நாய்க்குட்டி! (2) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
நாய்க்குட்டி! (2)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
00:00

சுரேஷ், ரமேஷ் இருவரும் நடுங்கிக் கொண்டிருந்தனர். அந்த இரண்டு திருடர்களும் மரத்தில் ஏறுவது நன்றாகத் தெரிந்தது.
""அண்ணே வந்தது மோசம்! யாரோ நம்ம ரகசியத்தைக் கண்டுகிட்டாங்க. இதோ பாரு கயிறு. உள்ளே யாரோ இறங்கிப் பார்த்திருக்காங்க!''
""நாம உள்ளே ஏதாவது வைத்திருந் தோமா?''
""இருங்கண்ணே. நேத்தி செட்டியாரு வீட்டிலிருந்து கொணர்ந்த வெள்ளிப் பாத்திரம் பூரா இதுக்குள்ளே தானே இருக்குது!''
""சரி, சீக்கிரம் அந்த மூட்டையை எடுத்துக்கிட்டு, வேற இடத்துக்குப் போயிடலாம் வா!''
முதலில் பேசிய மனிதன், சுரேஷ் மேலேயே குதித்தான். சுரேஷ் பயத்தினால் அலறி விட்டான். திருடனுக்கு தூக்கிவாரிப் போட்டது. அதற்குள் ரமேஷ் டார்ச் லைட்டை அழுத்தி, வெளிச்ச முண்டாக்கினான்.
மேலே இருந்த திருடன், ""உள்ளே என்னடா சத்தம்?
""அண்ணே, இரண்டு பசங்க உள்ளே இருக்காங்க... என்ன பண்ணலாம், இந்த பையன் களை?''
""அவங்க யாரு, எப்படி, ஏன் வந்தாங்கன்னு? விசாரி டோய்!''
அவர்கள் நடுங்கியபடியே, ""நாங்க விளையாட்டுக்கு இந்தப் பொந்துக்குள்ளே இறங்கினோம். நாங்க வந்தது கூட, யாருக்கும் தெரியாது. எங்களை விட்டுடுங்க... நாங்க யாரிடமும் சொல்ல மாட்டோம்,'' என்று கெஞ்சினர்.
திருடனுக்கு தங்கள் ரகசிய இடம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி ரொம்பக் கோபம். பேசாமல் மேலே ஏறிப் போய் பொந்தின் வெளியே இரண்டு திருடர்களும் வெகு நேரம் என்னவோ பேசிக் கொண்டனர். பிறகு மேலே இருந்தபடியே, ""டேய் பயல்களா ஓரமாக ஒதுங்கிக் கொள்ளுங்கள்,'' ஒரு மூட்டையைப் போடப் போறேன்!''
இருவரும் பொந்தின் ஒரு மூலையில் போய் ஒண்டிக் கொண்டனர். சத்தத்தோடு ஒரு மூட்டை பொந்திற்குள் விழுந்தது.
""நாங்கள் பாதி ராத்திரிக்குத்தான் வருவோம். அது வரை இதற்குள்ளே தான் இருக்கணும். தப்பிக்க முடியாது. நீங்க ஒழுங்காக இருந்தால், உங்களை விட்டு விடுவோம். ஆமாம்!'' என்று உத்திரவிட்டனர் திருடர்கள்.
""எங்களை இங்கேயே விட்டு விட்டுப் போகாதீர்கள். இருட்டி விட்டது. எங்களுக்கு பயமாக இருக்கிறது. நாங்கள் யாரிடமும் சொல்லவில்லை,'' என கத்தினர் இருவரும்.
ஆனால், திருடர்கள் அவர்கள் வார்த்தையை லட்சியம் செய்யவில்லை. கயிற்றை அவிழ்த்துக்கொண்டு போய் விட்டனர். கயிறு இல்லாமல் அவர்களால் மேலே ஏறி வர முடியாது. திருடர்கள் மரத்திலிருந்து குதித்துப் போவது நன்றாகக் கேட்டது.
""இப்போது என்னடா செய்யறது? ராத்திரிப் பூரா இங்கேயேவா இருப்பது?'' என்றான் ரமேஷ்.
""வீணா அழுது என்னடா பயன். பேசாம சாக்குமேலே படுத்துக்கொள். நடு ராத்திரியில் நம்மை அவர்கள் விட்டு விடுவர்!''
அடிக்கடி பாட்டரி விளக்கை ஏற்றி, ஏற்றி, சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டனர்.
""சுரேஷ் அவர்கள் நிச்சயமாக வருவார்களாடா?'' ஒருவேளை வராவிட்டால், நம்ம கதி?'' என்று நடுங்கினான் ரமேஷ்.
""போடா அசடே! இப்படிப் பயப்படுகிறாயே! என்ற சுரேஷின் குரலுக்கு மேல், பிளாக்கியின் குரல் கேட்டது.
""பிளாக்கி, பிளாக்கி! நம்ம அருமை பிளாக்கி நம்மைத் தேடிக் கொண்டு வந்துவிட்டது,'' என்று குதித்தனர் இருவரும்.
பிளாக்கி பொந்திற்குள் எட்டிப் பார்த்தது. சுரேஷ் டார்ச் அடித்துப் பார்த்தான். அதன் தலையிலிருந்து ரத்தம் வழிந்து காய்ந்திருப்பது தெரிந்தது.
""பாவம் நம்ம பிளாக்கியை அந்தத் திருட்டுப் பயல்கள் அடித்துக் காயப்படுத்தி விட்டனர். பிளாக்கியால் நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும்?''
சுரேஷ் ஆனந்தத்தால் குதித்தான்.
""முடியும்! வழி இருக்கிறது. உன் சட்டைப் பையில் உள்ள அந்தப் பேப்பரை எடு,'' என்றான்.
""பிளாக்கி, கம், ஆன்'' என கூப்பிட்டான். பிளாக்கி குபீரென்று பொந்திற்குள் குதித்தது.
சுரேஷ் பிளாக்கியிடம் கொடுத்த காகிதத்தில் அப்பா நாங்கள் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு பெரிய மரப்பொந்தில் விழுந்து விட்டோம். இது திருடர்கள் பதுங்குமிடம். எங்களால் ஏறமுடியவில்லை. உடனே, பிளாக்கி காட்டும் இடத்துக்கு ஓடி வரவும். வரும்போது போலீஸோடு வரவும்! என்று எழுதி, அதை பிளாக்கியின் கழுத்துத் தோல் பட்டையில் தெரியும்படி கட்டி, ""பிளாக்கி! நேராக வீட்டிற்கு ஓடி அப்பாவை கூட்டிக் கொண்டு வருகிறாயா?'' என்றான் சுரேஷ்.
அதுவும் புரிந்தது போல குரைத்தது. உடனே சுரேஷ், ரமேஷின் முதுகின் மீது ஏறி, பிளாக்கியை தூக்கிப் பிடித்தான். அது ஒரே தாவலாகத் தாவி வெளியே குதித்து ஓடிற்று.
இருவருக்கும், நெஞ்சு திக்...திக் என்று அடித்துக் கொள்ளக் காத்திருந்தனர். பிளாக்கி கட்டாயம் அப்பாவை அழைத்து வந்து விடுமென்று நம்பிக்கையிருந்தது. ஆந்தை ஒன்று அலறிற்று. வெளியே ஏதோ மிருகங்கள் காய்ந்த சருகுகளின் மேல் நடப்பது கூடக் கேட்டது. தவளைகளில் சத்தம், 'நொய்' என்ற சிள் பூச்சிகளின் ஓசை.
""மணி பதினொன்று இருக்கும் போலிருக்கே... ஒருவேளை பிளாக்கியின் கழுத்திலுள்ள கடிதத்தை அப்பா பார்க்கவில்லையோ?'' என்றான் ரமேஷ்.
""அப்பா பார்க்கவிட்டாலும் நம்ம பிளாக்கிவிடாது. இரு, இரு, அதோ ஏதோ சத்தம்!''
""திருடர்களோ?'''
""போடா அசடு! அது நம்ம பிளாக்கியின் குரல்!''
வள்... வள்... வள்...!
""இதோ, அடேயப்பா எவ்வளவு பெரிய மரம்!''
""சுரேஷ்... ரமேஷ்... இருவரும் இருக்கிறீர்களா?''
"அப்பா, அப்பா, ஆமப்பா' அவர்கள் குரலில் ஆசையும், ஆனந்தமும் கலந்திருந்தது.
""எங்கே நீங்கள் வராமல் இருந்து விடுவீர்களோ... என்று பயப்பட்டேன். அம்மா, வந்திருக்காங்களா?''
""இதோ இருக்கேண்டா கண்ணே!'' அம்மாவின் அன்புக் குரல் கேட்ட அவர் களுக்கு, பயம், களைப்பு, பசி எல்லாம் பறந்துவிட்டன.
""சுரேஷ் போலீஸ்காரர் வந்திருக்காரு... எதுக்கு வரச் சொன்னே?'' என்று கேட்டார் அப்பா.
சுரேஷ் கதை முழுவதையும் சொன்னான். உடனே, போலீஸ் இன்ஸ்பெக்டர் மரத்தைச் சுற்றி காவல் போட்டார். இருவரும் பொந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
""அவர்கள் வரும் நேரமாயிற்று. கவனமாக இருங்கள்,'' என்றார் இன்ஸ்பெக்டர்.
எல்லாரும் புதர்களில் மறைந்திருந்து திருடர்களின் வரவிற்குக் காத்திருந்தனர். பிளாக்கி கூட சத்தம் போடாமல், உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது. திருடர்கள் வந்தனர். அவர்களுக்குத்தான் அங்கு இருக்கும் ஆபத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாதே! மரத்தில் ஏறி, ""டேய்! பயல்களா! தூங்கிவிட்டீர்களா?'' என்று அலட்சியமாக சத்தம் போட்டுக் கூப்பிட்டனர். பதில் இல்லை. ஆனால், அடுத்த நிமிடம் பளீரென்று வெளிச்சம் அவர்கள் மீது விழுந்தது.
திகைத்துப் போய் நின்ற அவர்கள் கைகளில், விலங்குகளை மாட்டினர் போலீஸ்காரர்கள்.
ரமேஷ் வழி முழுவதும் அப்பாவிடம் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பற்றிக் கதை, கதையாக சொல்லிக் கொண்டே வந்தான்.
மறுநாள் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வீட்டிற்கு வந்திருந்தார்.
""குழந்தைகளா! அந்த இரண்டு பேரும் ரொம்ப நாளையத் திருடர்கள். வெகு நாட்களாக நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். உங்களால் தான் அகப்பட்டனர். அதற்காக, உங்களுக்கு ஆளுக்கு ஒரு ரிஸ்ட் வாட்ச் பரிசு...! உங்கள் நாய்தான் ரொம்ப வேலை செய்திருக்கிறது. அதற்கு அந்த அழகான சங்கிலியோடு கூடிய தோல்பட்டை,'' என்று சொல்லி பிளாக்கியைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தார். அன்று முதல் பிளாக்கிக்கு அந்த ஊரிலேயே தனிச் சலுகைதான் போங்க!
முற்றும்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X