வயலின் வனிதா! (3)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2013
00:00

இதுவரை: வனிதாவின் சித்தியும், அப்பாவும் கோரமான கார் விபத்தில் ஒன்றாக செத்தனர். வனிதாவை வளர்க்கும் பொறுப்பு அத்தைக்கு வந்தது. இனி-

ஒரு ஓட்டலின் முன் டாக்சியில் இறங்கிய வனிதா மெல்லிய குரலில் அத்தையிடம், ""நாம் வீட்டுக்குப் போகவில்லையா?'' என்று கேட்டாள். காமாட்சி டாக்சிக்காரருக்குப் பணத்தைக் கொடுத்துக் கொண்டே.
""உன் வீட்டில் யார் இருக்கா? அங்குள்ள முக்கியமான சாமானையெல்லாம் மும்பைக்கு அனுப்பி விட்டேன். வேண்டாத வைகளை டிஸ்போஸ் செய்து, வீட்டைக் காலி செய்து, சாவியை வீட்டுக் காரரிடம் ஒப்படைச்சாச்சு, உன் டிரஸ் மற்றும் சாமான்கள் எல்லாம் ஓட்டல் ரூமில் இருக்கு. இன்றிரவே, நாம் மும்பை போகிறோம்...'' என்றாள்.
வனிதாவின் கண்களில் நீர் திரண்டது. அதைக் கண்ட காமாட்சி, ""இதோ பாரு, நீ இப்படி அப்பா, அம்மாவை நினைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கக் கூடாது. நடந்தது நடந்து போச்சு. விதி அவங்க ரெண்டு பேரையும் உங்கிட்டேருந்து பிரிச்சுட்டுது. நீ சின்னக் குழந்தை இல்லே. பன்னிரெண்டு வயதுப் பொண்ணு. இப்படிக் கண்ணைக் கசக்கிட்டிருந்தா, போனவங்க வந்துடு வாங்களா? நீ வாழவேண்டிய வழியைப் பார். விவேகமாக நடந்துக்கோ...'' என்று கறாராகக் கூறினாள். அவள் பேச்சில் கனிவோ, அன்போ, பாசமோ இல்லை.
வனிதா புத்திசாலி. தன் நிலை என்ன என்பதைப் புரிந்து கொண்டாள். தன் தந்தையின் நினைவை நெஞ்சுக்குள் அழுத்திக் கொண்டாள். இனி கண்கலங்கு வதில்லை என்று உறுதி கொண்டாள். பாசமில்லாத அத்தையின் பராமரிப்பில் வளர்வதற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள். அதன் பிறகு அத்தையிடம் அவள் எதைப் பற்றியும் கேட்கவில்லை. ரயில் பயணத்தின் போது தன் வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்ற கற்பனையில் ஈடுபட்டாள். அத்தையும் அவள் பெண் லீலாவும், தன்னை எப்படி நடத்துவர் என்று யோசிக்கலானாள்.
மும்பை நகரில் ரயிலிலிருந்து இறங்கியதும் டாக்சி பிடித்து வீட்டுக்கு சென்றனர். அபார்ட்மெண்ட் அடுக்கு மாடிக் கட்டடம். பெரிய வீடாகத்தானிருந்தது. அதில், இரண்டாவது மாடியில் அத்தையின் போர்ஷன். பணக்காரர்கள், நாகரிகமானவர் கள் வசிக்கும் பகுதி என்பதை அந்த அபார்ட்மெண்டும், வீதியும் பறைசாற்றின. பெட்டி படுக்கையோட லிப்டில் மேலே போய்க் கொண்டிருந்த போது வனிதாவிடம் கூறினாள் காமாட்சி.
""இனிமேல் இதுதான் உன் வீடு. பழைய வாழ்க்கையையும், பழக்கவழக்கங்களையும் மறந்து விட வேண்டும்!'' என்றாள்.
லிப்டிலிருந்து வெளிப்பட்டு, ஒரு கதவின் அருகில் போய் அழைப்பு மணிப் பொத்தானை அழுத்தினாள் காமாட்சி.
"இதுதான் அத்தையின் போர்ஷன் போலிருக்கு' என்று நினைத்துக் கொண்டாள் வனிதா. சற்று தாமதத்துக்குப் பின் கதவு திறந்தது. அமைதியை அடித்து விரட்டியபடி உள்ளிருந்து டிஸ்கோ இசை ஸ்டீரியோ கூச்சலில் அலற... ""ஐய்! மம்மி, வந்துட்டீங்களா?'' என்று கேட்டபடி ஒரு பெண் தோன்றினாள்.
பதினைந்து வயதிருக்கும். பாப் செய்த தலைமுடி பறந்து கலைந்திருந்தது. பாப் மியூசிக்குக்கு ஏற்ப ஆட்டம் போட்ட தினாலா? நாகரிகத்தின் மொத்த உருவமாகக் காணப்பட்ட அவள்தான் அத்தையின் பெண் லீலா என்பதைத் தெரிந்து கொண்டாள் வனிதா. இவர்கள் உள்ளே நுழைந்ததும், லீலாவின் வயதுள்ள வேறு சில பெண்களும், அடுத்திருந்த அறையிலிருந்து வந்தனர். டிஸ்கோ இசை உச்சஸ்தாயியில் உள்ளே ஸ்டீரியோவில் ஓடிக்கொண்டிருந்தது.
""லீலா! இவள்தான் உன் மாமா பெண் வனிதா!'' என்று அத்தை அறிமுகப்படுத்தினாள்.
""ஐ சி... அனாதை வனிதா இவள்தானா? ஹவ் வார் யூ...'' என்று சாயம் பூசிய கூர் நகங்களைக் கொண்ட தன் கையை நீட்டினாள் லீலா.
""ஐய்...ஐய்'' என்று கோஷமிட்டனர் அவள் தோழிகள்.
வனிதா அதிர்ச்சியில் மிரண்டு போனாள்.
""உன் அறையைக் காட்றேன் வா!'' என்று கூறியபடி வனிதாவை வீட்டின் ஒரு மூலையில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துப் போனாள் அத்தை. தட்டு முட்டு சாமான்களைப் போட்டு வைக்கும் ஒரு சிறிய அறை அது. வனிதாவுக்காக அங்கிருந்த சாமான்களை ஒரு ஓரமாக ஒதுக்கி, அவள் வசிப்பதற்காக அதில் ஒரு சின்னக் கட்டிலைப் போட்டு ஏற்பாடு செய்திருந்தாள் அத்தை. அறைக்கு வெளியே பாத்ரூம் இருந்தது. அவள் பொருள்களை அந்த அறைக்குள் கொண்டு வந்து வைத்துவிட்டு, ""சீக்கிரம் குளித்துவிட்டு சாப்பிட வா!'' என்று கூறிவிட்டுப் போனாள் அத்தை.
பிரமை பிடித்துப் போய் உட்கார்ந்தாள் வனிதா. கணவனை இழந்தவள் காமாட்சி. உயர்ந்த பதவியில் இருந்த அவள் கணவர், ஐந்து வருடங்களுக்கு முன்னால்தான் இறந்துப்போனார். காமாட்சி படித்தவள். உயர் வட்டாரங்களில் பழகி, செல்வாக் குடையவள். மும்பையில் சொந்த வீடு. கணவன் விட்டுச் சென்ற சொத்து, ஒரே பெண் லீலாவுடன் தனித்து வாழ்ந்து வந்தாள். தன் பெண் லீலாவிற்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருந்தாள். லீலாவும் நவநாகரிகத்தின் சின்னமாக தன்னிச்சைப்படி திரிந்தாள்.
குளித்து, உடையணிந்து கொண்டு சாப்பாட்டு மேஜைக்குப் போனாள் வனிதா. சமையல் அறையின் ஒரு பகுதியிலேயே இருந்தது சாப்பாட்டு மேஜை. வனிதா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, லீலா தன் தோழிகளுடன் வந்தாள்.
""மம்மி! சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணுங்க. நானும், என் ப்ரெண்ட்சும், சாண்ட் விச், கேக், பேல்பூரி எல்லாம் தயாரிக்கப்போறோம். ஒரே பசி எங்களுக்கு...'' என்று சிணுங்கினாள்.
""வனிதா, சீக்கிரம் சாப்பிடு, லீலாவும் அவ ப்ரெண்ட்சும் இங்கே ஆட்சி நடத்தப் போறாங்களாம்!'' என்று கூறி விட்டு தன் அறைக்குள் போகக் கிளம்பினாள் காமாட்சி.
""ஆகட்டும் அத்தை... இதோ என் சாப்பாட்டை முடிச்சுட்டேன்!'' என்று பரபரப்புடன் சாப்பிடலானாள் வனிதா.
"இங்கு என்னை யாரும் விரும்பவில்லை. லீலாவுக்கு நான் இங்கு வந்ததில் விருப்பமில்லை. ஆனால், நான் இங்கு வாழ்ந்துதானாக வேண்டும்!' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் வனிதா.
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது வனிதாவுக்கு. யாருடன் பேசுவது, என்ன பேசுவது என்று புரியவில்லை. அத்தை அலட்சியம் செய்யவில்லை. ஏதோ ஒப்புக்குத் தன்னைக் கூட்டி வந்திருக்கிறாள். ஒட்டுதலாக இல்லை. அத்தையின் பெண் லீலாவோ தன்னை ஒரு அனாதையாக, அன்னியமாகக் கருதி அலட்சியம் செய்கிறாள். தன் அறைக்குள் வந்த வனிதாவுக்கு அழுகை குமுறிக் கொண்டு வந்தது. சிரமப்பட்டு அதை அடக்கிக் கொண்டாள். அவளுக்கு ஆறுதலளிக்கக் கூடியது ஒன்றே ஒன்றுதான். அவள் அப்பாவினுடைய வயலின்! நல்லவேளை, அதை மறக்காமல் தன்னுடன் கொண்டு வந்திருந்தாள். படுக்கையின் கீழே அவளுடைய உடைப்பெட்டியின் அருகே இருந்தது அவள் அப்பாவின் வயலின் பெட்டி.
அவளை அறியாமல் அவள் கை அதை எடுத்தது. ஆசையோடு அதைத் தடவியது. வனிதாவின் கண்களில் ஒரு புதிய ஒளி, உற்சாகம் தோன்றியது. வயலினைத் தன் தோளில் அழுத்திக் கொண்டாள். அதை மீட்டும் வில்லை, அதன் கம்பிகளால் நகரச் செய்தாள்.
""ட்ரிர் ரிங்ங்...!'' என்று நாதமெழுப்பி பேசியது வயலின். தன் அப்பா தன்னோடு பேசுவதாக ஒரு பிரமை ஏற்பட்டது வனிதாவுக்கு. கண்களை மூடிக்கொண்டு இனிமையாக தன்னை மறந்து வயலின் வாசிக்கலானாள். அப்போது...
""மம்மீய்...!'' என்று சமையல் அறையிலிருந்து கத்தினாள் லீலா.
""ஒரே ஹாரிபிள் நாய்ஸ்...! என்ன இது? நாங்க சாண்ட்விச் தயாரிக்க முடியல்லே...!''
வனிதாவின் அறைக் கதவைப் படாரென்று திறந்து கொண்டு காமாட்சி நின்றாள்.
""மை காட்! இதென்ன... கீச் மூச்சுனு வயலின் வாசிக்கறே... அதைப் பெட்டியில் வைத்து மூடிவிட்டு பேசாமல் படுத்துத் தூங்கு,'' என்று கடுகடுத்தாள் காமாட்சி.
""எஸ் ஆன்ட்டி,'' என்று மெதுவாகக் கூறியபடி தலைகுனிந்து கொண்டாள் வனிதா. காமாட்சி கதவைப் படாரென்று சாத்திக் கொண்டு போனாள்.
காமாட்சியின் செல்வாக்கினால், மும்பையின் உயர்ந்த பள்ளியில் இடம் கிடைத்தது வனிதாவிற்கு. வீட்டில் இருப்பதை விட பள்ளிக் கூடத்தில் இருக்கும் வேளைகள் வனிதாவுக்கு மன நிறைவைத் தந்தன. பரிவோ, பாசமோ காட்டாத அத்தை, இவளைக் கண்டால் தீண்டத் தகாதவளைப் போல் முகத்தைத் தூக்கிக் கொண்டு ஒதுங்கிப் போகும் அத்தை பெண் லீலா... இவர்களிடையே வீட்டில் இருப்பது சங்கடமாக இருந்தது வனிதாவுக்கு. கவலையை மறந்து, தனிமையில் தன் அறையில் வயலின் சாதகம் செய்யலாம் என்றால் அதுவும் முடியவில்லை.
""அம்மாவுக்கு கீச் மூச்சென்று கத்தும் இந்த வயலினைக் கண்டாலே பிடிக்காது. நேற்று நீ வயலின் வாசித்ததினால், அம்மா ராத்திரி முழுவதும் தலைவலியால் அவஸ்தைப்பட்டாள். இனி அந்த வயலினை வாசிக்காதே,'' என்று உத்தரவு போட்டாள் லீலா.
அன்று பள்ளியில் வகுப்பாசிரியை ஒரு செய்தியை மாணவிகளுக்கு அறிவித்தார்.
- தொடரும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X