பி. கார்த்திகேயன், வடமதுரை: எனது வயது 42. 3 ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்காக 4 வகை மருந்துகள் எடுத்து வருகிறேன். இருந்தும் எனது ரத்தஅழுத்தம் 180/110 என்ற அளவிலேயே உள்ளது. நான் என்ன செய்வது?
உங்கள் வயதில் 180/110 என்பது மிகவும் உயர்ந்த ரத்தஅழுத்தம். இதற்கு நான்கு வகை மருந்து எடுத்தும் இவ்வாறு இருப்பது அதிகமே. உணவில் உப்பை குறைப்பது, தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது, மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது அவசியமானது. இதுதவிர இந்தளவில் ரத்தஅழுத்தம் இருந்தால், சிறுநீரகம் தொடர்பான பரிசோதனைகள் தேவைப்படும்.
குறிப்பாக, "ரீனல் டாப்ளர், சிறுநீரில் புரதத்தின் அளவு, வயிறு ஸ்கேன்' போன்றவை தேவைப்படும். தற்போது ரத்தக்கொதிப்புக்கு பக்கவிளைவுகள் இல்லாத நல்ல மாத்திரைகள் உள்ளன. நீங்கள் எடுத்து வரும் நான்கு மாத்திரைகளை மாற்றி அமைத்தால், ரத்த
அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலும். ஒருவருக்கு எந்த வயதிலும், எந்த தருணத்திலும் ரத்தஅழுத்தம் 140/90க்கு கீழ் 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். இல்லையெனில் உடல் உள்ளுறுப்புகள் குறிப்பாக, கண்கள், இருதயம், சிறுநீரகம், ரத்தநாளங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.
வி.சுப்ரமணியன், பெரியகுளம்: எனது மகன் வயது 23. வெளிநாட்டு பணிக்குச் செல்ல மருத்துவ பரிசோதனையாக, "எக்கோ' பரிசோதனையில், 'A.S.D.' என வந்துள்ளது. இந்த வியாதியுடன் அவன் வேலைக்குச் செல்ல இயலுமா?
A.S.D., என்பது Atrial Septal Defect என்பதன் சுருக்கம். அதாவது, இருதயத்தின் மேலிரண்டு பாகங்களுக்கு இடையே ஓட்டை உள்ளது என்று அர்த்தமாகும். இது பிறவியில் இருந்தே ஏற்படும் ஒரு வியாதி. இந்த ஓட்டையை தற்போதைய நவீன மருத்துவத்தில் எளிதில் மூடிவிட முடியும். அறுவை சிகிச்சை மூலமாகவோ அல்லது பலூன் சிகிச்சை மூலமாகவோ எளிதில் மூடிவிடலாம். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இவ்வியாதி வருவதால், செலவின்றியும் சிகிச்சை பெற இயலும். இந்த சிகிச்சைக்குப் பிறகு, ஆறுமாதங்கள் கழித்து எல்லாவித வேலைகளையும் உங்கள் மகன் தாராளமாக செய்யலாம். வெளிநாட்டிலும் பணியாற்றலாம்.
சி.ராஜேந்திரன், சாத்தூர்: நான் ரத்தக்கொதிப்புக்காக ஐந்து ஆண்டுகளாக "அம்லோடிபின்' என்ற மாத்திரையை தொடர்ந்து எடுத்து வருகிறேன். சமீபகாலமாக எனது காலில் வீக்கம் ஏற்பட்டு உள்ளது. டாக்டர் இம்மருந்தை நிறுத்திவிட்டு, 'Olmesartan' என்ற வேறு மருந்தை தந்துள்ளார். நான் இதை தொடர்ந்து எடுக்கலாமா?
"அம்லோடிபின்' ரத்தக்கொதிப்புக்கு மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. அம்லோடிபின் எடுக்கும் மிகச்சிலருக்கு காலில் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் காலில் வீக்கம் ஏற்பட, அம்லோடிபின் மாத்திரைதான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என முதலில் பார்க்க வேண்டும். இதற்கு ரத்தம், சிறுநீர், வயிறு ஸ்கேன், சிறுநீரகம் மற்றும் எக்கோ பரிசோதகைள் தேவைப்படும். இவை அனைத்தின் முடிவுகளும் நார்மலாக இருந்தால், கால் வீக்கத்திற்கு அம்லோடிபின்தான் காரணம் என அறியலாம்."ஓல்மிசார்டான்' மருந்தும் ரத்தக்கொதிப்புக்கு நல்ல மருந்துதான். அதை தொடர்ந்து எடுப்பதும் நல்லதுதான்.
எஸ். செல்வராஜ், மதுரை: எனக்கு ஆறு மாதங்களுக்கு முன் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. இதற்கு ஆறுவகை மாத்திரைகள் எடுத்து வருகிறேன். தற்போது நலமாக உள்ளேன். ஆனால் தீவிரமான மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் என்ன செய்வது?
இருதய நோயாளிகளுக்கு மலச்சிக்கல் என்பது ஒரு பொதுவான பிரச்னைதான். இதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக சில மருந்துகளால் இதுபோன்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பைபாஸ் சர்ஜரிக்கு பிறகு, உங்கள் இருதய ஆரோக்கியம் சீராக இருந்தால், சில மாத்திரைகளை மாற்றி அமைத்தாலே போதுமானது.
இதுதவிர உணவில் நார்ச்சத்துள்ளவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது, உட்கொள்ளும் தண்ணீரை அதிகமாக எடுத்துக் கொள்வது, சைவ உணவு மட்டுமே உண்பது, நடைப் பயிற்சியுடன், தினமும் சுறுசுறுப்பாக இயங்குவது போன்றவற்றால், எளிதில் மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452- 233 7344