வயலின் வனிதா (9) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
வயலின் வனிதா (9)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
00:00

இதுவரை: இரவல் வயலினுடன் சென்ற வனிதா, வயலின் மாஸ்டர் சங்கர்லால் முன்பாக நின்று வாசித்தாள். இனி-

வனிதா தாளமிடும் தன் உள்ளத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, இரவல் வயலினை இடது தோளில் அழுத்திக் கொண்டு, அதன் தந்தியில், வில்லை உரசி நாதமெழுப்பினாள். "சங்கர்லால் திருப்திபடும்படி வாசிக்க வேண்டும்' என்ற பயம் விலக, தன் அப்பாவை மூடிய கண்களுக்குள் கொண்டு வந்து நிறுத்தி வேண்டிக் கொண்டாள். அடுத்த வினாடி, இசையின் இன்பத்தில் தன்னை இழந்தவளாகி, மிகுந்த ஈடுபாட்டுடன் வாசிக்கலானாள்.
லேசான கைதட்டல், வனிதாவை நினைவுலகுக்குக் கொண்டு வந்தது. பாராட்டிக் கைதட்டியவர் சங்கர்லால் என்பதை அறிந்தபோது, வனிதாவின் உடல் சிலிர்த்தது. ""ரொம்ப நன்றாக வாசித்தாய். வெரிகுட்! வயலினை எப்படிக் கையாள்வது என்பதை அறிந்திருக் கிறாய். இசையில் ஈடுபாடும் இருக்கிறது. வாத்திய இசைக் குழுவில் நீ இடம் பெறுகிறாய். ஆனால், இன்னும் பயிற்சி செய்ய வேண்டும்...'' என்றார் சங்கர்லால்.
வனிதாவிற்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி!
அத்தையிடம், தான் படும் அவலங்களை யெல்லாம் மறந்து போனாள். அப்போது அடுத்த பெயரைக் கூப்பிட்டார் சங்கர்லால். அது சுமதி! உள்ளே வந்த சுமதி, சங்கர்லாலின் பாராட்டில் திக்குமுக்காடிப் போயிருந்த வனிதாவிடம், மெல்லிய குரலில், ""வனிதா என் வயலினைத் தருகிறாயா?'' என்று கேட்டாள்.
சுமதியின் வார்த்தைகளைக் கேட்ட இசைப் பேராசிரியரின் புருவங்கள் இடுங்கின.
""இது உன்னோட வயலின் இல்லையா?'' என்று கேட்டார்.
""சொந்தமான இசைக் கருவிகள் உள்ளவர்கள்தான் இசைக் குழுவில் சேர முன்வரலாம் என்பது உனக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்... ம்... உன் பெயர் வனிதா தானே? மாணவிகளுக்கு இசைக்கருவிகள் வாங்கித் தரும் அளவுக்கு நிர்வாகத்துக்கு பண வசதி கிடையாது. தலைமையாசிரியை இரவல் வாத்தியக் கருவிகளோடு வருபவர்களை அனுமதிக்க மாட்டார். உன்னிடம் வயலின் இருப்பதாக அன்று கூறினாய் என்று நினைக்கிறேன்?'' என்றார் சங்கர்லால்.
"என் உண்மை நிலையை நான் எப்படி இவரிடம் விளக்குவேன்? அத்தை என்னைத் திருடி என்று குற்றம் சாட்டி, வயலினைப் பறித்துக் கொண்டதை எப்படிக் கூறுவேன்?' என்று புலம்பியது வனிதாவின் உள்ளம்.
தலைகுனிந்து நின்ற வனிதாவிடம், ""பயிற்சிக்கு நீ உன் சொந்த வயலினுடன் தான் வரணும் வனிதா, தெரிந்ததா? நீ போகலாம்?'' என்று அவளுக்கு விடை கொடுத்துவிட்டு, சுமதியின் பக்கம் திரும்பினார்.
""கடவுளே! நான் இசைக் குழுவில் எப்படியும் இடம் பெற வேண்டும். என் வயலினை அத்தை தரும்படி நீதான் ஏதாவது செய்ய வேண்டும்...'' என்று ஆண்டவனை மனதுக்குள் வேண்டிக்கொண்ட வளாக, அந்த அறையிலிருந்து வெளியில் வந்தாள் வனிதா.
அதே நினைவாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். சங்கர்லால் தன் வயலின் வாசிப்பைப் பாராட்டிக் கை தட்டியதும், பிறகு சொந்த வயலின் இல்லாமல் நீ இசைக் குழுவில் சேர முடியாது என்று எச்சரித்ததும், மாறி, மாறி நினைவுக்கு வந்து மகிழ்ச்சியையும், வேதனை யையும் உண்டாக்கிக் கொண்டிருந்தன.
வீட்டினுள் நுழைந்ததுமே, அத்தை கூறிய செய்தி, அவளை இடியாகத் தாக்கியது. ""வனிதா, உன் தொத்தல் வயலினை வித்துட்டேன். ஐநூறு ரூபாய்க்குத்தான் போயிற்று. நீ திருடிக்கொண்ட பணத்துக்கும், அதற்கான தண்டனைக்கும் அந்தத் தொகை ஈடுகட்டிடும். இனி ஒழுங்காகப்படி, திருட்டுப் புத்தியை விட்டு விடு!'' என்றாள் கறாராக.
இடிந்து போனாள் வனிதா.
"ஐயோ! என் வயலின் அப்பாவின் நினைவாக நான் போற்றிப் பாதுகாக்க வேண்டிய வயலின், என்னை விட்டுப் போய்விட்டது!' என்று கதறியது அந்தப் பிஞ்சு உள்ளம். அப்போது குதி போட்டுக் கொண்டு உள்ளே வந்தாள் லீலா.
""ஹாய் மம்மி! இதோ பாருங்க, ஹிட் சாங்ஸ் அடங்கிய "சி.டி'! மகத்தான தள்ளுபடி விலையில் ஐநூறு ரூபாய் விலையுள்ள சி.டி.,யை, முந்நூறு ரூபாய்க்கு என் சிநேகிதி கிட்டே நாளைக்கு தரேன்னு, சொல்லி, பணம் வாங்கி இதை வாங்கினேன் கேக்கறியா?'' என்று காமாட்சியின் முகத்துக்கு நேரே, பாப் மியூசிக் "சி.டி.,'யை ஆட்டிக் கொண்டு குழைந்தாள் லீலா.
காமாட்சியின் கல் முகத்தில், சிரிப்பு வரியிட்டது.
""போடு கேட்கலாம்!'' என்றாள். பாவம் வனிதா! அவள் கண்கள் கண்ணீரையும், இதயம் ரத்தத்தையும் வடித்தன.
""இதை சி.டி., பிளேயரில் போட்டு இப்பவே கேட்டாகணும்...'' என்று புத்தகங்களை சோபாவில் வீசிவிட்டு, பிளேயரிடம் ஓடினாள் லீலா.
""காபி சாப்பிட்டுவிட்டு அதைப் போடு, நானும் கேட்கிறேன்!'' என்றாள் காமாட்சி.
""காப்பி, கீப்பியெல்லாம் அப்புறம். இதைக் கேட்காம என்னால எதுவும் செய்ய முடியாது!'' என்று சி.டி.,யை பிளேயரில் செருகி ஸ்விட்சைப் போட்டாள். வீடே அதிரும்படி அதிலிருந்து கூச்சல் எழுந்தது.
""வனிதா டேபிளிலே தட்டை எடுத்து வை. லீலா டிபன் சாப்பிட்டபடி பாட்டை கேக்கட்டும்,'' என்று வனிதாவிற்கு உத்தரவிட்டாள்.
""ஆகட்டும் அத்தே!'' என்று கனவில் நடப்பவள் போல அங்கிருந்து நகர்ந்தாள் வனிதா.
புதிய பாப் மியூசிக் ரெக்கார்ட்டை ஸ்டீரியோவில் அலற விட, அதற்கு ஏற்றார் போலக் குதித்துக் கும்மாளமிட்டு ஆடியபின், அருமை அம்மா வழங்கிய டிபனை வேண்டா வெறுப்பாகச் சாப்பிட்டுவிட்டு, வெளியே கிளம்பத் தயாரானாள் லீலா.
""மம்மி, என் ப்ரெண்ட் பர்த்டே பார்ட்டி... நான் போகப் போறேன். திரும்பி வர சிறிது நேரமானால் கவலைப்படாதே என்ன?'' என்று பேக்கை சுழற்றியபடி, படி இறங்கிய மகளிடம், ""அதுக்காக ஊரே அடங்கியபின் வரணுங்கிறதில்லே. சீக்கிரமா கிளம்பி வா... ஆமா!'' என்று லீலாவுக்கு விடை கொடுத்து அனுப்பினாள் காமாட்சி.
டிபன் சாப்பிட்ட பிளேட், கப் ஆகியவைகளைக் கழுவிச் சுத்தம்செய்து துடைத்துக் கொண்டே, லீலா குதி போட்டுப் போவதைப் பார்த்தாள் வனிதா. அவள் அணிந்திருந்தது புதிய சல்வார் கமீஸ் ஆடை. எப்போ அதை வாங்கினாள் அத்தை?
சமீபத்தில் அவளுக்கு ஆடை ஏதும் வாங்கவில்லை.
வாங்கினால் அதைப் பெருமையாகக் காண்பித்திருப்பாள். வந்த புதிதில், லீலா தன் ஆடைகளையெல்லாம் வனிதாவிடம் காட்டிப் பீற்றிக் கொண்டாள். அதில் சல்வார் கமீஸ் இல்லை. ஆகவே, இது புதிது. சந்தேகமே இல்லை. அப்படியானால் இந்த புதிய ஆடையை லீலாவே வாங்கிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஏது பணம்? வனிதா சமையல் அறையில் காரியமாக இருந்தபோது காமாட்சி கேட்டது காதில் விழுந்தது.
""லீலா, இது ஏது சல்வார் கமீஸ் புதுசா இருக்கே?''
""என் ப்ரெண்டோடது மம்மி... ஆசையா இருந்தது!'' லீலாவின் பதில்.
"நிஜமாவே இது லீலாவின் தோழியுடையது தானோ?' கேள்வி எழுப்பியது வனிதாவின் மனம்?
லீலா உடுத்தியிருந்த புதிய ஆடையின் நினைவிலேயே இருந்தாள் வனிதா. திடீரென்று புதிய சல்வார் கமீஸ் வாங்குவதற்கு அவளிடம் ஏது பணம்? காமாட்சி தன் மகளுக்கு செல்லமும், சலுகைகளும் கொடுத்தாலும் பண விஷயத்தில் கறார். பாக்கெட் மணிக்காக, அம்மாவிடம் லீலா கெஞ்சிக் கூத்தாடுவதைப் பார்த்திருக்கிறாள். அப்படி இருக்க புது உடை வாங்க எப்படிப் பணம் கிடைத்தது? அவள் கூறியது போல அது அவள் தோழியின் உடையல்ல... அவளுடையதுதான். அவளுடைய தோழிகள் லீலாவிடம்தான் உடைகளை ஓசி வாங்கக் கூடியவர்கள். ஓசி கொடுக்கக் கூடியவர்கள் அல்ல. அம்மாவிடம் பொய் சொல்லி இருக்கிறாள். இப்படி வனிதாவின் மனம் லீலாவின் புதிய சல்வார் கமீஸ் பற்றியே ஆராய்ந்து கொண்டிருந்தது. அவளுக்கு ஏதோ ஒரு விஷயம் விளங்குவது போலிருந்தது.
மறுநாள் வனிதா பள்ளிக்கூடம் போக பஸ் ஸ்டாப்பில் வெகு நேரம் காத்திருந்தாள். அன்று ஏனோ அவள் போக வேண்டிய பஸ் வர வில்லை. வந்த ஒரு பஸ்சிலும் கூட்டம் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது. பஸ் ஒரு பக்கமாகச் சாய்ந்து நகர முடியாமல் நகர்ந்து கொண்டி ருந்தது. அந்த பஸ்சில் அவளால் ஏற முடிய வில்லை. நேரமோ ஆகிவிட்டது. நடந்து போக வேண்டியதுதான். நடந்து வீதி மாறினால், "வேறு ரூட் பஸ் பிடித்துப் போகலாம்' என்ற முடிவோடு வேகமாக நடக்கலானாள் வனிதா. அந்த வீதியைக் குறுக்குத் தெரு வழியே கடந்து, அடுத்த மெயின் ரோடுக்கு வந்தபோது...
அங்கே லீலா அவள் தோழிகள் சூழ நின்று கொண்டிருப்பதைக் கண்டாள்.
- தொடரும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X