்காகச் செய்தால் போதும்ன்னு நினைக்கிறவன். கோவில், பூஜை இதிலெல்லாம் எனக்கு ஈடுபாடு கிடையாது. நான் வரலை. நீங்க தாராளமாக உங்க மருமகள், பேரனை கூட்டிக்கிட்டு போய், திருப்தியா சாமி கும்பிட்டு வாங்க.''
""என்ன சொல்றான் பார்த்தீங்களா?''
""அத்தை... அவரை விடுங்க. அவர் சாமியே கும்பிடறதில்லை. கேட்டா, மனசாட்சிக்கு பயந்து நடந்தால் போதும். அடுத்தவரை ஏமாற்றாமல் நாலு பேருக்கு நல்லது செய்தாலே, அந்த கடவுளை கும்பிட்ட மாதிரிதான்னு வேதாந்தம் பேசுவாரு. அவர் வரமாட்டாரு. நாம் போய்ட்டு வரலாம்,'' என்று மருமகள் சொல்ல...
""சிவா, நீ என்ன தான் சொன்னாலும், நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை வழிநடத்துதுன்னு நம்பறியா இல்லையா. அதைத்தான் நாம் கடவுள்னு சொல்றோம். கடவுளை கும்பிடறதாலே, அவன் சன்னிதியில் மனமுருகி நிற்கும்போது கிடைக்கிற ஆத்மதிருப்தி இருக்கே, அது வேறு எதிலும் கிடைக்காதுப்பா. எங்களுக்காக வரக் கூடாதா?''
""ப்ளீஸ்ப்பா. உங்க உணர்வுகளை மதிக்கிறேன். என்னை கூப்பிடாதீங்க. நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க,'' என்றான் சிவா.
சுவாமிக்கு சார்த்த பட்டுத்துணி, அபிஷேக மற்றும் பூஜை பொருட்கள் என, எல்லாவற்றையும் காரில் டிரைவர் எடுத்து வைக்க...
""லெட்சுமி மறக்காம எல்லாத்தையும் எடுத்துக்க, பிரார்த்தனை பணம் உண்டியலில் வச்சிருந்தியே... அதையும் எடுத்து வச்சுக்க,'' என்று கூறிய ராம்பிரசாத்...
""நாங்க கிளம்பறோம் சிவா. நீ இன்னைக்கு பாக்டரி போய் சுத்தி பார்த்துட்டு வர்றதாக சொன்னியே. போய்ட்டு வா. மானேஜர்கிட்டே சொல்லியிருக்கேன். சுத்திக் காட்டுவாரு,'' என்று கூறினார்.
""சரிப்பா... பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க. எனக்கும் வீட்டில் தனியா இருந்தா பொழுது போகாது. போனமுறை வந்தப்ப, பாக்டரிக்கு போக நேரமில்லாமல் போச்சு. இன்னைக்கு போய்ட்டு வர்றேன்.''
""மதிய சாப்பாடு, நம்ப பாக்டரி கேன்டீனில் ஸ்பெஷலாக உனக்கு தயார் பண்ணி தருவாங்க. சாப்பிட்டு பாரு. நாங்க கிளம்பறோம்.''
எல்லாரும் விடை பெற்றுச் செல்ல, பாக்டரிக்கு கிளம்ப ஆயத்தமானான் சிவா.
""சார்... வாங்க. நீங்க வரப்போறதாக ஐயா சொன்னாரு. நல்லா இருக்கீங்களா?''
வாசலில் வந்து வரவேற்ற மானேஜரை பார்த்து புன்னகைத்தான்.
அப்பாவின் அறைக்குள் நுழைந்தவனை, அந்த பெரிய பெருமாள் படம் வரவேற்றது. அப்பாவின் பக்தியை நினைத்து, மனமுருகியவனாக, அவரது நாற்காலியில் அமர்ந்தான்.
""சார்.. காபி, கூல்டிரிங்ஸ் என்ன சாப்பிடறீங்க?''
""நோ தாங்க்ஸ். பாக்டரியில் வேலை நடக்குதா?''
""ஆமாம் சார். பத்து மணிக்கு வேலை ஆரம்பிச்சாச்சு. எல்லா செக்ஷனிலும் வேலை நடக்குது. மொத்தம் முப்பது பேர் வேலை பார்க்கிறாங்க.''
""குட்... போய் பார்க்கலாமா?'' என்று அவருடன் நடந்தான் சிவா.
பாதுகாப்பு உபகரணங்களுடன், கட்டடத்தை நல்ல முறையில் கட்டியிருப்பதைப் பார்த்தபடி வேலை நடக்கும் இடத்தைப் பார்வையிட்டான் சிவா.
"முதலாளியின் மகன் அமெரிக்காவில் இருக்கிறாராம். பாக்டரியை பார்க்க வந்திருக்காரு...' என்று அங்கு வேலை செய்பவர்கள், தங்களுக்குள் பேசிக் கொள்ள, புன்னகை மாறாமல் அவர்களை நலம் விசாரித்தபடி வந்தான் சிவா.
""ரொம்ப நீட்டா இருக்கு. எல்லாவற்றையும் நல்லா மெயின்டெய்ண் பண்ணியிருக்கீங்க. ஒர்க்கர்ஸுக்கு யூனிபார்ம் கொடுத்து, எல்லா செக்ஷனையும் தனித்தனியாகப் பிரித்து, நல்ல பாதுகாப்பாக அப்பா செய்திருக்காரு.''
""ஆமாம் சார். ஐயா பாக்டரி விஷயத்தில் அக்கறை எடுத்துச் செய்வாரு.''
""பாக்கிங் செக்ஷன் தனியா இருக்கா?''
""ஆமாம் சார். அதோ அந்த பில்டிங்தான், அதிலே பத்து பேர் வேலை பார்க்கிறாங்க.''
""அப்படியா வாங்க போகலாம்.''
எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அப்பாவை நினைத்து பெருமைப்பட்டவனாக நடந்தவன், அந்தக் கட்டடத்தைப் பார்த்தான்.
""அது என்ன, அந்தப் பக்கம் ஒரு பில்டிங் இருக்கு?''
""சார்... அது கேன்டீன் வச்சு நடத்தறோம் இல்லையா... அதுக்கான சாமான்கள் வைக்கிற ஸ்டோர் ரூம்... வெய்யில் அதிகமாயிடுச்சு. வாங்க சார் ரூமுக்கு போகலாம்.''
""அப்படித் தெரியலையே... உள்ளே பேச்சு சப்தம் கேட்குது.''
""யாராவது வேலையாட்கள் வந்திருப்பாங்க... வாங்க சார், போகலாம்.''
அவர் தடுமாற்றத்தை பார்த்தவன், ""இல்லை. அதையும் பார்த்துட்டுப் போயிடுவோம்.''
""சார்... அப்பாவுக்குத் தெரிஞ்சா... "ஏன் ஸ்டோர் ரூமுக்கு அழைச்சுட்டுப் போனே?'ன்னு சப்தம் போடுவாரு; வேண்டாம் சார்.''
""அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.''
அவர், சொல்ல சொல்ல கேட்காமல் அந்தக் கட்டடத்தில் நுழைந்தான்.
பத்திலிருந்து, பதினைந்து வயதுக்குள் இருக்கும் சிறுவர்கள் இருபது பேர் வரிசையாக உட்கார்ந்து, லேபிள் ஒட்டிக் கொண்டிருக்க, மானேஜரை பார்த்தான் சிவா. ""என்ன இது... குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வச்சுக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு. அப்புறம் எப்படி?''
""சார்... இவங்க நம்ப ஒர்க்கர்ஸோட பிள்ளைகள். அவங்கதான் வருமானத்துக்கு வழி வேணும்ன்னு, ஐயாகிட்டே சொல்லி இங்கே விட்டிருக்காங்க. வெளியே தெரியாது. பயப்பட ஒண்ணுமில்லை சார்.''
அவர்கள் வந்திருப்பதைக் கூட, லட்சியம் செய்யாமல், ஈடுபாட்டுடன் வேலை செய்யும் அந்தச் சிறுவர்களை பார்த்தான்.
""தம்பி உனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கா?''
பத்து வயது நிரம்பிய சிறுவன், அவனை நிமிர்ந்து பார்த்தான்.
""இங்கே வேலை செஞ்சாதான், எங்காத்தா சுடுசோறு சமைச்சு போடும். இல்லாட்டி கஞ்சிதான்.''
""சார்... எனக்கு வேலை பிடிக்கலை. இருந்தாலும் பொழுதுக்கும் அப்பாவோட வந்து வேலை பார்த்தாதான், சாயிந்திரம் மைதானத்தில் விளையாட அனுப்புவாங்க. எனக்கு விளையாட ரொம்பப் பிடிக்கும் சார்.''
""நீங்க யாரும் படிக்கலையா?''
""சார்... நான் இரண்டாம் வகுப்பு படிச்சிருக்கேன்.
""எனக்குப் படிக்காமலேயே ஏ.பி.சி.டி., வாய்ப்பாடு பத்து வரைக்கும் தெரியும்,'' கிழிந்த டிராயரை ஒட்டுப் போட்டு தைத்துப் போட்டிருந்த அந்தச் சிறுவன் பெருமையாகச் சொல்ல, மவுனமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினான் சிவா.
""ஒரு வாரமாக வீட்டில் தங்காம அலைஞ்சுட்டு இருக்கே. இடம் விஷயமாக உன்கிட்டே பேசணும்ன்னு நினைச்சேன். வளசரவாக்கத்தில் மெயின்ரோடை ஒட்டி, நாலு கிரவுண்ட் இடம் இருக்கு. நாற்பது லட்சத்துக்குள் பேசி முடிக்கலாம். என்னப்பா சொல்ற. பேசி முடிச்சு உன் பெயரில் ரிஜிஸ்டர் பண்ணிடலாமா?''
""வேண்டாம்பா, நான் இப்ப இடம் வாங்குறதாக இல்லே.''
""ஏன் சிவா, வேறு எதிலும் இன்வெஸ்ட் செய்யணும்ன்னு நினைச்சிருக்கியா?''
""ஆமாம்பா. பசங்க படிப்புக்கு உதவட்டும்ன்னு, பணத்தை பாங்கில் டெபாசிட் செய்திட்டேன்.''
""நீ சொல்றது எனக்குப் புரியலையே!''
""சாரிப்பா. முதலில் நீங்க என்னை மன்னிக்கணும். உங்ககிட்டே சொல்லாம நிறைய காரியங்கள் செய்திட்டேன்,'' என்று, தன்னையே பார்த்தபடி நிற்கும் தந்தையின் அருகில் வந்தான்.
""அப்பா, நீங்க கோவிலுக்குப் போன அன்னைக்கு, பாக்டரி விசிட்டுக்கு போனேன். அங்கே ஒர்க்கர்சோட பிள்ளைகள், நம்ம பாக்டரியில் வேலை செய்யறதைப் பார்த்தேன்.''
அதிர்ந்து அவனைப் பார்த்தார் அப்பா.
""மானேஜர் எவ்வளவோ தடுக்கப் பார்த்தாரு. அதையும் மீறிப் போய் பார்த்தேன். அவரை நீங்க தப்பா நினைக்கக் கூடாது.''
""அது வந்து... வேலை செய்யறவங்க ரொம்ப உதவியா இருக்கும்ன்னு சொல்லி கெஞ்சிக் கேட்டதாலே, பாவம் பார்த்து அவங்களுக்கு வேலை கொடுத்தேன்.''
""இருந்தாலும், குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வச்சுக்கிறது தப்பில்லையாப்பா. உங்க பேரனுக்கு விளையாட ஐயாயிரம் ரூபாயில் விளையாட்டுப் பொருள் வாங்கித் தந்து சந்தோஷப்படற நீங்க, வெறும் ஐநூறு ரூபாய்க்கு உங்க பேரன் வயசுள்ள பிள்ளைகள், மாசம் முழுக்க வேலை செய்யறதை எப்படிப்பா ஏத்துக்கிட்டீங்க. என் அப்பா மேலே, நான் எவ்வளவோ மதிப்பும், மரியாதையும் வச்சிருக்கேன். அவர் அந்தக் காரியத்தைச் செய்யலாமா. அதான் அந்த பிள்ளைகளோட பேரன்ட்ஸை கூப்பிட்டு பேசினேன்.
""வறுமையின் காரணமாகவும், படிக்க வசதியில்லாததாலுமே, வேலைக்கு அனுப்பினதை ஒத்துக்கிட்டாங்க. நம்ப தொழிலாளர்களோட பிள்ளைகளின் படிப்பு செலவை நான் மனமுவந்து ஏத்துக்கிட்டேன். ஐம்பது லட்ச ரூபாயை பாங்கில் டெபாசிட் செய்து, அதில் வரும் வட்டியை வச்சு அந்தப் பிள்ளைகள் படிக்க, ஆடிட்டர் மூலமாக ஏற்பாடு பண்ணிட்டேன்.
""மானேஜர் உதவியுடன் எல்லா பிள்ளைகளையும் ஸ்கூலில் சேர்த்தாச்சு. அந்த பிள்ளைகள் வாங்கின சம்பளத்தை, அவங்கப்பாவுக்குச் சேர்த்துத் தருவதாகச் சொல்லி இருக்கேன். அவங்களும் நன்றி விசுவாசத்தோடு உண்மையாக உழைக்கிறதாகச் சொல்லி சந்தோஷப்பட்டாங்க.
""இந்த எல்லா ஏற்பாட்டையும் செய்து முடிச்சுட்டு, உங்கக்கிட்டே சொல்லணும்னுதான் இதுவரை சொல்லலை,'' என்று கூறி, அப்பாவின் தோளைத் தொட்டான் சிவா.
""நான் செய்தது தப்புன்னு நினைக்கிறீங்களா?''
""இல்லைப்பா. அப்படிச் சொல்லலை. உன் உழைப்பில் சம்பாதிச்ச பணத்தை, நாலு பேருக்கு பயன்பட கொடுக்கிறதுக்கும் நல்ல மனசு வேணும்.''
""ஆமாம்பா... அந்த நல்ல மனசு தான். நீங்க சொல்றீங்களே நம்மை மீறிய சக்தி, கடவுள்ன்னு நான் நம்பறேன். அந்த சக்திதான், என்னை இப்படிச் செய்யச் சொல்லியிருக்கு. அந்த பணத்துக்கு கார்டியனாகவும், பிள்ளைகளின் படிப்புக்கு உதவுபவராகவும், உங்க பெயரைத்தான் கொடுத்திருக்கேன். என் அப்பா என்னைக்கும் எல்லாருக்கும் நல்லது செய்பவராகத்தான் இருக்கணும்.''
யூனிபார்ம் போட்டு, கையில் புத்தகப் பையுடன் அந்த இருபது பிள்ளைகளும், பெற்றவர்களுடன் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பதை பார்த்தான் சிவா.
""என்னப்பா இது, எல்லாரையும் ஸ்கூலில் கொண்டு விடாம, இங்கே ஏன் அழைச்சிட்டு வந்தீங்க?''
""ஐயா, இன்னைக்கு தான் பிள்ளைங்க முதன்முதலா ஸ்கூலுக்கு போறாங்க. அதுக்கு முன்னால தெய்வத்தோட ஆசீர்வாதம் வேணுமில்லையா. எங்களையெல்லாம் வாழ வச்சுட்டிருக்கிற, இப்படியொரு தங்கமான பிள்ளையை பெத்த எங்க பெரிய ஐயா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போகணும்ன்னு தான் அழைச்சிட்டு வந்தோம்,'' என்றனர்.
எல்லா பிள்ளைகளும் ஒரு சேர, ராம்பிரசாத்தின் காலில் விழ, உடலும், மனமும் சிலிர்க்க, கோவில் கர்ப்பக் கிரகத்தில் அவர் உணர்ந்த அதே ஆத்ம திருப்தியை, அந்த கணம் மனதில் உணர்ந்தவராக, அருகில் நிற்கும் மகனை, கண்களில் நீர் நிறைய பரவசத்துடன் பார்த்தார்.
***

பரிமளா ராஜேந்திரன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran.J - Bangalore,இந்தியா
13-மார்ச்-201313:08:53 IST Report Abuse
Ravichandran.J சிவாவுடன் நானும் சப்போர்ட் செய்வதுபோல் உணர்வு எனக்கு. நல்ல கதை. ரவி
Rate this:
Cancel
Ramu Gopalakrishnan - Chennai,இந்தியா
11-மார்ச்-201312:35:46 IST Report Abuse
Ramu Gopalakrishnan மனமே கடவுள். படிக்கும்போது கதையாகத்தான் படித்தேன். படித்து முடிக்கும்போது என்னையும் அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது.
Rate this:
Cancel
Raman - madurai,இந்தியா
11-மார்ச்-201309:39:17 IST Report Abuse
Raman ஏதொ முதலாளியின் மகன் தர்மவான் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவர் செய்திருக்கவேண்டியது என்னவென்றால் அப்பாவிடம் பேசி தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதுதான்.
Rate this:
News Commitor - chennai,இந்தியா
13-மார்ச்-201314:05:45 IST Report Abuse
News Commitorதொழிலாளர்களின் சம்பளத்தை உயிர்திட்டா மட்டும் அவங்க பசங்கள படிக்க அனுப்பிவச்சிருவாங்கன்னு என்ன உத்திரவாதம்? பத்துல நாலு பேர் தான் அத செய்வாங்க. மத்தவங்களுக்கு தண்ணியடிக்கவும் தம்மடிக்கவும் அந்த பணம் சரியா போயிரும் அதத்தான் தினமும் பேப்பர்ல பாக்குரோமே? இந்த முதலாளியின் மகன் தர்மவான் தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X