முதலாளி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2013
00:00

கைதி கண்ணாயிரம் படத்தின் ஷூட்டிங் நடந்து முடிய நள்ளிரவு ஆகிவிடும் என்று கருதிய நடிகர்-நடிகையருக்கு வாகனம் ஒட்டிய டிரைவர் கள் உறங்க சென்று விட்டனர். ஷூட்டிங் விரைவாகவே முடிந்து விட, வாகனம் ஓட்ட ஆள் இல்லாமல் தத்தளித்தனர் ஸ்டுடியோ நிர்வாகிகள்.
"டிரைவர்களுக்கு நல்ல காய்ச்சல், அதனால், படுத்து விட்டனர்...' என்று சொல்லவும், டி.ஆர்.சுந்தரமும் அதை நம்பி, தானே பஸ்சில் டிரைவிங் சீட்டில் ஏறி அமர்ந்து, இரண்டு "டிரிப்'பாக துணை நடிகர்களைச் சேலம் கொண்டு போய் சேர்த்தார்.
இதற்குள் முதலாளியின், "சவர்லெட்' காரை எடுத்த அர்த்தநாரி, முக்கியமான நடிகர்களையும், டெக்னிஷியன்களையும், இரண்டு, மூன்று, "டிரிப்' அடித்து, சேலம் கொண்டு போய் சேர்த்துவிட்டு, மறுபடியும் ஸ்டுடியோவிற்கு வந்து சேர்ந்தார். அப்போது, மணி மூன்று. விடியற்காலை நேரம் பஸ்சை ஓட்டிக் களைத்துப் போன, டி.ஆர்.சுந்தரம் ஸ்டுடியோவிற்கு பஸ்சிலேயே வந்துவிட்டார். "டிரைவர்களை எழுப்பி, பஸ்சை ரிகர்சல் ஹாலுக்கு கொண்டு போகச் சொல்...' என்றார் அர்த்தநாரியிடம். ஒரு மாதிரியாக சுதாரித்துக் கொண்ட டிரைவர்கள், தங்கள் பயணத்திற்குத் தயாராயினர். அவர்கள் நிலை என்னவென்பதை அறிந்தும், பெருந்தன்மையாக, நடவடிக்கை எடுப்பதை தவிர்த்தார். நியாயமாக, அவர்கள் அன்றே வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டிய வர்கள்.
டி.ஆர்.சுந்தரம், தன் காரில் ஏறி அமர்ந்தவுடன் காஸ்ட்யூமர் அர்த்தநாரியைப் பார்த்து, "நீ எப்படி போவாய்?' என்று கேட்டார்.
"எனக்கு மோட்டார் பைக் இருக்கிறது...' என்றார் அர்த்தநாரி.
"இரவு நேரத்தில், பைக்கில் போக வேண்டாம். காரில் உட்கார், உன்னையும் கொண்டு போய் விடுகிறேன்...' என்று சிரித்துக் கொண்டே சொல்ல, அர்த்தநாரி பேசாமல் வண்டியில் ஏறிக் கொண்டார்.
இத்தனை ஆண்டுகளாக அர்த்தநாரியைப் பற்றி விசாரிக்காத டி.ஆர்.சுந்தரம், அன்று காரில் வரும் போது, சகல விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, அர்த்தநாரிக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார். அவரது, நான்கு புதல்வர்களும் படித்து, பட்டம் பெறும் வரை ஆகும் கல்லூரி செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். அர்த்தநாரிக்கு மட்டுமல்லாமல், எவ்வளவோ குடும்பங்களுக்கு அவர் உதவி செய்து இருக்கிறார்.
முதன் முதலாக கேரளாவுக்கு, மலையாளப் படமான, பாலனை அளித்த மாடர்ன் தியேட்டர்ஸ், கேரளாவுக்கு முதல் கலர் படத்தையும் அளிக்க முடிவு செய்தது. மாடர்ன் தியேட்டர்சில் அப்போது தயாரான, இந்தப் படத்தை இயக்க, கே.எஸ்.சேதுமாதவன் நியமிக்கப்பட்டாலும், டி.ஆர்.சுந்தரம் தான் முழுக்க முழுக்க இப்படத்தை இயக்க உதவி புரிந்து, தயாரிக்கவும் செய்தார். முத்தையா என்றொரு கேரள நடிகர், இதில் முக்கிய வேடம் ஏற்று நடித்தார். உடன் நடித்தவர்கள், பிரேம் நசீர் மற்றும் அம்பிகா. மலையாள வசனகர்த்தாவின் உதவியுடன் படம் எடுக்கப்பட்டது. படத்தின் பெயர், கண்டம் பெச்ச கோட்டு என்பதாகும். ஒட்டு போட்ட கோட்டு என்பது அதன் தமிழ் அர்த்தம். "ஒரு ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு பண உதவி செய்வதை விட, மெக்காவுக்கு காசு சேர்த்துக் கொண்டு போய் வருவது, புண்ணியமான காரியம் அல்ல' என்ற, கருத்தை வலியுறுத்திய படம். கேரளாவில் நன்றாக ஓடி, வசூலை அள்ளிக் குவித்தது.
கண்டம் பெச்ச கோட்டு படத்தின் முக்கிய பாத்திரமே, ஒட்டுகள் போட்ட கோட்டை அணிந்த அந்தக் கிழவன் தான். அதற்குத் தான் முத்தையா தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிப்பு அவரது பிரதான தொழில் அல்ல. நடிகர் பிரேம் நசீருக்கும், அவரது தம்பி பிரேம் நவாசுக்கும் மேனேஜராக அவர் இருந்தார். அவ்வப்போது, சின்ன, சின்ன வேடங்களில் நடிப்பது உண்டு.
இந்த முதல் மலையாள கலர் படத்தில் நடிக்க, நடிகர்களைத் தேடிக் கொண்டு இருந்த போது, முத்தையாவைத் தான் ஸ்டுடியோவில் பலரும் சிபாரிசு செய்தனர். அதில், மிகவும் முக்கியமானவர்கள் கேமராமேனும், காஸ்டியூமரும் தான்.
டி.ஆர்.சுந்தரம் மேக்கப் டெஸ்ட் நடத்தி, உடனே ஓ.கே., சொல்லி விட்டார். இந்தப் படத்திற்குப் பின் தான், முத்தையா தமிழ்ப்படங்களில் ஒரு நல்ல குணச்சித்திர நடிகராகத் திகழ்ந்தார். இப்படத்திற்குப் பின், டி.ஆர்.சுந்தரம் ஒரு முக்கிய முடிவை எடுத்தார்.
தனக்குப் பின், ஸ்டுடியோவை நிர்வகிக்க ஒரு நபர் தேவை. மகன், ராமசுந்தரம் அப்போது கல்லூரிப் படிப்பை முடித்திருக்கவில்லை. அதனால், நிர்வாகத்தைச் சேர்ந்த இதர இயக்குனர்களைக் கலந்து, அவரது சகோதரர் வி.வி.சி.ஆர்.வையாபுரியின் மகன் ஆர்.வி.சொக்கலிங்கத்தை எம்.டி.ஆக நியமித்தார். இதுவரை, இவர் ஸ்டுடியோ பக்கமே தலைவைத்துப் படுக்காதவர். ஆர்.கே.பாலு ஆபிஸ் நிர்வாகத்தையும், ஆர்.கே.சித்தையன் ஸ்டுடியோ நிர்வாகத்தையும் திருப்தியாக கவனித்துக் கொண்டு வந்தனர். இன்னொரு சகோதரர் மகனையும் இத்துறையில் தயார் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவுதான் சொக்கலிங்கத்தின் நியமனம்.
சொக்கலிங்கம் நிர்வாகத்திற்கு வந்த பின், முதன்முதலாகத் தயாரிக்க எடுத்துக் கொண்ட படம் குமுதம்.
கதை வசனம் எழுதியவர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன், டைரக்டர் ஆதுர்த்தி சுப்பாராவ்; இசை, கே.வி.மகாதேவன். கதை வசனம், இசை மூன்றும் பிரமாதமாக அமைந்து விட்டதால் படம், வெற்றிப் படமாக அமைந்து விட்டது. வசூலில் சக்கை போடு போட்டது. புதிய நிர்வாகத்தின் கீழ் வெளிவந்த முதல் படம் என்றாலும், டி.ஆர்.சுந்தரத்தின் மேற்பார்வையில் தான் படத்தயாரிப்பு நடந்தது. அதுதான் உண்மை. ஸ்டுடியோவைப் பொறுத்தவரை, புரொடக்ஷன் ஆபிசைப் பொறுத்த வரை டி.ஆர்.சுந்தரத்தின் கண்காணிப்பு இருந்து கொண்டு தான் இருந்தது.
அதே ஆண்டு, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்புக்கு எடுத்துக் கொண்ட படம், காட்டு ரோஜா. நிர்வாகப் பொறுப்பில் இருந்த சொக்கலிங்கம், அந்த சமயத்தில் மிகப் பிரபலமாக இருந்த ஒரு நடிகையை, ஒப்பந்தம் செய்து கொண்டு வந்துவிட்டார். அந்த நடிகை போட்ட, கன்டிஷன்கள் இதுவரை மாடர்ன் தியேட்டர்ஸ் சரித்திரத்திலேயே இல்லாதது.
சேலத்தில் தங்குவதற்கு, ஒரு பெரிய பங்களாவும், பயணம் செய்ய இரண்டு, "பிளைமூத்' கார்களும் வேண்டும். தினசரி தேவைக்காக ஒரு பசுமாடும், எருமை மாடும் வீட்டின் பின்புறம் கட்டப்பட்டு, அங்கிருந்துதான் பால் பங்களாவிற்கு வர வேண்டும். இந்த சவுகரியங்கள் தவிர தனக்கு சொந்த மேக்கப்மேன், சொந்த காஸ்டியூமர் தான் தேவை. அவர்களுக்கு, ஸ்டுடியோ தான் பணம் தர வேண்டும் என்று கண்டிஷன் போட்டார். மேலும் படத்தில் நடிக்க, அவர் கேட்டதொகை மிகவும் அதிகமானது.
சொக்கலிங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டு வந்த விவரங்களை கேட்டு, அதிசயம் அடைந்த டி.ஆர்.சுந்தரம், "மார்க்கெட் உள்ள நடிகை கேட்பது சரிதான்' என்று ஒப்புக் கொண்டாலும், இரண்டு விஷயங்களை அவர் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. மேக்கப், காஸ்டியூம் இவை இரண்டும் ஸ்டுடியோவில் தான் நடக்கும் என்று, பிடிவாதமாகச் சொல்லி விட்டார். நடிகை அதற்கு ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. அதனால் கான்ட்ராக்ட் கேன்சல் ஆகி விட்டது. அதற்குப் பின் அந்த நடிகை மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் நடிக்க வரவில்லை.
இதேப்போல ஒரு சம்பவம் எம்.ஆர்.ராதா விஷயத்திலும் நடந்தது. அவருக்கு சொந்த மேக்கப்மேன் ஒருவர் இருந்தார். அவர்தான் கஜபதி. தன் மேக்கப்மேன் தான் தனக்கு ஒப்பனை செய்ய வேண்டும் என்று ராதா பிடிவாதமாக இருந்தார்,
"நீ வேண்டுமானால் உன் பணத்தில் அவனுக்குச் சம்பளம் கொடுத்துவிடு, அதற்காக உன் ஊதியத் தொகையில் கொஞ்சம் சேர்த்துக் கொடுத்து விடுகிறேன், ஸ்டுடியோவிலிருந்து அவனுக்கு ஊதியம் கிடைக்காது...' என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். தன் மேக்கப் மேன், காஸ்டியூமர்கள் மீது டி.ஆர்.சுந்தரத்துக்கு அப்படியொரு அபார நம்பிக்கை.
தொடரும்

ரா. வெங்கடசாமி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Kumar - coimbatore,இந்தியா
02-ஜூன்-201301:24:14 IST Report Abuse
Ramesh Kumar திரு .டி.ஆர்.சுந்தரம் அவர்களின் வரலாறைப் படிக்கும் போது இனம் புரியாத ஒரு தன்னம்பிக்கையும் , சாதிக்க வேண்டும் என்ற வெறியும் பிறக்கிறது, இதுவே இத்தொடருக்கு கிடைத்த வெற்றி. தினமலருக்கும், ரா. வெங்கடசாமி அவர்களுக்கும் நன்றிகள் பல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X