முதலாளி! (5)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2013
00:00

எல்லா தயாரிப்பாளர்களும், ஆங்கில சர்க்காரை ஆதரித்து ஒரு யுத்தப்படம் எடுக்க வேண்டும் என்று சர்க்கார் ஆணையிட்டது. படம் 11,000 அடிக்கு மேல் எடுக்கப்படக் கூடாது. படம் முழுக்க முழுக்க, யுத்தப் பிரசாரப் படமாக இருக்க வேண்டும். டி.ஆர்.சுந்தரம் தன் பங்குக்கு உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து, கதை இலாகாவுடன் கலந்தாலோசித்து, ஒரு நல்ல கதையை உருவாக்கினார். அந்த கதை தான், "பர்மா ராணி!' அப்போது பர்மாவை ஆக்கிரமித்து இருந்த ஜப்பான் ராணுவத்தை எதிர்த்து, பிரிட்டிஷ் அரசாங்கம் போராடுவதாகக் கதையமைப்பு கொண்டது. அதிலும், ஒரு புரட்சியைக் காட்ட விரும்பிய டி.ஆர்.சுந்தரம் தானே, ஜப்பானிய ராணுவ தளபதியாக நடித்தார். ஜப்பான்காரனாக காளி.என்.ரத்தினம். கதாநாயகன் ஹொன்னப்பபாகவதர், கதாநாயகி வசந்தா மற்றும் டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர்.
இந்திய விமானப்படையின் வீர சாகசங்களை மிகவும் தத்ரூபமாக படமாக்கி இருந்தார் டைரக்டர் டி.ஆர்.சுந்தரம். "பர்மா ராணி'யை வெளியிட்ட சமயத்தில், டைரக்டர் கே.சுப்ரமணியம், "மானசம்ரட்சணம்' எனும் படத்தையும், ஜெமினி வாசன், "கண்ணம்மா என் காதலி' எனும் படத்தையும், ஜூபிடர், "என் மகள்' எனும் படத்தையும் யுத்தப் படங்களாக வெளியிட்டனர். டி.ஆர்.சுந்தரம், "பர்மா ராணி!' முதல் காட்சி முடிந்த போது சென்சார் போர்டில் இடம் பெற்று இருந்த, ஆங்கில யுத்த பிரச்சார இயக்குனர், ஜி.டி.பி.ஹார்வே என்பவர், படத்தை மிகவும் பாராட்டினார். "பர்மா ராணி' தான் யுத்தப் படங்களில் மிகவும் சிறந்தது என்று தேர்ந்தெடுத்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முத்திரை பதித்த, "வீரவாள்' ஒன்றையும் டி.ஆர்.சுந்தரத்திற்கு பரிசளித்தார். அவர் நேரில் வந்து பரிசளித்த விழாவை, சேலம் மாடர்ன் தியேட்டர்சில் மிகவும் பெரிய அளவில் கொண்டாடினார் டி.ஆர்.சுந்தரம்.
தான் எடுத்த படம், மிகச் சிறந்தது என்று அயல்நாட்டார் ஒருவர் புகழ்கிறார் என்றால், எந்த தயாரிப்பாளருக்குத்தான் அது மகிழ்ச்சியை அளிக்காது!
"பர்மா ராணி' படத்திற்குப் பின், "சுபத்திரா' எனும் புராணக் கதையும், "சித்ரா' எனும் சமூகக்கதையும் தயாராயின. "சித்ரா'வை டைரக்ட் செய்தவர் வகாப் காஷ்மீரி எனும் வடமாநிலத்தவர். கதாநாயகனாக வில்லன் நடிகர் டி.எஸ்.பாலையா!
அடுத்து வந்த "ஆரவல்லி' படத்தை, டைரக்டர் சி.வி.ராமனும், "துளசிதாஸ்' எனும் தெலுங்கு படத்தை, ஒரு தெலுங்கு டைரக்டரும் டைரக்ட் செய்தனர். எஸ்.வி.ரங்காராவ், அஞ்சலிதேவி இருவரும் நடித்த, "வருதினி' எனும் தெலுங்கு படம் அடுத்து வெளிவந்தது. எஸ்.வி.ரங்காராவ் மற்றும் அஞ்சலிதேவி, இந்த படத்தின் மூலம் தான் அறிமுகமாயினர்.
கடந்த 1964ல், அடுத்து வந்த படம் தான், "சுலோசனா' எனும் புராணப்படம். இதில், கே.எல்.வி.வசந்தா கதாநாயகியாகவும், இந்திரஜித்தாக பி.யூ.சின்னப்பாவும் நடிக்க ஏற்பாடு ஆகியிருந்தது. படத்தின் பூஜை மிகவும் நன்றாகவே நடந்தது. படப்பிடிப்பிற்கும் நாள் குறித்தாகி விட்டது. முதல் நாள் படப்பிடிப்பு ஆரம்பம். கதாநாயகன் பி.யூ.சின்னப்பாவிட மிருந்து தகவலே இல்லை. செட்டில் எல்லாரும் காத்துக் கொண்டிருந்தனர். வழக்கமான நேரத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து விடும் பழக்கம் கொண்ட டி.ஆர்.சுந்தரம், கதாநாயகன் வரவில்லையே என்று படப்பிடிப்பை கேன்சல் செய்யவே இல்லை. திடீரென படப்பிடிப்பு தளத்திலிருந்து அவர் வெளியேறி விட்டார். செட்டில் காத்திருந்த அத்தனை டெக்னிஷியன்களும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்க, அவர்களை வியப்பில் ஆழ்த்தி விட்டார் டி.ஆர்.சுந்தரம். "இந்திரஜி'த்தின் மேக்கப்புடன் படப்பிடிப்புக் களத்தில் நுழைந்து விட்டார். தன் ஸ்டுடியோவை பொறுத்த வரையும், யாரையும் நம்பி, எதுவும் இருக்கவில்லை என்று, அவர் இதன் மூலம் நிரூபித்தார். படத்திற்கு பாரதிதாசன் வசனம் என்பது செய்தி. அதை, டி.ஆர்.சுந்தரம் எப்படி பேசினார் என்பது தான் வியப்பு.
படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு நன்றாகவே ஓடியது. தான் போகாவிட்டால், படமே நின்று விடும் என்று நினைத்த கதாநாயகன், ஏமாந்து போனதுதான் உண்மை. இந்த ஸ்டுடியோவினால் வளர்க்கப்பட்ட ஒரு நடிகர், என்ன குறையிருந்தாலும், முதலாளியிடம் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, படப்பிடிப்பை நிறுத்த முயற்சிக்கக் கூடாது என்பது அப்போதைய நடுநிலைமையாளர்களின் எண்ணம்.
டைரக்டர் பத்மநாபன் இயக்கிய, "சகடயோகம்' மங்கம்மா சபதம் புகழ் ஆச்சார்யா இயக்கிய, "கடகம்!' பிறகு, "சண்பகவல்லி' தொடர்ந்து, "லட்சுமி விஜயம்' போன்ற படங்களுக்குப் பின் வந்தது மாடர்ன் தியேட்டர்சின் வசூலில் சாதனை படைத்த, "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி!' அந்த பெரிய கதையை அதிகமாகச் சுருக்காமல் எடுத்ததால், படத்தின் நீளம் மிகவும் அதிகமாகி விட்டது.
ஏறக்குறைய நான்கு மணி நேரம் ஓடிற்று என்கின்றனர். இந்தப் படத்தின் கதாநாயகி யாக நடித்தவர், வி.என்.ஜானகி. பின்னாளில் புரட்சி நடிகரை மணந்தவர். தமிழக முதன் மந்திரியாகவும் சில நாட்கள் இருந்தவர். மாடர்ன் தியேட்டர்சில் வசன கர்த்தாவாகப் பணியாற்றிய கருணாநிதியும், எம்.ஜி.ஆரும், பின்னாளில் தமிழகத்தை ஆளப் போகின்றனர் என்று அப்போது யாருக்குத் தெரியும்.
புலிக்குட்டி பி.எஸ்.கோவிந்தன், காளி.என்.ரத்தினம், டி.எஸ்.துரைராஜ், வி.எம்.ஏழுமலை, எஸ்.வரலட்சுமி, சி.டி.ராஜகாந்தம், குருவாக எம்.ஆர்.சுவாமிநாதன், எம்.ஜி.சக்ரபாணி, ஆர்.பாலசுப்ரமணியம் போன்ற பெரியதொரு நடிகர் பட்டாளத்தையே வைத்து, படத்தை மிகவும் சுவைபட இயக்கினார் டி.ஆர்.சுந்தரம். படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது என்பதை முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன்.
இந்த படத்தின் சென்னை வினியோகத்தை, அப்போது வாங்கியவர் முருகேசன் என்பவர். இந்த படத்திற்குப் பின்னால் அவருக்கு, "சிந்தாமணி முருகேசன்' என்ற பெயர் வழங்கலாயிற்று. இவர் மீது, டி.ஆர்.சுந்தரத்திற்கு மிகுந்த பற்று இருந்தது என்பதற்கு, ஒரு உதாரணத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
முருகேசன், தீ விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்தார். உடல் முழுவதும் தீக்காயம், வாழை இலையில் தான் அவரை படுக்க வைத்தனர் என்று கேள்வி. அப்போது திருமணமாகாத முருகேசனை கவனித்துக் கொள்ள, சரியான நபர் இல்லாத காரணத்தினால், டி.ஆர்.சுந்தரம், தம் சொந்த உதவியாளரான கிருஷ்ணனை சென்னைக்கு அனுப்பி, முருகேசனை மருத்துவமனையில் இருந்து கவனித்துக் கொள்ளச் சொன்னார்.
அபூர்வ சிந்தாமணி சம்பந்தமாக எழுத வேண்டி இருந்ததால், இந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தினேன். டி.ஆர்.சுந்தரம் செய்வது சிறு சிறு உதவிகள் என்றாலும், அவை, காலத்தால் மறக்க முடியாதவை. அதாவது, அந்த உதவியைப் பெற்றவர்கள், சொல்ல வேண்டும் என்றால், சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு இப்போது இங்கே இடமில்லை. பின்னால் வருகிறேன்.
அடுத்தபடியாக வந்தது, "மாரியம்மன்' படம். அதைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு மலையாளப் படத்தை, கேரள மக்களுக்காக எடுத்தார். படத்தின் பெயர், "நிர்மலா!' இந்த இடத்தில் ஒரு பெரிய உண்மையைச் சொல்ல வேண்டும். மலையாளம் தெரியாமல், கன்னடம் தெரியாமல், எப்படி டி.ஆர்.சுந்தரம் இந்த படங்களை எல்லாம், அந்த காலத்திலேயே எடுத்தார் என்ற கேள்வி எழத்தான் செய்யும்.
தனக்கு உதவி செய்ய, உதவி டைரக்டர்களாக, அவர், கேரளாவை சேர்ந்த ஒரு நபரையும், கன்னடத்துக்காரர் ஒருவரையும் நியமித்துக் கொண்டார். "செம்மீன்' படத்தை, உலகத் தரத்திற்கு எடுத்தவரான ராமுகாரியட், மலையாளப் படங்களுக்கு உதவியாளராக, டி.ஆர்.சுந்தரத்திடம் பணிபுரிந்தார் என்றால் உங்களால் நம்ப முடியுமா?
மறைந்த பிரபல நடிகர் முரளியை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் தந்தை சித்தலிங்கையா, கன்னடப் பட உலகில், ஒரு பிரபல டைரக்டர். அவரது வாழ்க்கையும் டி.ஆர்.சுந்தரத்தின் உதவியாளராகத் தான் துவங்கியது.
தொடரும்.

ரா.வேங்கடசாமி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X